கசகசா போதைப் பொருளா?

முக்கிய குறிப்புகள்: சர்ச்சைக்குரியவை

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் உணர்வில் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதற்கு மாற்றமான ஆதாரங்கள் இருந்தால் தெரிவிக்குமாறு அக்கட்டுரையில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாற்றுக் கருத்து வருகிறதா என்பதை அறிந்த பின் இக்கட்டுரையை இணைய தளத்தில் பதிவிடலாம் என்று கருதி இருந்தோம். இருபது மாதங்கள் கழிந்த பின்னும் இக்கட்டுரையின் ஆதாரங்களை மறுத்து யாரும் பதிவிடவில்லை. எனவே இக்கட்டுரையை நமது இணையதளத்தில் வெளியிடுகிறோம்.

(சவூதி அரேபியாவில் கசகசா தடை செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியா செல்லும் பயணிகள் கசகசாவைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று இந்திய அரசும் அறிவுறுத்துகிறது. கசகசா செடியில் இருந்து அபின் எடுக்கப்படுவதால் கசகசா ஒரு போதைப் பொருள் என்பதற்காக சவூதியில் தடை செய்யப்பட்டுள்ளதாக நம்பி தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட சில அமைப்புகள் கசகசா பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான புலனாய்வு வார இதழ் ஒன்றில் கசகசா போதைப் பொருள் கிடையாது என்றும், கசகசா செடியின் காயைக் கீறிவிடும் போது அதில் இருந்து வடியும் பாலில் இருந்து தான் அபின் தயாரிக்கப்பட்டாலும் கசகசாவில் போதை இல்லை என்று அக்கட்டுரையில் எழுதப்பட்டு இருந்தது. மேலும் கசகசா விதையைக் கொண்டு சென்று சவூதியில் யாரும் அதைப் பயிரிட்டு விடக் கூடாது என்பதற்காகவே சவூதியில் தடை செய்யப்பட்டதாகவும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டு இருந்தது.

இந்தக் காரணத்துக்காகத் தான் சவூதி அரசு தடை செய்திருக்கும் என்றால் கசகசாவைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக ஆகாது. ஏனெனில் பனை, தென்னை மரங்களில் இருந்து தான் கள் இறக்கப்படுகிறது. இதனால் பதனீரோ, தேங்காயோ ஹராமாக ஆகாது. அந்த அடிப்படையில் கசகசாவில் போதை இல்லாமல் இருந்து அதை விதைத்து பயிர் செய்து அந்தச் செடியில் இருந்து போதைப் பொருள் தயாரிக்க வாய்ப்பு உண்டு என்பதற்காக சவூதி தடை செய்தால் அது மார்க்கத்தில் ஹராமாகாக ஆகாது. போதைப் பொருள் என்பதற்காக சவூதியில் தடை செய்து இருந்தால் அது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக ஆகி விடும்.

எனவே இது குறித்த விபரத்தை கட்டுரையாக தருமாறு டாக்டர் கிஸார் அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அவர் அதனடிப்படையில் இக்கட்டுரையை ஆக்கித் தந்துள்ளார். கசகசாவில் போதை உள்ளது என்பதற்கு தக்க ஆதாரம் இருப்பவர்கள் அது குறித்து நமக்குத் தெரிவித்தால் அதையும் வெளியிடுவோம். எந்த ஆதாரமும் இல்லை என்பது உறுதியானால் கசகசா பயன்படுத்தக் கூடாது என்ற நமது முடிவை மாற்றிக் கொள்வோம்- ஆசிரியர்)

டாக்டர் த. முஹம்மது கிஸார்

பல நாடுகளில் கசகசா என்னும் பொப்பி விதை, உணவில் சுவை, மனம் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. சவூதி போன்ற நாடுகளில் இந்த விதை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் கசகசா சேர்க்கப்பட்ட உணவை உண்டால் போதை வரும் வாய்ப்பு உண்டா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. இதைப் பற்றி ஆய்வியல் உலகம் பல மாறுபட்ட கருத்துகளைக் கொண்டாலும், இதை உட்கொண்டால் போதை ஏற்படுவது இல்லை என்று பல அறிவியல் உண்மைகள் கூறுகின்றன.

