ஒழிக்கப்படவேண்டிய ஒடுக்கத்து புதன்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

இஸ்லாத்தின் தனித்துவமே அது மூடநம்பிக்கைகளை விட்டு விலக்கல் பெற்றிருப்பதுதான்.அத்தகைய மாண்பையும் மதிப்பையும் மாசுப் படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது முஸ்லிம்களின் சில நம்பிக்கை. மாற்றார்களின் பண்பாட்டிற்கு அச்சுப் பிசகாமல் ஒத்துப்போகிறது இந்த நம்பிக்கை.

பிற மதத்தவர்களின் அனுஷ்டானங்களை இஸ்லாமிய போர்வையில் செயல்படுத்தி வருவது, அங்குலம் அளவிற்கு கூட ஏற்க முடியாததாகும்.

அப்படி சகித்துக்கொள்ள முடியாத மூடநம்பிக்கைகளுள் ஒன்று தான் ஸஃபர் மாத பீடையும், அம்மாதத்தின் ஒடுக்கத்துபுதனில் அரங்கேற்றப்படும் அனாச்சாரமான அனுஷ்டானங்களுமாகும். விவாகம்,வைபவம்,வியாபாரம் போன்ற எந்த நற்காரியங்களும் இம்மாதத்தில் துவங்கப்படாது. அப்படி துவங்கினால் அது துற்சகுனம் என்பது முஸ்லிம்கள் சிலரின் நம்பிக்கை.

அம்மாதத்தின் இறுதி புதன்கிழமையில் ஒட்டுமொத்த பீடையையும் ஓடவிடுகிறோம் என்ற பெயரில், சில வார்த்தைகளை மாவிலையில் எழுதி கரைத்து குடிப்பது, கடலில் கால் நனைத்து வருவது போன்ற சடங்குசாஸ்திரங்கள் அந்நாளில்தாண்டவமாடும்.

இந்த மடமை நம்பிக்கைக்கு மார்க்க சாயம் பூசி,புரட்டு வாதங்களை சகட்டு மேனிக்கு அவிழ்த்துவிட்டு, சில இணையதளங்கள் ஆதரித்து எழுதிய ஆக்கத்திற்கு தக்க பதிலை இப்பதிவில் காண்போம்.

இவ்விவாதத்திற்கு செல்லும் முன் ஒன்றை ஆணித்தனமாக பதியவைக்கிறோம். அது, மார்க்க ஆதாரங்கள் இரண்டு மட்டும் தான். ஒன்று குர்ஆன், மற்றொன்று ஆதாரப்பூர்மான நபிமொழிகள். இவைகள் அல்லாது வேறு எவரது கருத்துக்களும் கண்டுக்கொள்ளப்படாது. ஏனெனில், அந்த இணையதளங்கள் வெளியிட்டுள்ள ஆக்கத்தில் குர்ஆன் ஹதீஸை தவிர மற்றவைகள் அனைத்தும் அங்கம் கொண்டிருக்கிறது.

இஸ்லாத்தின் நம்பிக்கை

அல்லாஹ்வையும், வானவர்களையும், இறைத்தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், விதியையும் நம்பிக்கைக் கொள்வதுதான் ஈமானாகும். இவைகள் அல்லாமல் மார்க்கம் என்ற பெயரில் நம்பப்படுபவைகள் மூடநம்பிக்கைகளாகும்.

சகுனம், நாள் நட்சத்திரம், ஜோதிடம் போன்ற நம்பிக்கைகளை வன்மையாக வசைக்கிறது இஸ்லாம்.

அல்லாஹ்வின்துதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தொற்றுநோய்என்பதுகிடையாது. பறவைகளைக்கொண்டு சகுனம்பார்ப்பதும்ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ‘ஸஃபர்’ மாதம்பீடை என்பதும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

(புகாரி: 5707).

இறைத்தூதர்(ஸல்) அவர்கள்கூறினார்கள்’

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன்காலத்தைஏசுகிறான். நானேகாலம் (படைத்தவன்); என்கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறிமாறிவரச் செய்கிறேன்.

அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)

(புகாரி: 4826)

இறைவனே காலச்சக்கரத்தை சுழலச்செய்கிறான். அவனது அதிகாரத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் காலங்களை நாமே இது நல்ல நாள், இதுகெட்ட நாள் என்று வகைப்படுத்துவது வேதனைக்குறியதாகும். அது படைத்தவனையே பழிப்பதற்கு சமானமானதாகும்.

ஒரு தினத்தை நல்ல நாள் என்றோ, கெட்ட நாள் என்றோ குறிப்பிடுவதாக இருந்தால் அது ஒட்டுமொத்த மக்களுக்கும் ஒத்ததாக அமையவேண்டும். ஒரு நாளைக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. அதே நாளில் சுமார் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் பேர் இறப்பெய்துகின்றனர். ஒரே நாள், அது ஒரு சாராருக்கு நல்ல நாளாகவும், மற்றொரு சாராருக்கு கெட்ட நாளாகவும் எப்படி இருக்க முடியும்? ஆக, மனிதர்களுக்கு அல்லாஹ் எழுதியுள்ள விதிதான் ஒருவனது இன்பத் துன்பங்களை தீர்மானிக்குமே தவிர நாட்கள் அல்ல!

இதை ஆழமாக நம் உள்ளத்தில் பதித்து இத்தலைப்பை அணுகுவோம்.

முஸீபத்துகளை கண்ட முயீனுத்தீன்

ஸஃபர் மாதத்தின் இறுதிப் புதனன்று அவ்வருடத்தின் மூன்று இலட்சம் பலாய், முஸீபத்துகள் இறங்குவதாக மாபெரும் ஞானி குத்புல் ஹிந்து காஜா முயீனுத்தீன் அவர்கள் தம் அகக்கண்பார்வையால் கண்டறிந்ததாக அன்னாரது சீடர் பரீதுத்தீன் ஷக்கன்ஜீ அவர்கள் தமது ‘ஜவாஹிருல்கம்ஸா’ எனும் நூலில் கூறுவதோடு அத்தினத்தில் ‘ஸலாமுன்’ எனத் தொடங்கும் மந்திரத்தை எழுதிக் குடித்தால் அச்சோதனைகள் அவர்களை அணுகாது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நோய் மொத்தமாக இறங்குகிறது.நோய் நிவாரண கொஞ்சம் கொஞ்சமாக இறங்குகிறது’ என்ற நபிமொழியை அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மூலமாக தைலமி அவர்களும், இமாம் ஹாகிம் அவர்கள் தனது தாரீகிலும் பதிவுசெய்துள்ளனர். இதனை இமாம் சுயூத்தி தமது அத்துர்ருல் மன்தூர் எனும் நூலில் கூறுகின்றனர்.(அந்த இணையதளங்களில் எழுதப்பட்டது)

தக்க பதில்

ஸஃபர் மாதத்தின் இறுதி புதனில் அவ்வருடத்தின் மூன்று லட்ச முஸீபத்துகள் வானிலிருந்து இறங்குவதை காஜாமுயீனுத்தீன் என்பார் பார்த்ததாகவும், அதை தன் சீடர் பரீதுத்தீன்ஷக்கன்ஜீ தனது’ஜவாஹிருல்கம்ஸா’ எனும் நூலில் எழுதியதாகவும் இவாக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

காஜாமுயீனுத்தீன் என்பவர் யார்? நபியா? நபித்தோழரா? அல்லது தாபிஃ, தபஃ தாபிஃ போன்றவர்களுள் உள்ளவரா? என்றால் எதுவும் கிடையாது. இவர்தெற்காசியாவில் கி.பி1141-1236 வாழ்ந்து மறைந்த ஒருமனிதர்.இந்தியத் துணைக்கண்டத்தில் இவர்மூலமேசூஃபிஸ கொள்கை உருவெடுக்கிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே மாற்றமானது சூஃபிஸ கொள்கை என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்குராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தர்கா ஒன்று கட்டப்பட்டு வழிபடப்படுகிறது.இதுவே இவரது வரலாற்றுப் பின்னணி.

