கேள்வி:7

நூல்கள்: ___வேதம் ஓதும் சாத்தான்கள்

கேள்வி:7

தன்னுடைய கவிதைகள் மூலம் முஹம்மதை எதிர்த்த காபிர்களை சிரச் சேதம் செய்யுமாறு ஆணையிட்டதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. முஹம்மதின் போர்கள் (மகாஸி) நூல்களில் முக்கியப் பகுதியாக விளங்குபவை இந்தப் படுகொலைகள் தான் அஸ்மா, அஃபாக், கஃபு இப்னுல் அஷ்ரப் ஆகிய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம் என்கிறார் ராம்ஸ்வர்ப்.

பதில்:7

கவிஞர்கள் அவர்கள் கவிஞர்கள் என்ற காரணத்துக்காக மட்டும் ஒரு போதும் கொலை செய்யப்பட்டதில்லை. ஒரு சில கவிஞர்களாக இருந்தவர்கள் வேறு பல கிரிமினல் குற்றங்களைப் புரிந்ததால், அந்தக் கிரிமினல் குற்றங்களுக்காகவே கொல்லப்பட்டனர்.

‘ராம்ஸ்வர்ப்’ என்ற எழுத்தாளர் திருடி விட்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு நீதிமன்றம் அதற்காக தண்டனை வழங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர் எழுத்தாளன் என்ற காரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டதாக எவரேனும் கூறினால் அவனை விட முட்டாள் எவனுமிருக்க முடியாது.

அவர் ஹிந்துவாக இருப்பதால் தான் தண்டிக்கப்பட்டார் என்று கூறுவதும் முட்டாள் தனமானது.

இதே போல் தான் எவர் குற்றம் செய்தாலும் இஸ்லாம் சலுகை காட்டியதில்லை. குற்றவாளிகள் கவிஞர்களாக இருப்பதால் அவர்களுக்கு தனிச்சலுகை எதுவும் இஸ்லாம் காட்டவில்லை. கவிஞர்களோ, கவிஞர் அல்லாதவர்களோ எவராக இருந்தாலும் குற்றவாளிகளை தண்டனையிலிருந்து இஸ்லாம் தப்பவிட்டதில்லை. அந்த அடிப்படையில் சில கவிஞர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையைத் தான் ராம்ஸ்வர்ப் விமர்சிக்கிறார். உதாரணமாக அவர் குறிப்பிட்ட மூன்று கவிஞர்களில் கஃபு இப்னு அஷ்ரபை எடுத்துக் கொள்வோம்.

நபிகள் மதீனாவில் ஆட்சியை நிறுவிய பின் முதன் முதலில் ‘பத்ரு’ என்னும் போர்க்களத்தைச் சந்திக்கிறார்கள். அதில் நபிகள் மகத்தான வெற்றி பெறுகிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் மதீனாவில் – இஸ்லாமிய நாட்டில் ஒரு பிரஜையாக கஃபு இப்னு அஷ்ரப் என்ற கவிஞனும் இருந்தான். பத்ரு வெற்றிச் செய்தியைக் கேள்விப்பட்டதும் உடனே மக்காவுக்கு ஓடி அங்கேயே தங்கி முஸ்லிம்களுக்கெதிராக மக்கத்துத் தலைவர்களைத் தூண்டி விட்டதோடு அவனது சொந்த நாட்டின் இரகசியங்களையும் அவர்களுக்குத் தெரிவித்தான்.

இதன் காரணமாகவே அவனைக் கொல்லுமாறு நபிகள் கட்டளையிட்டார்கள். இப்னு இஸ்ஹாக் இதனை குறிப்பிடுகிறார்.

ஆதாரப்பூர்வமான வேறு நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.

ஒரு நாட்டைச் சேர்ந்தவன், எதிரி நாட்டுக்கு – அதுவும் இரண்டு நாடுகளுக்குமிடையே பகைமை உச்சகட்டத்தை அடைந்திருக்கும் போது – போர் மேகங்கள் சூழ்ந்து நெருக்கடியான நிலையில் இருக்கும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவன் எதிரி நாட்டுக்கு இராணுவ இரகசியங்களைத் தெரிவித்தால் எந்த நாடும் அவனை மன்னிக்க முன்வராது. தேசத் துரோகிகளுக்கு கடுமையான தண்டனையை உலகில் எந்த நாடும் அளிக்கும்.

அந்த தேசத்துரோக்க் குற்றத்தையே கஃபு இப்னு அஷ்ரப் என்பவன் செய்தான்.

தேசத் துரோகி கவிஞர் என்பதற்காக அவனை மன்னிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் ராம்ஸ்வர்ப். ஏனைய கவிஞர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையும் அவர்கள் கவிஞர்களாக இருந்தார்கள் என்ற காரணத்துக்காக அல்ல என்பதை ராம்ஸ்வர்ப் உணர வேண்டும்.