14) குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் சூனிய நம்பிக்கை
இஸ்லாத்தின் மிகப் பெரிய அற்புதம் திருக்குர்ஆன். ஒவ்வொரு நபிமார்களும் சில அற்புதங்களைச் செய்வார்கள். அந்த அற்புதங்களைப் பார்த்துவிட்டு அவர் இறைத்தூதர் என மக்கள் நம்புவார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி நபி என்பதால் அவர்களுக்குப் பின் இறைத்தூதர்கள் வர மாட்டார்கள். இந்த வாய்ப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவர்களின் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் எவ்வாறு நம்புவது? அவர்களுக்கும் ஒரு அற்புதம் வேண்டுமே என்ற கேள்விக்கு அந்த அற்புதம் திருக்குர்ஆன் தான் என்று இஸ்லாம் விடையளிக்கிறது.
“ஒவ்வொரு இறைத்தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் வந்தது என்பதை திருக்குர்ஆனே நிரூபிக்கின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது நிரூபணமானால் அதனைக் கொண்டு வந்தவர் அல்லாஹ்வின் தூதர் என்பதும் நிரூபணமாகிவிடும்.
14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மனிதன் சொல்ல முடியாத செய்திகளையெல்லாம் திருக்குர்ஆன் சொல்லி அது நிரூபணமாகிக் கொண்டு இருக்கின்றது.
திருக்குர்ஆன் ஒரு அற்புதம் தான் என்பதை ஏற்கனவே ஒரு ரமலானில் ”தனித்து விளங்கும் இஸ்லாம்” என்ற தலைப்பில் முழுமையாக நாம் விளக்கியுள்ளோம்.
திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்ட அற்புதம் என்று நாம் மெய்யாக நம்பினால் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாம் தூக்கி எறிந்துவிட வேண்டும்.
எனெனில் சந்தேகம் இல்லை என்பதுதான் திருக்குர்ஆனின் தனித்தன்மை என்று அல்லாஹ் அடையாளப்படுத்துகிர்றான்.
இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழிகாட்டி.
இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.
(இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
இந்தக் கருத்தில் இன்னும் பல வசனங்கள் உள்ளன.
திருக்குர்ஆனில் முஸ்லிமல்லாத பலருக்குச் சந்தேகம் உள்ளதை நாம் அறிகிறோம். எனவே இதில் ஒருவருக்கும் சந்தேகம் இல்லை என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை. இதில் சந்தேகம் கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதற்கு எதிராக எழுப்பப்படும் எந்தச் சந்தேகத்துக்கும் இஸ்லாத்தில் விடை உண்டு என்பதுதான் இதன் பொருள்.
மனிதர்களுக்கு நல்வழி காட்டுவதற்காக அல்லாஹ் இதை அருளியுள்ளதால் மனிதர்கள் நம்பும் வகையில் இது இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர்கள் வேதம் என்று ஏற்று நேர்வழிக்கு வருவார்கள். எனவே தான் இதில் சந்தேகம் இல்லை என்பதை முக்கியமான வாதமாக அல்லாஹ் வைக்கிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறுமாத காலம் மனநோயாளியாக ஆக்கப்பட்டு, தாம் செய்யாததைச் செய்ததாகச் சொல்லும் அளவுக்கு பாதிப்பு அடைந்திருந்தால் அந்த ஆறு மாத காலத்தில் அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்களில் சந்தேகத்தைக் கிளப்ப முடியும்.
அந்த மாத காலம் எது என்பது குறித்து சூனியக் கட்சியிடம் ஆதாரம் இல்லாததால் மதீனாவில் அருளப்பட்ட வசனங்கள் அனைத்தும் அந்த ஆறு மாதங்களில் அருளப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படும்.
திருக்குர்ஆனுக்கு எதிராக எழுப்பப்படும் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் உண்டு என்று அல்லாஹ் அறிவித்திருக்க இதற்குப் பதில் சொல்ல முடியாமல் சூனியக் கட்சியினர் விழிபிதுங்கி நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம்.
திருக்குர்ஆன் இறைவேதமாக இருக்க முடியாது என்று சந்தேகம் ஏற்படுவதை அல்லாஹ் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டான் என்பதால் தான் இந்தக் குர்ஆனைப் போல் கொண்டு வா என்று அறைகூவல் விடுகிறான்.
நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
“இதனை இவர் இட்டுக்கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக!
