கொள்கைவாதிகளா? சுயநலவாதிகளா?
அறியாமை காலம் என்ற இருட்டிலிருந்து சத்திய கொள்கையின் பக்கம் நம்மை இழுத்துக்கொண்டு வந்த இந்த ஏகத்துவம் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்திய விஷயங்கள் ஏராளம். இணைவைப்பு என்ற மாபெரும் அக்கிரமத்திலிருந்தும் வட்டி, வரதட்சணை போன்ற பெரும் பாவங்களிலிருந்தும் நம்மை வெளியேற்றி தொழுகை, நோன்பு, தர்மம் மற்றும் சமுதாய பணிகள் போன்ற பல சிறப்பம்சங்களுடன் தனக்கே உரிய பாணியில் சமுதாயத்தில் இந்த ஏகத்துவம் தனி மதிப்பைப் பெற்றுத் திகழ்கின்றதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
இக்கட்டத்தில் நாங்களும் தவ்ஹீத்வாதிகள் தான் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் பலர் தங்களுடைய அந்தரங்கமான மற்றும் வெளிப்படையான சுயவாழ்க்கையை ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் கொண்டு செல்கின்றார்களா? தங்களுடைய அனைத்துக் காரியங்களிலும் மார்க்கத்திற்கு முன்னுரிமை அளிகக்கின்றார்களா? என்று ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். நம்மை நாமே சுயபரிசோதனை செய்துகொள்வோம்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்குத் திருப்புமுனையாக அமைவது அவனுடைய திருமணம் தான். அவன் சத்தியத்தில் இருக்கின்றான் என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டக் கூடியதும் திருமணம் தான். இந்தத் திருமண விஷயத்தில தான் ஒரு ஏகத்துவவாதிக்கு ஏற்படக்கூடிய சோதனைகள் எத்தனை? அவையனைத்தையும் அவன் தாண்டி, தன்னை ஏகத்துவவாதியாக நிரூபிப்பது இந்தச் சமுதாயத்தில் சிரமமான நிலையாகிவிட்டது.
கொண்ட கொள்கையில் கடுகளவும் தயவு தாட்சண்யமில்லை என்று கூறியவனை, திருமணத்திற்குப் பின் பள்ளியிலோ, மார்க்க நிகழ்ச்சிகளிலோ அல்லது ஆர்ப்பாட்டங்களிலோ காண முடியவில்லை. காரணம் அந்தத் திருமணத்தில் சறுக்கி விழுந்தவன் தான். இன்னும் எழவில்லை.
கொண்ட கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு மஹர் கொடுக்க வேண்டிய மணமகன் வரதட்சணை வாங்கிக் கொண்டு, பெண் வீட்டாரின் சகல விருந்துகளிலும் கலந்து கொண்டு, அனைத்து அன்பளிப்புகளையும் பெற்றுக் கொண்டு தன்னுடைய வெட்கம், மானம் அனைத்தையும் அடகு வைத்து விட்டு இணை வைக்கும் பெண்ணைக் கரம் பிடிக்கின்றான். இவர்களும் தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக் கொள்கின்றனர்.
இன்னும் சிலர், அந்த அளவிற்கு மோசமாக இறங்க மாட்டோம் என்று சவடால் பேசிக் கொண்டு, மஹர் கொடுத்து, பெண் வீட்டு விருந்துகளைப் புறக்கணித்து, பணக்கார வீட்டில் பெண் எடுத்து, கேட்காமலேயே நகைகளையும் இன்னபிற பொருட்களையும் சீதனமாகப் பெற்று, தான் விரும்பிய இணை வைக்கும் பெண்ணைக் கரம்பிடிக்கிறார். இப்படி தன் கணவன் தன்னைத் திருமணம் முடித்ததினால் அப்பெண் திருமணத்திற்குப் பிறகு தன்னை ஏகத்துவவாதியாகப் பிரகடனப்படுத்துவதில்லை.
“நீ உன் விருப்பப்படி மஹர் கொடுத்து, விருந்துபச்சாரமில்லாமல், வரதட்சணை வாங்காமல் திருமணம் முடித்துக் கொள். ஆனால் எவளையோ ஒருத்தியை மருமகளாகக் கொண்டு வருவதை விட என் அக்கா தங்கையின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் முடித்துக்கொள்.
