கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை?
ஹஜ் விளக்க வகுப்பு நடத்துகிறோம் என்ற பெயரில் குறைக்குட ஆலிம்கள் குப்பைகளையும், கூளங்களையும் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் சென்னையில் ஒரு மவ்லவி வெளிப்படுத்திய அறியாமையைப் பாருங்கள்! ஹஜ்ஜிற்கு வந்திருக்கும் ஒரு பெண், பயண தவாஃப் செய்யத் தவறி விட்டால் அவருடன் அவளது கணவன் ஓராண்டு காலம் உடலுறவு கொள்ளக் கூடாது என்று வி”ல’க்கம் சொல்லியிருக்கிறார்.
எப்படியெல்லாம் மார்க்கச் சட்டம் சொல்கிறார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! இப்படித் தப்பும் தவறுமாக ஹஜ் விளக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் செலவளித்து ஹஜ் செய்யும் மக்களின் ஹஜ்ஜைக் கெடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஒரு படையே கிளம்பியிருக்கிறது.
இன்னொருவர் ஹஜ் வகுப்பு நடத்தும் போது, “ஹஜ்ஜுக்குச் செல்லாத மக்கள் தங்கள் துஆக்களை ஒரு துண்டுச் சீட்டில் எழுதி என்னிடத்தில் தந்து விடுங்கள். நான் ஹரமில் அவற்றைக் கொண்டு போய் போட்ட பிறகு நீங்கள் அந்த துஆவை இங்கிருந்து கொண்டே கேளுங்கள்” என்று கூறியுள்ளார். அதாவது துஆவை கார்கோவில் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். இவர்கள் மார்க்கத்தை எந்த அளவுக்குக் கேலிக் கூத்தாக்கியுள்ளனர் என்பதற்கு இது மற்றோர் எடுத்துக்காட்டு.
இன்னொரு மவ்லவி அடித்த கூத்தைக் கேளுங்கள்.
“மாநபி (ஸல்) மற்றும் அவர்களது தோழர்களின் மலர்ப் பாதங்கள் பட்ட இடம் தான் மதீனா! அந்த மதீனாவின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் அங்கு செல்கின்ற மகான்கள் தங்கள் கால்களுக்குச் செருப்பு போடுவது கிடையாது”
இதுவும் மூளையை அடகு வைத்த ஒரு மவ்லவி, ஹஜ் வகுப்பில் தெரிவித்த கருத்துத் தான்.
அரபகத்தின் வெயிலும் கடுமை! பனியும் கடுமை! அங்கெல்லாம் செருப்புப் போடாமல் கொஞ்சம் கூட நடக்க முடியாது. கோடைக் காலமாக இருந்தால் கால்களில் கொப்பளங்கள் ஏற்பட்டு வெடித்து விடும். அந்த அளவுக்கு அரபகத்தின் வெயில் அகோரமானது. வெப்ப மழை பொழியும் அந்த மதீனாவில் தான் மக்களை செருப்பில்லாமல் நடக்கச் சொல்கிறார்கள் இந்த மவ்ட்டீக மவ்லவிகள்.
மதீனாவில் செருப்புப் போடாமல் நடந்து விடலாம் என்று வைத்துக் கொள்வோம். அங்கு மலஜலம் கழிக்கலாமா? செருப்பை விட மிகவும் அசிங்கமும், அசுத்தமும் மதீனாவில் மலஜலம் கழிப்பது தான். இதற்கு மவ்ட்டீக மவ்லவிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
மதீனாவிலிருந்து திரும்பும் வரை அந்தப் புனித ஹஜ் பயணிகளுக்கு பைகள் எதுவும் இவர்கள் சப்ளை செய்வார்களா? அல்லது நாப்கின் வாங்கிக் கொடுக்கப் போகிறார்களா?
இவர்களிடம் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கலாம். மதீனாவில் இல்லறத்தில் ஈடுபடலாமா? என்பது தான் அந்தக் கேள்வி. ஏனெனில், செருப்பு அணிவதை விட, மலஜலம் கழிப்பதை விட இது சற்றுக் கூடுதலான புனிதக் கேடாயிற்றே!
நபித்தோழர்கள் ஹஜ் மட்டும் செய்வதற்காக இஹ்ராம் கட்டி வருகிறார்கள். மக்கா வந்ததும், “உம்ராவை முடித்து விட்டு இஹ்ராமைக் களைந்து விடுங்கள்; பின்னர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளலாம். இதற்கிடைய தாம்பத்தியம் உள்ளிட்ட அத்தனையும் அனுமதி’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இது நபித்தோழர்களுக்குச் சங்கடத்தை அளிக்கின்றது.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே கூறியதாவது:
(விடைபெறும் ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்து சேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து விடும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கட்டாயமாக் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். “நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவுகொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?” என்று நாங்கள் பேசிக்கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனது குர்பானிப் பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். ஆகவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்து கொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானிப் பிராணியை என்னுடன் கொண்டு வந்திருக்க மாட்டேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.