அல்லாஹ்வின் அனுமதியோடு நபிமார்களுக்கும், குர்ஆன் ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்களுக்குமே தவிர வேறு யாருக்கும் அற்புதங்கள் வழங்கப்படாது.அப்படி வழங்கப்படும் என்று ஒருவர் கூறினால் அதுவே அவர் பொய்யர் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்திவிட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக்கொண்டேன்.

(அல்குர்ஆன்:)

குர்ஆன் ஹதீஸ் இரண்டும்1400 வருடங்களுக்குமுன்னரே முழுமைப்படுத்தப்பட்டுவிட்டது.அதற்கு பிறகு அதில் குறிப்பிடப்படாததை அற்புதம் என்ற பெயரில் மக்களை நம்பவைப்பது அசத்தியத்தின் மொத்த உருவமாகும்.

காஜாமுயீனுத்தீனின் அகக்கண்ணிற்கு மட்டும் அந்த முஸீபத்துக்கள்தென்படும் என்பதற்கான மார்க்க ஆதாரம் என்ன?அல்லாஹ்வோ, ரசூலோ எங்கேனும் நமக்கு முன்னறிவிப்பு செய்துள்ளார்களா?அப்படி எந்த ஆதாரமும் இல்லையே!

சரி,கி.பி1141ல்பிறந்தகாஜாமுயீனுத்தீன் தான் ஸஃபர் மாதத்தின் ஒடுக்கத்து புதனில் இறங்கும் முஸீபத்துக்களையும், அதற்கு செய்யவேண்டிய சடங்கு சம்பிரதாயங்களையும் முதன்முதலில் கண்டுபிடித்தார் என்றால் அவருக்கு முந்தி வாழ்ந்த முஸ்லிம்களின் நிலை என்ன?அவர்கள் தங்களை பீடித்துள்ள முஸீபத்துகளை எப்படி விரட்டியிருப்பார்கள்? முஸீபத்துகள் இறங்குவதும், அதை விரட்டுவதும் மார்க்கம் சொன்ன வழிமுறை என்றால் அது எப்படி பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருக்கும்? என்பன போன்ற வினாக்களுக்கு இவர்களிடம் எந்த விடைகளும் இல்லை.

அடுத்ததாக ஒரு ஹதீஸை மேற்கோள்காட்டி, அதுகாஜாமுயீனுத்தீனின் கருத்திற்கு ஒத்ததாக அமைந்திருக்கிறது என்று கூறுகின்றனர்.

الدرر المنتثرة في الأحاديث المشتهرة 2 (ص: 443)

المرض ينزل جملة واحدة والبرء ينزل قليلا قليلا

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : நோய் மொத்தமாக இறங்குகின்றது. நிவாரணம் கொஞ்சம் கொஞ்சமாகஇறங்குகின்றது.

(நூல்: அல்-திரருல் முன்தஸிரா)

இந்த ஹதீஸ் ஆக பலவீனமானதாகும்.இந்த ஹதீஸ் தொடர்பான இமாம்களின் விமர்சனத்தை பார்ப்போம்.

المقاصد الحسنة (ص: 600)

1012 – حَدِيث: الْمَرَضُ يَنْزِلُ جُمْلَةً وَاحِدَةً، وَالْبُرْءُ يَنْزِلُ قَلِيلا قَلِيلا، الحاكم في تاريخه والخطيب في المتفق والمفترق، والديلمي من طريق عبد اللَّه بن الحارث الصنعاني عن عبد الرزاق عن معمر عن الزهري عن عروة عن عائشة به مرفوعا، وهو باطل، فالصنعاني اتهم بالوضع

அல்-மகாஸித் எனும் நூலில் இமாம் ஸகாவி அவர்கள் கூறுகிறார்கள்,

இந்த ஹதீஸ் பொய்யானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் அஸ்ஸன்ஆன் என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர்.

