செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே!
“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர்(ரலி)
இந்தச் செய்தி புகாரி, முஸ்லிம் உட்பட ஏராளமான புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹதீஸ் நூற்களில் முதல் செய்தி
பல அறிஞர்கள் இந்தச் செய்தியைத் தங்கள் புத்தகத்தின் முதல் செய்தியாகக் கொண்டு வந்துள்ளார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இமாம் புகாரி அவர்கள்.
ஸஹீஹுல் புகாரி எனும் தனது புத்தகத்தின் முதல் அத்தியாயமாக வஹீயின் ஆரம்ப நிலை என்ற தலைப்பையே கொண்டு வருகிறார்கள். இந்தத் தலைப்பின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் முதல் செய்தியே மேற்படி, “செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே!” என்ற ஹதீஸ்தான்.
தலைப்புடன் எந்த வகையிலும் பொருந்திப் போகாததாகவே இந்த செய்தி அமைந்துள்ளது. அவ்வாறு தலைப்புடன் பொருந்திப் போகாத போது இந்த இடத்தில் ஏன் இமாம் புகாரி இந்தச் செய்தியைக் கொண்டு வரவேண்டும் என்ற கேள்விக்குப் பதிலும் கிடைக்கிறது.
எந்தவொரு அமலைச் செய்வதாக இருந்தாலும் அதற்கு நிய்யத் எனும் தூய எண்ணம் அவசியமாகும். இதுதான் மார்க்கத்தின் அடிப்படை. அத்தகைய நல்லெண்ணத்துடன் நன்மையை எதிர்பார்த்தே புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது என்பதற்காகவும், மார்க்கத்தை அறிந்துக் கொள்தல் என்ற நற்காரியத்தைச் செய்வதற்கு இந்தப் புத்தகத்தைத் திறந்து படிக்க விரும்புபவர் தனது எண்ணத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்ள ஒரு நினைவூட்டலாகவுமே இமாம் புகாரி இந்தச் செய்தியை முதல் செய்தியாகக் கொண்டு வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இதனால்தான் பிற அறிஞர்களும் தங்கள் புத்தகத்தை இந்த ஹதீஸை வைத்து ஆரம்பித்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரைப் பொறுத்த வரையில் ஹதீஸ் கலையின் ஓரிரு விதிகளுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.
ஹதீஸ் கலையில் ‘கரீப்’ என்றொரு வகை இருக்கிறது. அதாவது, அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸே கரீப் எனப்படும்.
இந்த வகைக்கு ஓர் உதாரணமாக இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரை எடுத்துக் கொள்ளலாம்.
ஏனெனில், இந்த செய்தியை நபித்தோழர்களில் உமர்(ரலி) அவர்களைத் தவிர்த்து வேறு யாரும் அறிவிக்கவில்லை.
அறிவிப்பாளர் தொடரில் ஒரு தலைமுறையிலிருந்து ஹதீஸைப் பெற்று, அடுத்த தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு அறிவிக்கும் போது சில வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள்.
அவை, ஸமிஃத்து (நான் இன்னார் கூறச் செவியுற்றேன்), அக்பரனீ (இன்னார் எனக்குத் தெரிவித்தார்), ஹத்தஸனீ (இன்னார் எனக்கு அறிவித்தார்), அன் (இன்னாரிடமிருந்து பெற்றேன்), கால (இன்னார் கூறினார்) ஆகியவையாகும்.
இவற்றில் அன், கால ஆகியவைகளைத் தவிர மற்ற மூன்று வார்த்தைகளும் இந்த செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹதீஸ் கலையில் இந்த வகைக்கும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரை உதாரணமாக கூறுவார்கள்.
“செயல்கள் யாவும் நிய்யத்(எனும் எண்ணங்)களை பொறுத்தே அமைகின்றன”
இந்தச் செய்தி மார்க்கத்தின் அனைத்து விஷயத்திற்குமான அடிப்படையைப் பற்றிப் பேசுவதால் மார்க்கத்தின் எந்தவொரு விஷயத்துடனும் இந்தச் செய்தியை இணைத்து விளக்கம் காணலாம்.
