கைவிடப்படும் பெற்றோர்கள் கருணையற்ற பிள்ளைகள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

கர்நாடகா மருத்துவமனைகளில் அரங்கேறும் அநியாயம்

Old and forsaken: In Karnataka, worrying trend of children abandoning elderly parents in hospitals compels government to step in

(வயதானவர்கள் மற்றும் கைவிடப்பட்டவர்கள்: கர்நாடகாவில் வயதான பெற்றோர்களை பிள்ளைகள் மருத்துவமனையிலேயே கைவிட்டுச் செல்லும் கவலையளிக்கும் போக்கு அதிகரித்து வருகின்றது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றது) என்று தலைப்பிட்டு இந்து ஆங்கில நாளேடு கடந்த மார்ச் 18 அன்று ஓர் அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியிட்டிருந்தது. அது வருமாறு:
தனியார் நிறுவன ஊழியரான தனது கணவர் இறந்த பிறகு ஷல்மாலா பெங்களூர் தர்வாடில் தனியாக வசித்து வருகின்றார். கொஞ்ச காலமாக வயிற்று வலியால் அவதியுற்றிருக்கின்றார். அவருக்கு இரு மகன்கன்கள். ஒருவர் மும்பையிலும் இன்னொருவர் பெங்களூரிலும் குடியிருக்கின்றனர். கோடை விடுமுறையில் பார்க்க வந்த மருமகள்களிடம் தன்னை படுத்தியெடுக்கின்ற வயிற்று வலி பற்றி தெரிவித்த மாத்திரத்தில் அவர்கள் முதலில் ஒரு தனியார் மருத்துவமனையிலும் பின்னர் Belagavi institute of Medical Sciences (BIMS) பெலகாவி மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கும் அழைத்துச் சென்று சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சையும் நடந்தது.

மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் மகன்கள் மருத்துவமனையிலிருந்து தலைமறைவாகி விட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் மகனிடம் தொடர்பு கொண்டு பேசிய போது சம்பந்தப்பட்ட பெண் தனது தாயார் அல்ல என்று மனிதாபிமானத்துடன் (?) தெரிவித்து விட்டார். அதோடு நின்றால் பரவாயில்லை. தங்கள் தாயார் மரணித்து நீண்ட காலம் ஆகி விட்டது என்று கூறி தங்களது தாய் பாசத்தை நன்றிப் பெருக்குடன் (?) வெளிப்படுத்திக் கொண்டனர்.
பின்னர் அவ்விருவர்களில் ஒரு மகன் காவல்துறைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு தாயாரால் அளிக்கப்பட்ட சொத்துக்களின் ஆவணங்களில் அவர் தாயார் போட்டிருந்த கையெழுத்தை காட்டி இது உங்கள் தாயார் கையெழுத்து தானா? என்று கேட்ட போது தப்பிக்க முடியாமல் அசடு வழிந்து ஒப்புக் கொண்டார். இப்போது இந்த அடிப்படையில் அவர் தனது மகன் வீட்டில் காவல்துறையின் துணையுடன் போய் மகனிடமே குடியிருக்க முடியும் என்றாலும் தன்மானமுள்ள அந்தத் தாய் வாடகை வீட்டிலேயே வசித்துக் கொண்டிருக்கின்றார்.

நன்றி கெட்டத் தன்மையுடன் தங்கள் பெற்றோர்களை பிள்ளைகளே மருத்துவமனைகளில் கைவிட்டு விட்டு கைகழுவி நழுவி விடும் சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் இந்தச் சம்பவம் அரிதாக நடந்த ஒரு தனி நிகழ்வல்ல! இந்த அவலம், மனித இனத்தின் அவமானம் அடிக்கடி அடுக்கடுக்காக அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து நடந்துவருகின்றது என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. கடந்த 2 ஆண்டுகளில் 152 ஆண்கள், பெண்கள் இவ்வாறு மருத்துவமனைகளில் தங்கள் பிள்ளைகளால், உறவினர்களால் கை விடப்பட்டுள்ளனர் என்று ஙிமிவிஷி இயக்குநர் அசோக் குமார் ஷெட்டில் மருத்துவக் கல்வி அமைச்சர் சரண் பிரகாஷ் பாட்டீலிடம் தெரிவித்தார்.