இந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டால் உன் விருப்பப்படி திருமணத்தை நடத்துவதற்கு, நடத்தி வைப்பதற்கு சம்மதிக்கின்றேன்” என்ற பெற்றோர்களின் கட்டளைக்கு இணங்கி நம் கொள்கைச் சகோதரர்கள் இறைக் கட்டளைக்கு மாறுசெய்து முஷ்ரிக்கான பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்கின்றனர்.
மணமகன் பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காமல், மஹர் கொடுத்து விருந்துபச்சாரங்களை, அன்பளிப்புகளை புறக்கணிப்பது மட்டும் தான் இஸ்லாமியத் திருமணம் என்று இவர்கள் எண்ணுகின்றனர். அஸ்திவாரமே ஆட்டங்கண்டு இருக்கும் போது அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவதில் என்ன பயன்? மணமகளே ஏகத்துவவாதியாக இல்லாமல் அது எப்படி இஸ்லாமியத் திருமணமாகும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
இந்த இறைக் கட்டளையை இவர்கள் அறியவில்லையா? அல்லது அறியாதது போல் நடிக்கின்றார்களா?
குர்ஆன் ஹதீஸ் கூறும் ஒழுக்க மாண்புகளை மறந்து, காதல் எனும் வலையில் விழுந்து, அப்பெண் தவ்ஹீதுக்கு வருவதற்கு முன்பு பெண் பேசி மதரஸாக்களில் சேர்த்துவிட்டு, ஒரு சில மாதங்களுக்குப் பின் தவ்ஹீதுப் பெண்ணை நான் திருமணம் முடிக்கப் போகின்றேன் என்று தனது திருமணத்திற்கு தவ்ஹீது திருமணம் என்று தானே பெயர் சூட்டிக் கொள்கிறான். அப்பெண்ணின் ஈமானிய உறுதியை அல்லாஹ்வே அறிவான்.
இவர்கள் திருமணத்திற்குப் பிறகு அவளைத் திருத்திவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகின்றனர். இது தவறானதாகும். ஏனெனில் நபிமார்களாலேயே தங்களது மனைவியர்களையும், பிள்ளைகளையும், பெற்றோர்களையும், உற்றார், உறவினர்களையும் ஏகத்துவத்திற்குக் கொண்டு வர இயலாது என்பதே குர்ஆன் ஹதீஸிலிருந்து கிடைக்கும் பாடமாகும், பதிலாகும்.
இதற்குக் குர்ஆன் ஹதீஸிலிருந்து பல ஆதாரங்களைக் காட்டலாம். உதாரணமாக நூஹ் மற்றும் லூத் நபியின் மனைவிமார்களை பற்றிக் குர்ஆன் கூறுவதைப் பாருஙகள்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.
அசத்தியவாதியுடன் திருமணத்திற்குப் பின்பும் கூட இணைந்திருக்கக் கூடாது என்பதற்காக ஃபிர்அவ்னின் மனைவி சத்தியத்திற்கு வந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுகின்றான்.
“என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!” என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.
இவையெல்லாம் நமக்கு எதை உணர்த்துகின்றது? அசத்தியவாதியுடன் நமக்கு எந்த ஒட்டும் உறவும் இருக்க்கூடாது என்பதைத் தானே! நம்மில் எத்தனை பேர் இந்த வசனத்திற்கு மதிப்பளித்தனர்? ஆனால் இந்த வசனத்திற்கு நபித்தோழர்கள் உயிரூட்டினர். இது தொடர்பாகப் புகாரியில் இடம்பெறும் செய்தியைப் பார்ப்போம்.
…(சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த காலகட்டத்தில்) இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, “நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர்.
அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள்” என்னும் (60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.
உடனே, உமர் (ரலி) அவர்கள், இணைவைக்கும் மார்க்கத்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனைவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள்.
