10) சுலைமான் நபியைக் கொச்சைப்படுத்தலாமா?
இதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் ஹதீஸையும் பாருங்கள்!
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தாவூத் (அலை) அவர்களுடைய புதல்வர் சுலைமான் (அலை) அவர்கள், நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள் என்று கூறினார்கள். அப்போது (சுலைமான் -அலை) அவர்களிடம் அந்த வானவர் , இன்ஷா அல்லாஹ் – இறைவன் நாடினால் என்று (சேர்த்துச்) சொல்லுங்கள் என்றார். (ஆனால்,) சுலைமான் (அலை) அவர்கள், இன்ஷா அல்லாஹ்’ என்று கூறவில்லை; மறந்து விட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார்.(புகாரி: 5242) ➚
ஒரே இரவில் நூறு மனைவியிடத்தில் சேருவதற்கு சக்தி உள்ளதா? இல்லையா? என்பது வேறு விஷயம்.
ஈமானைப் பாதிக்கும் அம்சத்தைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கலாம்.
இது உண்மையாக இருந்தால் சுலைமான் நபி அவர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த பல மறைவான விஷயங்களைக் கூறியுள்ளார்கள் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.
ஒரு இரவில் அவர் உடலுறவு கொண்ட நூறு பேரும் கருத்தரிப்பார்கள்.
அந்த நூறு பேரும் ஆண் பிள்ளைகளாக இருப்பார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் என்பது அவர்கள் அனைவரும் வாலிப வயதுக்கு முன் மரணிக்க மாட்டார்கள் என்ற கருத்தை தருகிறது.
அனைவரும் நல்லடியார்களாக இருப்பார்கள் என்ற கருத்தையும் தருகிறது.
அவர்கள் வீரர்களாக இருப்பார்கள் என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது.
இத்தனை மறைவான விஷயங்களையும் அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த இது போன்ற விஷயங்களை சாதாரண ஈமான் உள்ளவரே பேசுவதற்கு அச்சமடைவார்.
இன்று நான் என் மனைவிடம் சேரப்போகிறேன். அவர் ஆண் குழந்தையைப் பெறுவார், அவர் இளம் வயதை அடைந்து நல்லடியாராகவும் இருப்பார் என்று ஒரு முஸ்லிம் சொல்லலாமா? நிச்சயம் சொல்லக் கூடாது. இதை எல்லா முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர்.
இந்தச் சாதாரண உண்மை சுலைமான் நபிக்குத் தெரியாமல் இருக்குமா? ஈமானைப் பாதிக்கும் இது போன்ற சொல்லை அவர்கள் சொல்லி இருக்கவே மாட்டார்கள்.
அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார்கள். எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)(புகாரி: 4697) ➚
கருவறையில் உள்ளவற்றை அல்லாஹ்வைத் தவிர யாராலும் அறிய முடியாது என்றால் ஏகத்துவத்தை மக்களுக்குப் போதிக்க வந்த ஒரு நபி இவ்வாறு சொல்ல முடியுமா?
இந்தச் செய்தி சுலைமான் நபியின் பெயரால் சொல்லப்பட்டிருந்தாலும், இது சுலைமான் நபி சொல்லியிருக்க முடியாது என்றுதான் உண்மை முஸ்லிம்கள் நம்ப முடியும்.
அவர்கள் இறைத்தூதர் என்பதால் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து இருக்கலாம் என்றும் இதைப் புரிந்து கொள்ள முடியாது. அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து இப்படி சொல்லி இருந்தால் அவர்கள் கூறியவாறு நூறு மனைவியரும் தலா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து இருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதால் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த அடிப்படையில் சொல்லவில்லை என்பது உறுதியாகிறது.
அல்லாஹ் அறிவித்துக் கொடுக்காமல் இருக்கும் போது இது போல் அவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். அவர்கள் இப்படிச் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் சொல்லி இருக்க மாட்டார்கள். இது முற்றிலும் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும்.