தற்கொலைப்படை தாக்குதல் ஓர் இஸ்லாமியப் பார்வவை

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

இலங்கையில் கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஈஸ்டர் பண்டிகையின் போது கிறித்தவ ஆலயங்கள், பிரபல ஹோட்டல்கள் என மொத்தம் 9 இடங்களில் அதிபயங்கரக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இதில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
40க்கும் அதிகமான சிறார்கள் பலியாகி உள்ளனர்.
நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து, அதில் சிலர் மரணத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டு இருக்கின்றனர்.
துளியும் மனித நேயமற்ற, காட்டுமிராண்டித் தனமான இச்சம்பவம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்திய தற்கொலைப்படை தாக்குதலே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பயங்கரவாதச் சம்பவத்தை யார் நிகழ்த்தி இருந்தாலும் அது ஏற்க முடியாது.
மனித உயிரைப் பறிக்கும் காட்டுமிராண்டிகள் எவராயினும் இவ்வுலகில் உயிர்வாழும் தகுதியை இழந்து விடுகிறார்கள். எனவே அவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தூக்கிலிடப்பட வேண்டும்.
மீடியாக்கள் பற்ற வைக்கும் நெருப்பு
இத்தகைய குண்டு வெடிப்பு சம்பவம் எங்கு நிகழ்ந்தாலும் உடனே அதை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி எழுதி வருவது சில மீடியாக்களுக்கு வழக்கமாகி விட்டது.
வன்முறையாளர்களுக்கு மதம் கிடையாது. அவர்கள் எல்லா மதத்திலும் இருப்பார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் இது போன்ற தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிடும் மீடியாக்கள் அவர்கள் சார்ந்த மதத்தை, அந்தப் பயங்கரவாத சம்பவத்துடன் தொடர்புபடுத்தி எழுதுவதில்லை.
நியூசிலாந்து பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களின் மீது கண்மூடித்தனமான தாக்குதலை ஒரு கிறித்தவன் தொடுக்கும் போது அங்கே மதத்தை சம்பந்தப்படுத்துவது கிடையாது.
இந்தியாவில் மாட்டின் பெயரால் முஸ்லிம்களும் தலித்களும் கொல்லப்படும் போது, மாட்டைப் புனிதப்படுத்தும் மதம் அங்கே எந்தப் பத்திரிக்கையாலும் சம்பந்தப்படுத்தப்படுவது கிடையாது.
குஜராத்தில் ஒரே நேரத்தில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படும் போதும் அங்கே கலவரத்தை நிகழ்த்தியவர்களின் மதம் எவ்விதத்திலும் சம்பந்தமாவதில்லை.
சாதியின் பெயரால் பல வன்முறைச் சம்பவங்கள் நடைபெறும் போது சாதிய பாகுபாட்டைக் கற்பிக்கும் வேதம், வன்முறைக்குக் காரணமாக அங்கே துளியும் சுட்டிக்காட்டப்படுவதில்லை.
அவ்வாறு சுட்டிக்காட்ட வேண்டும் என்பது நமது நிலைப்பாடு அல்ல!
பயங்கரவாதிகள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அம்மதத்துடன் தொடர்புபடுத்தாமல் தனிமைப் படுத்த வேண்டும்.
அதுவே இந்தியா போன்ற பன்மைத்துவ தன்மை கொண்ட நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த உதவும் எனும் அடிப்படையில் இது சரியான நடவடிக்கையே!
ஆனால் முஸ்லிம்களில் உள்ள ஒரு சில அறிவிலிகள், இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்கும் போது மாத்திரம் அவர்கள் சார்ந்த இஸ்லாமிய மார்க்கம் தொடர்பு படுத்தப்படுவது எவ்விதத்தில் சரியாகும்?
ஒரு ஹிந்து, பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது அவனது மதம் அங்கே பேசுபொருளாவதில்லை.
ஒரு கிறித்தவன், பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது அவனது மதம் விவாதிக்கப்படுவதில்லை.
