கொள்கைவாதிகளைக் குறி வைக்கும் ஷைத்தான்
ஒருவர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த மாத்திரத்தில் அவரை நோக்கி பொதுமக்களின் புலனாய்வுப் பார்வை பொழுதனைத்தும் பின்தொடரத் தொடங்கி விடும். நம்முடைய கடந்த கால வாழ்க்கைப் பக்கங்களை நாம் கூட மறந்து விடுவோம். ஆனால் ஏகத்துவத்தின் எதிரிகள் அதை நமக்கு முன்னால் புரட்டிப் போடுவர்.
அதள பாதாளம் வரை போய் நம்முடைய அந்தரங்க வாழ்க்கையின் அணு அளவு அசைவையும் அம்பலமாக்கி விடுவர். இதற்கு ஃபிர்அவ்ன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அவனிடம் இறைத்தூதர் மூஸா நபியவர்கள் தூதுச் செய்தியைச் சமர்ப்பிக்க வந்த போது அவன் இந்த வேலையைத் தான் செய்கின்றான்.
ஃபிர்அவ்னிடம் சென்று “நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!” என்று கூறுங்கள்! (எனறும் இறைவன் கூறினான்.)
“குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்க வில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!” என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
“நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்” (என்றும் கூறினான்.)
மூஸா (அலை) அவர்கள் நபியாவதற்கு முன்னால் இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவருக்கு ஆதரவாக மற்றொருவரை மூஸா (அலை) அவர்கள் ஒரு குத்து விட்ட போது அவன் இறந்து விடுகின்றான். இதைத் தான் ஃபிர்அவ்ன் சொல்லிக் காட்டுகிறான்.
மூஸா (அலை) அவர்கள் திட்டமிட்டு இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை. அதனால் அதை அவர்கள் தைரியமாக ஒப்புக் கொண்டு தூதுச் செய்தியைச் சரியாக ஒப்புவிக்கின்றார்கள்.
“நான் நேர் வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்” என அவர் கூறினார்.
தவ்ஹீதுக் கொள்கையைப் போதிப்பதால் மட்டுமல்ல! சாதாரணமாக சீர்திருத்தத்தில் இறங்கினாலே போதும். மக்கள் நம்மை உற்று நோக்க ஆரம்பித்து விடுவார்கள். ஊழலை எதிர்த்துப் போராடுவதாகக் கூறும் அன்னா ஹஸாரே குழுவின் உறுப்பினரான கிரண்பேடி, பொது நிகழ்ச்சியில் பங்கேற்க விமானக் கட்டணத்தை விட அதிகமாகப் பெற்றதைக் கண்டுபிடித்து, “ஊழலைப் பற்றிப் பேச உனக்குத் தகுதியில்லை’ என்று விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஏகத்துவப் பிரச்சாரம் என்ற மாத்திரத்தில் இந்தப் பார்வை தானாக வந்து விடும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஓர் அழைப்பாளரின் கடந்த கால வாழ்க்கை, ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு ஒரு சரியான முதலீடும் மூலதனமும் ஆகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை அப்படித் தான் மூலதனமாக அமைந்தது.
அல்குர்ஆனை அவர்கள் மக்களிடம் சமர்ப்பிக்கும் போது, பொய் சொல்கிறார் என்ற குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள். முஹம்மத் (ஸல்) அவர்கள் பொய் சொல்லாத புனிதர் என்று தெரிந்த பின்பும் இந்தக் குற்றச்சாட்டை அவர்கள் மீது வீசியெறிந்தனர். ஆனால் அல்லாஹ் அதற்கு நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் பதிலளிக்கின்றான்.
“அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
ஓர் அழைப்பாளனின் வாழ்வு இப்படித் தூய்மையாக இருந்தால் அது ஒரு சிறப்புத் தான். அப்படியில்லாமல் கறை பட்டு, களங்கப்பட்டு இருந்து அவர் திருந்தி விட்டால் அது போதுமானது.
இன்று நம்முடைய ஏகத்துவப் பாதையில் இருப்பவர்களில் ஒரு சிலரைத் தவிர்த்து மற்றவர்கள் இணை வைப்பு என்ற பாவத்தைச் செய்யாதவர்கள் கிடையாது. பாவங்களில் அது தான் மன்னிக்க முடியாத பாவம். அந்தப் பாவத்தை விட்டே திருந்திய பிறகு கடந்த காலத்தில் செய்த மற்ற பாவங்களைப் பற்றி இப்போது நாம் கவலைப்படத் தேவையில்லை. நம்முடைய பிரச்சாரத்தில் அது குறுக்கே வந்தால் அது நமக்கு முட்டுக்கட்டையாக நிற்கப் போவதில்லை. அதற்கு உரிய பதிலை அளித்து விட்டு நம்முடைய அழைப்புப் பணியை நாம் அழகாகத் தொடரலாம்.