“இவர் இதை இட்டுக்கட்டிக் கூறுகிறார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இட்டுக்கட்டி, பத்து அத்தியாயங்களை இது போன்று கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களுக்கு இயன்றவர்களை (துணைக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறுவீராக!
“இக்குர்ஆன் போன்றதைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும், ஜின்களும் ஒன்று திரண்டாலும் இது போன்றதைக் கொண்டு வர முடியாது. அவர்களில் ஒருவர் மற்றவருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே” என்று கூறுவீராக!
“இவர் இதனை இட்டுக்கட்டிவிட்டார்” எனக் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.
(அல்குர்ஆன்: 52:33) ➚, 34
முஹம்மது சுயமாக இட்டுக்கட்டி விட்டு அல்லாஹ்வின் வேதம் எனக் கூறுகிறார் என்று எதிரிகள் விமர்சனம் செய்தபோது நீ என்ன விமர்சனம் வேண்டுமானாலும் செய்துகொள்! முஸ்லிம்கள் நம்பினால் போதும் என்று அல்லாஹ் நினைக்கவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கத்தக்க அறைகூவலை விட்டு இது இறைவேதமே என நிரூபிக்கிறான்.
அது போல் திருக்குர்ஆனுக்கு எதிராக மற்றொரு சந்தேகத்தையும் அன்றைய எதிரிகள் எழுப்பினார்கள். எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மதுக்கு இந்த விஷயங்கள் தெரிய வாய்ப்பு இல்லை; எனவே வெளியூரில் இருந்து ஒருவர் வந்து இவருக்குக் கற்றுக் கொடுத்துச் செல்கிறார். அதைத்தான் முஹம்மது வேதம் எனச் சொல்கிறார் என்று விமர்சனம் செய்து திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தினார்கள்.
காஃபிர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் எனக்கு என்ன என்று அல்லாஹ எடுத்துக் கொள்ளவில்லை. அந்தச் சந்தேகத்தை நீக்கும் வகையில் தக்க பதில் கூறுகிறான்.
இது முன்னோர்களின் கட்டுக்கதை. இதை இவர் எழுதச் செய்து கொண்டார். காலையிலும், மாலையிலும் அது இவருக்கு வாசித்துக் காட்டப்படுகிறது எனவும் கூறுகின்றனர்.
(அல்குர்ஆன்: 25:4) ➚,5
நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து ரூஹுல் குதுஸ் (ஜிப்ரீல்) உண்மையுடன் இறக்கினார் என்பதை (முஹம்மதே!) கூறுவீராக! “ஒரு மனிதர் தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்” என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழியாகும்.
(அல்குர்ஆன்: 16:102) ➚, 103
திருக்குர்ஆனின் உயர்ந்த அரபுமொழி நடையை எடுத்துக் காட்டி, வேறு மொழி பேசுபவன் எப்படி இதைக் கற்றுக் கொடுத்திருக்க முடியும் என்று கேட்டு அவர்களை அல்லாஹ் வாயடைக்கச் செய்தான்.
திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படுத்தும் விஷயங்களுக்கெல்லாம் ஏற்கத்தக்க மறுப்பை அளித்த இறைவன் தனது தூதரை மனநோயாளியாக்கி சொல்லாததைச் சொல்ல வைத்து அவனே திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்துவானா?
இதைச் சிந்தித்தால் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாக்க் கூறப்படுவது கட்டுக்கதை என்று தெரிந்துவிடும்.
திருக்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து தான் அருளப்பட்டது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படக் கூடாது என்பதற்கு அல்லாஹ் அளிக்கும் முக்கியத்துவத்தை அவர்களை எழுதப்படிக்கத் தெரியாதவராக ஆக்கி இருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
எழுதுதலும், படித்தலும் மனிதனுக்கு அவசியம் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
அல்லாஹ்விடமிருந்து முதன்முதலில் வந்த வசனங்களே இது பற்றித்தான் பேசுகின்றன.
அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான். அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
(அல்குர்ஆன்: 96:4) ➚,5
எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக
எழுத்தின் மூலம் தான் அறிவைப் பெருக்கவும், கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் இயலும் என்று சொல்லும் அல்லாஹ் நபியவர்களுக்கு மட்டும் அந்தப் பாக்கியத்தைக் கொடுக்கவில்லை.
