சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்)
சிரமம் இல்லாத சிறந்த மார்க்கம்- (ஹஜ்)
ஹஜ் என்ற வணக்கத்தின் கடமையைப் பற்றி அல்லாஹ் பின்வரும் வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏகஇறைவனை) மறுத்தால் அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவைகளற்றவன்.
ஹஜ் என்ற வணக்கம் ஆண்டுக்கு ஒரு முறை செய்கின்ற வணக்கமாகும். ஹஜ் செய்ய சக்தி பெற்றவர் ஒவ்வொரு ஆண்டும் செய்ய வேண்டுமா? என்றால் மார்க்கம் அது தொடர்பாக மவுனத்தையே பதிலாகத் தருகின்றது. அதாவது ஹஜ் ஒவ்வொரு ஆண்டும் கடமையில்லை என்பது அதன் பொருளாகும். இதைப் பின்வரும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் உறுதி செய்கின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது “அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள்’’ என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமுமா?’’ என்று கேட்டார். அவர் மூன்று முறை இவ்வாறு கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள்.
பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும். அது உங்களுக்கு இயலாது’’ என்று கூறி விட்டு, “நான் உங்களுக்கு (விவரிக்காமல்) விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும் தான் உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிந்தனர்’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: (முஸ்லிம்: 2599) (2380)
நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு எளிமையைத் தான் நாடியிருக்கின்றார்கள். தனது சமுதாயம் சிரமப்பட்டு விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றார்கள் என்று இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.
ஹஜ் எனும் வணக்கத்தின் கிளைமாக்ஸே பத்தாம் நாள் தான். அந்தப் பத்தாம் நாளில் செய்ய வேண்டிய முக்கியமான வணக்கங்கள் 1. கல்லெறிதல், 2. அறுத்து பலியிடுதல், 3. தலை முடியை மழித்தல், 4. ஹஜ்ஜூக்குரிய தவாஃப் செய்தல்.
இப்போதைய சூழ்நிலையில் மக்காவில் பத்து லட்சம் மக்கள் ஹஜ் செய்வதற்காகக் கூடுகின்றார்கள். இந்த 10 லட்சம் மக்களும் மேற்கண்ட அந்த வணக்கங்களை அந்த 10வது நாளிலேயே செய்து முடிக்க முடியுமா? என்றால் அது அறவே சாத்தியமில்லை என்பது தான் அதற்குரிய சரியான பதிலாகும்.
ஏனென்றால் எல்லோரும் இந்த வரிசை முறையைக் கடைப்பிடித்தால் மக்கள் அந்த வணக்கங்களை நிறைவேற்றுமிடங்களில் மக்கள் கூடி அவர்கள் பெரிய இன்னல்களுக்கும் இடைஞ்சல்களுக்கும் ஆளாகிவிடுவார்கள். அதனால் இந்த மார்க்கம் தீர்க்க தரிசனமாக அதில் ஓர் எளிமையையும் இலகுவையும் அளிக்கின்றது.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது (தமது வாகனத்தின் மீது) அமர்ந்திருந்தார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் (சில சந்தேகங்களை) கேட்கத் தொடங்கினர். ஒருவர், “நான் பலியிடுவதற்கு முன்பாக, தெரியாமல் தலையை மழித்துவிட்டேன்!’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை! (இப்போது குர்பானிப்பிராணியை) அறுப்பீராக!’’ என்று கூறினார்கள்.
பிறகு மற்றொருவர் வந்து “கல்லெறிவதற்கு முன்பு தெரியாமல் அறுத்து குர்பானி கொடுத்துவிட்டேன்!’’ எனக் கூறியதும் அவர்கள் “குற்றமில்லை! இப்போது கல்லெறிவீராக!’’ என்று கூறினார்கள். அன்றைய தினம் (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் முன்னதாகச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னதாகச் செய்யப்பட வேண்டிய) சில வழிபாடுகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் கேட்கப்பட்ட அனைத்திற்கும் நபி (ஸல்) அவர்கள் “குற்றமில்லை! (விடுபட்டதைச் இப்போது) செய்வீராக!’’ என்றே கூறினார்கள்.
நூல்: (புகாரி: 1736)
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் (கல்லெறியும் இடமான) ஜம்ராவில் (மக்களால்) கேள்வி கேட்கப்படுவதை நான் கண்டேன். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் (தெரியாமல்) கல் எறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவாகள் அவ“பரவாயில்லை; இப்போது கல்லெறிந்துவிடும்!’’ என்றார்கள். மற்றொருவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் குர்பானி கொடுப்பற்கு முன்பே தலைமடியை மழித்து விட்டேன்’’ என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பரவாயில்லை; இப்போது குர்பானிகொடுத்துவிடும்!’’ என்றார்கள்.
(அன்றைய தினம் பிற்படுத்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) முற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முற்படுத்திச் செய்ய வேண்டிய சில கிரியைகள்) பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் “பரவாயில்லை; (விடுபட்டதை) செய்வீராக!’’ என்றே சொன்னார்கள்.
