குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குர்ஆன்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
மனித வாழ்வைச் சீரழிக்கும் நச்சுப் பொருள்களில் மது முக்கிய பங்கு வகிக்கிறது. மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. உடலுக்கும், வீட்டிற்கும், நாட்டிற்கும் பெரும் கேடாக விளங்கும் மது என்ற விஷம் மனிதனுக்கு உகந்ததல்ல என்ற உண்மையைப் படித்தவர்களும், படிக்காத பாமரர்களும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
தீமை என்று தெரிந்த பிறகும் அதைத் துணிந்து செய்யும் உயிரினம் மனிதனைத் தவிர வேறெதுவும் இருக்க முடியாது. மது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என்று மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்து கொண்டு மக்களிடம் மதுவை விற்பனை செய்து வருகிறது. பட்டப் பகலில் எந்த விதமான கூச்சமும் இல்லாமல் சர்பத் குடிப்பது போல் மதுப் பிரியர்கள் இந்த விஷத்தைக் குடிக்கிறார்கள்.
மதுவை ஒழிப்பதற்காக காந்தி எவ்வளவோ பாடுபட்டார். ஆங்கிலேயர் ஆட்சியில் கள்ளுக்கடை மறியல் என்ற போராட்டத்தை அறிவித்து போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இந்தப் போராட்டம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும் இடம் பெற்றுள்ளது. எத்தனையோ சமூக ஆர்வலர்களும், மக்கள் நல இயக்கங்களும் இதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்றாலும் மதுவை மக்கள் மனதிலிருந்து தூக்கி எறிவதற்கு இவர்களால் முடிவதில்லை.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் திருந்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் மதுவை விட்டுவிட முடிவதில்லை. எனவே தான் போதைக்கு அடிமையானவர்கள் இந்தக் குடிப் பழக்கத்தை மறக்க மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். சில மருத்துவர்கள் பிரத்யேகமாக இந்தப் பிரச்சனைக்கு மாத்திரம் மருத்துவம் செய்ய முன் வருகிறார்கள். எவ்வளவு மருத்துவமனை பெருகினாலும் மது ஒழிந்தபாடில்லை. நாளுக்கு நாள் மதுக் கடைகளும் மதுப் பிரியர்களும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறார்கள்.
ஆனால் குடிப்பதையே வாழ்க்கையாகக் கொண்டு, எழுத்தறிவில்லாமல் காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு சமுதாயம் தன் கையாலே மதுப் பானைகளை உடைத்தெறியும் அளவிற்குப் பெரும் மறுமலர்ச்சி அரபு தேசத்தில் உருவானது.
இந்தக் கருத்தை நாம் மக்களிடம் கூறினாலும் இந்த மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அந்தச் சீர்திருத்தவாதி யார்? அவர் என்ன மருத்துவம் செய்தார்? அவர் சாதாரண ஆளாக இருக்க முடியாது? என்றெல்லாம் வியந்து கேட்பார்கள்.
அரபியர்களிடத்தில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சிக்குக் குர்ஆன் அவர்களுக்கு அளித்த அற்புத பயிற்சியே காரணம். இந்தப் பயிற்சி தான் அவர்களுக்கு மதுவின் மீது இருந்த மோக நோய் செல்வதற்கு சிறந்த மருந்தாக இருந்தது.
எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட காலகட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் மறைமுகமாக முன்வைத்தது.
பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
இந்த வசனம், மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகி இரண்டையும் பற்றிப் பேசுகிறான். இரண்டு பொருட்களைப் பற்றிப் பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்ற கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது, மது சிறந்ததல்ல என்ற கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.
இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.
மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு, போதையில்லாமல் வர வேண்டுமென்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவே தான் நுட்பமான நுண்ணறிவு படைத்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.
நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!
இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.
அலீ (ரலி) மற்றும் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரி குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவைக் குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) “குல் யா அய்யுஹல் காஃபிரூன்‘ என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதி விட்டார். அப்போது தான் நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (4:43) என்ற வசனம் இறங்கியது.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: அபூதாவூத் (3186)
இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.
நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும் என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மன நிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான். எடுத்த எடுப்பிலே மதுவைக் குடிக்கக் கூடாது என்று கூறியிருந்தால் இச்சட்டத்திற்கு யாரும் கட்டுப்பட்டிருக்க மாட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது:
எடுத்த எடுப்பிலேயே நீங்கள் மது அருந்தாதீர்கள் என்று வசனம் அருளப்பட்டிருந்தால் மக்கள் “நாங்கள் ஒரு போதும் மதுவைக் கைவிட மாட்டோம்‘ என்று கூறியிருப்பார்கள். (ஆகவே தான் அல்லாஹ் படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான்.)