அல்லாஹ்வால் மட்டுமே நேர்வழியில் செலுத்தமுடியும்; இது அல்லாஹ்வின் அதிகாரம் என்ற பார்வையுடன் மட்டும் இந்த ஹதீஸ் மற்றும் வசனங்களைப் பார்க்கும் இவர்கள், தாங்கள் செய்யும் தவறிலிருந்து அவர்கள் தவிர்ந்திருக்க வேண்டும் என்ற கண்டனமும் இதில் இருக்கின்றது என்பதையும் உணர வேண்டும்.
தவ்ஹீத்வாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் அழகு, செல்வம், குலப்பெருமை, பெற்றோரின் பாரம்பரிய கலாச்சாரங்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி கொள்கையை முன்னுரிமைப்படுத்துவதற்கு மறந்துவிட்டனர். யாரைத் திருமணம் முடிக்கவேண்டும்? எதற்கு முன்னுரிமையளிக்க வேண்டும்? நபிகளார் கூறிய வார்த்தைகள் இதோ…
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்.
- அவளது செல்வத்திற்காக.
- அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
- அவளது அழகிற்காக.
- அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்.
இந்த ஹதீஸை அறியாத தவ்ஹீத்வாதிகள் இருக்க இயலாது. ஆனால் இதை மறந்தது ஏன்? இதை செயல்படுத்தத் தயங்குவது ஏன்? பணக்காரப் பெண்ணை திருமணம் முடித்தால் பிற்காலத்தில் சொத்து கிடைக்கும். சொந்த பந்தங்களைப் பகைத்துக் கொண்டு திருமணம் முடிக்காமல் காத்திருக்கும் பெண்களைத் திருமணம் முடித்தால் என்ன கிடைக்கப் போகின்றது என்ற சுயநலமே இதற்குக் காரணம்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு விஷயத்திற்கு தீர்ப்பளித்துவிட்டால் அதில் இறைநம்பிக்கை கொண்டோருக்கு எந்தத் தனிப்பட்ட சுயவிருப்பமும் இருக்கக்கூடாது.
“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகிவிட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்டமாட்டான்” என்று கூறுவீராக!
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டுவிட்டார்.
ஒரு மணமகளைத் தேர்ந்தெடுக்கும் போது எதைக் கவனிக்கவேண்டும் என்று நபிகளார் குறிப்பிட்டுக் காட்டினார்களோ அதைத் தவிர மற்ற அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பெண்ணின் பெற்றோர்கள் அந்தஸ்தில் தாழ்ந்தவர்களாக, சமுதாயத்தில் சாமான்யர்களாக, கூலித் தொழிலாளியாக இருந்து அவர்களின் மகள் ஏகத்துவத்தைப் பல வருடங்களாக ஏற்று, கொள்கையில் உறுதியானவளாக இருந்தாலும் அவள் நிராகரிக்கப்படுகின்றாள்; மணமகளாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு தகுதியற்றவளாக ஆகிவிடுகின்றாள்.
அதிகமான ஆண்கள் அழகு, செல்வம், பாரம்பரியத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அழகு, செல்வம், பாரம்பரியம், அந்தஸ்து இவை அனைத்துமே மனிதனால் கொடுக்க இயலாத, இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடையாகும். இதை வைத்து ஏற்றத்தாழ்வு கற்பிப்பதோ, குறை காண்பதோ இறைவனின் படைப்பை குறை காண்பதற்கு ஈடானதாகும்.
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.
“அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக!
ஏகத்துவத்தின் ஒவ்வொரு கட்டளையையும் செயல்படுத்துவதற்காக குடும்பத்தில் உள்ள அனைவரையும் பகைத்து, கொள்கையில் ஊறித் திளைத்து, இறை உதவி எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். செலவில்லாமல் திருமணம் நடக்கும் என்பதற்காகத் தவ்ஹீதுக்கு வந்த பெண்களின் நோக்கம் இனிதே திருமணத்தில் நடந்து முடிகின்றது. சத்தியக் கொள்கைக்காக வந்த பெண்களின் நிலையோ அவர்களுடைய கொள்கைக்கே சோதனையாக நிற்கின்றது.
