சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இது தேர்தல் காலம் என்பதால் இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன், இது ஏதோ ஓர் அரசியல் கட்சியின் வெற்று அறிவிப்பு என்று எண்ணிவிட வேண்டாம்.
இது அல்லாஹ்வின் வேதமும் தூதரும் கற்றுத் தருகின்ற ஓர் அழைப்பாளனின் அடிப்படைத் தகுதியாகும். இது அழைப்புப் பணியின் அடிப்படை விதியாகும்.
இந்த விதி ஏன்? எதற்கு?

ஒருவர், தான் போதிக்கும் கொள்கைக்கு மாற்றமாக நடந்தால் அது அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவும் தடையாகவும் ஆகி விடும் என்பது தான் இதற்கான பதிலாகும்.
“புகை பிடிக்காதீர்” என்று போதனை செய்யும் ஒருவர் புகை பிடித்துக் கொண்டே மற்றவர்களை நோக்கி அதைச் சொல்லும் போது மக்களிடத்தில் அது எந்த ஒரு பிரதிபலிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. அதைப் போன்று, மது அருந்துபவர் மற்றவர்களுக்கு மது அருந்தாதீர் என்று போதனை செய்ய முடியாது.

அண்மையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, ராதாரவி போன்றவர்கள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்கள். அது மக்களிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம், பாலியல் வன்கொடுமைகளுக்கும் தலைவிரித்தாடும் விபச்சாரத்திற்கும் அடித்தளமாக, ஆணி வேராக அமைந்திருப்பது திரைப்படங்கள் தான். அதில் நடிக்கும் இவர்கள் விபச்சாரத்திற்கு விதிவிலக்கானவர்கள் கிடையாது. அதனால் இவர்கள் பேச்சு மக்கள் காதில் விழவில்லை.
ஒரு தீமையைத் தடுப்பவர் அதைத் தம் வாழ்வில் செய்பவராக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவரால் சமூகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு.

சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் வரதட்சணையைப் பற்றி வாய் கிழிய, வானளாவப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் தங்களது திருமணத்திலோ அல்லது தங்கள் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் திருமணத்திலோ அதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதனால் தான் வரதட்சணை எனும் தீமை இன்னும் ஒழிந்தபாடில்லை; ஓய்ந்தபாடில்லை. மார்க்கம் ஏன் இந்த வரையறையை வைத்திருக்கின்றது என்பதற்கு இது நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.
ஒரு நன்மை மக்களிடம் வளரவும் ஒரு தீமை அழியவும் வேண்டுமானால் அதைப் பிரச்சாரம் செய்வோர், தாங்கள் எடுத்துச் சொல்கின்ற நன்மைக்குத் தங்கள் வாழ்க்கையில் முன்மாதிரியாகவும், தடுக்கின்ற தீமையை தங்கள் வாழ்க்கையில் தவிர்ப்பவராகவும் இருக்க வேண்டும். இல்லையென்றால் அந்த நன்மை மக்களிடம் வளராது; தீமை விலகாது.
அதனால் இஸ்லாம் அழைப்புப்பணியின் அடிப்படை விதியாக இதை வகுத்திருக்கின்றது. வரதட்சணை எனும் தீமையை இப்படித்தான் தவ்ஹீத் ஜமாஅத் எதிர்கொண்டது. தவ்ஹீத் ஜமாஅத்தினர் தங்களது வாழ்க்கையில் அந்தத் தீமையை விட்டு விலகிக் கொண்டனர். அது மட்டுமின்றி, வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அத்தகைய திருமணங்களை விட்டும் விலகிக் கொண்டனர். அதற்குக் காரணம் கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் தான்.

தாவூத், மர்யமின் மகன் ஈஸா ஆகியோரின் வாயால் (ஏக இறைவனை) மறுத்த இஸ்ராயீலின் மக்கள் சபிக்கப்பட்டனர். அவர்கள் மாறு செய்ததும், வரம்பு மீறியோராக இருந்ததுமே இதற்குக் காரணம். அவர்கள் செய்து வந்த தீய செயல்களை விட்டும் ஒருவரை ஒருவர் தடுக்காதிருந்தனர். அவர்கள் செய்தது மிகவும் கெட்டது
(அல்குர்ஆன்: 5:78), 79)