புனித நகரில் தாம்பத்தியமே அனுமதிக்கப்படும் போது செருப்பு அணிவதால் என்ன குடிமுழுகிப் போய் விடும்?
இந்த அறியாமைச் சின்னங்கள் இதற்கெல்லாம் ஒரு பதிலும் தர மாட்டார்கள். இந்தக் கேள்விகளை எழுப்புவதற்குக் காரணம், இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? என்று அடையாளம் காட்டுவதற்காகத் தான்.
இவர்களுடைய இந்தச் சிந்தனை காவிச் சிந்தனையாகும். இந்து மதத்தில் தான் செருப்பு போடுவது புனிதத்திற்கு எதிரானது. அதனால் தான் அவர்கள் சபரி மலைக்கு மாலை கட்டிச் செல்லும் போது காலுக்குச் செருப்பு அணிய மாட்டார்கள். பள்ளிக்கட்டு சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று பாட்டும் பாடிக் கொள்வார்கள். புனிதத் தலங்களிலும், புனிதத் தலங்களுக்கு மேற்கொள்ளும் பயணங்களிலும் அவர்கள் கால்களுக்கு செருப்பணிவது கிடையாது. யூத மதத்திலும் இந்த நிலை தான்.
செருப்பு அணியும் விஷயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தின் நிலைப்பாட்டைத் தெரியாததால் இந்த மவ்லவிகள் இவ்வாறு உளறிக் கொட்டுகின்றனர்.
வணக்க வழிபாடுகளிலும் செருப்பு, ஷூ அணிவதை இஸ்லாமிய மார்க்கம் தடை செய்யவில்லை.
ஹஜ் பயணத்தின் போது ஆண்கள் தையல் ஆடைகளை அணியக் கூடாது என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. ஆனால் செருப்பு அணிவதை இஸ்லாம் தடை செய்யவில்லை; வரவேற்கின்றது.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் எத்தகைய ஆடைகளை அணியலாம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) வர்ஸ் எனும் செடியினால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்காவிட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி (செய்ய அதற்கு மேலிருப்பவற்றை) வெட்டி விட வேண்டும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
மக்கா என்பது ஒரு புனித நகரம்! ஹஜ் என்பது ஒரு புனித வணக்கம்! அந்தப் புனித பூமியில் புனித மிகு வணக்கத்தில் செருப்பு போடுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. ஏழு வருடம் படித்தோம் என்று ஜம்பம் பேசுகின்ற ஆலிம்களுக்கு இந்த விபரம் தெரியவில்லை.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கால்களில் செருப்பணிந்து கொண்டே தொழுதிருக்கின்றார்கள்.
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர் களிடம் “நபி (ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: சயீத் பின் யஸீத் அல்அஸ்தீ
“யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் செருப்புகள் மற்றும் ஷுக்கள் அணிந்து தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என தன் தந்தை வழியாக யஃலா பின் ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிக்கின்றார்.
செருப்பில் அசிங்கமிருந்தாலும் இப்படித் தொழ வேண்டும் என்று யாரும் விளங்க மாட்டார்கள். வெறுங்காலுடன் தொழும் போது அசுத்தத்துடன் தொழ மாட்டோமோ அதுபோல் தான் செருப்புடன் தொழும் போது அசுத்தமில்லாமல் தொழ வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுக்கு தொழுவித்துக் கொண்டிருக்கும் போது திடீரெனத் தமது இரு செருப்புகளையும் கழற்றி தமது இடப்புறம் வைத்தார்கள். இதைப் பார்த்த மக்களும் தங்களுடைய செருப்புகளை கழற்றி விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தொழுகையை முடித்ததும் “நீங்கள் உங்களது செருப்புகளை கழற்றியதற்கு என்ன காரணம்?” என்று கேட்டபோது, “நீங்கள் உங்கள் செருப்புகளை கழற்றக் கண்டோம். அதனால் நாங்களும் எங்கள் செருப்புகளை கழற்றி விட்டோம்” என்று பதில் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னிடம் ஜிப்ரயீல் (அலை) வந்து அந்த இரு செருப்புகளிலும் அசுத்தம் இருப்பதாக எனக்கு அறிவித்தார்கள். (அதனால் நான் கழற்றினேன்)” என்று விளக்கமளித்தார்கள். “உங்களில் ஒருவர் பள்ளிக்கு வரும்போது தன்னுடைய இரு செருப்புகளிலும் நரகலோ அல்லது அசுத்தமோ இருப்பதை கண்டால் அதை (தரையில்) தேய்த்து விட்டு அவ்விரு செருப்புகளை அணிந்து கொண்டு தொழுவாராக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரி (ரலி)
இன்றைய பள்ளிவாசல்கள் சலவைக் கற்கள், கம்பளம் மற்றும் பாய் விரிப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு அமைந்திருக்கின்றது. இதன் காரணமாக செருப்புக்களை பள்ளிக்கு வெளியே விட்டுச் செல்கிறோம். இப்படியே பழகி விட்டோம். அதனால் செருப்புப் போட்டுத் தொழலாம் என்றதும் நமக்கு அது புதுமையாகத் தெரிகின்றது.
