காலத்தால் சிறந்த கல்வி உதவி

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

காலத்தால் சிறந்த கல்வி உதவி

ஏகத்துவத்தை, கனி தரும் மரத்திற்கு அல்லாஹ் உவமையாகக் காட்டுகின்றான். இது மனித உள்ளம் என்ற மண்ணில் வேரூன்ற ஆரம்பித்து விட்டால் அது சுவையான கனிகளை, அழகிய அரும் பண்புகளைக் கொடுக்க ஆரம்பித்து விடுகின்றது. அந்தப் பண்புகளில் ஒன்று ஏழைக்கு உதவி வழங்குவதாகும்.

இந்த ஏகத்துவம், ஓர் இறை நம்பிக்கையாளரிடம் குடிகொண்டு விட்டால் அவர் ஏழைக்கு உதவி செய்யும் இனிய பண்புக்குச் சொந்தக்காரராக ஆகி விடுகின்றார். அதுவும் கைமாறு எதிர்பார்க்காமல், நன்றி வார்த்தைக்குக் கூடக் காத்திருக்காமல் அள்ளி வழங்குகின்றார். இந்த தர்மத்தின் காரணமாக அவரிடத்தில் உள்ள எதிர்பார்ப்பு ஒன்றே ஒன்று தான். அது தான் இறை திருப்தியாகும்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

(அல்குர்ஆன்: 76:8-9)

அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர். மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.

(அல்குர்ஆன்: 92:18-20)

ஏழைகளுக்கு வழங்குவதில் இறையன்பு கிடைக்கின்றது என்று இறைவன் கூறியதும் மக்கள் தங்களுக்கும், தங்கள் வாரிசுகளுக்கும் எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் செலவு செய்து விடக் கூடாது என்பதற்காக தர்மத்திற்கு மார்க்கம் ஒரு வரம்பைக் காட்டுகின்றது.

“விடைபெறும்‘ ஹஜ்ஜின் போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை நலம் விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதரே! நான் மரணத் தறுவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; எனது ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?” எனக் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்” என்றார்கள். பின்னர் நான் “பாதியைக் கொடுக்கட்டுமா?” எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் “வேண்டாம்: மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்து விடும். அதுவும் அதிகம் தான்; ஏனெனில் உமது வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட தன்னிறைவுடையர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது.

இறைப் பொருத்தத்தையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகின்ற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நன்மையுண்டு” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

(புகாரி: 1295)

மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பகுதியைத் தான் தர்மம் செய்யும்படி மார்க்கம் கட்டளையிடுகின்றது.

மூன்றில் ஒரு பகுதியை வழங்கச் சொல்லி விட்டு மீதியைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. அதை பெற்றோர்கள், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று குடும்பத்தினருக்கு வழங்கச் சொல்கின்றது. அதற்கு அதிகம் நன்மை என்றும் கூறி ஆர்வத்தை ஊட்டுகின்றது. உறவினர்களுக்கு வழங்குவதில் இரு மடங்கு நன்மை என்று விளக்குகின்றது.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலில் இருந்த போது நபி (ஸல்) அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன்.

எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்‘ எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்.

அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம்.

உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்? எனக் கேட்டதற்கு அவர் “ஸைனப்‘ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி), “அப்துல்லாஹ்வின் மனைவி‘ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள்.

(புகாரி: 1466)

உறவினருக்கு வழங்குவதால் வாழ்நாளில், பொருளாதாரத்தில் வளம் பெருகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(புகாரி: 2067)

இஸ்லாம் கூறும் இந்தப் போதனையை உலக மக்கள் கடைப்பிடித்தால் உண்மையில் யாசகர்கள் பெருக மாட்டார்கள். அவரவர் தங்கள் சுற்றத்தாருக்கும் சொந்தக்காரர்களுக்கும் வழங்கினால் வீதிகளில் வெள்ளமாய் பெருக்கெடுத்து வருகின்ற பிச்சைக்காரர்களை நாம் காண நேரிடாது. மக்கள் உறவைப் பேணாததால் தான் இந்த அவல நிலை!

ஏழைகளுக்கு உணவளித்தல், உறவினர்களை ஆதரித்தல் என்றால் தங்கள் சொந்த பந்தங்களைத் திருமண விருந்தில் அழைத்து விருந்தளித்து விட்டால் போதும் என்று தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள். திருமண விருந்தில் தங்களின் பண பலத்தைக் காட்டியும், வளத்தைக் கொட்டியும் மகிழ்கின்றார்கள். உண்மையில் இஸ்லாம் இது போன்ற காரியங்களை வரவேற்கவில்லை.

ஒரு சிலர், ரமளானுக்கு ரமளான் சில ஆயிரங்களைச் சில்லரையாக மாற்றி வைத்துக் கொண்டு விளம்புகின்றனர். ஒரு சிலர், வேட்டி, சட்டை போன்ற துணிமணிகளை எடுத்து சிலருக்குக் கொடுத்து விட்டு இத்துடன் தங்களுடைய கடமை முடிந்து விடுகின்றது என்று நினைக்கின்றனர்.

இவையெல்லாம் ஒரு தற்காலிக உதவி தான். இதனால் யாருடைய வறுமையும் அகன்று விடாது. இது நிரந்தர உதவியாக ஆகிவிடாது.

உதவி என்பது நிரந்தரமாக அமைய வேண்டும். ஒருவரது வியாபாரத்திற்காக ஏதேனும் உதவி செய்து அவரது பொருளாதார நிலையை மேம்படுத்தலாம். தனது உறவினர்களின் குடும்பத்திலுள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.

இப்போது கல்லூரிகள் திறந்து விட்டன. மாணவர்கள் கலை, பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கல்லூரிகளில் சேர்வதற்காக, அதற்கான கட்டணத்திற்காக கையறு நிலையில் இருப்பார்கள். இவர்களது நிலையைப் பற்றி மற்றவர்களை விட நெருங்கிய உறவினர்களுக்குத் தான் நன்றாகத் தெரியும். அப்படித் தெரிந்து வைத்திருப்பது அவர்களுக்குக் கடமையுமாகும்.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியன. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

(அல்குர்ஆன்: 2:272)

உறவினர்களை மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைவரையும் இது போன்று அடையாளம் கண்டு உதவி செய்யச் சொல்கிறான். இவ்வாறு அடையாளம் கண்டு கொள்ளாதவர்களை, அறியாதவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகின்றான். சமுதாயத்திலுள்ள பிறருக்கே இந்த நிலை என்றால் உறவினர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

நெருங்கிய உறவினர்களை அடையாளம் கண்டு உதவ முன்வரவில்லை எனில் அவர் உறவைப் பேணாதவர் ஆவார். வசதியிருந்தும் உறவைக் கவனிக்காத குற்றத்திற்கு உள்ளானவர் ஆவார். அல்லாஹ் காக்க வேண்டும்.

கல்வியாண்டின் துவக்கமான இந்தக் கால கட்டத்தில் நம் குடும்பத்தில் ஒரு மாணவனுக்குப் பொறுப்பேற்று நாம் கல்வி உதவி செய்தோம் என்றால் எதிர்காலத்தில் அந்த மாணவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பதுடன் மட்டுமல்லாமல் இது போன்று பிறருக்கு உதவவும் முன்வருவான்.

இத்தகைய கல்வி உதவிகள் உண்மையில் காலத்தால் மிகச் சிறந்த உதவியாகும். உலகக் கல்வியைப் போன்றே மார்க்கக் கல்வி கற்பதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டால் அதனுடைய நன்மையின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமானது. இதை உணர்ந்து உறவுகளுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில் உதவிடுவோமாக!