கொள்கை விளக்கங்கள்

பயான் குறிப்புகள்: கொள்கை

அல்லாஹ்வின் அதிகாரத்தில் நபிக்குப் பங்கில்லை

(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்குமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 3:128).)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்வாய்ப் பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்? அவரோ அவர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கிறார்” என்று கூறலானார்கள். அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (3:128) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (3667)

நபியின் தீர்ப்பில் அதிருப்தி கொள்ளக்கூடாது

(நபியே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.

(அல்குர்ஆன்: 4:65).)

உர்வா பின் ஸுபைர் (ரஹ்) கூறியதாவது: (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுக்கு ‘ஹர்ரா’ எனுமிடத்திலிருந்த கால்வாய் ஒன்றின் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! (முதலில் உங்கள் தோப்புக்கு) நீங்கள் நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருப்பவருக்குத் தண்ணீரை அனுப்புங்கள்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அந்த அன்சாரித் தோழர், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் உங்கள் அத்தை (ஸஃபிய்யா பின்த் அப்தில் முத்தலிபின்) மகன் ஆயிற்றே! (எனவேதான் அவருக்குச் சாதகமாக தீர்ப்பளிக்கிறீர்கள்)’ என்று கூறினார்.

இதைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தில் சிவந்து)விட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘ஸுபைரே! (உங்கள் மரங்களுக்கு) நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்துங்கள். பிறகு உங்கள் பக்கத்திலிருக்கும் தோப்புக்காரருக்குத் தண்ணீரைவிட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள். அந்த அன்சாரித் தோழர் தம்மைக் கோபபப்படுத்தியபோது நபி (ஸல்) அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களின் உரிமையைத் தெளிவான தீர்ப்பின் மூலம் முழுமையாக வழங்கிவிட்டார்கள். அதற்கு முன் அவர்கள் இருவருக்குமே சகாயம் கிடைக்கும் வகையில் ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஸுபைர் (ரலி) கூறினார்.

குர்ஆனின் இந்த (4:65) வசனம் இது தொடர்பாக இறங்கிற்று என்றே எண்ணுகிறேன்.

நூல்: புகாரி (4585)

இறைமறுப்பாளனின் மறுமை நிலை

நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்’’ என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்.

(அல்குர்ஆன்: 19:77)– 80.)

கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லராக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் இப்னு வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. எனவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் ‘நீ முஹம்மதை நிராகரிக்காதவரை நான் உன்னுடைய கடனைச் செலுத்தமாட்டேன்’ என்று கூறினார். நான், ‘நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்க மாட்டேன்’ என்று சொன்னேன்.அதற்கவர் ‘இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்’ என்று கூறினார்.

அப்போதுதான் ‘நமது வசனங்களை மறுத்தவனைக் கண்டீரா? “எனக்குச் செல்வமும், சந்ததியும் வழங்கப்படும்’’ என்று கூறுகிறான். மறைவானவற்றை இவன் கண்டுபிடித்து விட்டானா? அல்லது அளவற்ற அருளாளனிடம் ஏதேனும் உறுதிமொழியைப் பெற்றானா? அவ்வாறு ஏதுமில்லை. அவன் கூறுவதைப் பதிவு செய்வோம். அவனுக்கு வேதனையை ஒரேயடியாக நீட்டுவோம். அவன் எதைப் பற்றிப் பேசினானோ அதற்கு (அவனது செல்வங்களுக்கும் சந்ததிகளுக்கும்) நாமே வாரிசாகி விடுவோம். தன்னந்தனியாக நம்மிடம் அவன் வருவான்’ எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

நூல்: புகாரி (4735, 4733 , 4732)

உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தைப் பின்பற்றுதல்

விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால் தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.

(அல்குர்ஆன்: 22:11).)

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) கூறியதாவது: ‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிற சிலரும் மக்களிடையே உள்ளனர்’ எனும் (22:11) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகையில், ‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களது குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, ‘இது (இஸ்லாம்) நல்ல மார்க்கம்’ என்று கூறுவார்கள். அவர்களின் மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டியிடவில்லையென்றால், ‘இது கெட்ட மார்க்கம்’ என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)’ என்று கூறினார்கள்.

நூல்: புகாரி (4742)

நேர்வழியைக் கொடுக்க நபியாலும் முடியாது

(நபியே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான். அவன் நேர்வழி பெற்றோரை நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன்: 28:56).)