ஆனால், இந்த இடத்தில் நேரடியாக நாம் பெறும் சில விளக்கங்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
மார்க்கத்தில் எந்தவொரு அமலைச் செய்தாலும் அதைச் செய்யும் போது நிய்யத் இருக்க வேண்டும். அமல் செய்யும் போதும் நிய்யத் இல்லை என்றால் அப்போது நாம் அந்த அமலை செய்ததாகக் கருதப்படாது. இறைவனிடம் கூலியும் வழங்கப்படாது.
உதாரணமாக, தொழுகையை நிறைவேற்ற உளூ எனும் அங்கத்தூய்மை அவசியமாகும். உளூ ஒரு வணக்கம். அதை நிறைவேற்றும் போது, உளூ செய்கிறோம் என்ற எண்ணமில்லாமல் நாம் தூய்மை செய்கிறோம் எனில் அப்போது நாம் உளூ என்ற வணக்கத்தைச் செய்தவர்களாக ஆக மாட்டோம். சாதாரணமாக முகம், கை, கால்கள் கழுவியதாகத்தான் ஆகும். ஒருவர் உளூவின் அத்துனை உறுப்புகளையும் கழுவியிருந்தாலும் உளூச் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாமல் அவர் செய்கின்ற போது உளூ என்ற வணக்கத்தைச் செய்ததாக அவர் கருதப்பட மாட்டார்.
அதே போல், இறைவனை நாம் தொழுகிறோம். தொழும்போது, “நான் இன்ன தொழுகையைத் தொழுகிறேன்” என்ற எண்ணத்துடன் நிறைவேற்ற வேண்டும். தொழுகிறேன் என்ற எண்ணமில்லாமல் தொழுதால் நாம் தொழுகையை நிறைவேற்றியவர்களாகக் கருதப்பட மாட்டோம். ஒருவர் உடற்பயிற்சி செய்யும் எண்ணத்தில், தொழுகையின் அனைத்து முறைகளையும் செய்தாலும் ஏதோ குனிந்து, நிமிர்ந்து எழுந்ததாகத்தான் கருதப்படுமே தவிர தொழுததாக கருதப்படாது.
இதுபோன்றுதான் கடமையான, உபரியான எந்தச் செயலாக இருந்தாலும் அதைச் செய்யும் போது, நான் இன்ன வணக்கத்தைச் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் கவனமாகச் செய்ய வேண்டும். ஒருவர் எண்ணமுமில்லாமல் கவனமுமில்லாமல் செய்கிறார் எனில் அவர் அந்த அமலை செய்தவராகக் கருதப்படமாட்டார்.
“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன” என்ற இந்தச் செய்தியின் முதல் பகுதிக்குப் பிறகு இரண்டாம் பகுதியொன்று துவங்குகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியது தான் கிடைக்கிறது. எனவே, எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக (ஆதாய)த்தை நோக்கமாகக் கொண்டுள்ளதோ அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ, அவரது ஹிஜ்ரத்(தின் பலனும்) அதுவாகவே இருக்கும்.
இவ்வாறு அந்தச் செய்தியின் பிற்பகுதி தொடங்கி முடிகிறது.
இந்த விளக்கம் இந்தச் செய்தியின் முதல் பகுதியை விளக்கக்கூடியதாகவே இருக்கிறது.
ஒவ்வொருவரும் எந்த எண்ணத்தில் அமல் செய்கின்றாரோ அதுவே அவருக்குக் கிடைக்கிறது. அதாவது, ஒருவர் இந்த உலக ஆதாயத்திற்காகவும் பேருக்காகவும் புகழுக்காகவும் அல்லது இது போன்ற வேறு காரணங்களுக்காக ஒரு செயலைச் செய்தால் அவர் இறைவனுக்காகச் செய்தவராகவும் கருதப்படமாட்டார். அவருக்கு மறுமையில் எந்த கூலியும் கிடையாது.
அல்லாஹ்வுக்காகவும் அவனது கூலியை எதிர்ப்பார்த்தும், இன்ன செயலைச் செய்கிறேன் என்ற எண்ணத்துடன் ஒருவர் அமல் செய்தால் அவருக்கே இறைவன் கூலி வழங்குவான் என்று மேலுள்ள ரத்தினச்சுருக்கமான வார்த்தைகளுக்கு நபிகளாரே ஹிஜ்ரத்தை உவமை காட்டி இந்த விளக்கத்தை அளிக்கிறார்கள்.