கைவிடப்பட்டவர்களில் 73 பேர் வீட்டிற்கும், 62 பேர் முதியோர் இல்லங்களுக்கும், 17 பேர் கர்நாடகாவிற்கு வெளியே உள்ள நகரங்களில் உள்ள அவர்களது குடும்பங்களிடமும் திருப்பி அனுப்பப்பட்டதாக முதியோர் பிரிவுக்குப் பொறுப்பான குடியிருப்பு மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“நோயாளிகள் குணமடைந்த பிறகு அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குணமடைந்த நோயாளிகளை நாங்கள் மருத்துவமனையில் தங்க வைக்க முடியாது. அவர்களைத் திருப்பி அனுப்பவில்லை என்றால், புதிய நோயாளிகளை அனுமதிக்க எங்களுக்கு இடம் இருக்காது,” என்று மருத்துவமனையில் பாடம் நடத்தும் பொறுப்பு வகிக்கும் டாக்டர் தெரிவிக்கின்றார். “எங்களிடம் இன்னும் குறைந்தது 30 மூத்த குடிமக்கள் உள்ளனர். அவர்கள், தங்கள் குழந்தைகள் அல்லது நெருங்கிய உறவினர்களால் கைவிடப்பட்டுள்ளனர். அவர்களை அப்படி விட்டுச் சென்றவர்களை கண்டுபிடிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம்” என்று ஒரு மருத்துவர் கூறுகின்றார்.

வயதானவர்கள் சொத்து ஆவணங்களில் கையெழுத்து போட்ட பிறகு அல்லது அவர்கள் மருத்துமனையில் தங்கியிருக்கும் போதே அவர்களை விட்டு விட்டு உறவினர்கள் சென்று விடுகின்றார்கள். அவர்களுக்கு கடுமையான உடல் நலப் பிரச்சனைகள் இருப்பதாகவோ அல்லது அவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைபடுகின்றது என்றோ கூறி மருத்துவமனையில் சேர்க்கின்றார்கள். ஆனால் சிகிச்சை முடிந்ததும் திரும்ப ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். நோயாளிகளான தங்கள் பெற்றோர்களை மருத்துவமனையின் படிக்கட்டுகளில் அப்படியே நிர்க்கதியாக விட்டு விட்டு பிள்ளைகள் சென்று விடுகின்றனர். அவர்கள் திரும்ப வருவது கிடையாது. இப்படியும் சில சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஒரு மருத்துவர் கூறுகின்றார்.

பெற்றோர்களின் சொத்துக்கள் அவர்கள் கையெழுத்துப் போடாமல் பிள்ளைகளுக்குத் தானாகக் கைமாறுவதில்லை. பெற்றோர்கள் தங்கள் வயதான காலக்கட்டத்தில் பிள்ளைகளால் சரியாக நடத்தப்படாவிட்டால் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலன் அளிப்புச் சட்டம், 2007 படி பெற்றோர்கள் அந்த சொத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் மூத்தகுடி மக்களுக்கு உதவி செய்து வரும் ஓர் இளம் வழக்கறிஞர் தெரிவிக்கின்றார்.

கைவிடப்பட்ட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாற்றிய சொத்துக்களை ரத்து செய்யக் கோரி வருவாய் உதவி ஆணையர்களிடம் புகார் அளிக்குமாறு அனைத்து அரசு மருத்துவமனை இயக்குநர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “இந்த வாரம் விரிவான சுற்றறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

மூத்தக் குடிமக்களான தங்கள் பெற்றோர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும் பிள்ளைகள் அதை ஒரு சாக்காக வைத்து அவர்களை மருத்துவமனைகளில் கையறு நிலையில் கைவிட்டு விடுவதை இந்தச் செய்தி விவரிக்கின்றது. அரசாங்கம், சட்டம் எனும் ஆயுதம் மூலம் அதைத் தடுக்க முனைகின்றது. அதாவது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதிக் கொடுத்திருந்தால் அதை பெற்றோர்களே திரும்ப பெறும் சட்டத்தின் மூலம் அதைத் தடுக்க நினைக்கின்றது.

