கெட்டவர் தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?

கேள்வி-பதில்: நவீன பிரச்சனைகள்

கெட்டவர் தானம் செய்த கண் சொர்க்கம் செல்லுமா?

இவ்வுலகில் உறுப்புகளை தானம் செய்வதற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.

இவ்வுலகில் நல்லவராக வாழ்நத ஒருவர் விபத்தில் கைகளை இழந்து விட்டால் அல்லது கண்களை இழந்து விட்டால் அவர் மறுமையிலும் கைகளை இழந்தவராக அல்லது கண்களை இழந்தவராக எழுப்பப்படுவார் என்பது கிடையாது.

மறுமையில் கெட்டவர்கள் குருடாக எழுப்பப்படுவார்கள் என திருக்குர்ஆன் கூறுகிறது.

وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنْكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى (124) قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا (125) قَالَ كَذَلِكَ أَتَتْكَ آَيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى (126)

எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். “என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே? ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?” என்று அவன் கேட்பான். “‘அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்” என்று (இறைவன்) கூறுவான்.

(அல்(அல்குர்ஆன்:), 125, 126)

கண்பார்வையுடன் இவ்வுலகில் வாழ்ந்தவன் இறைவனின் போதனையை மறுத்தால் குருடனாக எழுப்பப்படுவான் என இவ்வசனம் கூறுகிறது. குருடனாக எழுப்பப்படுவதற்குக் காரணம் அவன் நல்லவனாக வாழவில்லை என்பது தானே தவிர இவ்வுலகில் கண்ணை இழந்திருந்தான் என்பது அல்ல.

கண் இருந்தவனை குருடனாக எழுப்பிட அவனது நடத்தைதான் காரணம். அது போல் கண்ணற்றவன் இவ்வுலகில் நல்லவனாக வாழ்ந்தால் அவன் குருடனாக எழுப்பப்பட மாட்டான். அவனும் மற்ற நல்ல முஸ்லிம்களைப் போன்று இறைவனைக் காண்பான்.

மறுமையில் எழுப்பப்படும் தோற்றத்திற்கும் இவ்வுலகத் தோற்றத்திற்கும் எவ்விதத் தொடர்பு மில்லை என்பதைப் பல ஹதீஸ்கள் மற்றும் குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கிக் கொள்ளலாம். “

يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ آل عمران/106

அந்நாளில் சில முகங்கள் வெண்மையாகத் திகழும். வேறு சில முகங்கள் கறுத்திருக்கும்

(அல்(அல்குர்ஆன்:)

அமெரிக்கர்களின் முகம் வெண்மையாகவும் ஆப்பிரிக்கர்களின் முகம் கருப்பாகவும் இருக்கும் என்று இதற்கு அர்த்தமில்லை.

மாறாக நல்லடியாராக வாழ்ந்த ஆப்பிரிக்கர் வெண்மையான முகத்துடன் வருவார். கெட்டவராக வாழ்ந்த வெள்ளையர் கருப்பானவராக வருவார்.

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ البقرة : 275

வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள் (அல்குர்ஆன்:)

இவ்வுலகில் ஒருவன் உண்மையான பைத்தியமாக வாழ்ந்தாலும் அவனும் மறுமையில் பைத்தியமாகத் தான் எழுப்பப்படுவான் என்பது கிடையாது.

 

இவ்வுலகத் தோற்றத்திற்கும் மறுமையில் எழுப்பப்படுவதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

கண்தானம் செய்த ஒருவர் நல்லவராக வாழ்ந்தால் அவர் மறுமையில் கண்களுடன் தான் எழுப்பப்படுவார்.

நம்முடைய உடல் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாக மக்கிப் போன பிறகு உயிர்கொடுத்து எழுப்பும் இறைவனுக்கு இது இயலாத ஒன்றல்ல.

கண்தானம் செய்த ஒருவர் கெட்டவனாக வாழ்ந்தால் அவர் மறுமையில் குருடனாகத் தான் எழுப்பப்படுவார். அல்லது அவனுடைய கண்களோடு தான் நரகத்திற்குச் செல்வான்.