ஆனால் ஒரு முஸ்லிம், பயங்கரவாதத்தில் ஈடுபடும் போது மட்டும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லாடல் மீடியாக்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வலம் வருகிறது.
அவனது மதம் அங்கே பேசு பொருளாகிறது, விவாதிக்கப்படுகிறது மட்டுமின்றி அவன் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனத்திற்கு அவனது மதமே காரணம் என்று மீடியாக்களால் பேசப்படுகின்றது.
இதன் விளைவாக, இந்தப் பயங்கரவாதச் செயல்களை எதிர்க்கின்ற பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் மீதும், முஸ்லிம்களின் மீதும் தவறான பார்வை விழுவதற்கு மீடியாக்களின் இந்தப் போக்கு அடித்தளமிடுகிறது.

அல்லாஹு அக்பர் எனும் கோஷம்

இதற்கு ஒரு காரணத்தையும் கைவசம் வைத்து இருக்கிறார்கள்.
பிற மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் தாங்கள் நடத்தும் தாக்குதலுக்கு மதத்தைக் காரணமாக்குவதில்லை. ஆனால் முஸ்லிம்களில் ஒருவர், தான் நடத்தும் தாக்குதலுக்குத் தனது இஸ்லாமிய மார்க்கத்தைக் காரணம் காட்டுகின்றார்.
அதன் அடையாளமாக அல்லாஹு அக்பர் என்று கூறித்தானே தாக்குதல் தொடுக்கின்றார். இப்படிப் பிற மதத்தவர்கள் செய்வதில்லையே என்கிறார்கள்.
இஸ்லாத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் சம்பந்தமில்லை என்று கோடான கோடி முஸ்லிம்கள் உரக்க சப்தமிட்டுக் கூறுவது இவர்களுக்குக் கேட்கவில்லை.
ஆனால் பயங்கரவாதிகள் சொல்வது மட்டும் இவர்களுக்குக் கேட்கிறது, அதுவே இவர்களுக்குப் பிடித்திருக்கிறது என்றால் என்ன செய்வது?
‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்துடன் ஒரு கூட்டம், ஒரு முதியவரை அடித்தே கொல்கின்றது. இதனால் அவர்கள் சார்ந்த மதம் அதைப் போதிக்கின்றது என்று அர்த்தமா? அப்படி யாரும் சொல்வதில்லை.
ஒரு பயங்கரவாதி அல்லாஹு அக்பர் என்று கூறித் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதாலேயே அதை இஸ்லாத்துடன் முடிச்சுப் போட்டு விட முடியாது. மாறாக பயங்கரவாதம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
அல்லாஹு அக்பர் என்ற வாசகம் இஸ்லாத்தில் உண்டு. ஆனால் இவர்கள் செய்யும் பயங்கரவாதம் இஸ்லாத்தில் இல்லை.
மனித உயிர் புனிதமானது என்பதே இஸ்லாத்தின் போதனை. ஒரு கொலையாளியின் உயிரைப் பறிக்க வேண்டுமானால் கூட அதை அரசு தான் செய்ய வேண்டுமே தவிர தனி நபர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்கிறது இஸ்லாம். (இது குறித்து விரிவாக, தனிக்கட்டுரையில் காண்க!)
மனித உயிரைப் பறிப்பதை மிகப் பெரிய பாவமாக இஸ்லாம் கண்டிக்கின்றது. அத்தகைய இஸ்லாத்துடன் பயங்கரவாதத்தை, சிலர் அல்லாஹு அக்பர் என்று கூறுவதாலேயே முடிச்சுப் போடுதல் நியாயமா?
பிஸ்மில்லாஹ் என்பது கூட இஸ்லாத்தில் உண்டு.
உண்ண, பருகத் துவங்கும் போது முஸ்லிம்கள் இதைக் கூற வேண்டும் என மார்க்கம் அறிவுறுத்துகின்றது. அல்லாஹ்வின் பெயரால் என்பது இதன் பொருள்.
இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள மதுவை ஒருவர் பிஸ்மில்லாஹ் என்று கூறி அருந்தினால் இஸ்லாம் மதுவை அனுமதிக்கின்றது என்று புரிவோமா?
