சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா?

முக்கிய குறிப்புகள்: குடும்ப வழக்குகள்

ஆணின் புகார்:

நான், எனது சித்தப்பா விவாகரத்து செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். செய்யலாமா?

 

தீர்வு:

திருமறைக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் யார் யாரையெல்லாம் திருமணம் செய்யக் கூடாது என்பது மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.(அல்குர்ஆன்: 4:23)

இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேற்கண்ட திருமறை வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்னியப் பெண்ணிடம் பால் குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.
அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

பாலூட்டிய அன்னையின் பிள்ளைகள், சகோரிகள், பிள்ளைகள்

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களாக ஆனால் அவர்களை மணக்கக் கூடாது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ர-) அவர்களுடைய மகüன் விஷயத்தில், “அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவி-த் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்” என்று கூறினார்கள் நூல் : புகாரி (2645)

உடன்பிறந்த 2 சகோதரிகளை ஒரே நேரத்தில்

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

(ஒருவர்) ஒரு பெண்ணையும் அவளுடைய தந்தையின் சகோதரியையும், ஒரு பெண்ணையும் அவளுடைய தாயின் சகோதரியையும் (ஒருசேர) மணமுடிப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (புகாரி: 5111)

மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகிவிட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களில் தடைசெய்யப்பட்ட உறவுகளைத் தவிர மற்ற அனைத்து உறவுகளும் திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகும்.

திருமணம் செய்வதற்கு தடைசெய்யப்பட்ட உறவுகளில் சிறியதந்தையின் மனைவி குறிப்பிடப்படவில்லை. எனவே சிறிய தந்தை மரணித்து விட்டாலோ அல்லது அவர் தனது மனைவியை விவாகரத்துச் செய்து விட்டாலோ அப்பெண்ணை நீங்கள் திருமணம் செய்து கொள்வதற்கு மார்க்கத்தில் எவ்விதத் தடையும் இல்லை.