கஅபாவை சந்தித்ததும் கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்கப்படுமா?
மக்காவில் அமைந்துள்ள கஅபா எனும் புனிதமிகு இறையாலயத்தை காணும் பொழுது கேட்கப்படும் துஆக்கள் இறைவனிடம் அங்கீகரிக்கப்படும் எனும் கருத்தில் ஹதீஸ்கள் பதியப்பட்டுள்ளன.
அவற்றின் நம்பகத்தன்மை குறித்து அறிந்துக்கொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.
السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي (3/ 360)
6691- وَرُوِىَ فِى ذَلِكَ عَنْ أَبِى أُمَامَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- إِلاَّ أَنَّ عُفَيْرَ بْنَ مَعْدَانَ عَلَى طَرِيقَةٍ أَخْبَرَنَاهُ أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ أَخْبَرَنَا أَبُو مُحَمَّدٍ : عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ سَعْدٍ الْحَافِظُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الْبُوشَنْجِىُّ حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ أَبُو أَحْمَدَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ عُفَيْرِ بْنِ مَعْدَانَ حَدَّثَنَا سُلَيْمُ بْنُ عَامِرٍ عَنْ أَبِى أُمَامَةَ سَمِعَهُ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ :« تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِى أَرْبَعَةِ مَوَاطِنَ عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلاَةِ ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ ».
அபூ உமாமா(ரலி) கூறியதாவது,
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு இடங்களில் வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும். அவைகள் யாவன, 1. ஸஃப்புகளில் இணையும் பொழுது 2. மழை பொழியும் பொழுது 3. தொழுகைக்கு நிற்கும் பொழுது 4. கஃபாவை காணும் பொழுது.
(அஸ் ஸுனனுல் குப்ரா பைஹகீ: 6691)
இச்செய்தி மஃரிபதுஸ் ஸுனனி வல் ஆஸாரி லில் பைஹகி, அல் முஃஜமுள் கபீர் லித் தப்ரானி போன்ற கிரந்தங்களிலும் பதியப்பட்டுள்ளன.
இந்த ஹதீஸின் அனைத்து நூல்களிலும் உஃபைர் பின் மஃதான் என்ற அறிவிப்பாளரே இடம்பெற்றுள்ளார். இவர் மீது எண்ணற்ற விமர்சனங்கள் உள்ளன. அவைகளைப் பார்ப்போம்.
تهذيب الكمال 742 (20/ 177)
உஃபைர் பின் மஃதான் எனும் அறிவிப்பாளர் குறித்து இமாம் அஹ்மத் பின் ஹம்பல்(ரஹ்) அவர்கள் கூறியதாவது, இவர் பலவீனமானவர். ஹதீஸ்களில் மறுக்கப்படவேண்டியவர்.
துஹைம் அவர்கள் கூறியதாவது, இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர்.
இமாம் யஹ்யா பின் மஈன் அவர்கள் கூறியதாவது, இவர் நம்பகமானவரன்று.
அபு உபைத் அல்ஆஜிரி அவர்கள் கூறினார்கள், “உஃபைர் பின் மஃதான் பற்றி இமாம் அபுதாவுத் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், “ இவர் நல்ல மனிதர் எனினும் ஹதீஸ் துறையில் பலவீனமானவர்” என்று கூறினார்கள். நான் மீண்டும் கேட்க அவர்கள் மீண்டும் அவ்வாறே கூறினார்கள்.
இமாம் நஸாயீ அவர்கள் கூறியதாவது, இவர் நம்பகமானவரன்று. இவரது ஹதீஸ்களை எழுதப்படாது.
இப்னு அதீ அவர்கள் கூறியதாவது, இவரது பெரும்பான்மையான அறிவுப்புகள் பாதுகாக்கப்பற்றதாகும்.
இப்படி எண்ணற்ற விமர்சனங்கள் இவர் மீதுள்ளது. இமாம் அபு ஹாத்திம்அவர்கள் இவரை காரணத்துடன் விமர்சித்துள்ளார்.
அப்துர்ரஹ்மான் பின் அபி ஹாதிம் அவர்கள் தனது தந்தை அபு ஹாத்திமிடம் உஃபைர் பின் மஃதான் பற்றி கேட்டார்கள். அதற்கு இமாம் அபு ஹாத்திம் அவர்கள், “அவர் ஹதீஸில் பலவீனமானவராவார்” என்று கூறினார்கள். இன்னும், அடிப்படையே இல்லாத செய்திகளுக்கு “நபி(ஸல்) அவர்கள் வழியாக அபி உமாமா, அவர் வழியாக சலீம் பின் ஆமிர், அவர் வழியாக அதிகமான செய்திகளை அறிவித்துள்ளார்.
(தஹ்தீபுல் கமால்)
எனவே காபத்துல்லாவை காணும் பொழுது பிராத்தனை அங்கீகரிக்கப்படும் எனும் ஹதீஸில் உஃபைர் பின் மஃதான் எனும் பலவீனமான அறிவிப்பாளர் வருவதால் இந்த செய்தி பலவீனமானதாகும்.