முஸய்யப் பின் ஹஸன் (ரலி) கூறியதாவது: (நபியவர்களின் பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரணவேளை வந்துவிட்டபோது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யா இப்னி முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘என் பெரிய தந்தையே! ‘லா இலாஹா இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்’ என்று கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவும் ‘அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?’ என்று கேட்டனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிப் மார்க்கத்தில் இருக்கிறேன்’ என்பதாகவே இருந்தது. ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார்….

…அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘(நபியே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்’ எனும் (28:56) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி (4772)

இணைவைப்பவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோரக்கூடாது

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த (முஹம்மது) நபிக்கும் தகாது.

(அல்குர்ஆன்: 9:113).)

முஸய்யப் பின் ஹஸன் (ரலி) கூறியதாவது: (நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் இஸ்லாத்தை ஏற்காமலேயே மரணித்த போது) நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரக் கூடாது என்று இறைவனால் எனக்குத் தடை விதிக்கப்படும் வரை நான் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பேன்’ என்று கூறினார்கள். அப்போதுதான், ‘இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் தகாது’ எனும் (9:113) இறைவசனம் அருளப்பட்டது.

(புகாரி: 4675)

சுயமாகத் தடை செய்யும் அதிகாரம் நபிக்கு இல்லை

நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வே உங்கள் அதிபதி. அவன் அறிந்தவன்; ஞானமுடையோன்.

இந்த நபி தமது மனைவியரில் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாகக் கூறியபோது, அம்மனைவி அச்செய்தியை (மற்றொருவரிடம்) கூற அதை அல்லாஹ் நபிக்கு வெளிப்படுத்திக் காட்டினான். அப்போது அதில் சிலவற்றை (அம்மனைவியிடம்) நபி எடுத்துக்காட்டி, சிலவற்றை எடுத்துக்காட்டாது விட்டார். அவர் அதை அறிவித்தபோது “இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்’’ என மனைவி கேட்டார். அதற்கு அறிந்தவனும், நன்கறிந்தவனும் (ஆகிய இறைவன்) எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என நபி விடையளித்தார்.

(நபியின் மனைவியரான) நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது.) உங்கள் இருவரின் உள்ளங்கள் தடம் மாறி இருந்தன. அவருக்கு எதிராக நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டால் அல்லாஹ்வே அவரது உதவியாளன். ஜிப்ரீலும், நம்பிக்கை கொண்டோரில் நல்லோரும், வானவர்களும் அதன் பின் (இவருக்கு) உதவுபவர்கள்.

(அல்குர்ஆன்: 66:1-4).)

ஆயிஷா (ரலி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக நேரம்) தங்கியிருந்து தேன் சாப்பிடுவது வழக்கம். எனவே, (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் எங்களுக்குள் ‘நபி(ஸல்) அவர்கள் (ஸைனபின் அறைக்குச் சென்றுவிட்டு) நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும் தங்களிடமிருந்து கருவேலம் பிசினின் துர்வாடை வருகிறதே! பிசின் சாப்பிட்டீர்களா? என்று கூறிட வேண்டும்’ என்று கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம்.

எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தபோது முன்பு பேசிவைத்திருந்தபடி கூறினோம். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(அப்படியெல்லாம்) ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் அருந்தினேன். இனிமேல் ஒருபோதும் இவ்வாறு செய்யமாட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, ‘நபியே! உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?’ என்று தொடங்கி ‘நீங்கள் இருவரும் – இதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால் (அது உங்களுக்கே நன்று)’ என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

(இந்த 66:4வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள) ‘நீங்கள் இருவரும்’ என்பது ஆயிஷா(ரலி) அவர்களையும், ஹஃப்ஸா (ரலி) அவர்களையுமே குறிக்கிறது. (66:3வது வசனத்தில்) ‘நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார்’ என்பது ‘இல்லை. நான் தேன்தான் அருந்தினேன். (சத்தியமாக இனி நான் அதனை அருந்தமாட்டேன். இது குறித்து யாரிடமும் சொல்லிவிடாதே)’ என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டதையே குறிக்கிறது.

நூல்: புகாரி (5267)

பெற்றோருக்குக் கட்டுப்படுவதன் எல்லை

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.

