தக்லீத்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் பின்பற்றி வாழ வேண்டும் என்றால், எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்றும் அவர்கள் தான் பின்பற்றுவதற்கு தகுதியானவர்கள் என்றும் நினைக்கும் அளவிற்கு அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். அவ்வாறு இல்லாமல் அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித்தந்த வழிமுறைப் படி நம் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.

முன்னோர்களை நம்பி வழிகெடுதல்

“அல்லாஹ் இறக்கி வாய்த்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வலியையே நாங்கள் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள் என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகாகவும் இருந்தால் கூடவா?
(அல்குர்ஆன்: 2:170)➚

“அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்கு போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும் நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமே? (அவர்களை பின்பற்றுவார்கள்). (அல்குர்ஆன்: 5:104)➚

(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தை செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம். இன்னும் எங்களை அதைக் கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களை செய்யக் கட்டளையிடமாட்டான். நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அல்குர்ஆன்: 7:28)➚

அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்கு சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை சைத்தான் கொழுந்துவிட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?) (அல்குர்ஆன்: 31:21)➚

பெரியார்களை பின்பற்றியதால் நேரும் கைசேதம்

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கைசேதமே அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிபட்டோம் அவர்கள் எங்களை வழிக்கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

“எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக. அவர்களைப் பெருஞ்சாபத்தை கொண்டு அழிப்பாயாக? (என்பர்). (அல்குர்ஆன்: 33:66-68)➚

இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும். யாவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ, அவர்களை அவன் சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான். அதன் கீழ் ஆறுகள் சதா ஓடிக் கொண்டேயிருக்கும். அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும்.

நரகில் என்றென்றும் கிடப்பான்

எவன் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகில் புகுத்துவான். அவன் அங்கு (என்றென்றும்) தங்கிவிடுவான். மேலும், அவனுக்கு இழிவான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 4:13-14)➚

யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், சித்த்தீக்கீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் – இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன்: 4:69)➚

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன்: 24:52)➚

இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன்: 33:71)➚

நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள். (அல்குர்ஆன்: 8:1)➚

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல்குர்ஆன்: 47:33)➚

மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டுவிட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவே, அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 33:36)➚

பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். (அல்குர்ஆன்: 6:116)➚

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!. (அல்குர்ஆன்: 5:45)➚

கீழ்ப்படிதல்

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர் ஆன் 4:59)

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; (அல்குர்ஆன்: 6:57, 12:40, 12:67)➚

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். (அல்குர்ஆன்: 24:51)➚

“நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு அறிவிக்(க விரும்பு)கிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் – அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன்: 49:16)➚

பயன் தராதவைகள்

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். (அல்குர்ஆன்: 9:31)➚

(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன்: 9:24)➚

அல்லாஹ்வுடைய வேதத்தை நம்பாதவர்களுக்கு கேடுதான்

அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்குர்ஆன்: 2:78-79)➚

இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பார்கள்). (அல்குர்ஆன்: 25:73)➚

நரகில் தள்ளும் பித் அத்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
அறிவித்தார். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 2697)

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!’ என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்து, ‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!’ எனக் கூறினார்கள்.(புகாரி: 2155)

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்:
‘உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்று கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்கள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘வேறெவரை?’ என்று பதிலளித்தார்கள்.(புகாரி: 3456)

மர்வான் இப்னி ஹகம் அறிவித்தார்:
நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான்(ரலி) ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும் உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார். இதைக்கண்ட அலீ (ரலி), ஹஜ் உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து ‘லப்பைக் பி உம்ரதின் வ ஹஜ்ஜதின்’ என்று கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்களின் வழியை யாருடைய சொல்லிற்காகவும் நான்விட்டு விடமாட்டேன்’ எனக் கூறினார்.(புகாரி: 1563)

நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு என்ன போதிக்கிறார் என்று (ஹெர்குலிஸ் மன்னர் அபூஸ ஃப்யான் அவர்களிடம் கேட்டபோது அவர் ‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறி வந்தவற்றையெல்லாம்விட்டுவிடுங்கள்’ என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கி இருத்தல் போன்ற பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார் என்றேன். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி),(புகாரி: 7)

அல்லாஹ் ஹலாலாக்கிய தேனை, ஹராமாக்கிய நபி

ஆயிஷா(ரலி) அறிவித்தார் :
நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். (அவ்வளவுதான் சத்தியமாக) இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிக் கொள்கிறீர்கள்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் (அல்குர்ஆன்: 66:1-4)➚ வசனங்களை அல்லாஹ் அருளினான் எனும் வசங்களை அல்லாஹ் அருளினான்
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 5267)

எனவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் பின்பற்றி வாழக்கூடிய மக்களாக வாழ்ந்து, அப்படியே மரணிக்கக்கூடிய மக்களாக வேண்டும்.நாம் யாரையும் முன்னூர்கள் என்றோ, பெரியவர்கள் என்றோ அல்லது மகான்கள் என்றோ கண்மூடித்தனமாக பின்பற்ற கூடாது. மாறாக, அல்லாஹ் அருளிய வேதத்தையும், நபிகளாரின் சொல், செயல் & அங்கீகாரமாக உள்ள நபிகளாரின் போன் மொழிகளையும் மட்டுமே நாம் மார்க்கம் என்று பின்பற்றுதல் வேண்டும். மேலும், இந்த மார்க்கத்தில் புதிதாக உண்டாக்காப்பட்டவை யாவும் பித் அத் ஆகும்; ஒவ்வொரு பித் அத்தும் நரகில் கொண்டு போய் சேர்க்கும். ஆகவே, ஈமானின் கயிற்றை பலமாக பிடித்து அதன் படி வாழக்கூடிய மக்களாக நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும்.