இதில் நபிகளார் ஹிஜ்ரத் என்ற குறிப்பிட்ட அமலை வைத்து விளக்கமளிக்க என்ன காரணம்?
நபிகளார் நிய்யத்தின் முக்கியத்துவத்தைப் பற்றித் தெரிவித்துவிட்டு ஹிஜ்ரத்தைக் கொண்டு விளக்கம் சொல்வதற்குக் காரணம், பெரிய அமலை வைத்து உதாரணம் சொல்லப்படும் போது அதன் முக்கியத்துவத்திற்குக் கூடுதல் வலிமை சேர்க்கும்.
அதாவது, ஹிஜ்ரத் என்பது மிகப்பெரிய தியாகங்கள் அடங்கிய ஒரு அமலாகும். ஊர், உறவு மற்றும் உடமை என்று அனைத்தையும் துறந்து வேறொரு நாட்டிற்கு எதுவுமின்றி, அடுத்தக் கட்டம் என்ன? என்ற கேள்வியோடு இடம்பெயர்வதாகும்.
இவ்வளவு பெரிய அமலாக இருந்தாலும் அது தூய எண்ணத்துடன் இறைவனுக்காக, அவனது கூலியை எதிர்பார்த்துச் செய்யப்படாமல் உலக சுகத்திற்காக இருக்குமெனில் அது இறைவனிடம் எந்தக் கூலியையும் பெற்றுத் தராது.
இங்கு செய்யப்படுகிற அளவோ சிரமமோ முக்கியமல்ல. எண்ணமே பிரதானம் என்பதை விளக்குவதற்காக ஹிஜ்ரத் தொடர்புபடுத்தப்பட்டிருக்கலாம்.
உப்பும் உணர்வும்
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்றொரு பழமொழி கூறுவார்கள்.
உணவிற்கு உப்பு என்பது பிரதானமான ஒன்று. அதுபோல அமலுக்கு உணர்வு என்பது மிகஅவசியமான ஒன்று.
உணர்வு, எண்ணம், கவனம் இவை இல்லாமல் செய்யப்படும் எந்த அமலும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது.
இதற்கு சில உதாரணங்களைக் காணலாம்.
கவனமற்ற தொழுகை
தொழுகை இஸ்லாத்தின் முதன்மையான அமலாகும். நம்மை மறுமை வெற்றிக்கு நெருக்கிக் கொண்டுச் செல்லும் அமலாகும்.
ஆனால், அத்தகைய தொழுகைக்கூட நிய்யத்துடன் கவனமாகத் தொழ வேண்டும்.
தமது தொழுகையில் கவனமற்றுத் தொழுவோருக்குக் கேடு தான். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் தொழுகின்றனர்.
(அல்குர்ஆன்: 107:4)➚,5,6)
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் அவனோ அவர்களை ஏமாற்றுவான். அவர்கள் தொழுகையில் நின்றால் சோம்பேறிகளாகவும், மக்களுக்கு காட்டுவதற்காகவும் நிற்கின்றனர். அவர்கள் குறைவாகவே தவிர அல்லாஹ்வை நினைப்பதில்லை.
அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மறுத்ததே அவர்கள் செலவிட்டது அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்குத் தடையாக உள்ளது. மேலும் அவர்கள் சோம்பேறிகளாகவே தொழுகைக்கு வருகின்றனர்; விருப்பமின்றியே செலவிடுகின்றனர்.
எண்ணமும் கவனமுமின்றி தொழுதால் அது எவ்வாறு கூடாதோ அதே போல எண்ணத்தைப் பறிக்கும் விதமான சூழல் இருக்கும் போதும் தொழக்கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக் கூடாது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’’ என்றார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
பசியுடன் இருக்கும் போது உணவு கொண்டு வரப்பட்டுவிட்டது. இந்நேரத்தில் தொழச் சென்றால் தொழுகையின் எண்ணத்தை விட உணவு பற்றிய எண்ணமே மேலாடும் என்பதால் இந்தச் சூழலை நபிகளார் தவிர்க்கச் சொன்னார்கள்.
