சட்டத்தின் முன் அனைவரும் சமம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

சட்டத்தின் முன் அனைவரும் சமம்

ஒரு நாட்டை அல்லது ஒரு சமுதாயத்தை ஆளுகின்ற சட்டம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அமைந்த புனிதச் சட்டமாக இருக்கலாம்; அல்லது மக்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்ட மனிதச் சட்டமாக இருக்கலாம். அதே போன்று ஒரு சங்கத்தை, கழகத்தை, அமைப்பை ஆளுகின்ற துணைச் சட்டமாக இருக்கலாம். எந்தச் சட்டமாக இருந்தாலும் அந்தச் சட்டத்திற்கு முன் அனைவரும், ஏழை – பணக்காரன், ஆள்பவர் – ஆளப்படுவோர், ஆண் – பெண், நிர்வாகி – உறுப்பினர் அனைவரும் சமம் என்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.

ஒரு சங்கம், அமைப்பு, கழகம் என்று வருகின்ற போது அதன் உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணை – துணைச் செயலாளர்கள் அனைவரும் அந்த அமைப்பின் சட்டங்களுக்கு முன் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும்.

இல்லையெனில் அந்த நாடு அல்லது அந்தச் சங்கம் அழிந்து போகும். இதை நாம் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும் படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள்.

உடனே உஸாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்தவன் திருடி விடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்ததும், பலவீனமானவன் திருடி விடும் போது அவனுக்குத் தண்டனை கொடுத்து வந்ததும் தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டார்;- மேலும் மணம் புரிந்தும் கொண்டார்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர்

(புகாரி: 4304, 3475, 3733) (முஸ்லிம்: 3196, 3197)

சட்டத்திற்கு முன் பாகுபாடு காட்டப்படுவதைத் தம்மால் சகித்துக் கொள்ள முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனப்படுத்துவதையும், தன் மகள் ஃபாத்திமாவாக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டேன் என்று முழங்குவதையும் இந்த ஹதீஸில் காண்கிறோம்.

வித்தியாசம் காட்டிய வேத சமுதாயம்

சட்டத்தின் முன் பாகுபாடு, தன் சமுதாயத்தையே அழித்து விடும் என்று உணர்ந்த நபி (ஸல்) அவர்கள், சாயந்திர நேரம் உரையாற்றி சரியான பிடி பிடித்து விடுகின்றார்கள். தன் சமுதாயத்தைத் தொற்றிப் பிடித்துச் சாகடிக்க வரும் இந்தப் புற்று நோயை அவசரமாகத் தமது அரிய உரை மூலம் அறுத்தெறிகின்றார்கள்.

உங்களுக்கு முன்னிருந்தவர்கள் அழிந்தது சட்டத்திற்கு முன் காட்டிய பாகுபாடு தான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதற்கு நிதர்சனமான எடுத்துக் காட்டையும் ஹதீஸில் நாம் காண முடிகின்றது.

யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தார் இடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

உடனே (யூத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள் “நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும் வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்று தான் அதில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் “விபசாரிகளுக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்‘ என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார்.

அப்போது அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்கள், “உன் கையை எடு” என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், “அப்துல்லாஹ் பின் சலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத் தான் செய்கிறது” என்று சொன்னார்கள்.

உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 3635)

யூத சமுதாயம் நாசமானதற்குக் காரணம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதியை அது தகர்த்தெறிந்தது தான் என்பதற்கு இதை விட வேறு சிறந்த எடுத்துக்காட்டை நாம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

மேற்கண்ட ஹதீஸ்களின் வெளிச்சத்திலிருந்து இஸ்லாமிய சமுதாயம், தங்களது மார்க்கச் சட்டத்திலும் சரி! அல்லது தங்களுக் கென்று வகுத்துக் கொண்ட சங்க, கழக துணைச் சட்டங்களிலும் சரி! எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது.

ஏழைக்கு ஒரு நியதி; பணக்காரனுக்கு ஒரு நியதி! உயர் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நியதி; கீழ் பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு நியதி என்ற பாகுபாட்டை யாருக்கும் காட்டக் கூடாது. அப்படிக் காட்டினால் அந்த நாடு அந்தச் சமுதாயம், அல்லது சங்கம் அழிவைத் தான் சந்திக்கும்.