இவர்கள் கண்முன்னே இப்படிப்பட்ட திருமணங்களை நடத்தி, எரிகின்ற நெருப்பில் எணணெயை ஊற்றுகின்றனர். இத்தோடு இவர்களை சோதனை விட்டதா? இல்லை. உற்றார் உறவினர்கள் இணை வைப்பவர்கள் போன்றோர் “இவர்களை நம்பியிருந்தால் காலம் முழுவதும் இப்படியே இருந்துவிட வேண்டியது தான். ஆதலால் எங்கள் கொள்கைக்கு வந்து விடு. அல்லது இணைவைப்பவனுடன் இணைந்து விடு” என்று கூறி அப்பெண்களை சத்தியத்திலிருந்து திசைதிருப்பப் பார்க்கின்றனர்.
ஈமான் உள்ளே நுழைந்துவிட்டால் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன? அசத்தியத்தை ஏற்குமா? அல்லது அசத்தியவாதியுடன் இணையுமா? திருமணத்திற்காக மட்டுமே ஏகத்துவத்திற்கு வந்திருந்தால் என்றோ அவள் இணை வைப்பாளனை மணந்திருப்பாள்.
கொள்கைவாதிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்ற ஆஸியா (அலை), ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்களின் பாணியில் ஏகத்துவத்தை உணர்ந்தவள் அற்ப சுகத்திற்காக, உலக ஆசைகளுக்கு மயங்கி, சுயநலத்தை விரும்பி மார்க்கத்தை காற்றில் பறக்கவிடுவாளா? இல்லை.
திருமறையின் மூலம் இறைவனின் வல்லமையை உணர்ந்து, எங்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே சிறந்த பொறுப்பானன். அவன் ஆகு என்று கூறினால் அது ஆகிவிடும் என்று கூறி சத்தியக் கொள்கையில் உறுதியாக நின்று, குர்ஆன் வசனங்களை நடைமுறை வாழ்வில் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றாளே இவளை அசத்தியவாதியிடம் அனுப்புவதற்கு இவர்களுக்கு எப்படி மனம் வந்தது?
நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப் பட்டோரும் அல்ல.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக்கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
ஏகத்துவவாதிகளே! திருமணம் முடிந்தால் சத்திய கொள்கையில் உள்ள ஆண்மகனைத் தான் முடிப்பேன் என்று உங்களின் ஈமானை உரசிப் பார்க்கின்ற வகையில் இப்பெண்கள் வைக்கும் வேண்டுகோளுக்கு, எதிர்பார்ப்புக்கு என்ன பதிலளிக்கப் போகின்றீர்கள்?
சத்தியக் கொள்கைக்காக, பிறந்த ஊரை விட்டு தங்கள் தாய் தந்தையர், மனைவி மக்கள், சொத்து சுகங்கள் ஆகிய அனைத்தையும் தியாகம் செய்து விட்டு எதுவுமே இல்லாத ஏழைகளாக ஹிஜ்ரத் செய்தார்களே அந்த நபித்தோழர்களின் உறுதி எங்கே? நாம் எங்கே? கொள்கைக்காக எதையும் தியாகம் செய்ய முன்வரும் அவர்கள் எங்கே? நாம் எங்கே?
அவ்வாறு உறுதியாக இருந்திருந்தால் மார்க்கத்தைப் புறந்தள்ளி விட்டு அழகிற்கும், செல்வத்திற்கும், குலப்பெருமைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம். இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்திருந்தால் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டோம்.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)
- அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியோராவது.
- ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
- இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மை விடுவித்த பின், அந்த இறைமறுப்பிற்கேத் திரும்பிச் செல்வதை ஒருவர் நெருப்பில் விசப்படுவதைப் போன்று வெறுப்பது.
ஏகத்துவத்தை கொள்கையாகக் கொண்ட இளைஞர்களே! உங்களுடைய இலக்கு தான் என்ன?
எங்கே செல்கிறீர்கள்? இது அகிலத்தாருக்கு, உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.
எனவே நம்மையும் நம்முடைய குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். மன இச்சைகளைத் தவிர்த்து, குர்ஆன் ஹதீஸின் ஒளியில் நம்முடைய இம்மை வாழ்க்கையை அமைத்து அதில் மறுமைக்கான நற்பலன்களை தேடுவது மிகவும் அவசியமானதாகும்.
யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம். யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்யமாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.