வெறுங்கால்களுடன் மக்கள் இப்படித் தொழுது கொண்டிருப்பதால் மார்க்கத்தில் செருப்பணிதல் கூடாது என்று இந்த மவ்லவிகள் விளங்கி வைத்திருக்கின்றனர். பிற மதத்துச் சிந்தனையை அப்படியே இவர்கள் பிரதிபலிக்கின்றனர்.
இஸ்லாமிய மார்க்கம் மிக எளிமையானது. அதனால் அதன் சட்டங்கள் ஊரில் இருப்பவருக்கு எளிதாக அமைந்திருப்பது போல் பயணிகளுக்கும் அது மிக எளிதாக அமைந்திருக்கின்றது. ஊரில் இருப்பவரும் பயணியும் காலில் ஷூ அணிவர். இவ்வாறு ஷூ அணிபவருக்கு இஸ்லாம் சில சலுகைகளை வழங்குகின்றது.
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்து விட்டுப் பின்னர் உளூ செய்தார்கள்; (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக்கையால் தடவி) தமது காலுறைகள் மீது மஸ்ஹுச் செய்தார்கள். பிறகு (காலுறைகளுடனேயே) எழுந்து தொழுவதை நான் கண்டேன். அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை நான் பார்த்திருக்கிறேன்” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹம்மாம் பின் அல்ஹாரிஸ்
உளூச் செய்யும் போது ஷூவைக் கழற்றி மாட்டுவது மிகச் சிரமம். அதனால் மார்க்கம் இப்படி ஒரு சலுகையை வழங்குகின்றது. இந்தச் சலுகை ஊரில் இருப்பவருக்கு ஒரு நாளைக்கு என்றால் பயணிகளுக்கு மூன்று நாட்கள் என்று நீட்டித்து வழங்குகின்றது.
காலுறைகளை மஸஹ் செய்யும் காலம் பயணிக்கும் மூன்று நாட்களாகும். உள்ளூர் வாசிக்கு ஒரு பகலும் ஒரு இரவும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: குஸைமா பின் ஸாபித் (ரலி)
கடுமையான குளிரின் போது தான் ஷூ அணிவதன் அவசியத்தை மனிதன் உணர முடியும். எனவே அதற்கேற்றவாறு சலுகை அளித்து, ஆர்வமூட்டுவதிலிருந்து ஷூ அணிவதற்கு மார்க்கம் வழங்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் “யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக் கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
உடலுக்கு எப்படி உடை அவசியமோ அதுபோன்று காலுக்குச் செருப்பு அமைந்திருக்கின்றது. நபித்தோழர்கள், நபியவர்களிடம் கேட்கும் வினாவிலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும்போது, “மரணம் தனது செருப்பு வாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப்பொழுதை அடைகிறான்!” என்ற கவிதையைக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் உங்களின் செருப்பு வாரை விட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைப் போன்றே (மிக அருகில் உள்ளது).
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
இந்த உவமைகளின் மூலம் செருப்புக்கு இஸ்லாம் வழங்கும் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்திற்கும் ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்தார்கள். அதனால் உணவு உண்ணும் முறை, நீர் பருகும் முறை என அனைத்திற்கும் ஒரு வழிகாட்டலை வழங்கியிருக்கிறார்கள். அதுபோன்று செருப்பு அணிவதற்கும் வழிமுறையைக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் தலை வாரிக் கொள்ளும் போதும், காலணி அணியும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
செருப்பு வார் அறுந்து விட்டால் ஒரு செருப்பில் நடக்கக் கூடாது என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒருவரின் செருப்பு வார் அறுந்துவிட்டால், அதைச் சீராக்காத வரை மற்றொரு செருப்பில் நடந்து செல்ல வேண்டாம்‘ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரு காலணிகளையும் ஒருசேர அவர் அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் ஒருசேர கழற்றி விடட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இவ்வாறு செருப்பணியும் விஷயத்தில் பேண வேண்டிய ஒழுங்குகளை, நடைமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள். செருப்பணிவதற்கு மார்க்கம் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதற்கு இது சிறந்த ஆதாரமாகும்.
