சோதனைகளை சகித்துக் கொள்வோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

முன்னுரை

அன்பிற்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

இஸ்லாமிய மார்க்கத்தைத் தன்னளவில் கடைப்பிடிப்பதற்குக் கூட இயலாத கால சூழலை நபிகள் பெருமகனாரும் அவர்களது தோழர்களும் மக்காவில் எதிர்கொண்டனர். உயிர் வாழவே இயலாத சூழல் உருவானது.

எதை இழந்தாலும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் இழந்து விடக் கூடாது எனும் உயரிய போதனையை தம் தோழர்களுக்கு செய்து வந்த நபி (ஸல்) அவர்கள், எத்தகைய சோதனைகளின் போதும் பொறுமையை இழந்து விடாமலும், அதே நேரம் அந்தத் துன்பங்களை ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வதில் துவண்டு விடாமலும், இறைவனிடம் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார்கள்.

கொள்கையை இழந்து விட்டால், பிறந்த மண், உற்றார், உறவினர், சொத்து சுகங்கள், என அனைத்தையும் பெற்றுக் கொண்டு தாய் பூமியிலேயே தங்கிக் கொள்ளலாம் எனும் நிலை! எனினும், அந்த மாமனிதரும் அன்னாரது கொள்கையுறுதி மிக்கத் தோழர்களும், தேர்வு செய்ததோ ஏற்றிருந்த கொள்கையைத் தான்!

விளைவு, அனைத்தையும் இழந்து நாடு துறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்முகத்துடன் அதனையும் ஏற்றுக் கொண்டார்கள். அகதிகளாக நாடு துறக்கின்ற கொடிய நிகழ்வை அனுபவித்த நபி (ஸல்) அவர்கள், இறையருளால் அந்த நிகழ்வையே இஸ்லாமிய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வரலாறாக மாற்றியமைத்தார்கள்.

இஸ்லாம் உலகமெங்கும் பல்கிப் பெருகிட, அந்தத் தியாக நிகழ்வையே அடிப்படை காரணியாக அல்லாஹ் ஆக்கினான்.

  • சோதனைகளில் பொறுமை!
  • பொறுமையிலும் நேர்மை!
  • நேர்மையிலும் ஒழுக்கம் தவறாமை!

என வாழ்ந்து காட்டிய மாமனிதர் வழி நின்று, எத்தகைய சோதனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டி வந்தாலும், அழகிய பொறுமையுடன் அவற்றை எதிர்கொள்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு குர்ஆனும், ஹதீஸும் நமக்கு கற்றுத்தரும் சகிப்புத்தன்மை குறித்து சில செய்திகளை இந்த உரையில் காண்போம்.

ஏகத்துவத் தந்தையின் பொறுமை

ஏகத்துவத் தந்தை, இறைத்தூதர் இப்ராஹீம் நபி அவர்களுக்கு ஊரும் பகையாக இருந்தது. தனது மனைவி, மக்களைத் தவிர, பெற்ற உறவும் பகையாக இருந்தது.

எனினும், ஒரு சமுதாயமாகவே மாறி அவர் தனியொருவராக இந்த மார்க்கத்தை ஏந்தியதோடு, மக்களிடம் பொறுமையுடன் தான் கொண்டுள்ள சத்தியக் கொள்கையை போதனை செய்திட அவர்கள் தவறவில்லை. ஒட்டு மொத்த சமுதாயமும் அவரை எதிர்த்ததுடன், அவரைக் கொலை செய்து விடவும் துணிந்தார்கள்.

“நீங்கள் செய்வதாக இருந்தால் இவரை நெருப்பில் பொசுக்கி உங்கள் கடவுள்களுக்கு உதவுங்கள்!” என்று கூறினர்.

(அல்குர்ஆன்: 21:68)

ஆனால் எல்லாம் வல்ல ரஹ்மான் அவர்களைக் காப்பாற்றி விடுகின்றான்.

“நெருப்பே! இப்ராஹீமின் மீது குளிர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் ஆகி விடு” என்று கூறினோம். அவருக்கு எதிராக அவர்கள் சூழ்ச்சி செய்தனர். அவர்களை நஷ்டமடைந்தோராக ஆக்கினோம்.