அல்லாஹ் இத்தகையவர்களை சாபத்திற்கு உரியவர்கள் என்று கூறுகின்றான். இது போன்ற சாபத்திற்கு இலக்காகாமல் அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும். இது தீமைக்கு எதிரான நமது ஜமாஅத்தின் அணுகுமுறை.
எளிமைத் திருமணம் என்ற நன்மையை நமது ஜமாஅத் மக்களிடத்தில் அறிமுகம் செய்து அதை செயல்படுத்தியும் காட்டியதால் தான் மக்களிடம் நமது ஜமாஅத்தின் பிரச்சாரம் எடுபடுகின்றது. இல்லையென்றால் அது தூர்ந்து போயிருக்கும்.
அழைப்புப்பணியில் உள்ளவர் அல்லது ஒரு சமூக சீர்திருத்தவாதி, குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் வகுத்திருக்கின்ற இந்த விதியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அதனால் இவ்வுலகில் ஏற்படும் தீய விளைவு, ஒரு நன்மை வளராமல் போய்விடுகின்றது; ஒரு தீமை ஒழிக்கப்படாமல் நீடிக்கின்றது. அதனால் சமுதாயம் சீரழிவையும் சிதைவையும் சந்திக்கின்றது. எனவே அல்லாஹ்வின் கோபம் இவர்கள் விஷயத்தில் கடுமையாக வெளிப்படுகின்றது.
வேதத்தைப் படித்து கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
(அல்குர்ஆன்: 2:44)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் கடும் கோபத்துக்குரியது.
(அல்குர்ஆன்: 61:2), 3)

மறுமையில் இதற்கு என்ன தண்டனை என்பதைக் கீழ்க்காணும் ஹதீஸ் விவரிக்கின்றது.
மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்’ என்று கூறுவார்.
அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் (ரலி)
நூல்: (புகாரி: 3267)
இதனால் தான் அழைப்புப்பணியில் உள்ளவர்கள் இந்த விதிக்கு மாற்றமாக நடக்கக் கூடாது என்பதில் தவ்ஹீத் ஜமாஅத் கடுமை காட்டுகின்றது. நாம் செய்து கொண்டிருப்பது நபிமார்கள் செய்த அழைப்புப்பணியாகும்.
ஷுஐப் (அலை) அவர்கள் இதை தனது மக்களிடம் இதை பகிரங்கமாகவே மக்களிடம் தெரிவிக்கின்றார்கள்.
“எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்’’ என்று (ஷுஐப்) கூறினார்.
(அல்குர்ஆன்: 11:88)
மக்களிடத்தில் ஒன்றைத் தடுத்து விட்டு, அதை ஒருவர் தன் வாழ்க்கையில் செய்கிறார் என்றால் அவரிடம் வெட்க உணர்வு நீர்த்துப் போய்விட்டது என்று தான் அர்த்தம். பின்வரும் ஹதீஸ் இதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், ‘நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்’ என்பதாகும்.
அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி)
நூல்: (புகாரி: 3483)

‘திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தாயுடன் படுப்பதற்குச் சமம்’ என்று பாமகவின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார். ஆனால் அதன் பின்பு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தார். ‘அதிமுகவுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம்’ என்று சமீப காலமாக, திரும்பத் திரும்ப முழங்கிக் கொண்டிருந்தார். அது ஊடகங்களிலும் பதிவானது. ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ‘அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று எத்தனை தடவை சொல்வது? பத்திரம் போட்டு எழுதித் தரவா?’ என்று ராமதாஸ் கேட்டார். பத்திரிக்கையில் வந்த அந்தச் செய்தியின் மை கூடக் காயவில்லை. அதற்குள் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார். அடுத்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அன்புமணி ராமதாஸை நிருபர்கள் வெளுத்து வாங்குகின்றார்கள். கோபத்தில் கொந்தளித்த அவரது முகம் ஊடகத்தில் வெளியானது. அவரது வெட்கங்கெட்ட தன்மையைப் பார்த்து உலகமே காரித் துப்பியது.
இதுமாதிரியான ஓர் அவமானத்தை ஓர் அரசியல்வாதி தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அழைப்புப் பணியில் உள்ள ஓர் அழைப்பாளரை விடுங்கள்; ஒரு சாதாரண முஸ்லிம் இதைத் தாங்கிக் கொள்ள முடியுமா?

இது போன்ற விவகாரங்களில் மற்றவர்களைக் காட்டிலும் பன்மடங்கு வெட்க உணர்வு ஓர் அழைப்பாளனுக்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணர்வைத் தான் ஷுஐப் (அலை) அவர்களின் இந்த நிலைப்பாடு ஓர் அழைப்பாளனுக்குத் தருகின்றது. இவற்றைப் பாடமாகவும் படிப்பினையாகவும் எடுத்துக் கொண்டு அழைப்பாளர்கள் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.