கடன் பட அஞ்சுவோம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

நபி (ஸல்) அவர்கள் கடன் வாங்காமலிருக்க அதிகம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். கடன் வாங்கினால் பொய் பேச நேரிடும் என்றும் வாக்குறுதியை மீறுதல் ஏற்படும் என்றும் பயந்துள்ளார்கள் என்பதை பின் வரும் செய்திகளிலிருந்து அறியலாம்.

கடனை விட்டு பாதுகாப்பு தேடிய உத்தம நபி

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அபூ தல்ஹா (ஸைத் இப்னு ஸஹ்ல்) (ரலி) அவர்களிடம், ‘உங்கள் சிறுவர்களில் ஒருவரை எனக்குச் சேவகம் செய்ய அழைத்து வாருங்கள்’ என்று கூறினார்கள். உடனே அபூ தல்ஹா (ரலி) (தம் வாகனத்தில்) என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு புறப்பட்டார்கள். எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சேவகம் புரிந்து வந்தேன். அவர்கள் (வழியில் எங்கேனும்) இறங்கித் தங்கும்போதெல்லாம் ‘இறைவா’ துக்கம், கவலை, ஆற்றாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன்சுமை மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன் ‘ என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிவதை நான் செவியேற்றுள்ளேன். (ஹதீஸின் சுருக்கம்).
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி),(புகாரி: 5425)

நயவஞ்சத்தன்மைக்கு வழிவகுக்கும் கடன்

நயவஞ்சகர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த உதவியாளரையும் நீர் காணமாட்டீர்.
(அல்குர்ஆன்: 4:145)➚

நபியவர்கள் கடனுக்காக செய்த துஆ

“இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்தார்கள். ‘தாங்கள் கடனைவிட்டும் அதிகமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்ளிடம் கேட்டபோது ‘ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),(புகாரி: 832)

எளிமையான மார்க்கத்தில் கடின வார்த்தைக்கு அனுமதி

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து தடித்த வார்தையைப் பயன்படுத்தினர். நபித்தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு இவ்வாறு கூற உரிமையுள்ளது என்று கூறிவிட்டு அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஓர் ஒட்டகக்கதை கொடுங்கள் என்றார்கள். நபித்தோழர்கள் அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தை தவிர வேறு இல்லை என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதையே கொடுங்கள். அழகிய முறையில் திரும்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2306)

கடனாளிக்கு ஜனாஸா தொழுகையை தொழவைக்க மறுத்த நபி

கடன்பட்ட நிலையில் இறந்துவிட்ட ஒருவர் (உடைய ஜனாஸா) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டால், ‘இவர் தம் கடனை அடைக்கப் பொருள் எதையும் விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்பது வழக்கம். ‘அவர் (தம் கடனை அடைக்கத் தேவையானதை விட்டுச் சென்றுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டால், (அவருக்கு ஜனாஸா) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், முஸ்லீம்களிடம் “உங்கள் தோழருக்காகத் தொழுங்கள்” என்று கூறிவிடுவார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் பல வெற்றிகளை அளித்தபோது அவர்கள், ‘நான் இறை நம்பிக்கையாளர்களில் (தம் மீது) கடனைவிட்டுவிட்டு இறந்துவிடுகிறவரின் கடனை அடைப்பது என்று பொறுப்பாகும். ஒரு செல்வத்தைவிட்டுச் செல்கிறவரின் வாரிசுகளுக்கு அது உரியதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 5371)

கடனில் மகிழ்ச்சி இல்லை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உஹுது மலையளவிற்கு என்னிடம் தங்கமிருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாட்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தை) தவிர.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2389)

உயிர் தியாகிக்கு மன்னிப்பு தராத கடன்

என் தந்தையார் உஹுதுப் போரின் போது அவர் மீது கடனிருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டு விட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள்.

அவ்வாறு செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே அவர்களுக்கு அந்த பேரீச்சம் பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக நாம் உன்னிடம் காலையில் வருவோம் என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்சம் மரங்களிடையே சுற்றி வந்து அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) துஆ செய்தார்கள். பிறகு நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களை எல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகிவிட்டன. அறிவிப்பவர்: கஅஃப் பின் மாலிக்,(புகாரி: 2395)

உயிர் தியாகி (ஷஹீத்) யின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத் தவிர என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ரு பின் அல் ஆஸ் (ரலி),(முஸ்லிம்: 3498)

பெற்றோர் கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமை

ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து , ‘என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா? என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள். கடன்கள் நிறைவேற்றுவதற்கு அல்லாஹ் உரிமை படைத்தவன்” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),(புகாரி: 1852)

ஆக, கடனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு எச்சரிக்கை செய்துள்ளார்கள் என்பதை உணர்ந்து கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்கியவர்கள் அதனை உரிய கால கெடுவுக்குள் திரும்பி கொடுத்தல் வேண்டும். இல்லையாயின், கடன் கொடுத்தவரின் ஏச்சுகளையும், பேச்சுகளையும் கேட்கும் நிலை ஏற்படும். மேலும், கடன் வாங்கி இறந்தவர்களுக்கு நபியவர்கள் ஜனாஸா தொழுகை கூட நடத்தவில்லை என்று கூறும் அளவிற்கு அதனை விட்டு விலகல் வேண்டும்.