அல்லது அதை அவரது தவறான செயல் என்போமா?
பிஸ்மில்லாஹ் என்று கூறுவது எப்படி மதுவை ஆகுமாக்கி விடாதோ அதுபோலவே இவர்கள் கூறும் அல்லாஹு அக்பர் எனும் வார்த்தை பயங்கரவாதத்தை ஆகுமாக்கி விடாது.
தற்கொலையின் நிலை என்ன?
பயங்கரவாதிகள் பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல் நடத்தியே குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்துகிறார்கள்.
தற்கொலைப்படைத் தாக்குதலைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொண்டாலே இத்தகைய பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதை அறியலாம்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தற்கொலை செய்தல் தகாது என்று இஸ்லாம் அறிவுறுத்துகின்றது.
ஒருவர் தற்கொலை செய்தால் அவர் மறுமை வாழ்வின் போது நரகில் இருப்பார் என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கின்றவர் நரகிலும் தன்னுடைய கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். தம்மைத்தாமே (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றவர் நரகிலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
(புகாரி: 1365)
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாகக் குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(புகாரி: 5778)
நாட்டு மக்களைக் காப்பதற்காக, எதிரி நாட்டுடன் போர் செய்யும் போது கூடத் தற்கொலை கூடாது என்பதே இஸ்லாத்தின் அறநெறி.
நபிகளார் காலத்தில் அவ்வாறு நடைபெற்ற போரின் போது காயமுற்ற ஒருவர் வேதனை தாளாமல் தற்கொலை செய்கிறார்.
அவரின் தொழுகை, நோன்பு, தியாகம் உள்ளிட்ட இதர அறப்பணிகள் எதையும் கவனத்தில் கொள்ளாது தற்கொலை செய்த காரணத்தினாலேயே அவரை நரகவாசி என்று நபிகளார் தீர்ப்பளித்து விடுகிறார்கள்.
இதைப் பின்வரும் சம்பவத்தில் காணலாம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணை வைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தம் படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பிய போது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (‘குஸ்மான்’ என்றழைக்கப்பட்ட) ஒருவர் இருந்தார். (எதிரணியில் போரிடாமல்) விலகிச் சென்றவர், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்டவர் என எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தம் வாளால் அவர் வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார்.
அப்போது, ‘இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தி செய்தது போன்று வேறெவரும் நம்மில் தேவை தீரப் போரிடவில்லை’ என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் இப்னு அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், ‘நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன்’ என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.
அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தன்னுடைய வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்.
(பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தாங்கள் இறைத்தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன்’ என்றார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், ‘அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு’ என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்) முனையை பூமியில் வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்தார்’ என்று கூறினார்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மக்களின் வெளிப்பார்வைக்கு ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(புகாரி: 4203)
தற்கொலை எனும் வடிவத்தை நபிகளார் அறவே அனுமதிக்கவில்லை என்பதை இச்சம்பவம் தெளிவாகத் தெரிவித்து விடுகிறது.
நாட்டு மக்களைக் காக்கும் போரிலேயே தற்கொலை கூடாது என்று திட்டவட்டமாக இஸ்லாம் தெரிவிக்கும் போது அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதற்கு இவர்கள் பயன்படுத்தும் தற்கொலையை இஸ்லாம் எப்படி ஆதரிக்கும் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.
சமூகப் புறக்கணிப்பு
தற்கொலைப் படையை ஆதரிப்பவர்கள் அல்லது இஸ்லாம் தற்கொலைத் தாக்குதலை ஆதரிக்கிறது என்று ஓலமிடுபவர்கள் நபிகள் நாயகத்தின் வரலாற்றை எவ்வளவு தான் புரட்டினாலும் தற்கொலை செய்வதை நபிகள் நாயகம் அனுமதித்தார்கள் என்று ஒரு சம்பவத்தைக் கூட சுட்டிக் காட்ட முடியாது.
