சொர்க்கத்தில் தொழுகையா?

நூல்கள்: தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

ஹஜ்ரத் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. அவர்களுடைய கலீபாக்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாஹீர் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கவலையுடன் கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் ஹஜ்ரத் சொர்க்கத்தில் தொழுகை எவ்வாறு இருக்க முடியும்? அது அமல்களுக்குப் பிரதி பலன்கள் வழங்கப்படும் இடமாயிற்றே! அமல் செய்யும் இடமல்லவே என்று கூறியவுடன், ஆஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்று கூறினார்கள்.

இப்படிப்பட்ட நல்லடியார்களினால்தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. உண்மையில் வாழ்க்கையின் இன்பத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்கள் இப்படிப்பட்ட பெரியார்கள் தான்.

இது தப்லீக் தஃலீம் தொகுப்பு நூலில் பக்கம் 45 ல் இடம் பெற்றுள்ளது.

என்னே பக்தி! என்னே தக்வா? என்று அப்பாவிகள் மூக்கில் விரலை வைத்து வியப்படையுமளவுக்கு இந்தக் கதை பெரியார்கள் (?) மீது போலிமதிப்பை ஏற்படுத்துவதுடன் இஸ்லாத்தை தவறான வடிவத்திலும் அறிமுகப்படுத்துகின்றது.

தொழுகையாகட்டும்! இன்ன பிற வணக்க வழிபாடுகளாகட்டும்! ஒவ்வொரு முஸ்லிமும் அதை விரும்பியாக வேண்டும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆயினும் அதற்கு ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை விரும்ப வேண்டுமே தவிர இறைவன் விரும்பாவிட்டாலும் அவற்றை விரும்புவேன் என்று அடம் பிடிக்க முடியாது.

எப்போது அவற்றை நிறைவேற்ற வேண்டும் என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அப்போது அதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளானோ அப்படிச் செய்ய வேண்டும்.

தொழுகை நல்லது தானே என்று எண்ணிக் கொண்டு நான்கு ரக்அத்களுக்கு பதிலாக ஆறு ரக்அத்கள் ஒருவன் தொழுதால் அவன் பக்தனல்ல. அகம்பாவம் கொண்டவனாகவோ அல்லது மார்க்கத்தை அறியாத மூடனாகவோ அவன் இருக்க வேண்டும்.

பக்தி எனும் பெயரில் ஒருவன் பகலில் நோன்பு நோற்பதற்குப் பதிலாக இரவிலும் நோன்பு நோற்க முயன்றால், தொழக் கூடாத நேரங்களில் ஒருவன் தொழுதால் அவன் தக்வாதாரியாக விட முடியாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இதன் போலித்தனம் பளிச்சிடும்.

சொர்க்கத்தில் தொழுகை கிடையாதா? என்று அஷ்ரப் அலி தானவியின் கலீபா அப்துல் வாஹித் என்பார் மேற்கொண்ட கதையில் கேட்கிறார். சொர்க்கத்தில் தொழுகை உட்பட எந்தவிதமான வணக்கமுறைகளும் கிடையாது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எல்லா முஸ்லிம்களும் அறிந்துள்ள இந்த சாதாரண விஷயம் கூட இந்தப் பெரியாருக்குத் தெரியவில்லை.

அதுதான் போகட்டும்! எத்தனையோ பேரறிஞர்களுக்கு சில நேரங்களில் சாதாரண விஷயம் தெரியாமலிருப்பது இயற்கையே என்பதால் விட்டுவிடுவோம். ஒரு விபரமறிந்த மனிதர் இந்த பெரியாருக்கு சொர்க்கத்தில் தொழுகை கிடையாது என்பதை விளக்கிய பிறகும் கூட அவர் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள முன் வரவில்லை. தனது அறியாமையில் மேலும் பிடிவாதம் காட்டுகிறார். அவர் எதிரொலி தான் சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்ற அவரது கேள்வி.

இந்தக் கேள்வியில் அவரது முரட்டு அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. இறைவனது ஏற்பாட்டில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து வெளிப்படுகின்றது.

தொழுகை மற்றும் வணக்கங்கள் எதுவுமின்றி சொர்க்கத்தில் வாழ முடியும் என இறைவன் ஏற்பாடு செய்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியமாகும்? என்று இவர் ஐயம் தெரிவிக்கிறார் இறைவனது ஏற்பாட்டில் குறை காண்கிறார்.

ஸகரிய்யா சாஹிப் பார்வையில் வேண்டுமானால் அந்தப் பெரியாரின் மகாத்மியம் தென்படலாம். நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இறைவனின் மகாத்மியத்திற்கு இவர் மாசு கற்பிக்கிறார் என்றே முடிவுக்கு வருவார்கள்.

எந்த இறைவனது மேன்மையை அடியான் ஒப்புக்கொள்வதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, இறைவன் எஜமான் என்பதையும், தான் அவனது அடிமை என்பதையும் பறைசாற்றுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, அந்தத் தொழுகையை வைத்தே இறைவனை ஸகரிய்யா சாஹிபும் இந்தப் பெரியாரும் தூர எறிகிறார்கள்.

மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவராகவும், இறைவனது ஏற்பாட்டில் குறை கண்டவராகவும் அறிமுகம் செய்யப்பட வேண்டிய இப்பெரியார் இங்கே மகானாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.

இது போன்ற கதைகளை தொழுகையைச் சிறப்பிப்பதற்காக கூறுவது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல. பெரியார்களைப் பற்றிய மதிப்பு மக்களிடம் இடம் பெற வேண்டும் என்பதுவே இவரது நோக்கம். இது ஆதாரமற்ற கற்பனை அல்ல. இந்த நோக்கத்தை ஸகரிய்யா சாஹிப் அவர்களே அவரையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்.

இந்தக் கதையை எழுதிவிட்டு, பார்த்தீர்களா தொழுகையின் சிறப்பை? என்று ஸகரிய்யா சாஹிப் விமர்சனம் செய்திருந்தால் கதை சரியாக இல்லாவிட்டாலும் ஸகரிய்யா சாஹிபின் நோக்கத்தையாவது சந்தேகிக்காமலிருக்கலாம். இவரோ கதையை எழுதிவிட்டு இப்படிப்பட்ட நல்லடியார்களினால் தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது என்று கூறுகிறார். அதாவது அந்தப் பெரியாரின் மதிப்பைக் கூட்டிக்காட்டுவது தான் அவரது நோக்கம் என்பதற்கு இந்த விமர்சனமே சான்று.

பெரியார்களை இப்படி உயர்த்தி அவர்களைப் பற்றி புனிதர்கள் என்ற நம்பிக்கையை வேரூன்றச் செய்தால் தன்னையும் மற்றவர்கள் புனிதாரக மதிப்பார்கள் என்ற திட்டமே இந்தக் கதைகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம். ஸகரிய்யா சாஹிப் அறிமுகப்படுத்தும் வாஹிதும் இந்த ஸகரிய்யா சாஹிபும் முஜத்திதே அல்பதானி அவர்களின் சீடர்கள், தனது சகாவின் மகிமையை உயர்த்தினால் தனக்குப் பிற்காலத்தில் அதுபோன்ற உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே கதையின் பின்னணி.

தங்களைப் பற்றி இமேஜை உயர்த்திக் கொண்டு முரீது வியாபாரத்தை தடங்கலின்றி நடத்திட இது போன்ற கதைகள் இவருக்குத் தேவைப்படுகிறது.