1) முன்னுரை
குர்பானியின் சட்டங்கள்
தொகுப்பு : இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர்கள், மேலப்பாளையம்)
முன்னுரை
நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.
குர்பானியின் பின்னணி
இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.
அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.
என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு” என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்” என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)
குர்பானியின் நோக்கம்
இந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!
அல்குர்ஆன் (22 : 37)
குர்பானியின் சிறப்பு
குர்பானியின் சிறப்புப் பற்றி வரும் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமானவை. என்றாலும் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி (969)
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (5546)
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி (955)