(அல்குர்ஆன்: 21:69, 21:70)

இவ்வளவு சோதனையைச் சந்தித்து, இனிமேல் அந்த ஊரில் வாழ முடியாது என்றாகி விடுகின்றது.

ஊரார், உறவினர், நாடாளும் அரசன் அத்தனை பேரையும் பகைத்த பின்னர் அவர்களுக்கு நாடு துறந்து செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியே இல்லை. அதனால் அவர்கள் நாடு துறந்து செல்கிறார்கள்.

“நான் இறைவனை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் போகிறேன். அவன் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.

(அல்குர்ஆன்: 29:26)

இவ்வாறு பல நபிமார்கள், கொண்டிருக்கும் கொள்கையை விட இவ்வுலக வாழ்வின் துன்பங்கள் எதுவும் பெரிதல்ல என அவற்றை துச்சமென மதித்து, கடந்து சென்றது தான் இஸ்லாமிய மார்க்கம் கொண்டிருக்கும் உன்னத வரலாறு.

பொறுமை ஒரு வெளிச்சம்

இருள்களிலிருந்து ஒளி எவ்வாறு வழி காட்டுகிறதோ அதே போல் இன்னல்களிலிருந்து காப்பாற்ற ஒரு வெளிச்சமாகப் பொறுமை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தூய்மை இறை நம்பிக்கையில் பாதியாகும். ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். ‘சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி’ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும்.

தான தர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

(முஸ்லிம்: 381)

பொறுமை ஓர் அருட்கொடை

ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் பலவிதமான சோதனைகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவ்வாறு அல்லாஹ் சோதிக்கும் போது அதை பொறுத்துக் கொண்டால், அதுவே விசாலமான அருட்கொடை என்றும், அதை விட விசாலமான ஓர் அருட்கொடையாக அல்லாஹ் வேறெதனையும் தரவில்லை என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்ட போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்.

இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான்.

யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

(முஸ்லிம்: 1902)

பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள். பணிந்து நடப்பவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அது பெரும் சிரமமாகும்.

(அல்குர்ஆன்: 2:45)

சோதனைகளை சகித்துக் கொண்டால்..

செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகள் மூலம் இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள், உயிர்கள் மற்றும் விளைச்சல்கள் ஆகியவற்றை குறைத்தும் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்களுக்கு எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பக்கூடியவர்கள்” என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களது இறைவனின் அருள்களும் மன்னிப்பும் உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றவர்கள்.

(அல்குர்ஆன்: 2:155, 2:156, 2:157)

நபிமார்களும் அவர்களது சமுதாயமும் எதிர்கொண்ட துன்பங்களைப் போல் நாம் அனுபவிக்காமல் எளிதில் சொர்க்கம் சென்று விட முடியுமா? என்றும் அல்லாஹ் நம்மை நோக்கிக் கேள்வியெழுப்புகிறான்.

ஏகத்துவக் கொள்கையை ஏந்தி விட்டோம், ஈமான் கொண்டு விட்டோம் என்றாலும் அல்லாஹ் அத்துடன் திருப்தியடைய மாட்டான். நாம் கொண்டிருக்கும் ஈமானின் ஆழத்தை வெளிக்காட்ட விரும்புகிறான்.

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டுவதற்காக உங்களை நாம் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.

(அல்குர்ஆன்: 47:31)

உங்கள் செல்வங்களிலும் உயிர்களிலும் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன் வேதம் வழங்கப்பட்டோரிடமிருந்தும் இணை வைப்போரிடமிருந்தும் புண்படுத்தும் சொற்கள் பலவற்றைச் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, இறையச்சத்துடன் நடந்தால் அது உறுதிமிக்க காரியங்களில் உள்ளது.

(அல்குர்ஆன்: 3:186)

அவ்வாறு சோதனைகள் நம்மைத் தாக்குகின்ற போது, அல்லாஹ்வின் பேருதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது முஃமினின் இன்றியமையாத கடமையாகும்.

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையை மேற்கொள்வீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகச் சிறந்தவன்.