(அல்குர்ஆன்: 7:157) ➚,158 வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை “உம்மீ’ என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
உம்மு என்றால் தாய் என்பது பொருள். உம்மீ என்றால் தாயைச் சார்ந்திருப்பவன் என்பது பொருள். கைக்குழந்தைகள் தாயையே சார்ந்திருப்பதால் கைக்குழந்தைகள் உம்மீ எனக் குறிப்பிடப்பட்டனர். பின்னர் எழுதவும், வாசிக்கவும் தெரியாதவர்கள் இந்த விஷயத்தில் கைக்குழந்தைகளின் நிலையில் இருப்பதால் உம்மீ எனப்பட்டனர். ஹுதைபியா உடன்படிக்கையின் போது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்துக்கும் மக்காவின் குரைஷி குலத்தவருக்கும் ஏற்பட்ட ஒப்ப்ந்தம் என்று எழுதிய போது எதிரிகள் அதை மறுத்தனர். அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் ஏற்காத போது அல்லாஹ்வின் தூதர் என்று எப்படி குறிப்பிடலாம் என்று மறுப்புத் தெரிவித்தனர். அந்தச் சம்பவத்தில் நபிகள் நாயகத்துக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லப்படுகிறது.
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்ததால் “அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்” என்பதை அழித்து விட்டு “அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத்” என்று எழுதுமாறு அலீ (ரலீ) அவர்களுக்குக் கட்டளையிட்டனர்; அலீ (ரலீ) அவர்கள் அழிக்க மறுத்து விட்டார்; “அப்படியானால் அந்தச் சொல் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுங்கள்” என்று அலீ (ரலீ) அவர்களிடம் கேட்டனர். அலீ (ரலீ) அவர்கள் அந்த இடத்தைக் காட்டினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் அழித்தனர்”
நபிகள் நாயகத்துக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது என்பதை இதிலிந்து அறிந்து கொள்ளலாம்.
6:112, 7:157, 7:158, 25:5, 29:48 ஆகிய வசனங்களும் நபிகள் நாயகத்துக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது எனக் கூறுகின்றன.
நபிகள் நாயகத்துக்கு எழுதத் தெரியும் என்பதை விட இந்தக் குர்ஆனை அவர் தன் மொழியறிவால் இட்டுக்கட்டி விட்டார் என்ற விமர்சனம் வந்து, அதனால் திருக்குர்ஆனில் சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்கு அல்லாஹ் முக்கியத்துவம் தருகிறான்.
இதை நாம் ஊகமாகச் சொல்லவில்லை. அல்லாஹ்வே தெளிவாகச் சொல்வதைக் காணுங்கள்!
இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை. (முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்தில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 29:47) ➚,48,49
படிப்பறிவு மனிதர்களுக்கு கூடுதல் தகுதியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாமல் இருப்பது தான் சிறப்பாகும்.
எனக்கு இறைவனிடமிருந்து தூதுச்செய்தி வருகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அந்தச் செய்தி மிகவும் உயர்ந்த இலக்கியத் தரத்தில் அமைந்திருந்தது. இதுபோல் யாராலும் இயற்ற முடியாது என்று அறைகூவல் விடும் அளவுக்கு அதன் தரம் இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படித்தவராக இருந்திருந்தால் தமது படிப்புத் திறமையினால் இதை இயற்றியுள்ளார் என்று மக்கள் நினைத்திருப்பார்கள். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறமைசாலி என்பது நிரூபணமாகுமே தவிர அல்லாஹ்வின் தூதர் என்பது நிரூபணமாகாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபுமொழிப் பண்டிதர் என்பதை விட அல்லாஹ்வின் தூதர் என்பதுதான் பல்லாயிரம் மடங்கு சிறந்த தகுதியாகும்.
அவர்களுக்கு எழுதவோ, படிக்கவோ தெரிந்திருந்தால் அவர்களை நேரடியாகக் கண்ட மக்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்க மாட்டார்கள். அவர்கள் கூறிய தூதுச் செய்தியை அல்லாஹ்வின் வேதம் என்றும் ஏற்றிருக்க மாட்டார்கள்.
“எழுதப் படிக்கத் தெரியாதவர் இவ்வளவு உயர்ந்த தரத்தில் செய்திகளைக் கூறுகிறாரே! நிச்சயமாக இவரது திறமையால் இது உருவாக்கப்பட்டிருக்கவே முடியாது. இவர் கூறுவது போல் இது இறைவனது செய்தியாகத்தான் இருக்க முடியும்” என்று அன்றைய மக்கள் நம்பியதற்கு நபிகள் நாயகத்தின் படிப்பறிவின்மையே முக்கியக் காரணமாக இருந்தது.