ஆனால் சொத்துகள் இல்லாத பெற்றோர்கள் தான் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்கள் தங்கள் பெற்றோர்களை மருத்துவமனைகளில் விட்டுச் சென்றால் அந்தப் பிள்ளைகளுக்கு என்ன தண்டனை? இதற்குப் பதிலில்லாமல் இந்தச் சட்டம் பலவீனமான நிலையில் பல்லிளித்து நிற்கின்றது.
அதனால் இந்தப் பிரச்சனையை சட்டத்தின் மூலம் மட்டும் தீர்க்க முடியாது என்பது எடுத்த எடுப்பிலேயே தெளிவாகி விடுகின்றது.

பொதுவாக இப்படி ஒரு பிரச்சனை முஸ்லிம்களிடம் பரவலாக இல்லை. அதற்குக் காரணம் என்ன? இஸ்லாம் ஊட்டக் கூடிய மறு உலக வாழ்க்கை என்ற மறுமை நம்பிக்கை தான்.
இன்று இந்திய அளவில் முழத்திற்கு முழம் மதுக்கடைகள் திறந்திருந்தாலும் அவர்கள் மதுக் கடைகளுக்குப் போவதில்லை. மது விற்பனை செய்வதும் இல்லை. குறிப்பாக முஸ்லிம்கள் பண்டிகை நாட்களான இருபெருநாட்களில், திருமணம், துக்கம் போன்ற நாட்களில் கூட அவர்கள் மது அருந்துவதில்லை. அதற்குக் காரணம் அவர்கள் கொண்டிருக்கும் மறு உலக வாழ்க்கை எனும் மறு உலக நம்பிக்கை தான்!
அதே சமயம் முஸ்லிம்களிடம் அறவே குடிப்பழக்கம் இல்லை என்று நாம் சாதிக்கவில்லை. இருக்கின்றது. அதுவும் நாட்டில் மதுக் கடைகள் திறந்திருப்பதால் அல்லது வேறு வழிகளில் மது கிடைப்பதால் அவர்களிடம் குடிக்கும் பழக்கம் இருக்கின்றது.

அதுபோல் முஸ்லிம்களிடம் தற்கொலை அதிகம் இல்லை. இதற்குக் காரணம் நாளை மறுமையில் இறைவனிடம் தாங்கள் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவோம் என்ற இறையச்சம் தான்.
இந்த மறுமை நம்பிக்கை மூலமாகத் தான் மேலே நாம் கூறியுளள கைவிடப்படும் பெற்றோர்கள் பிரச்சனைக்கும் தீர்வை ஏற்படுத்த முடியும்.
இஸ்லாத்தில் மனிதனுக்கு இடப்பட்டிருக்கும் முதல் முக்கியக் கட்டளை அல்லது அவன் மீது விதிக்கப்பட்டிருக்கும் முதல் தடை இறைவனுக்கு இணை வைக்காமல் இருப்பதாகும். அது மிகப் பெரும் பாவமாகும். இதற்கு அடுத்து அல்லாஹ் இடுகின்ற கட்டளை பெற்றோர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது தான்.

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்கு எவற்றைத் தடுத்துள்ளான் என்பதை எடுத்துரைக்கிறேன்” என்று (நபியே!) கூறுவீராக! அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள்! பெற்றோருக்கு நன்மை செய்யுங்கள்! (அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்!) வறுமையின் காரணமாக உங்கள் பிள்ளைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாமே உங்களுக்கும், அவர்களுக்கும் உணவளிக்கிறோம். மானக்கேடானவற்றில் வெளிப்படையானதையும், மறைமுகமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் புனிதமாக்கிய எந்த உயிரையும் நியாயமின்றிக் கொலை செய்யாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதனை உங்களுக்கு ஆணையிடுகிறான்
(அல்குர்ஆன்: 6:151)➚

பெற்றோர்களுக்குத் துன்பம் தரக்கூடாது; அவர்களுக்குத் துரோகம் இழைக்கக் கூடாது என்று இந்த இறைவசனம் கட்டளையிடுகின்றது. இதைப் பின்வரும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)’ என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை)’ என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்) தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்திக் கொள்ளக் கூடாதா’ என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.
அறிவிப்பவர்; அபூபக்ரா (ரலி)
(புகாரி: 2654)

நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
(புகாரி: 2653)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ்கள் பெற்றோருக்குத் துன்பம் தருவது பெரும்பாவம் என்று கூறுகின்றன. அதாவது இத்தகைய பாவம் செய்தவர்கள் நரகத் தண்டனையை மறு உலகில் அனுபவிப்பார்கள் என்பது அதன் பொருளாகும்.

