கேள்வி:3
கேள்வி:3
முஹம்மது நபி மக்காவில் இருந்த போது, அவருக்கு எழுத்தராக இருந்த அப்துல்லாஹ் இப்னு ஸஃது பற்றி ஹதீஸ் கூறுகிறது. நபி சொன்னபடி அவர் இறைவழிபாட்டை எழுதிக் கொள்வார். நபி சில சமயங்களில் பாதியில் நிறுத்தி விடுவார். அப்போது அந்த எழுத்தர் வார்த்தைகளைப் போட்டு நிரப்புவார். அவர் சேர்த்து எழுதிய வார்த்தைகளும் இறைவேதத்துடன் ஒன்றிவிட்டதைக் கண்டு அவர் குழப்பமுற்றார். இது அவருடைய உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. இதைப் பற்றி பலரிடமும் அவர் பேச ஆரம்பித்தார். இஸ்லாத்தையும் கை விட்டார். முஹம்மது இதற்காக அவரை மன்னிக்கவே இல்லை. இருபது வருடங்கள் கழித்து நபி மக்காவை வெற்றி கொண்டபோது அப்துல்லாவை சிரச் சேதம் செய்யுமாறு கட்டளையிட்டார். நபியின் மருமகனும், அப்துல்லாவின் பால் குடிச் சககோதரருமான உஸ்மானின் சிபாரிசின் பேரில் காப்பாற்றப்பட்டார். நபியிடம் உஸ்மான், அப்துல்லாவைக் காப்பாற்றுமாறு உத்தரவிட்டபோது நபி நீண்ட பொழுது மௌனமாக இருந்தார். பிறகு சரி என்று சொன்னதாகவும், உஸ்மான் அவ்விடத்தைவிட்டு அகன்ற பிறகு நபி தம்மைச் சூழ்ந்திருந்த தோழர்களை நோக்கி நான் ஏன் அவ்வளவு நேரம் மவுனமாக இருந்தேன் தெரியுமா? அந்த இடைவெளியில் உங்களில் எவராவது எழுந்து அவருடைய தலையைக் கொய்துவிட மாட்டீர்களா? என்ற எண்ணத்தில் தான் மவுனம் சாதித்தேன் என்று சொன்னார். இப்னு இஸ்ஸாக் இவ்வாறு கூறுகிறார்.
பதில்:3
இரண்டு நோக்கங்களுக்காக இந்தச் செய்தியை ராம்ஸ்வர்ப் எடுத்துக் காட்டுகிறார்.
(1)இறை வேதத்துடன் மனிதர்களும் தங்கள் கைச்சரக்கைச் சேர்த்து விட்டார்கள் என்று நிரூபிப்பது
(2) நபி மிகவும் மோசமான குணம் கொண்டவர். அந்த இடைவெளியைப் பயன்படுத்தி யாராவது கொன்று விடமாட்டார்களா? என்று எதிர்பார்த்ததன் மூலம் கீழ்த்தரமான எண்ணங்களையே நபி கொண்டிருந்தார் என்று காட்டுவது.
இப்னு இஸ்ஹாக்கும், அபூதாவூத் போன்றவர்களும் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தாலும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் சிலர் நம்பகமற்றவராகவும், வேறு ஒருவர் அலி (ரலி) அவர்கள் பெயரால் பொய்களைப் பரப்பும் ஷியாக்களின் தலைவராகவும் இருக்கிறார். அவர்களால் அறிவிக்கப்படும் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்லவே அல்ல.
உண்மையில் இது பற்றி வந்துள்ள ஆதாரப்பூர்வமான செய்தி இவ்வளவு தான்:-
அப்துல்லாஹ் இப்னு ஸஃது என்பவர் அல்லாஹ்வின் தூதரிடம் எழுத்தராக இருந்தார். ஷைத்தான் அவரை வழி கெடுத்து விட்டான். அவர் காஃபிர்களுடன் சேர்ந்து கொண்டார். மக்கா வெற்றியின் போது அவரைக் கொன்று விடுமாறு நபி கட்டளையிட்டார்கள். அவருக்காக உஸ்மான் அடைக்கலம் கோரிய போது உடனே அடைக்கலம் தந்தார்கள்.
இது தான் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூத், நஸயீ ஆகியநூல்களில் இடம் பெற்றுள்ளது.
