கேள்வி:2
கேள்வி:2
அவருக்கு இறைவனிடமிருந்து வஹி வருகிறது என முதன் முதலில் நம்பியவர் அவருடைய முதலாளியும், முதல் மனைவியுமான கதீஜா தான். ஆனால் இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறான் போலும் என்று அவருடைய நேசத்துக்குரிய மனைவி ஆயிஷாவே அடிக்கடி அவரை கிண்டல் செய்திருக்கிறார். மேலும் தான் முஹம்மதுக்குக் கொடுத்த அறிவுரைக்கேற்ப மூன்றுமறை நபிக்கு வஹீ வந்ததாக உமர் பெருமையடித்துக் கொண்டார். இது உமருக்குத் திருப்தியளித்திருக்கலாம். ஆனால் பலருடைய உள்ளங்களில் வினாக்களை எழுப்பிவிட்டது என்கிறார் ராம்ஸ்வர்ப்.
பதில்:2
இந்த மூன்று நிகழ்ச்சிகளை இறைவேதத்தில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இவர் தரும் அடுத்த சான்றுகளாகும்.
கதீஜா (ரலி) அவர்கள் தான் முதலில் விசுவாசம் கொண்டார்கள்; அதை நாம் மறுக்கவில்லை. கதீஜா (ரலி) முதலில் விசுவாசம் கொண்டதால் இறைவேதம் என்று குர்ஆனை நம்புவதற்கு என்ன தடை இருக்கிறது?
கணவருக்குப் பயந்து கொண்டு விசுவாசம் கொண்டிருக்கலாம் என்று சொல்ல வருகிறாரோ என்னவோ தெரியவில்லை. கதீஜா (ரலி) முதன்முதலில் விசுவாசம் கொண்டது அவர் இறைத் தூதர் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்யுமே தவிர அந்த நம்பிக்கையைப் பலவீனப்படுத்தாது.
(அ) கதீஜா ஒரு பெண். பொதுவாகவே பெண்கள் தங்களின் பாரம்பர்யமான நம்பிக்கையை எளிதில் விட முன்வர மாட்டார்கள். புதிய கருத்துக்களை ஏற்பதற்கு ரொம்பவும் தயக்கம் காட்டுவார்கள். தன்னுடைய பாரம்பர்யமான கொள்கையைத் தகர்த்தெறியும் புதுக் கொள்கையை கணவர் சொன்னவுடன் மறுப்பேதுமின்றி ஏற்றுக் கொண்டார்கள் என்றால் அவரிடம் இறைத் தூதருக்கான அனைத்து அம்சங்களும் இருந்ததால் மட்டுமே அது சாத்தியமாயிற்று.
(ஆ) கதீஜா அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்தார்கள்; அவர்களின் செல்வத்தில் தான் நபிகளின் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது. இது போன்ற நிலைமையில் கணவன் மீதுள்ள மதிப்பு தானாகவே சரிந்து போய்விடுவதை உலகில் நாம் காண்கிறோம். தன்னுடைய செல்வத்தில் காலங்கழிக்கும் தன் கணவரை அவமதிப்புச் செய்வதற்கு பதிலாக, அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்றே மிகமிக உயர்வான மதிப்பை வழங்கினார்கள் என்றால் நபியிடம் அதற்கான சிறப்புத் தகுதிகள் கட்டாயம் இருந்திருக்க வேண்டும்.
(இ) முஹம்மதை விட வயதில் மூத்தவரான கதீஜா தன்னைவிட மூத்தவர் என்ற மரியாதைக்காக இறைச் செய்தியை நம்பினார்கள் என்றும் சொல்ல முடியாது.
(ஈ) வெளி உலகில் நல்லவனாக, உத்தமனாக நடிக்கின்றவர்கள் தமது வீட்டில் அப்படி நடிக்க முடியாது. ஒருவனுடைய உண்மையான நடத்தையை மற்றவர்களை விட அவனது மனைவி தான் நன்றாக அறிய முடியும். அவனுடைய எல்லா பலவீனங்களும், கெட்ட குணங்களும் மனைவிக்குத் தெரிவது போல் எவருக்கும் தெரிய முடியாது. பதினைந்து ஆண்டுகள் நபியுடன் வாழ்க்கை நடத்திய கதீஜா அவர்கள் அவருடைய அப்பழுக்கற்ற, நேர்மையான, உள்ளேயும் வெளியேயும் ஒரே விதமாக வாழுகின்ற வாழ்க்கையைப் பார்த்துத் தான் அவர் இறைத்தூதர் என்றதும் ஏற்றுக் கொள்கிறார்கள். நபியின் பரிசுத்த வாழ்க்கைக்குச் சான்றாக அமைந்த கதீஜாவின் விசுவாசத்தை சம்மந்தமில்லாமல் இங்கே குறிப்பிடுகிறார் ராம்ஸ்வாப்.
இனி ஆயிஷா அவர்களின் விஷயத்துக்கு வருவோம். அதில் ராம்ஸ்வாப் சொந்தச் சரக்கைக் கலந்துவிட்டு அதனடிப்படையில் தன் சந்தேகத்தைத் தெரிவிக்கிறார். நீ விரும்பும் பெண்களை மணந்து கொள்ளலாம் என்ற வசனம் இறங்கிய போது உங்கள் ஆசையை உங்கள் இறைவன் விரைந்து நிறைவேற்றுகிறான் என்றே நான் கருதுகிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.
இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு வசனம் இறங்கியதைத் தான் இங்கே ஆயிஷா (ரலி) குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா அவர்களின் இந்தக் கூற்றை இவர் எப்படி உருமாற்றி விட்டார் தெரியுமா? இவருடைய வசதிக்காகவே இறைவன் வசனங்களை வெளிப்படுத்துகிறானோ என்று ஆயிஷா அடிக்கடி நபியைக் கிண்டல் செய்திருக்கிறார் என்று ராம்ஸ்வர்ப் கூறுகிறார்.
‘அடிக்கடி’, ‘கிண்டல்’ இவருடைய வசதிக்காகவே என்ற வாசகங்கள் ராம்ஸ்வர்ப் உடைய கைசரக்குகள். இது தான் புலமை சான்ற கேள்வியா? இது வடிகட்டிய பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
ஒரு தந்தை தன் மகனுடைய ஒரு விருப்பத்தை நிறைவேற்றும் போது உன் தந்தை உன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அக்கரையாக இருக்கிறார் என்று கூறுவதற்கு என்ன நிலையோ அதே நிலைதான் ஆயிஷாவின் கூற்றுக்கும் உண்டு.
இந்தத் தில்லுமுல்லுகளை ராம்ஸ்வர்ப் ஏன் செய்திருக்கிறார் தெரிகிறதா? இவருடைய வசதிக்காகவே – குர்ஆன் இறங்கியது என்றால், இறைவனுடைய செய்தி அல்ல அது. இவர் தனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதை இறைவன் கூறுவதாகச் சொல்லி விடுவார் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதே இந்த ஒட்டுவேலையின் நோக்கம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இவரே இவருக்கு முரண்பட்டுக் கொள்கிறார். ஆயிஷாவுடைய சொல்லை சிதைத்ததன் மூலம் அவரது விருப்பத்திற்கேற்பவே குர்ஆன் இறங்கியது என்று சொல்லவரும் ராம்ஸ்வர்ப், அவருடைய விருப்பத்துக்கு மாறாக -அவருடைய தோழர்களில் ஒருவராகிய உமருடைய விருப்பத்திற்கேற்பவே மூன்று விஷயங்களில் வஹி வந்தது என்றும் ஒப்புக்கொள்கிறார்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் விருப்பத்திற்கேற்ப மூன்று வசனங்கள் இறங்கியது வினாக்களை எழுப்பிவிட்டதாம். ஆயிஷா அவர்கள் கூற்றிலிருந்து எழும் வினாவுக்கு விடையாக அமைந்துள்ளதை அவர் வினா என்கிறார்.
ஆயிஷா அவர்களின் கூற்றைத் தேடிப்பிடித்து அதில் ஒட்டுவேலைகள் செய்த ராம்ஸ்வர்ப் அதே ஆயிஷாவின் மற்றொரு கூற்றையும் கவனித்திருந்தால் முறையாக இருக்கும்.
33:37 வசனத்தைப் பற்றி ஆயிஷா குறிப்பிடும் போது முஹம்மது இறை வேதத்தில் எதையும் மறைப்பவராக இருந்திருந்தால் தன்னைக் கண்டிக்கும் இந்த வசனத்தைத் தான் மறைத்திருக்க முடியும் என்று கூறுவதன் மூலம் அவர்களின் வசதிக்காகவே குர்ஆன் இறங்கிக் கொண்டிருக்கவில்லை என்று மறுக்கிறார்கள். நபிகளின் விருப்பத்துக்கு மாறாக ஒன்றல்ல இரண்டல்ல! நூற்றுக்கணக்காண வசனங்கள் இறங்கியுள்ளன.
தன் பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டுமென நபிகள் பெரிதும் விரும்பினார்கள்.
நீ விரும்புபவரை எல்லாம் உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது (28:56) என்ற வசனம் இறங்கியது.
உஹதுப் போரில் அவர்களின் பல் உடைந்த போது எதிரிகள் எப்படி உருப்படுவார்கள்? என்று கோபப்பட்டார்கள். உமக்கு அதிகாரத்தில் யாதொரு பங்குமில்லை (3:128) என்ற வசனம் அப்போது இறங்கியது.
குருடர் ஒருவரது விஷயத்தில் நபியின் அணுகுமுறையைக் கண்டித்து (80:1) வசனம் இறங்கியது.
செல்வந்தர்களுக்கும், உயர் குலத்தவர்களுக்கும் தனி மதிப்புத் தரலாம் என்று நபிகள் விரும்பிய போது (6:52) வசனம் இறங்கியது.
கைதிகளை என்ன செய்யலாம் என்ற விஷயத்திலும், பெண்களின் ஆடைகள் பற்றியும், நயவஞ்சகர்களுக்கு தொழுகை நடத்துவது பற்றியும் இவரது விருப்பம் வேறாக இருந்தது. இவரது தோழரான உமருடைய விருப்பத்துக்கு ஏற்ப வசனங்கள் இறங்கின.
நோன்பு நோற்பது, தன் சுகத்தைத் தியாகம் செய்வது போன்ற காரியங்களை இயல்பிலேயே எவரும் விரும்ப மாட்டார்கள். அவற்றைச் செய்யுமாறு அவருக்கும் சேர்த்தே கட்டளை வருகிறது. இவையெல்லாம் நபியின் விருப்பத்திற்குகேற்றவாறு தான் எல்லா வசனங்களும் இறங்கின என்ற ராம்ஸ்வர்புடைய சந்தேகத்தைத் தரைமட்டமாக்குகின்றன.