கஞ்சனும், வள்ளலும்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

கஞ்சனும், வள்ளலும்

مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ ، أَوْ وَفَرَتْ – عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ وَأَمَّا الْبَخِيلُ فَلاَ يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلاَّ لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا فَهُوَ يُوَسِّعُهَا ، وَلاَ تَتَّسِعُ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சனுக்கும், தர்மம் செய்பவனுக்கும் உதாரணம் இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். மார்பிலி­ருந்து கழுத்து வரை இரும்பு அங்கிகளை அவ்விருவரும் அணிந்திருக்கின்றனர். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவரது அங்கி உடல் முழுவதும் விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடுமாறு விரிவடையும்.

கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் விரியாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­),
நூல்: (புகாரி: 1444) 

நாம் இன்று உலகில் கண்கூடாகப் பார்க்கக் கூடிய உண்மையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உதாரணமிட்டுக் கூறியுள்ளார்கள். திருடர்கள், கொள்ளையர்கள், பணத்துக்காகக் கொலை செய்பவர்கள் உருவாவதற்குக் காரணம் ஏழைகளுக்கு உதவாமல் செல்வத்தைச் சேமித்து வைத்து, கஞ்சத்தனம் செய்பவர்கள் தான். செல்வத்தைச் சேமித்து, தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ விரும்புகிறா்கள்.

ஆனால் அது அவர்களின் உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. இதற்கு இரும்பு அங்கி நெறிப்பதை அழகிய உதாரணமாகக் கூறியுள்ளார்கள். தர்மம் செய்பவன் யாரும் ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகப் போனது கிடையாது. மாறாக அவருக்கு அதை விடவும் செல்வம் வளரும் என்பதற்கு இரும்பு அங்கியை தரையில் இழுத்துச் செல்வதை உதாரணமாகக் கூறியுள்ளார்கள்.

وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حَمَلَهُمْ عَلَى أَنْ سَفَكُوا دِمَاءَهُمْ وَاسْتَحَلُّوا مَحَارِمَهُمْ

ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் கஞ்சத்தனம் செய்வதைப் பயந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு முன் சென்றவர்களை அழித்தது. தங்களைச் சேர்ந்தவர்களை கொலை செய்வதற்கும் ஹராமானவைகளை ஹலாலாக்குவதின் பக்கம் அவர்களைக் கொண்டு சேர்த்ததும் இந்தக் கஞ்சத்தனம் தான்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ர­லி),
நூல்: (முஸ்லிம்: 5034) (4675)

கஞ்சத்தனம் செய்பவர்கள் இவ்வுலகில் பல விதமான தீய காரியங்களைச் செய்வதற்குத் தயங்க மாட்டார்கள் என்பதைத் தான் மேற்கண்ட செய்தி படம் பிடித்துக் காட்டுகிறது.

مَنْ آتَاهُ اللَّهُ مَالاً فَلَمْ يُؤَدِّ زَكَاتَهُ مُثِّلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شُجَاعًا أَقْرَعَ لَهُ زَبِيبَتَانِ يُطَوَّقُهُ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ يَأْخُذُ بِلِهْزِمَتَيْهِ ، يَعْنِي شِدْقَيْهِ ، ثُمَّ يَقُولُ أَنَا مَالُكَ أَنَا كَنْزُكَ ثُمَّ تَلاَ {لاَ يَحْسِبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ}

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

”அல்லாஹ் ஒருவருக்கு செல்வத்தைக் கொடுத்து, அதற்குரிய ஜகாத்தை அவர் கொடுக்கவில்லை என்றால் மறுமை நாளில் அவரது செல்வம் கொடிய விஷப் பற்களுடைய பாம்பாக மாற்றப்படும். அவரை அது சுற்றிக் கொண்டு அவருடைய தாடையை பிடித்து ‘நான் உனது செல்வம்; உனது கருவூலம்’ என்று சொல்லும்” என்று கூறிவிட்டு,

   وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ‌ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ‌ؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

”கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று நினைக்க வேண்டாம். மாறாக அவர்களுக்குத் தீமையே! மறுமை நாளில் தாங்கள் கஞ்சத்தனம் செய்தது அவர்களுக்குத் தொங்க விடப்படும். வானங்கள் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கு உரியது. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 3:180) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி),
நூல்: (புகாரி: 1403) 

கஞ்சன் இவ்வுலகிலும் மறுமையிலும் இது போன்று நிம்மதியற்றவனாக இருப்பான் என்பதை இந்த ஹதீஸ்களி­ருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். தர்மம் செய்பவருக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் அதிகமான நன்மைகள் காத்திருக்கின்றன.

مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ، وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ – وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلْوَهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ.

ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தான் சம்பாதித்தவற்றில் நல்ல முறையில் ஒரு பேரித்தம் பழம் அளவு தர்மம் செய்பவருக்கு அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதில்லை. உங்களில் ஒருவர் தன் ஒட்டகக்குட்டியை வளர்ப்பதைப் போல தர்மம் செய்பவருக்கு அது ஒரு மலையைப் போல ஆகும் அளவுக்கு அல்லாஹ் அதை தன் வலக்கரத்தால் ஏற்று வளர்க்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­),
நூல்: (புகாரி: 1410) 

தர்மம் செய்பவன் வாரி வழங்குவதால் பிச்சைக்காரனாக மாட்டான். மாறாக அவனுக்கு செல்வம் மலை போல குவியும்.

وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِىَ مِنْ بَابِ الصَّدَقَةِ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தர்மம் செய்பவர் ‘தர்மம்’ என்ற வாசலிலி­­ருந்து (சொர்க்கத்திற்கு) அழைக்கப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­),
நூல்: (முஸ்லிம்: 1863) (1705)

தர்மம் செய்பவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாமல் மறு உலகில் சொர்க்கத்திலும் தனி இடம் வழங்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களும் தன்னிடத்திலுள்ள செல்வத்தை வாரி வழங்குவதையே விரும்பி இருக்கிறார்கள்.

مَا يَسُرُّنِي أَنَّ عِنْدِي مِثْلَ أُحُدٍ هَذَا ذَهَبًا تَمْضِي عَلَيَّ ثَالِثَةٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ إِلاَّ شَيْئًا أَرْصُدُهُ لِدَيْنٍ إِلاَّ أَنْ أَقُولَ بِهِ فِي عِبَادِ اللهِ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَمِنْ خَلْفِهِ ثُمَّ مَشَى فَقَالَ إِنَّ الأَكْثَرِينَ هُمُ الأَقَلُّونَ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ مَنْ قَالَ هَكَذَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடத்தில் உஹது மலை அளவு தங்கம் இருந்து அதில் ஒரு பொற்காசு கூட எஞ்சியிருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடம் இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கூட கழிந்து செல்வது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!

அறிவிப்பவர்: அபூதர் (ரலி­),
நூல்: (புகாரி: 6444) 

கஞ்சத்தனம் செய்வதால் ஏற்படும் இவ்வுலக மற்றும் மறுமையின் விபரீதங்களையும், தர்மம் செய்வதால் கிடைக்கும் ஈருலக நன்மைகளையும் இதன் மூலம் தெரிந்திருப்பதால் கஞ்சத்தனம் செய்யாமல் இறைவனின் பாதையில் வாரி வழங்கி எண்ணிலடங்கா நன்மைகளை அடைவோமாக!