கஹ்ஃப் விளக்கவுரை – 3

பயான் குறிப்புகள்: திருக்குர்ஆன் விளக்கவுரை
6 வது வசனம்
கவலையினால் தன்னையே மாய்த்தல்

இந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லையானால் அதற்காகக் கவலைப்பட்டு உம்மையே அழித்துக் கொள்வீர் போலும். (வசனம் 6)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்தவர்களைக் கூறி விட்டு அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் கவலை கொள்வதைப் பற்றி இவ்வசனத்தில் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைக் கேட்டு அதைப் பலரும் நிராகரிக்கலானார்கள். இந்த நிராகரிப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. மிகப் பெரிய அளவில் கவலைப் பட்டு தம்மையே அழித்துக் கொள்வார்களோ என்று கருதும் அளவுக்குக் கவலைப்பட்டார்கள். இதைத் தான் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான்.

இப்படியெல்லாம் கவலைப் படக் கூடாது என்று இங்கே கூறுகிறானா?. மனித குலத்தின் மீது நபிகள் நாயகத்துக்கு இருந்த அக்கறையைச் சுட்டிக் காட்டி பாராட்டுகிறானா?
இவ்வசனத்தின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இரண்டு விதமாகவும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் தான் அமைந்துள்ளது.
குடும்பத்திற்காக ஓடாய்த் தேய்கிறாயே என்று ஒருவரிடம் நாம் கூறும் போது இப்படியெல்லாம் தேய வேண்டியதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது குடும்பத்தின் மீது தான் இவனுக்கு எவ்வளவு அக்கறை என்பதை மறைமாகப் பாராட்டுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அது போன்ற நிலையில் தான் இவ்வாசக அமைப்பும் உள்ளது.

எனவே இவ்வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம் என்றாலும் வேறு இடங்களில் இது பற்றி ஏதும் கூறப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதைத் தீர்மானிக்க முடியும். அவ்வாறு ஆய்வு செய்யும் போது இது குறித்து தெளிவான கருத்தைக் கூறுகின்ற வசனத்தைக் காணமுடிகின்றது.
நேர்வழீ காட்டும் அதிகாரம் இறைவனுக்கே
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழி கேட்டில் விட்டுவிடுகிறான். நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான். எனவே உம்முடைய உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்கு கவலைப்பட வேண்டாம். நிச்சயமாக அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன்:)
அவர்கள் நேர்வழிக்கு வரவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது என்று 35 : 8 வசனத்தில் தெளிவாகக் கூறுவதால் கஹ்பு அத்தியாயத்தின் மேற்கண்ட வசனத்தையும் இந்தக் கருத்திலேயே புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு சமுதாயம் குறித்து கவலைப்படுவது வரவேற்கத்தக்கப் பண்பாடு தானே என்று சிலருக்குத் தோன்றலாம். இந்தப் பண்பாடு இருப்பதால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை தானே சேரும். இதை ஏன் இறைவன் கடிந்து கொள்ள வேண்டும்? என்ற சந்தேகம் எழலாம்.
மக்களுக்காகக் கவலைப்படுவது மனிதனின் உயர்ந்த பண்பு தான். இறைவன் ஏன் இதைத் தடுக்க வேண்டும்?
இக்கேள்விக்கான விடை இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் நாம் எடுத்துக் காட்டிய 35 : 8 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறுவதும் பெறாமல் போவதும் இறைவனின் அதிகாரத்தின் பாற்பட்டதாகும். எவரையும் நேர்வழியில் சேர்க்கும் அதிகாரம் எந்த மனிதருக்கும் கிடையாது. சிலர் நேர்வழி பெற மறுக்கிறார்கள் என்பதற்காக கவலைப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும். இறைவனின் முடிவைக் குறை கூறுவதாக அமையும். அல்லாஹ்வுடைய முடிவில் அதிருப்தி கொள்வதாகவும் இது அமைந்து விடும். இந்தக் காரணத்துக்காகத் தான் இப்படி கவலைப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான்.
இவ்வாறு நாம் சுயகற்பனையை கூறவில்லை. 35 : 8 வசனத்தில் இந்தக் கருத்து அடங்கியுள்ளதைப் பார்க்கலாம். “அவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான், நாடியவர்களை வழி கேட்டில் விட்டு விடுகிறான்” எனக் கூறிவிட்டுத் தான் “கவலைப்பட்டு உம்மையே மாய்த்துக் கொள்ள வேண்டாம்’ எனக் கூறுகிறான்.
உமக்குச் சம்பந்தமில்லாத ஒன்றுக்காக நீர் ஏன் வீணாகக் கவலைப்பட்டு அழிய வேண்டும் என்ற தோரணையில் தான் இந்த அறிவுரை கூறப்படுகிறது.