எழுத்தறிவு முஹம்மது நபிக்கு இருந்தால் குர்ஆன் இறைவேதம் என்ற நம்பிக்கையை அது பாதிக்கும் என்பதற்காகவே அல்லாஹ் இந்தப் பாக்கியத்தை அவர்களுக்குத் தரவில்லை.
அவர்களுக்கு ஆறுமாதம் மனநோய் ஏற்பட்ட்தாக நாம் நம்பினால் அதைவிட அதிக சந்தேகத்தை குர்ஆனில் ஏற்படுத்தும். எனவே நபிகள் நாயகத்துக்குச் சூனியம் வைக்கப்பட்டது என்று கூறப்படுவது முற்றிலும் பொய்யானது; கட்டுக்கதை என்று நாம் அறிந்து கொள்ளலாம்.
அதே போன்று திருக்குர்ஆன் பல இடங்களில்
குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை (4:82) என்றும்
சிந்திக்க மாட்டீர்களா? (4:82, 17:41, 21:10, 23:68, 25:73, 38:29, 47:24) என்றும்
தவறுகள் வராது (41:42)
இது பாதுகாக்கப்பட்ட வேதம் (15:9, 18:1, 39:28, 41:42, 75:17) என்றும்
சொல்லப்பட்டுள்ளது.
இவை அனைத்துமே குர்ஆனில் சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதை அடித்துச் சொல்லும் வசனங்களாகும்.
நபிகள் நாயகத்துக்கு ஆறுமாத காலம் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ”வீனர்கள் சந்தேகப்படுவார்கள்” என்பதற்கு ஏற்ப அந்த வீனர்கள் இந்த ஆறுமாத காலத்தில் அருளப்பட்ட வசனங்களைச் சந்தேகித்திருப்பார்கள்.
மனநோய் பாதிப்பினால் அல்லாஹ் சொல்லாததை அல்லாஹ் சொன்னதாக ஏன் முஹம்மது சொல்லி இருக்க மாட்டார் என்று கேட்க மாட்டார்களா?
மற்றவர்களின் உள்ளங்களில் மனனம் ஆவதை விட அதிகமாக மனதில் பதியவைத்துக் கொள்ளும் ஆற்றலை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கி இருந்தான்.
(முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
திருக்குர் ஆன் 75:16-19
குர்ஆனைப் பாதுகாப்பதற்காக எந்த மனிதருக்கும் வழங்காத கூடுதல் ஆற்றலை நபியவர்களுக்கு வழங்கி பலப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். ஆனால் அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் செய்தி அவர்களின் உள்ளத்தை பலவீனத்திலும் பலவீனமாக ஆக்கிக் காட்டுகிறது.
பலமான உள்ளத்தை அல்லாஹ் கொடுத்திருக்க, சூனியத்தை நம்பும் கூட்டம் நபி அவர்களுக்குப் பலவீனமான உள்ளம் இருப்பதாகச் சித்தரிக்கின்றது.
நபிகள் நாயகத்தை இறைத்தூதராக ஏற்க மறுத்தவர்கள் பைத்தியம் என்று சொன்னார்கள். அதைத் தான் இவர்கள் வேறு வார்த்தையில் சொகிறார்கள்.
யூதர்கள் எப்படியாவது இஸ்லாத்தை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்தத் தயாராக இருந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆறு மாத காலம் மனநோயாளியாக இருந்தார்கள் என்றால் அந்த மனநோய் யூதர்களின் மந்திர சக்தியால் ஏற்பட்டது என்றால் இந்த வாய்ப்பை அவர்கள் ஒருக்காலும் நழுவ விட்டிருக்க மாட்டார்கள்.
நாங்கள் உங்களது இறைத்தூதரை எப்படி ஆக்கிவிட்டோம் பார்த்தீர்களா? இன்னுமா அவரை இறைத்தூதர் என்று நம்புகிறீர்கள்? என விமர்சித்திருப்பார்கள்.
இப்படி ஒருவர் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விமர்சிக்கவில்லை.
இப்படி நாம் கேள்வியெழுப்பினால் சூனியக் கட்சியினர் இதற்கும் ஒரு பதிலைச் சொல்லி நபியவர்களை மனநோயாளியாக்க் காட்டியே தீர்வது என்பதில் குறியாக உள்ளனர்.
