தலைவன் ஒருவனே!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

கண்ணியத்திற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

உலகில் தோன்றுகின்ற எந்தக் கொள்கையாக இருந்தாலும், கோட்பாடாக இருந்தாலும், அதை உருவாக்கிய தலைவன் ஒருவன் இருப்பான். அந்தத் தலைவன் உயிரோடும், உணர்வோடும் இருக்கின்ற வரை அந்தக் கொள்கை உயிரோடு இருக்கும். அவன் மரணித்துவிட்டால் அவனோடு சேர்ந்து அவனுடைய கொள்கையும் மரணித்துவிடும். அல்லது அவனுக்குப் பின் மாற்றங்கள் செய்யப்பட்டு அந்தக் கொள்கையே சிதைக்கப்பட்டு விடும்.

உதாரணமாக, சர்வாதிகாரிகளான ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இறந்த பிறகு அவர்களின் கொள்கைகளும் மறைந்து விட்டன. சிலைகளுக்குச் சக்தியில்லை என்று போதித்த பெரியார் இறந்த பிறகு, அவரது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் பெரியாருக்குச் சிலை வடித்து, அதற்கு மாலையிட்டு மரியாதை செய்வதைப் பார்க்கிறோம்.

அதிமுக கட்சித் தலைவி ஜெயலலிதா இருந்த வரை அடங்கி ஒடுங்கிக் கிடந்த அதிமுக நிர்வாகிகள், அவர் மரணித்த பின் பல கூறுகளாகப் பிரிந்து கிடப்பதையும், கட்சியின் அடிப்படை தகர்ந்து, பதவிக்காக சண்டை நடப்பதையும், நாட்டு மக்கள் பரிதவிப்பதையும் காண்கிறோம்.

ஆனால் தவ்ஹீதுவாதிகளின் உயிர்மூச்சான ஏகத்துவத்தின் தலைவன் ஏகன் அல்லாஹ் ஒருவனே! அவன் மரணிக்கவும் மாட்டான், செயலற்றுப் போகவும் மாட்டான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அஷ்ஷகீர் (ரலி) அறிவிக்கின்றார்கள்

நான் பனூ ஆமிர் கூட்டத்தாருடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நீங்கள் தான் எங்கள் தலைவர் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபியவர்கள் உயர்ந்தவனான பாக்கியமிக்க அல்லாஹ் தான் தலைவன் என்று கூறினார்கள்.

(அபூதாவூத்: 4806)

இறைவன் அவனுடைய ஏகத்துவக் கொள்கையை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் மனிதர்களிலிருந்தே தூதர்களை அனுப்பினான்.

“அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!’’ என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.

(அல்குர்ஆன்: 16:36)

தூதர்கள் மரணித்துவிட்டால்…

இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவில்லை. பசி, தாகம், மறதி, தூக்கம் போன்றவை அவர்களுக்கும் ஏற்பட்டன. அவர்களில் மரணித்தவர்களும், இருக்கிறார்கள்; கொல்லப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

(முஹம்மதே) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருக்கக்கூடியவர்களா? என்று அல்லாஹ் கேட்கின்றான்.

பார்க்க:(அல்குர்ஆன்: 21:34)

ஆனால் அந்தத் தூதர்கள் மரணித்து விட்டாலும் அவர்கள் கொண்டுவந்த கொள்கை, இறைவனின் கொள்கை என்பதால் அது உயிரோடு இருக்கும். ஏகத்துவத் தந்தை நபி இப்ராஹீம் மரணித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அவரைப் பின்பற்றி அவருடைய வழியை மக்களுக்குப் போதிக்கின்ற ஏகத்துவவாதிகள் இருக்கத் தான் செய்தார்கள். நபியவர்கள் தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே இப்ராஹீம் நபி காட்டிய தூய மார்க்கத்தைப் பின்பற்றி, தானும் வாழ்ந்து பிறருக்கும் அதை போதித்த ஒரு மனிதரைப் பற்றிய செய்தி புகாரியில் இடம்பெறுகிறது.

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடக்கவில்லை’’ என்று சொல்லிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், “அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம் (சென்று), “நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்)க் கொள்கிறேன்’’ என்று சொல்வார்.