அபூ தாலிப் மரணம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் மரண வேளையை அடைந்த போது அவருக்கு இஸ்லாத்தின் பால் அழைப்பு கொடுத்தார்கள். அவர் ஏற்க மறுத்து காபிராகவே மரணித்தார். இதற்காக கவலைப்பட்ட போது, “நீர் விரும்பியர்களுக்கு நேர்வழி காட்ட முடியாது. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன்:) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இது புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஒருவர் நேர்வழி பெறவில்லை என்பதற்காக கவலைப்படுவதை அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
அவர்களுக்கு நேர்வழி காட்டுவது உமது பொறுப்பு அல்ல. எனினும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான் (அல்குர்ஆன்:) என்ற வசனமும் நீர் எவ்வளவு தான் ஆசைப் பட்டாலும் பெரும்பாலான மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடியவர்களாக இல்லை (அல்குர்ஆன்:) என்ற வசனமும் ஏன் கவலைப்படக் கூடாது என்பதை விளக்குகின்றன.
நபிகள் நாயகத்துக்கே இந்த அதிகாரம் இல்லை என்றால் நம்மவர்களின் நிலை என்ன என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தனை வருடமாக நான் சொல்லியும் கேட்க மறுக்கிறார்களே! என் தந்தையை என்னால் திருத்த முடியவில்லையே என்றெல்லாம் மாய்ந்து போகும் உரிமை நமக்கு இல்லை. எடுத்துச் சொல்லும் கடமை தவிர வேறு கடமை நமக்கில்லை என்பதை இவ்வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

கவலையின் விளக்கம்

இந்த இடத்தில் மற்றொரு விஷயத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
கவலைப்படும் படியான நிகழ்வுகள் ஏற்படும் போது நம்மையுமறியாமல் கவலை ஏற்படுவது இயல்பான ஒன்று தான். அது நமது அதிகாரத்தின் பாற்பட்டது அல்ல. இத்தைகைய கவலை இங்கே தடை செய்யப்படவில்லை. 35 : 8 வசனத்திலும் இந்த அத்தியாயத்திலும் கவலைப்பட்டு கவலைப்பட்டு உயிரையே மாய்த்துக் கொள்ளும் படியான கவலைக்குத் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாசக அமைப்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம்.
உயிரைப் போக்கிக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறுவதிலிருந்தே சாதாரணமாக ஏற்படும் கவலைக்கு அனுமதி உள்ளது என்பதை விளங்கலாம்.
நாம் வேண்டிய உறவினரை இழந்து விடும் போது அழுவது அல்லாஹ்வின் தீர்ப்பை மறுப்பதாக ஆகாது. அதே நேரத்தில் காலமெல்லாம் அதையே நினைத்து பிரலாபித்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் தீர்ப்பை எதிர்ப்பதாக ஆகும். இது போலத் தான் இந்தக் கவலையையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொதுவாகக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்திலும் சில வசனங்கள் உள்ளன. அவ்வசனங்களை ஆதாரமாகக் காட்டி சிறிய அளவில் கூட இதற்காகக் கவலைப்படக் கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர். அந்த வசனங்கள் இவைதாம்.
(இறை) மறுப்புக் கொள்கையில் அவர்கள் விரைவாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக் கவலை கொள்ளச் செய்ய வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்து விட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த பாக்கியமும் இருக்கக் கூடாது என்று அல்லாஹ் விரும்புகிறான். அவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்:)
தூதரே! உள்ளத்தால் நம்பிக்கை கொள்ளாமல் நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறுகிறார்களே அவர்களிலும் யூதர்களிலும் நிராகரிப்பின் பால் விரைந்து செல்பவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். (அல்குர்ஆன்:)
எவர் நிராகரிக்கின்றாரோ அவருடைய நிராகரிப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். (அல்குர்ஆன்:)
இந்த வசனங்கள் யாவும் காபிர்களுக்காக அறவே கவலைப்படக் கூடாது என்று தானே கூறுகின்றன. உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்பட வேண்டாம் எனக் கூறவில்லையே என்பது இவர்களின் வாதம்.
கவலைப்படுதல் என்பது இரண்டு வகைகளில் ஏற்படும்.
நரகத்தில் கிடந்து வேதனைப் படப் போகிறார்களே என்று கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காக படுகின்ற கவலை ஒரு வகை.
நமக்கெதிராகத் திரண்டு விட்டார்களே, இவர்களால் நமக்கோ நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ ஏதும் தீங்கு நேருமோ என்று தமக்காகப் படும் கவலை மற்றொரு வகை.
ஒன்று பரிதாபத்தால் ஏற்படுவது. மற்றொன்று பயத்தால் ஏற்படுவது. ஒன்று மற்றவருக்காகக் கவலைப்படுவது. மற்றொன்று தமக்காகக் கவலைப்படுவது.
இவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் யாவும் இரண்டாவது வகையான கவலையைக் குறிக்கின்றன.
அவர்கள் இறை நிராகரிப்பின் பால் விரைந்து செல்வது பற்றிக் கவலைப்படாதே எனக் கூறிவிட்டு அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது மார்க்கத்துக்கும் எந்தத் தீங்கும் செய்ய முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். அவர்களால் ஏதும் தீங்கு நேருமோ என்று பயந்து கவலைப் படாதீர் என்ற கருத்திலேயே இவ்வசனங்கள் அமைந்துள்ளன. கழிவிரக்கம் கொண்டு மற்றவர்களுக்காகக் கவலைப்படுவதை கூறவில்லை.