‘சீ’ என்று சொல்வதே ஒரு பாவம்

தன்னைத் தவிர வேறு யாரையும் நீங்கள் வணங்கக்கூடாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உமது இறைவன் ஆணையிட்டுள்ளான். அவ்விருவரில் ஒருவரோ, அல்லது இருவருமோ உம்மிடம் முதுமைப் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்களைச் ‘சீ’ என்று (சடைந்தும்) கூறாதீர்! அவர்களை விரட்டாதீர்! கண்ணியமிக்க சொல்லையே அவர்களிடம் கூறுவீராக!
(அல்குர்ஆன்: 17:23)➚

‘ஒருவர் தம் தாய் தந்தையரைச் சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(புகாரி: 5973)

இந்த ஹதீஸ் எதிர்வினை மூலம் கூட பிள்ளைகள் தங்கள் பெற்றோரைத் திட்டுவதற்குக் காரணமானால் அது பிள்ளைகள் செய்த பெரும்பாவம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள். எதிரொலி, எதிர்வினை மூலமாகக் கூட பெற்றோர்கள் திட்டுப்படுவதற்கு பிள்ளைகள் காரணமாகி விடக்கூடாது என்ற இந்தப் பார்வையை உலகத்தில் எந்த ஒரு மதமோ சித்தாந்தமோ சொல்லியிருக்க முடியாது. இஸ்லாம் என்பது இறைமார்க்கம் என்பதால் இப்படி ஒரு பார்வையை பார்த்திருக்கின்றது.

தாய்க்கு இடம் ஒன்று! தந்தைக்கு இடம் நான்கு!

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)(புகாரி: 5970)

இந்த ஹதீஸில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தாயின் தகுதியை நிரப்ப வேறு யாருமில்லை. அந்த இடத்தை தந்தை கூட நான்காவதாகத் தான் நிரப்ப முடிகின்றது என்று தாய், தந்தையரின் கண்ணியத்தை வானளவுக்கு உயர்த்தி விடுகின்றார்கள். பிள்ளைகள் ஈடு செய்ய முடியாத அளவுக்கு பெற்றோர்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கின்றார்கள் என்று இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.

இறந்த பெற்றோருக்கு பிள்ளைகள் செய்யும் தர்மம்

ஸஅத் இப்னு உபாதா அவர்கள் வெளியே சென்றிருந்தபோது அவரின் தாயார் இறந்துவிட்டார். அப்போது அவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்தபோது மரணமடைந்துவிட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் அது அவருக்குப் பயனளிக்குமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆம் (பயனளிக்கும்)’ என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத்(ரலி), ‘நான் என்னுடைய மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)(புகாரி: 2756)

பெற்றோர்கள் இறந்த பின்பும் பிள்ளைகள் தர்மம் செய்யும் அளவிற்குப் பெற்றோர்கள் நலனை இஸ்லாம் பேணச் சொல்கின்றது. அன்றைய கரடு முரடான அரபுச் சமூகம் பெற்றோர் நலனை பேணிக் காப்பதில் சிகரம் தொட்டதென்றால் அதற்கு அடிப்படைக் காரணம் இஸ்லாம் ஊட்டிய மறு உலக நம்பிக்கை தான்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், பெற்றோர்களைக் கைவிட்டால் மறு உலகில் சொர்க்கம் செல்ல முடியாது. அவ்வாறு கைவிடுபவர்கள் நரகத் தண்டனையை அனுபவிப்பார்கள் என்ற இறை அச்சம் தான் பிள்ளைகள் பெற்றோர்களைக் கைவிடும் துரோகத்தைத் தடுக்குமே தவிர எந்தச் சட்ட நடவடிக்கையுக் தடுக்காது என்பதை இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.