மாறாக, தற்கொலை செய்பவருக்கு நரகம் என்றும் அவ்வாறு தற்கொலை செய்தவரை சமூகம் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்றும் கூறியதைத் தான் பார்க்க இயலும்.
ஆம். ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவருக்காக சக முஸ்லிம்கள் இறுதிப் பிரார்த்தனை புரியும் வகையில் ஜனாஸா தொழுகை நடத்திட வேண்டும் என்று மார்க்கம் கூறுகிறது.
ஆனால் தற்கொலை செய்தவருக்கு இத்தகைய இறுதிப் பிரார்த்தனை எனப்படும் ஜனாஸா தொழுகை அறவே கூடாது என்று நபிகள் நாயகம் தெரிவித்து விட்டார்கள்.
இதோ நபியின் முன்மாதிரியைப் பாருங்கள்.
தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் கொண்டு வரப்பட்ட போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(முஸ்லிம்: 1779)
தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த மறுத்திருப்பதே தற்கொலை செய்வோருக்கு இத்தகைய சமூக அங்கீகாரம் கிடையாது என்பதைப் பறைசாற்றுகின்றது.
நீ தற்கொலை செய்தால் உனது இறுதிச் சடங்கில் கூட நாங்கள் பங்கேற்க மாட்டோம். உனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்ய மாட்டோம் என தற்கொலை செய்வோருக்கு அச்சத்தை ஏற்படுத்தவே நபிகளார் இவ்வாறு கற்றுத் தருகிறார்கள்.
இது தான் தற்கொலை பற்றி இஸ்லாத்தின் நிலை எனும் போது இங்கே தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருக்க முடியும்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நபிகள் பெருமகனார் இவ்வளவு கடுமையான கண்டிப்பை வழங்கிய பிறகும் இஸ்லாத்தின் மீது பற்று கொண்ட, நபிகள் மீது நேசம் கொண்ட ஒருவரால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த முடியுமா?
*இறைவனின் மன்னிப்பு எனக்கு தேவையில்லை.
*இறைத்தூதரின் எச்சரிக்கை பற்றி எனக்குக் கவலையில்லை.
* முஸ்லிம்களின் பிரார்த்தனை தேவையில்லை.
*இறந்த பிறகு நான் நரகம் போனாலும் கவலையில்லை.
என எல்லாவற்றையும் உதாசீனப்படுத்தும் ஒருவனாலேயே தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த முடியும்.
அத்தகைய எண்ணம் கொண்டோரால் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்படும் போது அதை இஸ்லாத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு படுத்தவே முடியாது.
தன்னுயிரை மாய்த்துக் கொள்வதற்கே இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதியில்லை எனும் போது அப்பாவிகளைக் கொல்வதற்காக நடைபெறும் தற்கொலைப்படைத் தாக்குதல்களுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அதற்கு இஸ்லாத்தில் அனுமதியும் இல்லை என்பதைச் சந்தேகமின்றி அறியலாம்.
தற்கொலைப்படை மீறும் போர் நெறிகள்
இஸ்லாம் கூறும் போருக்கென்று பல நெறிகள் உண்டு.
ஒரு அரசு தான் போரை நடத்த முடியும். தனிநபர்களோ, குழுக்களோ போரை நடத்தக்கூடாது.
போர் என்பது நாட்டு மக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கானதாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டுமே பாதுகாப்பதற்காக இருக்கக் கூடாது.
எதிரணியில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படக் கூடாது என்பதும் போர் நெறியாகும்.
பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
பார்க்க:(புகாரி: 3015)
பெண்கள் போர் வீரர்களாகப் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! (பெண்களாகிய) நாங்கள் யுத்தத்திலும் அறப்போரிலும் உங்களுடன் சேர்ந்து கொள்ளக் கூடாதா?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(பெண்களுக்கு) சிறந்த, அழகிய ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத (இறைவன் ஏற்றுக் கொள்ளக் கூடிய விதத்தில் நிறைவேற்றப்படுகின்ற) ஹஜ்ஜாகும்!’ என்றார்கள். நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதை நான் செவியுற்ற பிறகு ஹஜ் செய்வதை நான் விட்டதில்லை.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
(புகாரி: 1861)
பிறமத வழிபாட்டுத்தலங்கள் குறித்து திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
“எங்கள் இறைவன் அல்லாஹ்வே’’ என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.