சங்பரிவாரக் கும்பலைப் பற்றி கவலைப்படாதே என்பதும், மனைவி இறந்ததற்காகக் கவலைப்படாதே என்பதும் ஒரே வகையானது அல்ல. இதைப் புரிந்து கொண்டால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்பதற்காக நம்மையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்குக் கவலைப்படக் கூடாது, அதே சமயம் அக்கறையின் காரணமாக சாதாரணமாகக் கவலை கொள்ள எந்தத் தடையும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

7, 8 வது வசனங்கள்

இவ்விரு வசனங்களிலும் இரண்டு செய்திகள் அடங்கியுள்ளன.
இறைவன் எத்தகைய ஆற்றல் மிக்கவன் என்பது ஒரு செய்தி!
மனிதர்களுக்கு இவ்வுலகில் இன்பங்களை வாரி வழங்கியிருப்பது ஏன் என்பது மற்றொரு செய்தியாகும்.

அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!

இவ்வசனத்தில் தனது வல்லமையைக் கூற வெகு தொலைவுக்கு மனிதனை இழுத்துச் செல்லாமல் அவன் எந்த மண்ணில் வாழ்கின்றானோ அந்த மண்ணையே இதற்குக் களமாக்கிக் காட்டுகின்றான்.
எவ்வித கவர்ச்சியும் அலங்காரமும் இல்லாமல் கட்டாந்தரையாகக் கிடந்த பூமியின் மேல் மழையை விழச் செய்து அவற்றில் மரம் செடி கொடிகளை முளைக்கச் செய்கிறான். இவ்வாறு முளைத்தவுடன் பூமிக்கு புதுப் பெண்ணின் கவர்ச்சி வந்து விடுகின்றது. இதை நாம் தான் செய்கின்றோம் என்று இங்கே சுட்டிக் காட்டுகின்றான்.
திருக்குர்ஆனின் வேறு இடங்களில் இன்னும் அழுத்தமாகத் தனது இந்த ஆற்றலை மனிதனுக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றான்.

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளிப்படுத்துகின்றோம். அதிலிருந்து நாம் வித்துக்களை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகின்றோம். பேரீச்சை மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக் குலைகளும் இருக்கின்றன. திராட்சைத் தோட்டங்களையும் (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கின்றோம்) அவை (பூத்துக்) காய்ப்பதையும் பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக – ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன. (அல்(அல்குர்ஆன்:)

பந்தல்களில் படர விடப்பட்ட கொடிகளும் படர விடப்படாச் செடிகளும் பேரீச்சை மரங்களும் உள்ள சோலைகளையும் புசிக்கத் தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும் ஒன்று போலவும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும் அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்(அல்குர்ஆன்:)

இன்னும் பூமியில் அருகருகே இணைந்தாற்போல் பல பகுதிகளை (அமைத்து அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும் விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும் கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை) யும் (அவனே உண்டாக்கினான், இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப் பட்டாலும் அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றைவிட சுவையில் நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம். நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்(அல்குர்ஆன்:)

அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும் ஒலிவ (ஜைத்தூன்) மரத்தையும் பேரீச்சை மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லா வகைக் கனி வர்க்கங்களிலிருந்தும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு (தக்க) அத்தாட்சி இருக்கின்றது. (அல்(அல்குர்ஆன்:)
இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணையை உற்பத்தி செய்கின்றது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது)
(அல்(அல்குர்ஆன்:)

அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம். (அல்(அல்குர்ஆன்:)
அன்றியும் வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கின்றோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். (அல்(அல்குர்ஆன்:)
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா – நிச்சயமாக நாமே வறண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக் கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா? (அல்(அல்குர்ஆன்:)
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும் இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.
(அல்(அல்குர்ஆன்:)

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கின்றான். அதன் பின் அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகின்றான். அப்பால் அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர். பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (அல்(அல்குர்ஆன்:)
(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா? (அல்(அல்குர்ஆன்:), 64)

கடவுள் என்று ஒருவன் இருக்கின்றான் என்பதற்கும் அவனது வல்லமைக்கும் மண்ணில் முளைக்கும் பயிர் பச்சைகள் மிகப் பெரும் சான்றாகவுள்ளதால் தான் இதை முக்கியத்துவத்துடன் அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.
இனிப்பான மாம்பழத்தை மா மரம் உற்பத்தி செய்கின்றது என்றால் மாங்கொட்டையில் அந்த இனிப்பு இருக்கவில்லை. அது புதைக்கப்பட்ட மண்ணிலும் அந்த இனிப்பு இருக்கவில்லை. ஊற்றுகின்ற தண்ணீரிலோ, வீசுகின்ற காற்றிலோ வெளிச்சத்திலோ இனிப்பு இருந்ததில்லை. ஆனாலும் மாம்பழங்கள் இனிக்கின்றன. இப்படிப் பல்வேறு சுவைகள் கொண்ட கனிகளை மனிதன் உண்ணும் போது அதைப் பற்றி சிந்தித்தால் “சூப்பர் பவர்’ உள்ள ஒருவன் ஆட்டிப் படைக்கின்றான் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வான்.

இலைகள், பூக்கள், காய்கள், கனிகளில் தான் எத்தனை வண்ணங்கள்! அந்த வண்ணங்கள் எப்படி வந்தன? என்றெல்லாம் ஆராயும் ஒருவன் கடவுளை மறுக்கவே மாட்டான்.
அடிக்கடி பார்த்துப் பழகியதால் நாம் இதை உரிய விதத்தில் சிந்திப்பதில்லை. மண்ணில் முளைத்தெழும் ஒவ்வொன்றிலும் கணக்கிட முடியாத அதிசயங்கள் புதைந்து கிடப்பதை இதனால் தான் நாம் சிந்திப்பதில்லை. எப்போதுமே தூரத்தில் இருப்பதுதான் நமக்கு அதிசயமாகத் தோன்றும். நம் பக்கத்தில் நிற்கும் அதிசயங்கள் அதிசயமாகத் தோன்றாது.
மனிதன் இதைச் சிந்திக்க மாட்டான் என்பதற்காகத் தான் இம் மண்ணின் மேல் உள்ளவற்றை மண்ணுக்கு அலங்காரமாக ஆக்கினோம் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இதை மட்டும் கூறி விட்டு றிறுத்திக் கொண்டால் கூட இதெல்லாம் இயற்கை என்று மனிதன் கூறி விடுவான்.
நாளை வறண்ட பாலைவனமாகவும் நாம் ஆக்குவோம் என்று சேர்த்துக் குறிப்பிடுகின்றான்.
உரிய நேரத்தில் உரிய அளவில் மழை பெய்த பிறகு இயற்கையாக முளைத்தன என்று கூறும் மனிதனே! உரிய நேரத்தில் மழை பெய்ததும் இயற்கையா? உரிய அளவில் மழை பெய்ததும் இயற்கையா? மேலப்பாளையத்தில் பெய்து விட்டு பாளையங்கோட்டையில் பெய்யாமல் இருந்ததும் இயற்கையா?
காற்றும் குளிர்ந்து தரையும் குளிர்ந்து இதோ மழை வரப் போகின்றது என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ராஜஸ்தான் பாலைவனத்தில் – அனலாய் கொதிக்கும் பூமியில் – மழையை விரட்டிச் சென்று பெய்விப்பவன் யார்?
இதற்கு இயற்கை என்று எவனும் காரணம் சொல்ல முடியாது அல்லவா? இதனால் தான் தனது வல்லமைக்கு பசுமையை மட்டும் சான்றாகக் கூறி நிறுத்திக் கொள்ளாமல் வறட்சியை ஏற்படுத்துவதும் நாம் தான் எனக் கூறி ஆப்பு வைக்கிறான்.