ஆனால் அழைப்புப் பணி துவங்கியதற்குப் பின்னால் அப்பழுக்கற்றவர்களாக, ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் தவ்ஹீதுக்கு வந்த பின்னர் ஏற்படக் கூடாது.
குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் நம்மை நாம் மிகவும் கவனமாகக் காத்துக் கொள்ள வேண்டும்.
இன்று அழைப்பாளர்கள் என்று சொல்லும் சிலர் பெண்கள் விஷயத்தில் தான் பலியாகி விடுகின்றனர். அதனால் நாம் புகாரியில் வரும் இந்த ஹதீஸைக் கவனத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரüக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
தமிழ்நாட்டில் மதரஸாக்கள் உள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். “ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு ஷைத்தான்; ஓதுகின்ற பிள்ளைக்கு ஒன்பது ஷைத்தான்’ என்பார்கள். மதரஸா மாணவர்களின் சேட்டைக்காக மக்கள் இவ்வாறு சொன்னாலும் ஏகத்துவ அழைப்புப் பணிக்கும் இது பொருந்தும்.
ஏனைய ஆட்களிடம் ஷைத்தான் விளையாடுவதை விட ஏகத்துவவாதிகளிடம் அதிக அளவில் முற்றுகையிட்டு விளையாடுவான்.
தவ்ஹீதுவாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்றாக்கி விட்டால் மக்கள் இந்தக் கொள்கைக்கு வர மாட்டார்கள். இது ஷைத்தானுக்குக் கிடைக்கின்ற பெரிய வெற்றியாகும்.
எனவே, ஓர் ஏகத்துவ அழைப்பாளர் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஏனைய ஜமாஅத்களில் உள்ள பொறுப்பாளர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்தால் அந்த ஜமாஅத்துகள் அதைக் கண்டு கொள்வது கிடையாது. அந்த விஷயத்தில் அவர்களுடன் அந்த ஜமாஅத் தலைமை சமரசம் செய்து கொள்கின்றது.
நம்முடைய ஜமாஅத் தலைமை இதில் எந்தவொரு சமரசமும் செய்வது கிடையாது. இத்தகைய தவறு செய்பவர்கள் எம்மாபெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களைத் தூக்கி எறியத் தயங்குவதில்லை.
இவ்வாறு தூக்கி வீசப்பட்டவர்கள் இந்த ஜமாஅத்தில் உள்ள பொறுப்பாளர்களை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும்; தவ்ஹீத் ஜமாஅத்தும் பத்தோடு பதினொன்று என்று காட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி, நமது இணைய தளங்களுக்குள் திருட்டுத்தனமாகப் புகுந்து தகிடுதத்தம் செய்கிறார்கள். அல்லாஹ் மிகப் பெரியவன். இவர்களுடைய இந்தச் சூழ்ச்சியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறான். இவர்களின் இந்தப் பின் விளைவுகளெல்லாம் பெண் விவகாரங்களையொட்டி எழுந்தவை.
அதனால் தவ்ஹீதுவாதிகள் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அழைப்புப் பணி தொடர்பான விவகாரங்கள் மட்டுமின்றி, கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை காரணமாக தீர்ப்பு கோரி இந்த ஜமாஅத்தை நம்பி எத்தனையோ வழக்குகள் வருகின்றன. இந்தக் குடும்பப் பெண்களின் நம்பிக்கையைப் பாழாக்குகின்ற விதமாக நம்மிடத்தில் எந்த நாசச் சிந்தனையும் வந்து விடாமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
தொலைபேசியில் மார்க்கத் தீர்ப்பு கோருகின்ற பெண்களிடம் கூட நாம் மார்க்க விளக்கங்களைத் தாண்டி வேறு எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக்கூடாது.
பெண் விவகாரத்தில் மட்டுமில்லாமல் ஏனைய பிரச்சனைகளிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் போதிப்பது தூய்மை! பரப்புவது தூய்மை! அதற்கு மாற்றமாக நாம் நடந்து கொள்ளக் கூடாது.
“என் சமுதாயமே! நான் இறைவனிடமிருந்து சான்றைப் பெற்றிருந்து, அவன் தனது அழகிய செல்வத்தை எனக்கு வழங்கியுமிருந்தால் (உங்கள் நிலை என்ன என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்! எதை விட்டும் நான் உங்களைத் தடுக்கிறேனோ அதைச் செய்து உங்களிடம் மாற்றமாக நடக்க நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற அளவு சீர்திருத்தத்தையே விரும்புகிறேன். எனக்குரிய நல்லுதவி அல்லாஹ்விடமே உள்ளது. அவனையே சார்ந்துள்ளேன். அவனிடமே மீளுகிறேன்” என்று கூறினார்.
இறைத் தூதர் ஷுஐப் (அலை) அவர்களின் இந்தப் போதனையை மனதில் பதிய வைத்து, இறையச்சம் என்ற ஆயுதத்துடன் ஏகத்துவப் பயணத்தை மேற்கொள்வோமாக! இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையையும் நாம் அடிக்கடி நினைவில் கொள்ள வேண்டும்.
“எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்”