அதே போல சிறுநீர், மலத்தை அடக்கி கொண்டும் தொழக்கூடாது. அந்த இயற்கைத் தேவைகளை முடித்த பிறகே தொழ வேண்டும். ஏனெனில் அடக்கிய நிலையில் தொழுதால் தொழுகையில் கவனம் ஏதும் இருக்காது. எப்போது கழிவறைக்குச் செல்வோம் என்ற எண்ணமே மேலிடும்.
எனவே, இதுபோல எண்ணமற்ற வணக்கங்களையும் கவனத்தைத் திசை திருப்புகிற சூழலையும் தவிர்க்க மார்க்கம் போதனை செய்கிறது.
எண்ணமில்லாமல் செய்யப்படும் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்பது சரி. நிய்யத் என்றால் என்ன? அது எப்படியிருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில்களையும் அறிவது அவசியமாகும்.
இஸ்லாமிய சமூகத்தில் சிலர் நிய்யத் என்பதைத் தவறாக விளங்கி வைத்துள்ளனர்.
நிய்யத் என்றால் எந்தவொரு வணக்க வழிபாட்டைச் செய்ய ஆரம்பிக்கும் போதும் அரபியில் சில வாசகங்களை மொழிவதுதான் என்று கருதுகின்றனர்.
ஆனால், நிய்யத் என்ற வார்த்தைக்கு மொழிதல் என்பது பொருள் அல்ல. மனதால் எண்ணுவது தான். மேலும், நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஒவ்வொரு வழிபாட்டிற்கும் நிய்யத் என்று எந்த அரபு வாசகங்களையும் கற்றுத் தரவில்லை எனும் போது தாங்களாகவே இவ்வாறான வாசகங்களை எங்கிருந்து பெற்றார்கள் என்று தெரியவில்லை.
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராத விஷயங்களைச் சொல்வது, செய்வது அனைத்தும் பித்அத் ஆகும்.
எனவே, நிய்யத் என்பது நாம் அமல் செய்யும் போது இன்ன அமலைச் செய்கிறேன் என்ற எண்ணம் கொள்ளுதலே ஆகும்.
நிய்யத் என்பது வாயால் மொழிகின்ற சொற்கள் அல்ல. மனதால் கொள்கின்ற எண்ணம்தான் என்றால் அந்த எண்ணம் எப்படியிருக்க வேண்டும்? என்ற கேள்விக்கான விடையையும் மார்க்கம் தருகிறது.
எண்ணம் இரண்டு வகையில் உள்ளது.
நன்மைக்குரியது. 2. நஷடத்திற்குரியது.
நன்மைக்குரிய எண்ணம்
நன்மைக்குரிய நிய்யத்தின் அடிப்படை இக்லாஸ் ஆகும்.
வணக்கம் புரியும் போது, இந்த வணக்கத்தை அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு யாருக்காகவும் எதற்காகவும் செய்யவில்லை. அவனது கூலியையே எதிர்பார்க்கிறேன் என்ற மனத்தூய்மையுடன் கூடிய எண்ணமே இக்லாஸ் ஆகும்.
சத்திய நெறியில் நின்று, மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு மட்டும் கலப்பற்றதாக்கி அவனையே வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தை வழங்குமாறுமே கட்டளையிடப்பட்டுள்ளனர். இதுவே நேரான மார்க்கம்.
எந்தவொரு வணக்கம் புரியும் போதும் நமது எண்ணம் அல்லாஹ்வுக்காகவே இதைச் செய்கிறேன். அவனது கூலியை எதிர்பார்த்து மட்டுமே செய்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.
“மனத்தூய்மையுடனும் இறைதிருப்தியை எதிர்ப்பார்த்தும் செய்யப்படுகிற அமலைத் தவிர மற்றதை இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா
“அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நாம் ஏற்கனவே சொன்னதைப் போல எந்தவொரு அமல் செய்யும் போதும் இக்லாஸான எண்ணத்தையே இறைவன் கவனிக்கிறான்.
அந்த எண்ணத்திற்குத் தகுந்தாற் போலத்தான் கூலி வழங்கப்படும். இறைவனுக்காகவே அவனது கூலிக்காகவே என்று அல்லாஹ்விற்குப் பயந்து, பக்தியுடன் செய்யப்படும் போதே அதன் கூலி அளப்பரியதாக இருக்கும்.