நபியவர்களுக்கு ஏற்பட்ட மனநோய் மனைவிமார்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருந்தது. மக்களில் யாருக்கும் தெரியாததால் இது போன்ற விமர்சனம் வரவில்லை என்கிறார்கள்.
சூனியம் வைத்து மனநோயாளியாக ஆக்கினானே அவனுக்கு கூடவா தெரியாமல் போய் விட்டது?
அவன் தனது கூட்டத்தாரிடம் சொல்லி பெருமையடித்து இருக்க மாட்டானா?
என்பதைக் கூட அறியாத ஞான சூன்யங்களாக மாறி இக்கேள்வியைக் கேட்கிறார்கள்.
பொதுவாக தலைவர்களுக்கு அதிகமான பாதுகாப்பு கொடுக்கப்படுவது தான் உலகத்தில் வழக்கம். மக்கள் அவர்களை எளிதில் அணுக முடியாது. இந்த நிலையில் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்தால் அதை மக்களுக்குத் தெரியாமல் மறைக்க முடியும்.
ஆனால் நபியவர்கள் இதுபோல் மக்களால் அணுக முடியாத நிலையில் இருந்தார்களா? நிச்சயமாக இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களோடு மக்களாக இருந்தார்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுகைக்கும் வருவார்கள். யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்திக்கலாம். முனாபிக்குகள் கூட பள்ளிவாசலுக்கு வந்து தொழக் கூடியவர்களாக இருந்தனர்.
இப்படியிருக்கும் போது இந்த ஆறுமாத பாதிப்பு மக்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்திருக்கும். இதனால் மக்களுக்குத் தெரிந்திருக்கும்.
இதற்கு முன்பு ஆதாரமில்லாமல் தான் முஹம்மது நபி பைத்தியம் என்று சொன்னோம். இப்போது அவர்களின் மனைவியே சொல்லி விட்டார்கள் என்று ஆட்டம் போட்டிருக்க மாட்டார்களா? மக்களை இஸ்லாத்திற்கு வராமல் தடுக்க முயற்சிக்காமல் இருப்பார்களா? இஸ்லாத்தில் உள்ள மக்களும் மீண்டும் பழைய நிலைக்கே சென்றிருப்பார்களே?
இது போன்று எந்தச் செய்தியும் எந்த நூலிலும் பதிவு செய்யப்படவில்லை.
குர்ஆனை நாமே இறக்கினோம். நாமே பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். (பார்க்க 15:9)
குர்ஆனைப் பாதுகாப்பது என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளத்தைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் உள்ளம் சிதைந்து விட்டது என்று சொன்னால் செய்திகளும் சிதைந்து விடும். அப்போது குர்ஆனைப் பாதுகாப்பதாக இறைவன் சொன்னதில் இது சந்தேகத்தை ஏற்படுத்தும்.
மாபெரும் அற்புதமாகத் திகழும் திருக்குர்ஆன் மீது எத்தகைய சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் எனக்குக் கவலை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகவும், அதனால் அவர்கள் மன நோயாளியாக ஆனதாகவும் ஒரு முஸ்லிம் நம்ப முடியுமா?
முஹம்மது நபிக்கு யூதர்கள் சூனியம் செய்து மனநோயாளியாக ஆக்கி விட்டார்கள் என்று அறியும் முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்பார்களா? நபிகள் நாயகத்தை விட அற்புத சக்தி பெற்ற யூதர்களிடம் செல்வார்களா?
முஸ்லிம்கள் அல்லாஹ்வை நம்பவேண்டும். சூனியக் கதை அதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
வேதத்தை நம்ப வேண்டும். அதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்ப வேண்டும். அதிலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சூனியக்காரனுக்கு ஆற்றல் உள்ளதாக நம்பும் போது இஸ்லாத்தின் அடிப்படையே ஆட்டம் காண்கிறது.
அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கையில் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகம் வரக்கூடாது. இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு செய்தியையும் நாங்கள் நம்ப மாட்டோம். அவற்றை நாங்கள் முழுவதுமாக நிராகரிப்போம் என்ற அளவில் இருந்தால் தான் அது ஈமான்.
ஒரு தந்தை தனது சொத்தை ஒரு மகனுக்கு எழுதி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரது மற்ற மகன்கள் தனது தந்தைக்குப் பைத்தியம் பிடித்து இருந்த போது தான் எழுதிக் கொடுத்தார் என்று ஒரு ஆதாரத்தை உருவாக்கி நீதிமன்றம் நம்பும் வகையில் எடுத்து வைத்தால் அந்த மகனுக்கு சொத்தை எழுதி வைத்தது செல்லாது என்று தீர்ப்பு அளிக்கப்படும்.
இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும் இதுதான் சட்டம். முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் சட்டம்.
பைத்தியம் என்ற நிலையை ஒருவர் அடைந்தால் அவரது எல்லா கொடுக்கல் வாங்கலும் செல்லத் தகாததாக ஆகிவிடுகிறது.
சொத்து விஷயங்களில் சரியாக இதைப் புரிந்து வைத்திருக்கும் நாம் மார்க்க விஷயத்தில் மட்டும் மூளையை அடகு வைத்து விட்டு ஏறுக்கு மாறாகச் சிந்திப்பது சரிதானா?
குர்ஆன் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நான் நம்புவேன். பாதுகாக்கப்படவில்லை என்பதையும் நம்புவேன் என்று ஒருவன் கூறமுடியுமா?
அல்லாஹ்வைப் போல் எவனும் எந்த விஷயத்திலும் செயல் பட முடியாது என்றும் நம்புவேன். அவ்வாறு சூனியக்க்காரன் மட்டும் செயல்படுவான் என்றும் நம்புவேன் என்று அறிவுள்ள யாராவது சொல்வார்களா?
திருக்குர்ஆன் மீது அதிகளவு நம்பிக்கை வைத்திருப்பவனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அதிக அளவு மரியாதை வைத்திருப்பவனும் அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்று எப்படி நம்புவான்?
இப்படி நாம் கேட்கும் போது சூனியக்கட்சியினர் எதிர்க்கேள்வி ஒன்றை எழுப்புவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி இருந்திருக்கிறது. மறதியின் காரணமாக குர்ஆன் வசனங்களை மறந்திருக்க மாட்டார்களா என்று முஸ்லிமல்லாதவர்கள் கேள்வி கேட்க மாட்டார்களா? இதன் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மறதி ஏற்படவில்லை என்று சொல்வீர்களா? என்பது தான் அந்த எதிர்க்கேள்வி.
ஒருவருக்குப் பைத்தியம் பிடிப்பதும், சில விஷயங்களை ஒருவர் மறந்து விடுவதும் இவர்களுக்குச் சமமாகத் தெரிகின்றது.
இதற்கு அல்லாஹ் தெளிவான விடையை அளித்து விட்டான்.
2:106 வசனத்தில்
எந்த வசனத்தையாவது நாம் மாற்றினால் அல்லது மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததை அருளுவேன் என்று அல்லாஹ் கூறுகிறான்.
நபியவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படி சிலதை மறந்து விட்டால் அவர்கள் மறக்காமல் எதை மக்கள் மத்தியில் வைத்தார்களோ அதுதான் குர்ஆன் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகிறது.
அவர்கள் மக்களிடம் சொல்லாதது குர்ஆன் அல்ல என்று கூறுவதில் எந்தக் குழப்பமும் இல்லை.
மேலும் குர்ஆனைப் பொருத்தவரை வஹி எப்போது வருகின்றதோ அப்போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுதி வைத்து விடுவார்கள். உடனுக்குடன் எழுதி வைக்கப்பட்டதால் இதில் சந்தேகத்துக்கு இடமில்லை.
மறதி என்பது உள்ளதில் குறைவு ஏற்படுத்துவது. மனநோய் என்பது இல்லாததை இருப்பதாகக் கூறுவது.
இத்தகைய மனநோய் தான் நபியவர்களுக்கு ஏற்பட்டது என்று சூனியக் கட்சியினர் கூறுகிறார்கள். வஹீ வராமல் இருந்து வஹீ என்று சொல்லி இருப்பார்கள் என்பது மறதியைப் போன்றதா?
மறதி ஏற்பட்டால் அல்லாஹ்வின் வசனங்களில் எது நமக்கு சேர வேண்டும் என அல்லாஹ் நாடினானோ அது வந்து சேர்ந்து விட்டது என்பதைப் பாதிக்காது.
மனநோய் என்பது அல்லாஹ் சொல்லாமல் இருந்தும் அல்லாஹ் சொன்னதாக நபியவர்களுக்குத் தோன்றி ஒவ்வொரு வசனத்திலும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
மறதியினால் இப்போது குர்ஆனில் உள்ள எந்த வசனத்திலும் சந்தேகம் வராது.
இந்த வித்தியாசத்தை இவர்கள் உணர வேண்டும்.