இந்த ஆதாரப்பூர்வமான செய்தியில் அடைக்கலம் கேட்டவுடனே அடைக்கலம் தந்ததாக உள்ளது. ஆதாரப்பூர்வமான இந்தச் செய்தியுடன் அந்தச் செய்தி முரண்படுவதாலும் அதன் அறிவிப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாததாலும் அந்தச் செய்தியின் அடிப்படையில் ‘ராம்ஸ்வர்ப்’ கருதுகின்ற இரண்டாவது நோக்கம் அடிப்பட்டுப்போகின்றது.
இவரை யாராவது கொன்று விட மாட்டீர்களா என்ற அளவுக்குக் கடுமையான வார்த்தையை நபி பிரயோகம் செய்திருந்தால் – அவரை மனப்பூர்வமாக மன்னிக்கவில்லை என்று ஆகின்றது. மனப்பூர்வமாக அவரை நபி மன்னித்திருக்காவிட்டால், சம்மந்தப்பட்ட அப்துல்லாஹ் இப்னு ஸஃது அவர்கள் மனந்திருந்தி திரும்பவும் இஸ்லாத்தில் இணைந்திருக்க மாட்டார். அவரது பிற்கால வாழ்க்கை இஸ்லாத்தின் மீதும், இறைத்தூதர் மீதும் இருந்த அளவு கடந்த நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
எகிப்துடன் நடந்த போரில் முஸ்லிம்களின் அணியில் இவர் பங்கெடுத்துக் கொண்டார். அதன் வெற்றிக்கு துணை நின்றவர்களில் பிரதானமானவராக அவர் இருந்தார். பல போர்க்களங்களில் பாராட்டப்படும் சாதனைகள் பல புரிந்தார். எகிப்து நாட்டின் நிர்வாகியாகவும் சில காலம் இருந்தார்.
அலி முஆவியா இருவருக்கிடையில் பூசல்கள் தோன்றிய போது எப்பக்கமும் சாராமல் இவர் நடுநிலை வகித்தார் என்று இப்னு யூனுஸ் என்னும் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்,
ஆப்பிரிக்காவை வெற்றி கொண்ட படைக்கு இவர் தளபதியாகச் சென்று ஆப்பிரிக்காவை வெற்றி கொண்டார் என்று இப்னு ஸஃது என்ற வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.
இஸ்லாமிய முக்கிய கடமையாக உள்ள தொழுகையை -வைகறைத் தொழுகையை -நிறைவேற்றி முடிந்ததும் இவரது உயிர் பிரிந்தது என்று புகாரி, பகவி ஆகியோர் கூறுகின்றனர்.
இந்த சரித்திரக் குறிப்புகள் அவருக்கு இஸ்லாத்தின் மீது இருந்த காதலுக்கு சான்றாக அமைந்துள்ளன. நபி இவரைப் பற்றி அந்த வார்த்தையைக் கூறி மனப்பூர்வமாக மன்னித்திருக்கா விட்டால் இவ்வளவு நம்பிக்கைக்குரியவராக அவர் நடந்து கொண்டிருக்க முடியாது என்று சிந்தனையாளர்கள் உணரலாம்.
இறைச் செய்தியுடன் தன் சொந்தச் சரக்கையும் சேர்த்துவிடுவார் என்ற கருத்தும் பொய்யானதாகும். ஏனெனில் நாம் குறிப்பிட்ட ஆதாரப்பூர்வமான அந்தச் செய்தியில் அந்த விபரம் இல்லை. நபியின் எழுத்தராக இருந்த என்ற வாசகம் அவரைப் பற்றி அறிமுகம் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் தானே தவிர, வஹியில் கலப்படம் செய்தவர் என்று காட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வாசகம் அல்ல. வஹியை எழுதுபவராக இருந்த அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறினார் என்று தான் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. சொந்தச் சரக்கைச் சேர்த்தார் என்ற விபரமெல்லாம் அதில் இல்லை. எனவே ராம்ஸ்வர்புடைய முதல் நோக்கத்திற்கும் அடிப்படையில்லாமல் போய் விடுகின்றது.
‘வஹியில் அவர் கலப்படம் செய்தார்’ என்று ஒரு வாதத்துக்காக பொருள் செய்தாலும், ராம்ஸ்வர்புடைய கருத்துக்கு அதில் ஆதாரம் எதுவுமில்லை. ஏனெனில் வஹியில் அவர் செய்த கலப்படத்தைத் தான் நபி கண்டுபிடித்து அகற்றி விடுகிறாரே! வஹியில் யாரேனும் கலப்படம் செய்தால் இறைவனின் தூதருக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டு விடும் என்றுதான் அதில் விளங்க முடியுமே தவிர, ராம்ஸ்வர்ப் விளங்குவது போல் விளங்க முடியாது.