(புகாரி: 3828)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், தமக்கு வேத வெளிப்பாடு (வஹீ) அருளப்படுவதற்கு முன்பு கீழ் ‘பல்தஹில்’ ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது (குறைஷிகளின்) பயண உணவு ஒன்று நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப்பட்டது. அந்த உணவை ஸைத் பின் அம்ர் உண்ண மறுத்துவிட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகளிடம்), “நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு பலியிடும்) பலிபீடக் கற்களில் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன். (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டுள்ளதோ அதைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன்’’ என்று சொன்னார்கள். ஸைத் பின் அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்டவற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், “ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்திலிருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக, பூமியிலிருந்து (புற்பூண்டுகளை) முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரல்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்களின்) பெயர் சொல்லி அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்’’ என்று கூறி வந்தார்கள்.

(புகாரி: 3826)

தலைவர்கள் கைவிட்டால்…

முஸ்லிம்களுக்கும், காபிர்களுக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றி புகாரியில் இடம்பெறும் ஹதீஸின் சுருக்கம்:

ஹுதைபிய்யா உடன்படிக்கை நடை பெற்ற காலத்தில் சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும், எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்’’ என்று கூறினார் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்’’ என்று நிபந்தனையிட்டனர். அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப் பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள்.

அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடனே (அவரது தந்தையான) சுஹைல், ‘‘முஹம்மதே! (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே’’ என்று பதிலளித்தார்கள். அதற்கு சுஹைல், ‘‘அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்’’ என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதியளியுங்கள்’’ என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லை’’ என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?’’ என்று கேட்டார். அவர் இறை வழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்’’ என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள்.

அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். சுஹைலின் மகன் அபூஜந்தல் (ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பிறகு, குறைஷிகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (சிறிது சிறிதாக இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்றுதிரண்டு விட்டனர்.

குறைஷிகள் (அபூபஸீரும் அவரது சகாக்களும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க வேண்டுமென்று) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுத் தூதனுப்பினார்கள். மேலும், “குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகின்றாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)’’ என்று கூறிவிட்டனர்.

(புகாரி: 2731)

நபி (ஸல்) அவர்கள் அபூபஸீர் அவர்களையும், அபூஜந்தல் அவர்களையும் விரட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.

அப்போது அவ்விருவரும், எந்த முஹம்மது மூலம் அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அவரே நம்மை விரட்டி விட்டார்; எனவே நாம் வந்த வழியே திரும்பச் சென்று விடுவோம் என்று ஓடவில்லை; ஓயவில்லை. எதிரிகளே பயந்து ஓடும் அளவுக்கு சவாலாக உருவெடுத்தார்கள். ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள்.

இறுதிவரை தொடரும் ஏகத்துவப்பணி

இறுதித் தூதரான முஹம்மது நபியவர்கள் மரணித்து விட்டார்கள். அவர்கள் கொண்டுவந்த ஏகத்துவக் கொள்கையை கியாமத் நாள் வரை எடுத்துச் சொல்லும் கடமை அவருடைய சமுதாயத்தவரான நம் ஒவ்வொருவர் மீதும் இருக்கின்றது. இதை நபியவர்களும் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்: 3885)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டே இருப்பார்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

(முஸ்லிம்: 3886)

எனவே நித்திய ஜீவனான இறைவனின் தொண்டர்களாக நாம் இறுதிவரை உறுதியாக இருப்பதற்கும், இந்த கொள்கையை எடுத்துச் சொல்வதற்கும் அல்லாஹ் அருள்புரிவானாக.

எங்கள் இறைவா! எங்களுக்கு நேர்வழி காட்டிய பின் எங்கள் உள்ளங்களைத் தடம் புரளச் செய்து விடாதே! எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நீ மாபெரும் வள்ளல்.

(அல்குர்ஆன்: 3:8)

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறிய வழிமுறைகளின் அடிப்படையில் இறைநினைவு கொள்வோம். அதன் மூலம் மறுமையில் நன்மைகளைப் பெற்று சுவனத்தை அடையும் நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!