கசகசா என்பது உணவுக்குச் சுவையூட்ட பயன்படும் ஒரு எண்ணெய் வித்தாகும். இதில் பல ஊட்டசத்துக்களும் உள்ளன. போதை தரும் அபின் உற்பத்தி ஆகும் செடியில் காய்ந்த பழத்தின் உள்ளே இருந்து இது பெறப்படுகிறது. போதை தரும் செடியில் இருந்து இந்த விதை பெறபட்டாலும், கசகசா விதையில் போதை தரும் குணம் இல்லை. இந்த மரத்தின் மற்ற பாகங்கள் தரும் எந்தப் பக்க விளைவுகளும், இந்த விதைக்குக் கிடையாது..

NUTRITION AND YOU என்ற இணையதளம் கசகசா பற்றி இப்படி வரையறை தருகிறது

“Nutty and pleasant in taste, poppy seeds are nutritious oilseeds used as condiment in cooking. They are the seeds obtained from the dry fruits (pods) of the poppy plant (opium poppy) and entirely free from any sinister side effects of other poppy plant products such as opium poppy.”

கசகசாவின் மருத்துவ குணங்கள்

• கசகசாவிற்கு நோய்த் தடுப்பு, ஆரோக்கிய மேம்பாடு போன்ற பண்புகள் உள்ளன.

•கசகசாவிற்கு கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு. அதே சமயம் உடலுக்கு நன்மை தரும் நல்ல கொலஸ்ட்ராலை கசகசா அதிகரிக்கச் செய்யும். காரணம் அதில் உள்ள oleic and linoleic acids. Oleic acid, a mono-unsaturated fatty acid, இது மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது

•இதில் உள்ள வெளிப்புற உறையில் அதிக அளவு நார்ச்சத்து (100 g raw seeds provide 19.5 g or 51% of recommended daily levels (RDA) of fibre ) உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதோடு, சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

•கசகசா விதை, தயாமின், பண்டோதேனிக் அமிலம், பைரிடாகஷின், ரைபோ பிளேவின், போலிக் அமிலம் போன்ற வைட்டமின்களுக்கு சிறந்த ஆதாரமாக உள்ளது.

•போதிய அளவில் இரும்பு, காப்பர், பொட்டாஷியம், மாங்கனீஸ், ஜின்க், மற்றும் மெக்னீசியம் உள்ளது.

•கசகசா விதையில் உள்ள ஒபியம் அல்கலாயிடுகளான மார்பின் (morphine), தெபைன்(thebaine),கொடின் (codeine), பபவரைன்(papaverine) போன்றவை மனித உடலில் பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. நரம்பு எரிச்சலை நீக்கவும், வலியைக் குறைக்கவும் பயன்படுவதோடு, இந்த வேதிப் பொருட்கள் பல இருமல் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கசகசா விதை, கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது.

இந்த மரத்தின் மற்ற பாகங்கள், பொதுவாக போதை தரக்கூடிய பொருட்களைக் கொண்டுள்ளது என்றாலும், அதை விரிவாக ஆராயும் பொது அதில், வலி நிவாரணியான மார்பின், தெபய்ன், கொடின் போன்ற மருந்துகள் தான் உள்ளன. இப்படி வலி நிவாரணம் மற்றும் மூளை நரம்பு மண்டலத்தில் வேலை செய்யும் இந்தப் பொருட்கள், போதைக்காக உட்கொள்ளப்படுகிறது என்பது உண்மையானாலும் கசகசா மட்டும் இதில் விதிவிலக்காக உள்ளது.