(அல்குர்ஆன்: 20:40)
கோவில்களோ, சர்ச்சுகளோ, முஸ்லிம்களின் பார்வையில் வழிபாட்டுத் தலங்களாக இல்லாத போதும் அவற்றைத் தாக்கும் உரிமை கிடையாது என்பதைக் காரணத்துடன் இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது.
இவற்றில் எந்த ஒன்றையும் தற்கொலைப்படை எனப்படுவோர் கவனத்தில் கொள்வதில்லை.
குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட ஒரு அரசுதான் போர் செய்ய வேண்டும் என்ற இஸ்லாமிய நெறியைக் கண்டு கொள்ளாமல் சில மூளை வெந்த தனிநபர்கள் போர் என்று பிதற்றுகிறார்கள்.
அப்பாவிகளை, பெண்களை, குழந்தைகளைக் கொல்கிறார்கள்.
இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட தற்கொலையை, தாக்குவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதில் ஒரு சில பெண்களையும் இணைத்துக் கொள்கிறார்கள்.
இப்படி போருக்கான எந்தவிதமான தார்மீக நெறியையும் கடைப்பிடிக்காமல் செய்யப்படும் கொடூரத் தாக்குதலை இஸ்லாம் எப்படி அனுமதிக்கும்?
ஒரு அரசு இதைச் செய்தால் கூட இஸ்லாம் அதை ஒரு போதும் அனுமதிக்காது.
எனவே குடிமக்களைக் காக்கும் நோக்கில் இஸ்லாம் கூறும் போர் வேறு.
அப்பாவிகளைக் கொல்ல இவர்கள் செய்யும் தாக்குதல் வேறு.
இதிலிருந்தும் இஸ்லாத்திற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் புரியலாம்.
கண்ட இடத்தில் வெட்டுங்கள்
இஸ்லாம் பயங்கரவாதத்தை அனுமதிக்கின்றது எனும் பொருளில் சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர், ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ என்று திருக்குர்ஆனின் நீண்ட வசனத்தில் ஒரு பகுதியை மட்டும் படித்துக் காட்டுகிறார்கள்.
முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என திருக்குர்ஆன் போதிக்கின்றது என்பதை நிரூபிக்க (?) இந்த வசனத்தைத் தவறாகக் கையாள்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த வசனம் என்ன சொல்கிறது?
முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என இவ்வசனம் போதிக்கவில்லை. இது தனிநபருக்கான அறிவுரையுமல்ல.
மாறாக, போருக்கு வருவோருடன் நீங்களும் போருக்குச் செல்லுங்கள். அவர்களைக் களத்தில் சந்திக்கும் போது போரில் கொல்லுங்கள் என்று போர் குறித்து அரசுக்குச் சொல்லும் அறிவுரையாகும்.
இதோ இந்த அரைவேக்காடுகள் படித்துக் காட்டும் வசனத்தின் முழுமையை பாருங்கள்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். (களத்தில்) சந்திக்கும்போது அவர்களைக் கொல்லுங்கள்!
(அல்குர்ஆன்: 2:190), 191
இந்த வசனத்தை ஒருவன் தவறாகப் பயன்படுத்துகிறான் என்றால் அவன் அயோக்கியன் என்றாகுமே தவிர இஸ்லாம் வன்முறையைப் போதிக்கின்றது என்றாகாது.
உதாரணமாக, ஒருவன் வருவோர் போவோரை எல்லாம் தூக்கிலிட்டுக் கொலை செய்கிறான். அதற்கு அவன், ‘இந்திய தண்டனைச் சட்டப் புத்தகத்தில் ‘சாகும்வரை தூக்கிலிடுங்கள்’ என்று உள்ளது. அதைத் தான் நான் செயல்படுத்தினேன்’ என்று கூறுகிறான் எனில் அதை நாம் அங்கீகரிப்போமா?