இந்த இடத்தில் ஏன் இத்தனை வருடங்களாக மழை பெய்யவில்லை என்ற கேள்விக்கு “இயற்கை’ என்று விடை கூற முடியாது. யாரோ ஒருவன் தான் இதற்குக் காரணமாக இருக்கின்றான் என்பது தான் இதற்கு விடையாக இருக்க முடியும்.
இறைவனை மனிதன் நம்ப வேண்டும், அதுவும் சிந்தித்து விளங்கி நம்ப வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த இரண்டு தன்மைகளையும் கூறுகின்றான்.
அவனது வல்லமையைக் காட்டுவது ஒருபுறமிருக்க உன்னைச் சோதித்துப் பார்ப்பதும் இதற்குக் காரணம் என்பதையும் சின்னஞ்சிறு சொற்றொடருக்குள் சேர்த்துக் கூறிவிடுகின்றான்.

இன்பமும் துன்பமும்

அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கின்றோம்.
கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. “கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?” என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.
கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?

மற்ற மதத்தினர் தவறான அடிப்படையின் மீது தங்கள் நம்பிக்கை எனும் மாளிகைகளை எழுப்பிக் கொண்டது தான் இதற்குக் காரணம்.
இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரியான செல்வச் செழிப்புடனும் வசதி வாய்ப்புகளுடனும் இருப்பதில்லை. சிலர் அதிகமான வசதிகளையும் பதவிகளையும் பெற்றுள்ளனர். பலர் இத்தகைய வாய்ப்பைப் பெற்றிருக்கவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பதை விளக்கும் போது மற்ற மதங்கள் செய்கின்ற தவறுகள் தான் அடிப்படைக் கோளாறு எனலாம்.
நீ கடவுள் மீது பக்தியுடன் இருந்தால் உனக்கும் எண்ணற்ற வசதிகள் கிடைக்கும் என்று ஏழைகளிடம் அம்மதங்கள் பேசுகின்றன. சென்ற பிறவியில் நல்ல பக்திமானாக இல்லாததே நீ இப்போது ஏழையாக இருப்பதற்குக் காரணம் என்று அவனுக்கு அறிவுரை கூறுகின்றன.
இதுபோல் வசதி வாய்ப்புகளுடன் உள்ளவனை நோக்கி, கடவுள் உன் மீது அன்பாய் இருக்கிறார். நீ நல்லவனாக இருப்பதால் தான் இந்த நிலையை அடைந்திருக்கிறாய் என்றும் சென்ற பிறவியில் நீ நல்லவனாக இருந்ததால் தான் இந்த உயர்ந்த நிலை கிடைத்தது என்றும் பேசுகின்றன.

செழிப்பாய் இருந்தவனுக்கு ஒரு நட்டம் ஏற்பட்டால் “இவன் என்னவோ செய்திருப்பான்’ என்று கூறுவதும் இதனால் தான் இப்படி ஏற்பட்டது என்று பேசுவதும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான்.
கீழ் நிலையில் இருந்த ஒருவனுக்கு நல்ல நிலை ஏற்பட்டால் அவன் கொடுத்து வைத்திருக்கிறான். இவன் புண்ணியம் செய்திருப்பான் என்று காரணம் கூறுவதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம்.
இந்த நம்பிக்கை ஆழமாகப் பதிந்த பிறகு ஒரு கேடுகெட்டவன் உயர்ந்த நிலையை அடைவதைப் பார்க்கும் போதும் ஒரு நல்லவன் சொல்லெனாத் துன்பத்தை அடையும் போதும் கடவுள் நம்பிக்கையே அவன் உள்ளத்திலிருந்து விலகி விடுகின்றது. மதத்தை வளர்ப்பதற்காக பொய்யான காரணங்களைக் கூறி நம்மை ஏமாற்றி விட்டனர் என்று அவனுக்குக் கோபம் ஏற்படுகின்றது. இதனால் தான் கடவுள் (?) மீதே மண்ணை வாரித் தூற்ற முடிகின்றது.
ஆனால் இஸ்லாம் பொய்யான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் எதனையும் அளிக்கவில்லை. எது உண்மையோ அதை மட்டுமே கூறுகின்றது.

