சுவர்க்கத்தில் அந்தஸ்துகளை உயர்த்தும் நல்லமல்கள்
எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், ‘உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு அந்தஸ்து உண்டு‘ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள்,(முஸ்லிம்: 1181)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய அந்தஸ்தை உயர்த்தி விடுகிறது.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்,(முஸ்லிம்: 1184)
அல்லாஹ்வின் தூதர் (அவர்கள் கூறினார்கள். ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும், தமது கடைத்தெருவில்
தொழுவதைவிடவும் அவர் ஜமாஅத்துடன் தொழுவது இருபதுக்கும் மேற்பட்ட
மடங்கு அதிகச் சிறப்புடையதாகும். ஏனெனில், உங்களில் ஒருவர் அங்கத்
தூய்மை (உளூச்) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து, தொழ வேண்டும்
என்ற ஆர்வத்தில், தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால்
அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை அவர் எடுத்துவைக்கும் ஒவ்வோர்
அடிக்கும் ஒரு அந்தஸ்து அவருக்கு உயர்த்தப்படுகிறது; ஒரு தவறு அவருக்காக
மன்னிக்கப்படுகிறது. அவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்துவிட்டால்,
தொழுகையை எதிர்பார்த்து அவர் தம்மைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும்வரை
அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். உங்களில் ஒருவர் தாம்
தொழுத இடத்திலேயே வீற்றிருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறார்கள். ‘இறைவா! இவருக்குக் கருணை
புரிவாயாக! இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவரது
பாவமன்னிப்பை ஏற்பாயாக!’ என்று அவர்கள் கூறுகின்றனர். அவர் சிறு
துடக்கின் மூலம் தொல்லை தராதவரை (இது நீடிக்கும்).
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்,(புகாரி: 477)
மஅதான் பின் அபீதல்ஹா அல்யஅமரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களைச் சந்தித்து, என்னால் செய்ய முடிந்த ஒரு நற்செயலை அல்லது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஒரு நற்செயலை எனக்குச் சொல்லுங்கள். அல்லாஹ் அதன் மூலம் என்னைச் சொர்க்கத்திற்குள் நுழைவிக்க வேண்டும் என்று கேட்டேன். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு நான் மீண்டும் (அதே கேள்வியைக்) கேட்டேன். அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாக அவர்களிடம் கேட்டபோது இதுபற்றி அல்லாஹ்வின் தூதர்)அவர்களிடம் நான் கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் )அவர்கள் அல்லாஹ்வுக்கு நீ அதிகமாக ஸஜ்தா (சிரவணக்கம்) செய்வாயாக! ஏனெனில், நீ அவனுக்காக ஒரு ஸஜ்தாச் செய்தால் அதற்காக அவன் உனது ஒரு அந்தஸ்தை உயர்த்தி, உன் குற்றங்களில் ஒன்றை அவன் மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறினார்கள் என்றார்கள். பின்னர் நான் அபுதர்தா (ரலி) அவர்களைச் சந்தித்தபோது இது குறித்துக் கேட்டேன். அவர்களும் ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றே கூறினார்கள்.
அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்கள் ‘மினா’வில் இருந்தபோது அவர்களிடம் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்தார். அப்போது அ(ங்கிருந்த)வர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், உங்களுடைய சிரிப்புக்கு என்ன காரணம்?’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மக்கள், ‘இன்ன மனிதர் கூடாரத்தின் கயிற்றில் இடறி விழுந்துவிட்டார். அவரது கழுத்தோ கண்ணோ போயிருக்கும் (நல்லவேளை பிழைத்துக்கொண்டார்)’ என்று கூறினர்.
அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், ‘(இதற்கெல்லாம்) சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், ‘ஒரு முஸ்லிமைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிடச் சிறிய துன்பம் எதுவாயினும், அதற்காக அவருக்கு ஓர் அந்தஸ்து பதிவு செய்யப்படுகிறது. அதற்குப் பகரமாக அவருடைய தவறுகளில் ஒன்று துடைக்கப்படுகிறது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்’ என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான், அல்லது அவருடைய தவறு ஒன்றை அவரைவிட்டுத் துடைத்துவிடுகிறான்.
அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) அவர்கள்,(முஸ்லிம்: 5025)
நிச்சயமாக ஒரு இறை நம்பிக்கையாளன் தனது நற்குணத்தின் மூலம் (உபரியான நோன்புகளை நோற்கும்) ஒரு நோன்பாளியின், இரவில் நின்று வணங்குபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், அபூதாவுத் 4798
(மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம்) குர்ஆனிய தோழரே! ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ, அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பீரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அமர்(ரலி) அவர்கள்,(அஹ்மத்: 6799)
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்து சொல்லுதல்
என் மீது ஒருவர் ஒரு முறை ஸலவாத் கூறும் போது அல்லாஹ் அவர் மீது பத்து முறை அருள் புரிகிறான், அவரது பத்துப் பாவங்களை மன்னிக்கிறான், அவரது பத்து அந்தஸ்துக்களை உயர்த்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், திர்மிதி 1297
எவர் கஃபாவை ஏழு முறை வலம் வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவாரோ அவர் ஒரு அடிமையை உரிமையிட்டவரைப் போன்றவர் ஆவார். கஃபாவை வலம் வரும் போது ஒரு (கால்) எட்டை வைத்து, மற்றொரு (கால்) எட்டை உயர்த்தும் போது பத்து நன்மைகள் எழுதப்பட்டு, பத்து பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள்,(அஹ்மத்: 4462)
‘சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கும் இடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர்.
நபி(ஸல்)அவர்கள், இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர் என பதிலளித்தார்கள்.”
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள்,(அஹ்மத்: 4462)
யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் தனது விரிப்பில் மரணித்தாலும் அல்லாஹ் அவருக்கு ஷுஹதாக்களின் அந்தஸ்தை வழங்கிடுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஹுனைஃப் (ரலி) அவர்கள்,(முஸ்லிம்: 5039)
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலைநிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் நுழையச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது. அவர் இறைவழியில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றாலும் சரி, அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்கு இந்த (நற்) செய்தியை அறிவிக்கலாமா?’ என்று (நபித் தோழர்கள்) கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றைத் தன்னுடைய பாதையில் அறப்போர் புரியவர்களுக்காக (அல்லாஹ்) தயார்படுத்தி வைத்துள்ளான். ஒவ்வொரு இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் எனும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள்,(புகாரி: 7423)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:
ஸாலிஹான ஓர் அடியானின் அந்தஸ்தை அல்லாஹ் சுவர்க்கத்தில் உயர்த்தும் போது, எனது ரப்பே! இது எனக்கு எங்கிருந்து எனக் கேட்பான். இது உனது பிள்ளை உனக்கு செய்த இஸ்திஃபாராகும் என பதிலளிப்பான்
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்,(அஹ்மத்: 10610)
உங்களுடைய செயல்களில் மிகச் சிறந்ததைப் பற்றி, உங்களுடைய அரசனிடத்தில் அவற்றில் மிகவும் பரிசுத்தமானது பற்றி, உங்கள் அந்தஸ்துகளை உயர்த்துவது பற்றி, தங்கம் மற்றும் வெள்ளியை செலவு செய்வதை விட உங்களுக்கு மிகவும் சிறந்ததைப் பற்றி, உங்களுடைய எதிரிகளை (போர்க்களத்தில்) நீங்கள் சந்தித்து அவர்களுடைய கழுத்துக்களை நீங்கள் வெட்டி, உங்களுடைய கழுத்துக்களை அவர்கள் வெட்டுவதை விட மிகவும் சிறந்ததைப் பற்றி உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? (என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்)
அது என்ன? அல்லாஹ்வின் தூதரே! என நபித் தோழர்கள் கேட்டனர். அதுதான் அல்லாஹ்வை நினைவு கூறுதல் எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுதர்தா (ரலி) அவர்கள்,(அஹ்மத்: 21750)