நூல்: (புகாரி: 124)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் கல்லெறிவதற்கு முன்பே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டேன்’ என்றார். அதற்கு அவர்கள் “குற்றமில்லை!’’ என்றார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்’’ என்றதும் அவர்கள் “குற்றமில்லை!’’ என்றார்கள். மேலும் அவர் “நான் கல்லெறிவதற்கு முன்பாகப் குர்பானி கொடுத்துவிட்டேன்’’ என்ற போதும் அவர்கள் “குற்றமில்லை’’ என்றார்கள்.
நூல்: (புகாரி: 1722)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “நான் மாலை நேரம் வந்த பின் கல்லெறிந்தேன்!’’ என்று கேட்டதும். அவர்கள் “குற்றமில்லை!’’ என்று கூறினார்கள். பிறகு அவர், “நான் குர்பானி கொடுப்பதற்கு முன்பாகத் தலையை மழித்துவிட்டேன்!’’ என்றபோதும் அவர்கள் “குற்றமில்லை!’’ என்றே கூறினார்கள்.
நூல்: (புகாரி: 1723)
இந்த ஹதீஸ்களெல்லாம் கருணைமிகு நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சலுகையையும் சவுகரியத்தையும் வழங்கியிருப்பதை நாம் காண முடிகின்றது. இந்தச் சலுகையும் சவுகரியமும் மட்டுமில்லை என்றால் இலட்சக்கணக்கான மக்கள் இந்த இடங்களில் முண்டியடித்துக் கொண்டு மரணத்தைத் தழுவ நேரிட்டிருக்கும்.
அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.
உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.
அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிட்டிருப்பது போன்று மக்களுக்கு சிரமங்கள் களையப் பட்டிருப்பதை நாம் காண்கின்றோம். இது உண்மையில் அல்லாஹ்வின் மாபெரும் அருட்கொடையாகும்.
இந்த ஹஜ்ஜில் அல்லாஹ் அளித்திருக்கக் கூடிய சலுகைகளில் முக்கியமான ஒன்று 12ஆம் நாள் மாலையிலேயே ஊர் திரும்புவது! ஹஜ்ஜுடைய வணக்கம் 13ஆம் நாள் வரை தொடர்கின்றது. ஒருவர் ஒரு நாளைக்கு முந்தியே திரும்ப வேண்டும் நினைத்தால் 12ஆம் நாளே திரும்பிக் கொள்ளலாம். இந்தச் சலுகையை கீழ்க்காணும் அல்லாஹ்வின் வசனம் வழங்குகின்றது.
குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்! இரண்டு நாட்களில் விரைபவர் மீதும் குற்றமில்லை. தாமதிப்பவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சுவோருக்கு உரியது.
ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது அல்லாஹ் இரண்டு நாட்கள் என்று சொல்கின்றான். ஒரு நாள் என்பது சூரியன் மறைவுடன் முடிகின்றது அதனால் சூரியன் மறைவதற்கு முன்னால் மினாவிலிருந்து கிளம்பி விட வேண்டும். சூரியன் மறைந்து விட்டால் மறுநாள் தொடங்கிவிடும். அப்போது அந்த சலுகை அவர் இழந்து விடுகின்றார்.
மாதவிலக்குப் பெண்களுக்கு மார்க்கம் அளிக்கும் சலுகை
‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டார்கள். ‘இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்’ என்றேன்.
‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அப்போது ‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபத்துல்லாஹ்வை வலம் வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்’ என்று கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 305) , 314, 1650
நபி (ஸல்) அவர்களுடன் அன்னை ஆயிஷா (ரலி) ஹஜ் செய்ய வந்த போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விடுகின்றது. அது அவர்களுக்குப் பெரிய உறுத்தலையும் கவலையையும் ஏற்படுத்தி விடுகின்றது. அதனால் பாதிக்கப்பட்ட அவர்கள் அழுகின்றார்கள்.
‘நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். ‘ஸரிஃப்’ என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன்.
‘இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஃபத்துல்லாஹ்வை வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் ‘குர்பானி’ கொடுத்தார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நூல்: (புகாரி: 294)
ஹஜ்ஜின் போது பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் கஃபாவிலும் ஸஃபா மர்வாவிலும் தவாஃப் செய்வதை மட்டும் தவிர்த்து மற்ற வணக்கங்களைச் செய்யும்படி நபி (ஸல்)அவர்கள் ஆறுதலும் அறிவுரையும் கூறுவதை நாம் பார்க்க முடிகின்றது.
இவை அனைத்தும் நமக்கு உணர்த்துகின்ற விஷயம் இந்த மார்க்கம் சலுகைகளிலும் சவுகரியங்களிலும் எளிமையிலும் இலகுவிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதைத் தான். இந்த எளிய, இனிய மார்க்கத்தில் இனிதாகப் பயணம் செய்து இலக்கை அடைவோமாக!