நூல்: புகாரி (4993)
இஸ்லாம் என்பது உண்மையான ஆன்மீகம். மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்திலும் கலந்து வழிகாட்டும் மார்க்கம். மறுமை வாழ்க்கையை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு மறுமைக்காகத் தான் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தது. எனவே இஸ்லாத்தை நேசித்து ஏற்றுக் கொண்ட நபித்தோழர்கள் மதுவின் சுகத்துக்கு அடிபணியாமல் மதுவை விடப் பன்மடங்கு நேசித்த குர்ஆனின் கட்டளைக்கு உடனே பணிந்தார்கள்.
மக்களிடத்தில் இது போன்ற பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமானால் வெறும் தந்திரங்கள் இருந்தால் மாத்திரம் போதாது. உண்மையான ஆன்மீகக் கொள்கை அவசியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
மக்களுடைய நன்மை கருதி ஆட்சியாளர்கள் சில சட்டங்களை இயற்றுவார்கள். ஆனால் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த விடாமல் மக்களைச் தடுத்துக் கொண்டிருக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
உதாரணமாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் விபச்சாரத்தைத் தூண்டும் விதத்தில் பெண்கள் நடந்து கொண்டால் அதைச் சட்டம் தடுக்காது. விபச்சாரத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு சட்டம் முற்றுப்புள்ளி வைப்பதில்லை. வைப்பாட்டிகளை வைத்துக் கொள்ளும் ஆண்களை இச்சட்டம் கைது செய்வதில்லை. விபச்சாரம் செய்தால் ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகிறது.
கற்பழிக்கக் கூடாது என்று சட்டம் இயற்றிவிட்டு கற்பழிக்கத் தூண்டும் ஆபாசப் படங்களை அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. இப்படி தவறுக்கு அழைக்கும் காரண காரியங்களைக் களையாமல் சட்டம் இயற்றினால் அந்தச் சட்டத்தினால் என்ன பயன்?
எனவே தான் இஸ்லாம் மது குடிக்கக் கூடாது என்ற ஒரு தடையை மட்டும் விதிக்காமல் மதுவைக் குடிக்கத் தூண்டும் எல்லா காரியங்களையும் தடை செய்கிறது. மதுவைக் குடிப்பது எப்படி தடையோ அது போல் விற்பதும் பிறருக்கு அன்பளிப்பாகத் தருவதும் அதை வைத்து மருத்துவம் செய்வதும் மதுவை சமையல் காடியாக மாற்றுவதும் கூடாது என்று சொல்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு தோல் பை (நிரம்ப) மதுவை அன்பளிப்பாக வழங்கினார் ஒருவர். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்துவிட்டது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்று கூறிவிட்டு (தம் அருகிலிருந்த) ஒரு மனிதரிடம் இரகசியமாக ஏதோ சொன்னார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் “இரகசியமாக என்ன சொன்னீர்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், “அதை விற்று விடச் சொன்னேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மதுவை அருந்துவதற்குத் தடை விதித்த (இறை)வனே அதை விற்பதற்கும் தடை விதித்துள்ளான்” என்றார்கள். உடனே அம்மனிதர் தோல் பையைத் திறந்து விட அதிலுள்ளது (வழிந்தோடிப்) போனது.
அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3220)
நபி (ஸல்) அவர்களிடம் மதுவை (சமையல்) காடியாக மாற்றுவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்களிடம் தாரிக் பின் சுவைத் (ரலி) அவர்கள் மது (தயாரிப்பதைப்) பற்றிக் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அ(வ்வாறு மது தயாரிப்ப)தைத் தடை செய்தார்கள். அப்போது தாரிக் (ரலி) அவர்கள் மருந்துக்காகவே அதைத் தயாரிக்கிறேன் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அது மருந்தல்ல நோய்” என்றார்கள்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர்(ரலி)
நூல்: முஸ்லிம் (4015)
மதுவைப் பற்றி மக்களுக்கு ஞாபகம் கூட வந்து விடக் கூடாது என்று கருதிய இஸ்லாம் மதுபானங்கள் தயாரிப்பதற்கு அரபுகள் பயன்படுத்தி வந்த பாத்திரங்களையும் பயன்படுத்தக் கூடாது என்று ஆரம்பத்தில் தடை செய்திருந்தது. ஏனென்றால் மதுவை மறப்பதற்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மது பாட்டில்கள் அங்கு இருந்தால் அந்தப் பயிற்சி பலனற்றுப் போய்விடும். மக்கள் மதுவை மறந்து, அதை வாங்கிக் கொடுத்தாலும் குடிக்க மாட்டார்கள் என்ற நிலையை அடையும் போது அந்தப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: (சில குறிப்பிட்ட) பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்திருந்தேன். (இப்போது கூறுகிறேன்) பாத்திரங்கள், எந்த ஒன்றையும் அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதுமில்லை. எந்த ஒன்றையும் தடை செய்யப்பட்டதாக ஆக்குவதுமில்லை. (பாத்திரத்தில் உள்ள பானமே முக்கியம். எனவே) போதை தரும் எல்லாமே தடை செய்யப்பட்டதாகும்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: முஸ்லிம் (4067)