நாம் செய்யும் அளவும் சிரமும் முக்கியமல்ல. நிய்யத்தின் தன்மையே முக்கியமானது என்பதற்குச் சில செய்திகளை உதாரணமாகப் பார்க்கலாம்.
ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக்கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்லிம் (பாதசாரி)களுக்குத் தொல்லை தராமலிருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்’’ என்று கூறி(விட்டு அதை அப்புறப் படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க்கத்தில் அனுமதிக்கப்பட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
இவர் செய்த காரியம் சாதாரணமானதுதான். ஆனால் அவரது நன்நோக்கத்திற்குக் கிடைத்த பரிசு மிகப் பெரியது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கிய போது, “மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத் தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங்களுடன் இருக்கின்றார்கள்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் மதீனாவில்தான் இருக்கின்றார்கள்; அத்தியாவசியக் காரணங்கள்தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்துகொள்ளவிடாமல்) தடுத்துவிட்டன. (ஆயினும், அவர்களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது)” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
தவிர்க்க இயலாத காரணங்கள், போருக்குச் செல்லும் வாய்ப்புக்குத் தடையாக வந்து நின்றாலும், ‘நல்லவேளை போகவில்லை’ என்ற வேண்டா வெறுப்பில்லாமல் உள்ளமெல்லாம் போர்க்களத்திலே இருந்ததால் அவர்களின் கூலி போரிடாமலே போரிட்டோர் என்ற அந்தஸ்து கிடைத்தது.
அந்த நபித்தோழர்களின் எண்ணமும் அதன் தூய்மையும் இறைக்கூலியின் மீதுள்ள அலாதிப் பிரியமும்தான் அவர்களின் அந்தஸ்தை உயர்த்தியது. ஈடு இணையற்ற நன்மைகளை வாரி வழங்கியது.
“என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தர்மம் எட்ட முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நிய்யத் நன்றாயிருந்தால் சிறு அமலும் விசாலமான கூலியைப் பெற்றுத் தரும் என்பதற்கு மேற்படி செய்திகள் சாட்சி.
அல்லாஹ்விற்காகச் செய்கிறோம் என்றில்லாமல் பிறர் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தனக்குப் புகழாரம் சூட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு காரியத்தை ஒருவன் செய்கிறான் எனில் இது நஷ்டத்திற்குரிய எண்ணம்.
இந்த எண்ணத்துடன் செய்யப்படும் காரியங்களால் எந்த நன்மையும் கிடையாது. மாறாக, சிறிய இணைவைப்பு என்ற குற்றம் நம் கணக்கில் பதியப்படும். நமது எண்ணத்தை அனைவருக்கும் இறைவன் அம்பலப்படுத்துவான். இறைவனை பார்க்கின்ற மிகபெரும் பாக்கியத்தையும் இழக்க நேரிடும்.
“நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். “நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி)
நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப் படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப் படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி)
நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத் தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கை யுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கை யுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கஜன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூசயீத் (ரலி)
தூய எண்ணத்துடன் சிறிய காரியம் செய்தால் கூட அதற்கு இறைவனிடம் பெரிய கூலி எப்படி வழங்கப்படுகிறதோ அதே போல தூய எண்ணமின்றி முகஸ்துதிக்காக செய்தால் பெரிய காரியத்திற்கு கூட எந்த நன்மையும் கிடைக்கப்பெறாமல் நரகமே பரிசாக கிடைக்கும்.
அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் “நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்” என்று கூறுவார். “நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும்” என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (உலகிலேயே) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.
அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்குத் தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட்கொடைகளை அறிந்து கொண்டதும் “இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் “நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப்படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.
அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், “நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் “நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை” என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், “நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
உயிர்த்தியாகி, கொடை வள்ளல், ஆலிம் என்று மூவரும் இஸ்லாத்தின் மிகபெரும் காரியங்களைச் செய்தவர்கள். ஆனால், அவர்கள் கொண்டிருந்த எண்ணத்தின் முடிவு?
என்ன காரியம் என்பது முக்கியமல்ல. எண்ணமே முக்கியம் என்பதை இந்தச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது.
எனவே, எந்தக் காரியம் செய்தாலும் எண்ணத்தின் முடிவை வைத்தே இறைவனிடம் கூலி வழங்கப்படுகிறது.