குறிப்பிட்ட குற்றச் செயல் புரிந்தோரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று தானே குற்றவியல் தண்டனை சட்டப் புத்தகத்தில் உள்ளது. நீ வருவோர் போவோரை எல்லாம் கொல்வதற்கு இதை எப்படி ஆதாரமாகக் காட்டுவாய் என்று கேட்க மாட்டோமா?
அப்படிக் குற்றச் செயலில் ஈடுபட்டோரைக் கூட அரசு தான் தூக்கிலிட வேண்டுமே தவிர இதை நீ எப்படி சட்டத்தைக் கையிலெடுப்பாய்? என்று கேட்போம் அல்லவா?
குற்றவியல் தண்டனைச் சட்டப் புத்தகத்திலிருந்து ‘சாகும்வரை தூக்கிலிடுங்கள்’ என்று பாதியை மட்டும் படித்துக் காட்டி கொலை செய்பவனின் நிலை என்னவோ அது தான் ‘கண்ட இடத்தில் வெட்டுங்கள்’ எனும் திருக்குர்ஆன் வசனத்தின் ஒரு பகுதியை மட்டும் படித்துக் காட்டுவோரின் நிலையும்.
இருவரின் குற்றச்செயல்களுக்கும் அந்தந்த புத்தகங்கள் காரணமாக இல்லை.
(முஸ்லிம் அல்லாதோருடன் நபிகள் நாயகம் இணக்கமாக நடந்துள்ள எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகள் ஏராளமாக உள்ளன. நீளம் கருதி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.)
இஸ்லாமிய சமூகத்தின் பரிதாப நிலை
இங்கே இஸ்லாமிய சமூகம் சந்திக்கும் அவல நிலையையும் குறிப்பிட்டாக வேண்டும்.
ஒரு சில பெயர் தாங்கி முஸ்லிம்களால் பயங்கரவாதச் சம்பவம் நிகழ்த்தப்படும் போதெல்லாம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் அவலம் தொடர்ந்து நடைபெறவே செய்கிறது.
அவர்களின் தேசப்பற்றும் நன்னடைத்தையும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலை பிற மதத்தவர்களுக்கு ஏற்படுவதில்லை.
ஹிந்துக்களோ கிறித்தவர்களோ பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடும் போது அவனை அவன் சார்ந்த மதத்திலிருந்து பிரித்துப் பார்க்கும் போக்கு உள்ளது.
அதுவே ஒரு முஸ்லிம் பயங்கரவாதச் சம்பவத்தில் பங்கெடுக்கும் போது, ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகமும் அந்தப் பயங்கரவாதியை இஸ்லாமிய சமூகத்திலிருந்தே அந்நியப்படுத்த முனையும் போதும், இல்லை அவனும் முஸ்லிம் தான் என்று ஊடகங்கள் எழுதுகின்றன.
அவன் பயங்கரவாதி என்பதால் முஸ்லிம்களாகிய நீங்களும் பயங்கரவாதிகள் தான் என்று அவனைக் கண்டிப்பவர்களை நோக்கியே பயங்கரவாத முத்திரையைக் குத்த முனைகிறது.
அவன் பெயரும் உங்கள் பெயரும் ஒன்றாக உள்ளதே! உங்கள் பெயரிலும் ‘அபு’ என்று உள்ளதே! நீங்களும் தீவிரவாதிகள் தாமா? என்று ஊடகங்கள் கொளுத்திப் போடுகின்றன.
சில ஊடகங்கள் தீவிரவாதியின் பெயரை வைத்திருக்கும் நபர்களையும் தீவிரவாதி என்று உறுதியே செய்து விடுகின்றன.
அப்பாவிகளை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்வோர் பயங்கரவாதிகள் எனில், ஒரு சிலர் செய்யும் தவறினால் எவ்விதக் குற்றமும் செய்யாத ஒரு சமூகத்தையே பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்களின் இத்தகைய போக்கும் பயங்கரவாதமே!