பல நாடுகள், தங்கள் நாட்டுக்குள் கசகசாவைக் கொண்டு வரத் தடை செய்யக் காரணம், கசகசா விதையை செடியில் இருந்து அறுவடை செய்யும் பொது மற்ற பாகங்களில் உள்ள போதை தரும் பொருளுடன் சேர்ந்து மாசுபடுவது ஒரு காரணம். பொதுவாக கசகசா விதை அறுவடை செய்த பின், உரிய முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நூறு சதவீதம் சுத்தமாகி விடும்.

ஒபியம், பப்பி தாவரத்தின் விதை உட்பட எல்லா பாகங்களிலும், மருந்து மூலக்கூறான மார்பின் மற்றும் கொடின் போன்றவை இருப்பதால், இந்த விதையைச் சாப்பிட்டவர்களின் சிறுநீர் சோதனை முடிவிலும், போதைப்பொருள் (false) positive என்றே காட்டும்.

கசகசாவில், மார்பினே, மற்றும் கொடின் இருந்தும் அது ஏன் போதை தருவதில்லை என்றால் இந்த மருந்துகளின், செறிவு, கசகசா விதையில் போதை தராத அளவுக்கு மிக மிகக் குறைவு.

M. Thevis, G. Opfermann, and W Schanzerand போன்ற விஞ்ஞானிகள் ஒரு ஆய்வு செய்து, அதன் முடிவை Journal of Analytical Toxicology என்ற இதழில் வெளியிட்டார்கள். அதில் வியாபரத்திற்காக விற்கப்படும் ஒரு கிராம் கசகாசாவில் இந்த மார்பின் அளவு 0.5 மைக்ரோகிராம் முதல் 10 மைக்ரோ கிராம். ஒரு கசகசா சேர்க்கப்பட்ட உணவில், ஒரு சில மைக்ரோகிராம் மார்பின் தான் இருக்கும்.

மருந்தாக விற்கப்படும் மார்பினில், வலி நிவாரணத்திற்காக ஒரு முறை எடுக்கப்படும் டோஸில் 5000 முதல் 30000 மைக்ரோகிராம் மார்பின் இருக்கும். எனவே, மார்பின் மருந்தின் விளைவு பெற, ஒரு மனிதன் 500 முதல் 60000 கிராம் கசகசா ஒரே முறையில் சாப்பிட்டால் தான் அந்த மருந்தின் விளைவு வரும். இந்த அளவுக்கு எந்த உணவிலும் கசகசா சேர்க்கவே முடியாது. இது கிட்டத்தட்ட 1 முதல் 130 பவுண்ட் கசகசா சாப்பிடுவதற்கு சமம். இவ்வளவு கசகசா ஒரே முறையில் சாப்பிடுவது சாத்தியமே இல்லை. கற்பனைக்கும் எட்டாதது. உணவில் தெளிக்கப்படும் கசகசா விதையால், மார்பினின் எந்த மருத்துவ சக்தியையும் தரமுடியாது என்னும் போது, போதை தர வாய்ப்பே இல்லை.

எனினும் போதையைக் கண்டறிய சிறுநீர் டெஸ்டுக்குச் செல்லும் விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த டெஸ்டுக்கு முந்திய தினம் கசகசாவைத் தவிர்ப்பது நல்லது. மருந்துக்காக மாத்திரை மற்றும் ஊசி மூலம் மார்பின் உட்கொள்ளும் பொது, மூளை நரம்பு மண்டலத்தில் வேலை செய்து, உடனடி வலி நிவாரணம் மற்றும் தூக்கத்தை தருகிறது. போதைக்காக அதிக அளவில் உட்கொள்ளும்போது போதை களிப்பு, போதைக்கு அடிமையாதல் உண்டாகிறது.

(மாற்றுக் கருத்துக்கள் உரிய ஆதாரங்களுடன் வரவேற்கப்படுகிறது.)