(அல்குர்ஆன்: 31:14),15.)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறியதாவது: என் விஷயத்தில் குர்ஆனின் சில வசனங்கள் அருளப்பெற்றன. (அவை வருமாறு:) நான் எனது (இஸ்லாமிய) மார்க்கத்தை நிராகரிக்காத வரை என்னுடன் பேசமாட்டேன்; உண்ண மாட்டேன்; பருக மாட்டேன் என்று (என் தாயார்) உம்மு சஅத் சத்தியம் செய்துவிட்டார். மேலும், அவர் “உன் பெற்றோரிடம் நீ நல்ல முறையில் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் உன்னை அறிவுறுத்தியுள்ளான் என்று நீ கூறுகிறாய். நான் உன் தாய். நான்தான் இவ்வாறு (மார்க்கத்தைக் கைவிடுமாறு) கட்டளையிடுகிறேன். (அதற்கு நீ கட்டுப்பட வேண்டும்)” என்று கூறினார்.

இவ்வாறு என் தாயார் மூன்று நாட்கள் (உண்ணாமலும் பருகாமலும்) இருந்து பசியால் மயக்கமுற்று விட்டார். அப்போது அவருடைய உமாரா எனப்படும் ஒரு மகன் எழுந்து அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தார். அப்போது என் தாயார் எனக்கெதிராகப் பிரார்த்தித்தார். அப்போதுதான், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குர்ஆனில், “மனிதனுக்கு, அவனுடைய பெற்றோர் குறித்து நாம் அறிவுறுத்தியுள்ளோம்’’ என்று தொடங்கி, “உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணையாக ஆக்கும்படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே. இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமையோடு நடந்துகொள்” (31:14,15) என்பதுவரையிலான வசனங்களை அருளினான்.

நூல்: முஸ்லிம் (4789)

இணை கற்பித்தலே மிகப் பெரும் அநீதி

நம்பிக்கை  கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போருக்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

(அல்குர்ஆன்: 6:82).)

‘நம்பிக்கை கொண்டு அதில் அநீதியைக் கலக்காதவர்களுக்கே அச்சமற்ற நிலை உண்டு. மேலும் அவர்களே நேர்வழி பெற்றோர்’ (6:82) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது நபித்தோழர்கள் ‘நம்மில் யார் அநீதி செய்யாமலிருக்க முடியும்?’ எனக் கேட்டனர். அப்போது, ‘நிச்சயமாக (அல்லாஹ்வுக்கு எவரையும்) இணையாக்குவது தான் மிகப் பெரும் அநீதியாகும்’ (அல்குர்ஆன்: 31:13) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி (32)

பெரும்பாவம் செய்தவர்களுக்கும் மன்னிப்பு

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன்: 39:53).)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைச் செய்தனர்; விபச்சாரம் அதிகமாகச் செய்திருந்தனர். அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நீங்கள் கூறுபவையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே)’ என்று கூறினர்.

அப்போது, ‘(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள்…’ எனும் (25:68) வசனம் அருளப்பெற்றது. மேலும், ‘தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்!..’ எனும் (39:53) வசனமும் அருளப்பெற்றது.

நூல்: புகாரி (4810)

இறைவன் அனைத்தையும் கண்காணிக்கின்றான்

உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நட்டமடைந்தோரில் ஆகி விட்டீர்கள். இவர்கள் காத்திருந்தால் நரகமே இவர்களின் தங்குமிடமாகும். இவர்கள் (மீண்டும் உலகுக்கு அனுப்பி) வணக்கங்கள் செய்யும் வாய்ப்பை இவர்கள் கோரினால் அந்தச் சிரமம் அவர்களுக்கு அளிக்கப்படாது.

(அல்குர்ஆன்: 41:22-24)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) கூறியதாவது: இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் ‘குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும்’ அல்லது ‘ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும்’ (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்று கூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. உள்ளங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், ‘நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’ என்று கேட்டார்.

மற்றொருவர், ‘நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கிறான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை’ என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், ‘நாம் சப்தமிட்டுப் பேசும்போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத்தான் செய்வான்’ என்று கூறினார். அப்போது அல்லாஹ், ‘உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை’ எனும் வசனங்களை (அல்குர்ஆன்: 41:22-24) அருளினான்.

நூல்: புகாரி (4817, 4816)

நட்சத்திரங்களால் மழை பொழியுமா?

நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன். நீங்கள் அறிந்தீர்களானால் இது மகத்தான சத்தியம். இது பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கும் மகத்துவமிக்க குர்ஆனாகும். தூய்மையான(வான)வர்களைத் தவிர (மற்றவர்கள்) அதைத் தீண்ட மாட்டார்கள். அகிலத்தின் இறைவனிடமிருந்து (இது) அருளப்பட்டது. இந்தச் செய்தியையா அலட்சியம் செய்கிறீர்கள்? உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?

(அல்குர்ஆன்: 56:75-82).)

இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர். நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, இன்ன இன்ன நட்சத்திர இயக்கம் மெய்யாகிவிட்டது என்று கூறுகின்றனர்” என்றார்கள். அப்போதுதான், “நட்சத்திரங்கள் விழும் இடங்கள் மீது சத்தியம் செய்கிறேன்” என்று தொடங்கி, “உங்களுக்குச் செல்வம் வழங்கியிருப்பதற்கு (நன்றியாக) பொய்யெனக் கருதுகிறீர்களா?” என்று முடியும் இறைவசனங்கள் (56:75-82) அருளப்பெற்றன.

நூல்: முஸ்லிம் (127)

இறை மறுப்பாளர்களுக்கான தண்டனை

அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் “நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்’’ (எனக் கூறப்படும்) ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்.

(அல்குர்ஆன்: 54:48),49.)

அபூஹுரைரா (ரலி) கூறியதாவது: குறைஷி இணைவைப்பாளர்கள் விதி தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தனர். அப்போது, “அவர்கள் நரகத்தில் முகம் குப்புறப் போடப்படும் நாளில் “நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்’’ (எனக் கூறப்படும்) ஒவ்வொரு பொருளையும் கணக்கிட்டு நாம் படைத்துள்ளோம்’’ எனும் (54:48,49) இறைவசனங்கள் அருளப்பெற்றன.

நூல்: முஸ்லிம் (5163)

இறைக் கூலியில் ஆண், பெண் பேதமில்லை

முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்படும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

(அல்குர்ஆன்: 33:35).)

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு என்ன நேர்ந்தது? குர்ஆனிலே ஆண்கள் பேசப்படுவதைப் போன்று (பெண்களாகிய) நாங்கள் பேசப்படுவதில்லையே” என்று கேட்டேன். (சிறிது நாட்கள் கழித்து) சொற்பொழிவு மேடையில் “யா அய்யுஹன்னாஸ்” (மக்களே) என்ற நபி (ஸல்) அவர்களின் அழைப்பு என்னை திடுக்கிடச் செய்தது. (அப்போது) நான் தலைவாரிக் கொண்டிருந்தேன். எனது தலைமுடியைச் சுருட்டிக் கட்டிவிட்டு வாசல் அருகில் சென்று (அதன்) ஓலைக் கீற்றின் மீது எனது காதை வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் இந்த (33:35) வசனத்தைக் கூறினார்கள்.

நூல்: அஹ்மத் (25363)

இறைவன் முன் ஏற்றத்தாழ்வுகள் இல்லை!

தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்! அவர்களைப் பற்றிய விசாரணையில் உமக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. உம்மைப் பற்றிய விசாரணையில் அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. எனவே அவர்களை நீர் விரட்டினால் அநீதி இழைத்தவராவீர்!

(அல்குர்ஆன்: 6:52).)

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) கூறியதாவது:

நாங்கள் ஆறு பேர் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது இணைவைப்பாளர்கள் நபி (ஸல்) அவர்களிடம் “இவர்களை விரட்டிவிடுங்கள்; எங்கள் மீது அவர்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடக் கூடாது” என்று கூறினர். நானும் இப்னு மஸ்ஊதும் ஹுதைல் குலத்தாரில் ஒருவரும் பிலாலும் நான் பெயர் குறிப்பிடாத இன்னும் இரு மனிதர்களுமே அந்த ஆறு பேர்.

(இணைவைப்பாளர்கள் இவ்வாறு கூறியதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது மனதில் (இணைவைப்பாளர்களின் கூற்றுக்கு ஆதரவான) அல்லாஹ் நாடிய ஓர் எண்ணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குள் (அவர்கள் சொல்வது சரியாயிருக்குமோ) என்று நினைத்தார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “(நபியே!) தமது இறைவனின் திருப்தியை நாடி காலையிலும், மாலையிலும் அவனிடம் பிரார்த்திப்போரை நீர் விரட்டாதீர்!…” (6:52) எனும் வசனத்தை அருளினான்.

நூல்: முஸ்லிம் (4792)