ஜும்ஆவை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா?
ஜும்ஆவை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா?
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னர் மதீனாவைச் சேர்ந்த சிலர் மக்கா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர். அவர்கள் மதீனா சென்றதும் அங்கே ஜும்ஆ தொழுகை நடத்துமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பள்ளிவாசல் கட்டும் வரை அந்த மக்கள் பள்ளிவாசல் அல்லாத காலியிடத்தில் தான் ஜும்ஆ தொழுது வந்தனர். இதற்கான ஆதாரம் வருமாறு:
903حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي أُمَامَةَ بْنِ سَهْلٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ وَكَانَ قَائِدَ أَبِيهِ بَعْدَ مَا ذَهَبَ بَصَرُهُ عَنْ أَبِيهِ كَعْبِ بْنِ مَالِكٍ أَنَّهُ كَانَ إِذَا سَمِعَ النِّدَاءَ يَوْمَ الْجُمُعَةِ تَرَحَّمَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ فَقُلْتُ لَهُ إِذَا سَمِعْتَ النِّدَاءَ تَرَحَّمْتَ لِأَسْعَدَ بْنِ زُرَارَةَ قَالَ لِأَنَّهُ أَوَّلُ مَنْ جَمَّعَ بِنَا فِي هَزْمِ النَّبِيتِ مِنْ حَرَّةِ بَنِي بَيَاضَةَ فِي نَقِيعٍ يُقَالُ لَهُ نَقِيعُ الْخَضَمَاتِ قُلْتُ كَمْ أَنْتُمْ يَوْمَئِذٍ قَالَ أَرْبَعُونَ رواه أبو داود
அப்துர் ரஹ்மான் பின் கஅப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
(எனது தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராரா (ரலி) அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் ஜும்ஆவுடைய பாங்கைச் செவியுறும் போது அஸ்அத் பின் ஸுராராவுக்காகப் பிரார்த்தனை செய்கின்றீர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஹஸ்முன் நபீத்” என்ற இடத்தில் எங்களை ஜும்ஆவுக்காக திரட்டிய முதல் நபர் அவர் தான். அந்த இடம் பனூ பயாளா குலத்தாரின் கருங்கற்களைக் கொண்ட நிலத்தில் நகீவுல் கள்மாத் என்ற தண்ணீர் நிறைந்த பகுதியாகும்” என்று பதில் கூறினார்கள். “அன்றைய தினம் எத்தனை பேர் இருந்தீர்கள்” என்று கேட்டேன். அதற்கு “நாற்பது பேர்” என்று பதில் சொன்னார்கள்.
நூல் : அபூதாவுத் 903
தகுந்த காரணங்கள் இருந்தால் கடமையான தொழுகையைப் பள்ளிவாசல் அல்லாத வேறு இடங்களில் நிறைவேற்றுவதற்கு மார்க்கம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக விரிவான விளக்கம் நமது இணைய தளத்தில் தரப்பட்டுள்ளது.
இது போன்று ஜும்ஆத் தொழுகையை பள்ளிவாசல் அல்லாத வேறு இடங்களில் நிறைவேற்றுவதற்கு நியாயமான காரணங்கள் இருக்குமேயானால் தவறல்ல.
சில பகுதிகளில் தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பள்ளிவாசல்கள் மட்டுமே இருக்கும். சில பகுதிகளில் பள்ளிவாசல் இருக்காது.
சில பகுதிகளில் நபிவழி அடிப்படையில் செயல்படும் பள்ளிகள் இருக்காது. ஜும்ஆவில் இஸ்லாத்தை அதன் தூய்மையான அடிப்படையில் போதிக்க மாட்டார்கள்.
தவ்ஹீத் அடிப்படையில் தனிப்பள்ளி இருந்தால் அதில் ஜும்ஆத் தொழுகையை நடத்திடுவோம். ஆனால் தவ்ஹீத் அடிப்படையில் இல்லாத நேரங்களில் குர்ஆன் ஹதீஸை தூய்மையான வடிவில் மக்களுக்குப் போதிப்பதற்காக பள்ளி அல்லாத வேறு இடத்தில் ஜும்ஆத் தொழுகையை நடத்துவது தவறல்ல. இதை மார்க்கம் தடை செய்யவில்லை.