(அல்குர்ஆன்: 10:109)

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராகப் பிரார்த்தித்தார்.

(அல்குர்ஆன்: 68:48)

வணக்க வழிபாட்டை விட்டும் தடுக்கப்படுதல்

நாம் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளைச் சரிவர நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது தொடர்பாகவும் திருமறை நமக்கு அழகாக போதனை செய்கிறது.

வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) பொறுத்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?

(அல்குர்ஆன்: 19:65)

பொறுமைக்கு பரிசாக சொர்க்கத்தை பெற்ற பெண்மணி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்.

அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன்.

ஆயினும், (வலிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள்.

(முஸ்லிம்: 5032)

மகனுக்கு பொறுமையைப் போதித்த லுக்மான்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான லுக்மான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, அவர் தன் மகனிடம் இறைவனுக்கு இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், பெற்றோருக்கு உதவ வேண்டும் என்ற போதனைகளுடன், சோதனை வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும் என்று மிக அழகான முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்துக் கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர், தன் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

(அல்குர்ஆன்: 31:17)

யூசுப் (அலை) அவர்கள் காட்டிய பொறுமை

“எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை” என்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். “உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. நான் அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன்: 12:17, 12:18)

அய்யூப் (அலை) அவர்களின் சகிப்புத்தன்மை

அய்யூப் (அலை) அவர்கள் இறைத்தூதர்களில் ஒருவராவார். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இவர் அமைந்துள்ளார்.

(அவரது உடலில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)

“எனக்குத் துன்பம் ஏற்பட்டு விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனிடம் பிரார்த்தித்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரையாகும்.

(அல்குர்ஆன்: 21:83, 21:84)

நபி (ஸல்) அவர்கள் காட்டிய பொறுமை

தமது அன்பு மகன் மரணித்த தருவாயில், தாங்க இயலாத வேதனையை நபி (ஸல்) அவர்கள் அடைகின்றார்கள். எனினும், இறைவனிடம் கிடைக்கப்பெறும் மகத்தான நற்பேறினை குறிக்கோளாகக் கொண்டு அவ்விடம் பொறுமை மேற்கொள்வதை கீழ்க்காணும் நிகழ்வு விளக்குகின்றது.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம்.

அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்ஃபின் புதல்வரே!” என்று கூறிவிட்டுத் தொடர்ந்து அழுதார்கள்.

பிறகு “கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக் கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகம் கவலைப்படுகிறோம்” என்றார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(புகாரி: 1303)

ஆக, துன்பங்களின் போது இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி சகிப்புத்தன்மை கொள்வதில் இஸ்லாமிய வரலாறு இந்த சமூகத்திற்கு மிகப் பெரிய படிப்பினையைத் தந்திருக்கிறது.

த‌மக்கு நேர்ந்த‌ துன்பங்களையும் அடக்குமுறைகளையும் பொறுமையுடன் சகித்துக் கொண்ட அந்தச் சமுதாயம் அல்லாஹ்வின் கருணைப் பார்வையால் மகத்துவம் பெற்றதை நாம் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆட்சியோ, அதிகாரமோ தங்கள் வசம் இல்லாத நிலையில் பொறுமை காத்த சமுதாயத்திற்கு, ஆட்சியை வழங்கினான் அல்லாஹ். அதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கும், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையைத் தேடியவர்களாகவும் அந்த மக்கள் மாறினர்.

போர் கடமையான காலகட்டங்களில், தங்களை அழிக்க முனைந்த எதிரிகளை போர்க்களங்களில் எதிர்கொண்டனர். மகத்தான வெற்றியை பெற்றனர். இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது, மக்கா வாழ்வில் அந்தச் சமூகம் வெளிப்படுத்திய வியத்தகு சகிப்புத்தன்மை!

முடியுரை

ஆகவே நாமும் நம்முடைய வாழ்வில் எந்த சூழ்நிலையிலும், பொறுமை சகிப்புத்தன்மை இவற்றை விட்டுவிடாமல் வாழ்வோமாக! அப்படிப்பட்ட நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள் புரிவானாக!