மதுவுடன் சம்பந்தப்பட்ட எல்லோரும் குற்றவாளிகள் என்று இஸ்லாம் பிரகடனம் செய்து ஒரு மனிதன் மதுவுடன் எந்த வகையிலும் சம்பந்தப்படக் கூடாது என்று வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மது பானத்தையும் அதை பருகுபவரையும் பிறருக்குப் பருகக் கொடுப்பவரையும் அதை விற்பவரையும் அதை வாங்குபவரையும் அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும் (தானே) தயார் செய்து கொள்பவரையும் அதை சுமந்து செல்பவரையும் யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: இப்னு மாஜா (3371)
மதுவை ஒழிப்பதில் இத்தனை நுணுக்கங்களையும் இஸ்லாம் கவனத்தில் கொண்டு சட்டம் இயற்றியதால் தான் மதீனத்து மக்கள் தெருக்களில் மதுபானங்களைக் கொண்டு வந்து கொட்டக்கூடிய உன்னத நிலை உருவானது
(முழு மதுவிலக்கு வருவதற்கு முன்பு ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் (மக்களுக்கு) உரையாற்றினார்கள். அப்போது, “மக்களே! அல்லாஹ் மதுவிலக்கு குறித்து மறைமுகமாகக் குறிப்பிடுகிறான். விரைவில் அது தொடர்பாக ஓர் ஆணையை அல்லாஹ் அருளக்கூடும். எனவே தம்மிடம் மதுவில் ஏதேனும் வைத்திருப்பவர் அதை (இப்போதே) விற்று அதன் மூலம் பயனடைந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
சிறிது காலம் கூட கழிந்திருக்கவில்லை. அதற்குள் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் மதுவைத் தடை செய்து விட்டான். எனவே தம்மிடம் மதுவில் வைத்திருப்பவரை இந்த வசனம் அடைந்தால் மதுவை அவர் அருந்தவும் வேண்டாம். விற்கவும் வேண்டாம்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் தங்களிடமிருந்த மதுவுடன் மதீனாவின் சாலையை நோக்கிச் சென்று அவற்றைக் கொட்டிவிட்டனர்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: முஸ்லிம் (3219)
எவ்வளவு அற்புதமான, அறிவுப்பூர்வமான சட்டங்களை இயற்றினாலும் அச்சட்டத்தை மீறுகின்ற வகையில் சிலரை ஷைத்தான் தூண்டிவிடாமல் இருக்க மாட்டான். அல்லாஹ்வின் அச்சம் இல்லாதவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய சட்டத்தை மீறுவார்கள். இந்நிலையில் சட்டத்தை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாம் தீட்டிய திட்டங்கள், முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடும்.
குற்றம் புரிபவனைப் பார்த்து மற்றவன் தவறு செய்ய ஆரம்பிப்பான். எனவே சட்டத்தை மீறுபவனுக்கு உண்மையான தண்டனையை வழங்கினால் அல்லாஹ்விற்குப் பயப்படாதவன், அரசாங்கத்திற்குப் பயந்தாவது சட்டத்தை மீறாமல் இருப்பான். எனவே தான் இஸ்லாம் மது குடிப்பவர்களுக்குத் தண்டனைகளை விதித்து, இக்குற்றத்தைச் செய்ய விடாமல் அவர்களைத் தடுக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுக் குடிப்பவர்களை சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். அவர்கள் மீண்டும் குடித்தால் அப்போதும் சாட்டையால் அடியுங்கள். இதன் பிறகும் குடித்தால் அவர்களைக் கொன்று விடுங்கள்.
அறிவிப்பவர்: முஆவியா (ரலி)
நூல்: அபூதாவூத் (3886)
நுஐமான் என்பவர் மது குடித்து விட்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீடுகளில் இருந்தவர்களுக்கு (அவரை அடிக்குமாறு) கட்டளையிட்டார்கள். மக்கள் அவரை கைகளாலும் பேரீச்ச மர மட்டையாலும் செருப்புகளாலும் அடித்தார்கள். அவரை அடித்தவர்களில் நானும் ஒருவன்.
அறிவிப்பவர்: உக்பா பின் அல்ஹாரிஸ்(ரலி)
நூல்: அஹ்மத் (18610)
மது என்ற கொடிய தீமையைப் பரவ விடாமல் இஸ்லாம் ஒழித்துக் கட்டிய விதத்தை இன்றைய உலகம் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் இந்த உலகம் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும், ஆரோக்கியத்தையும் நிரம்பப் பெற்ற உன்னத உலகமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!
வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.