இவ்வுலகில் உள்ள ஏழைகள் பலரை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் கெட்டவர்களாக இருப்பதில்லை. அது போல் அனைவரும் நல்லவர்களாகவும் இருப்பதில்லை. அவர்களின் ஏழ்மை நிலைக்கும் அவர்களது பாவ புண்ணியத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகின்ற உண்மை.
அது போல் செல்வந்தர்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். இவர்களின் செல்வ நிலைக்கும் பாவ புண்ணியத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாமலிருப்பதைக் காண்கின்றோம்.
இந்த நிதர்சனமான உண்மையை அப்படியே கூறுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே!
இவ்வுலகில் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதற்கும் நல்லவர்களாக இருப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த வசதிகளைப் பெற்ற பிறகும் நீங்கள் நல்லவர்களாக வாழ்கிறீர்களா என்று சோதித்துப் பார்க்கவே இவை வழங்கப்பட்டுள்ளன. வசதிகள் வந்த பின் அதன் காரணமாக ஆணவம் பிடித்து அலைந்தால் நீ கெட்டவனாவாய்! அதை மற்றவருக்கு வாரி வழங்கி நற் செயல்களில் உன்னை ஈடுபடுத்திக் கொண்டால் நல்லவனாவாய் என்று இஸ்லாம் கூறுகின்றது.

அது போல் நீ வசதி வாய்ப்புகளைப் பெறவில்லை என்பதால் நீ கெட்டவன் இல்லை. இந்த வறுமையின் காரணமாக நீ தடம் மாறுகிறாயா அல்லது தடம் புரளாமல் உறுதியாக நிற்கிறாயா? என்று சோதித்துப் பார்க்கவே இந்த நிலை என்று இஸ்லாம் கூறுகின்றது.
செழிப்பு வறட்சி இரண்டுமே இரண்டு வகையான பரீட்சைகள் என்று இஸ்லாம் கூறுகின்ற காரணத்தினால் தான் முஸ்லிம்கள் எத்தகைய துன்பத்தை அடைய நேர்ந்தாலும் அவர்கள் அதைப் பொறுத்துக் கொள்கின்றனர். கடவுளே உனக்குக் கண்ணில்லையா என்று கேட்பதில்லை.
இரண்டு நிலைகளில் எது ஏற்பட்டாலும் இரண்டும் சோதனைதானே தவிர நம்மை நல்லவன் கெட்டவன் என்று வழங்கப்படும் தீர்ப்பு அல்ல. இனிமேல் தான் தீர்ப்பு வழங்கப் படவுள்ளது. அங்கே நல்ல தீர்ப்பு பெறுவதற்காக வறட்சியிலும் செழிப்பிலும் நிலை குலையாமல் இருக்க வேண்டும் என்று உறுதியான அடிப்படையின் மீது முஸ்லிம்களின் நம்பிக்கை எழுப்பப் பட்டுள்ளது.
அல் கஹ்ஃப் அத்தியாயத்தின் ஏழாவது வசனமும் அந்த அடிப்படையைத் தான் சொல்லித் தருகின்றது. இப்பூமியில் உள்ள செழிப்புகள் யாவும் நீங்கள் நல்லவர்களாக நடக்கிறீர்களா என்று சோதித்துப் பார்ப்பதற்குத் தான் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பலமான அஸ்திவாரத்தின் மீது எழுப்புகின்றது. பின்வரும் வசனங்களும் இந்த வசனத்தின் விளக்கவுரைகளாகத் திகழ்கின்றன.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமையுடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்’ என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்:), 156)
(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும் உஙகள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப் படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்திற்குரிய செயலாகும்.
(அல்குர்ஆன்:)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும் நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர் நம்மிடமே நீங்கள் மீட்கப் படுவீர்கள்.
(அல்குர்ஆன்:)
இன்னும் மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான். அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கின்றான். ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கின்றான். இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான். இதுதான் தெளிவான நஷ்டமாகும்.
(அல்குர்ஆன்:)

இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன் “என் இறைவன் என்னைக் கண்ணியப் படுத்தியுள்ளான்’ என்று கூறுகின்றான். எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து அவனை (இறைவன்) சோதித்தாலோ அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப்படுத்தி விட்டான்’ என்று கூறுகின்றான்.
(அல்குர்ஆன்:), 16
எனவே செல்வமும் வறுமையும் சோதனைக்குத் தான் என்பதை உணர்ந்து சோதனையில் தேறிட வல்ல இறைவன் அருள் புரியட்டும்.