செருப்பின் சிறப்பு இந்த உலக மட்டில் நிற்கவில்லை. நாளை சுவனத்திலும் கூடவே வருகின்றது. அந்த அளவுக்கு மனித வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது.
ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் அங்கசுத்தி (உளூ) செய்தாலும் அந்த அங்க சுத்திக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத் தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
சுவனத்தில் உள்ளவர்களுக்கு ஆடைகள் வழங்கப்படுவது போல் நரகத்தில் உள்ளவர்களுக்கும் ஆடைகள் வழங்கப்படுகின்றன. அங்கும் செருப்பு வழங்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
மனிதனுக்கும் செருப்புக்கும் உள்ள உறவு மறுமை வரை தொடர்கின்றது என்பதற்கு இந்த ஹதீஸ்கள் எடுத்துக்காட்டு.
செவியில் விழும் செருப்போசை
மனிதன் இறந்ததும் கப்ரில் வைக்கப்படுகின்றான். அவன் அடக்கம் செய்யப்பட்டதும் அவனுக்கு உயிர் கொடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து “முஹம்மத் எனும் இந்த மனிதரைப் லிபற்றி நீ என்ன கருதிக்கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்” என்பார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
ஒரு மனிதனை இறுதிப் பயணம் அனுப்புகின்ற போது மக்கள் செருப்பணிந்து வருகின்றார்கள். இப்படி மனிதனுடைய காலை ஆக்கிரமித்து, அவனை அரவணைத்து, அவனிடம் தேய்ந்து கொண்டிருக்கின்றது.
இப்படிக் காலடியில் கிடந்து தேய்ந்து, காலுக்குக் காவலனாய், காலந்தோறும் நம்முடைய நண்பனாய் உதவுகின்ற இந்த செருப்பைத் தான் இந்த உலமாக்கள் உதறி வீசச் சொல்கின்றார்கள். நாம் பிறந்து நடை பயில ஆரம்பித்த நாளிலிருந்து கூடவே வரும் கூட்டணியாக செருப்பு இருப்பதால் தான் மறுமையிலும் செருப்புடன் எழுப்பப்படுவோம் என்று எண்ணி விடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, “முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
செருப்பு ஓர் அவமரியாதைச் சின்னம் என்பது மாற்றுமதக் கலாச்சாரமாகும். அந்தக் கலாச்சாரத்தைத் தான் இந்த முல்லாக்கள் மார்க்கத்தில் திணிக்க நினைக்கின்றனர். அதன்படித் தான் மதீனாவில் ம(ô)கான்கள் செருப்பில்லாமல் நடந்தார்கள்; நீங்களும் அதுபோன்று செருப்பணியாமல் நடங்கள் என்று தப்புப் பிரச்சாரத்தைச் செய்கின்றார்கள்.
இவ்வாறு இவர்களை நாம் விமர்சனம் செய்யும் போது தங்களுக்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தைக் காண்பிப்பார்கள்.
நான் தான் உமது இறைவன். எனவே உமது செருப்புகளைக் கழற்றுவீராக! நீர் “துவா‘ எனும் தூய்மையான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.
இதற்கு நாம் ஏற்கனவே பார்த்த அபூதாவூத் ஹதீஸ் சரியான பதிலாக அமைகின்றது.
“யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் செருப்புகள் மற்றும் ஷுக்கள் அணிந்து தொழ மாட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என தன் தந்தை வழியாக யஃலா பின் ஷத்தாத் பின் அவ்ஸ் அறிவிக்கின்றார்.
இந்த அடிப்படையில் தான் யூதர்கள் தங்கள் வணக்க வழிபாடுகளில் செருப்புகளைத் தவிர்க்கிறார்கள் போலும். இந்த வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மாற்றி விடுகின்றார்கள்.
மற்ற நபிமார்களின் வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் மாற்றாத வரை நாம் பின்பற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம். நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டால் அந்த வழிமுறையை நாம் பின்பற்ற முடியாது. இது ஒரு பொதுவான அடிப்படை. எனவே மூஸா நபியின் இந்த வழிமுறையை நாம் பின்பற்றக் கூடாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லாத, ஏவாத காரியங்களை இவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஹஜ் என்ற பெயரில், ஹஜ் செய்யச் செல்வோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களது ஹஜ் வணக்கத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத காரியங்களைச் செய்து, ஹஜ் எனும் வணக்கத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள் என்று ஹாஜிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.