المتفق والمفترق للخطيب البغدادي (3/ 39)

(883) منها ما قرأت على محمد بن أحمد بن يعقوب عن محمد بن عبدالله بن نعيم النيسابوري وحدثنا أبو بكر محمد بن يحيى ابن سعدان المؤدب البشتي حدثنا عبدالله بن الحارث الصنعاني ببشت حدثنا عبدالرزاق أخبرنا معمر عن الزهري عن سالم عن أبيه قال قال النبي صلى الله عليه وسلم المرض ينزل جملة والبرء ينزل قليلا قليلا قد أخطأ عبدالله بن الحارث في رواية هذا الحديث عن عبدالرزاق هكذا خطأ قطعيا وأتى بذلك أمرا شنيعا وهذا الحديث لا يثبت عن رسول الله صلى الله عليه وسلم بوجه من الوجوه ولا أحد من أصحابه

அல் முத்தஃபிக் வல் முஃப்தரகு எனும் நூலில் இமாம் கதீப் அவர்கள் கூறுகிறார்கள்,

“நோய் மொத்தமாக இறங்குகின்றது. நிவாரணம் கொஞ்சம் கொஞ்சமாகஇறங்குகின்றது” எனும் ஹதீஸை அறிவிக்கும் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் அஸ்ஸன்ஆன் என்பவர்ஹதீஸ்களில் உறுதியாக தவறிழைப்பவர் ஆவார். ஹதீஸ்களில் அருவருப்பானதை கொண்டுவருபவர் அவர்.இந்த ஹதீஸ் நபியவர்கள் வழியாக எந்த முறையிலும், நபித்தோழர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகவில்லை.

ஆக, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஒருகால் இது பலமானதாக இருந்தாலும் காஜாமுயீனுத்தீனின் கருத்திற்கு இது ஒத்ததாக அமையாது. ஏனெனில், ஒடுக்கத்து புதனில் மூன்று லட்ச முஸீபத்துகள் இறங்கும், அதைவிரட்டிட ஸலாமுன் எனத் துவங்கும் மந்திரத்தைமாவிலையில் கரைத்து குடிக்க வேண்டும் என்ற ஒருதகவல்கூட இச்செய்தியில் இடம்பெறவில்லை.

மாறாக, இவ்வுலகில் நோய்கள் அதிகம் இருக்கின்றன, அதற்கான மருந்துகள் இறைவனால் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கப்படும் என்பதே இச்செய்தியின் சாராம்சம். எனினும் இது பலவீனமானதாகும்.

ஒடுக்கத்து புதனில் ஓத வேண்டிய துஆ

سَلاَمٌ قَوْلاَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ. سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِيْنَ. سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ. سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ. سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ. سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ. سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ. اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِ الْقَضَآءِ وَشَمَاتِةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَالَمِيْنَ اٰمِيْنَ

மேற்படியுள்ள துஆவை மாவிலையிலோ, பனை ஓலையிலோ எழுதி கரைத்து குடித்து, நக்ஷபந்த் ஷெய்குகள் பேரில் ஃபாத்திஹா ஓதி அன்பளிப்பு வழங்கினால் பீடைகள் பின்வாங்கிவிடுமாம். இதற்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவதை பாருங்கள்!

“இந்த நாளில் வாழை இலைகளிலோ அல்லது பனை ஓலைகளிலோ திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை உடலில் குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லீம்களிடம் இருந்துவருகிறது. நம் முன்னோர்கள் கற்றறிந்த மார்க்க அறிஞர்களாக இருந்தனர். அவர்களின் பார்வையில் இது மார்க்கத்திற்கு உட்பட்டதாகவே தெரிந்தது. எனவே அதை அவர்கள் தடுக்கவில்லை.” (அந்த இணையதளங்களில் எழுதப்பட்டது)

மார்க்கம் என்று நாம் எதை செய்வதாக இருந்தாலும் அதற்கு குர்ஆன் ஹதீஸின் அனுமதி இருக்க வேண்டும் என்பதை நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம். இந்த நூதன நடைமுறைக்கு மார்க்க ரீதியிலான எந்த ஆதாரமும் இல்லை என்பதை இந்த ஆக்கம் பட்டவர்த்தனமாக பறைசாற்றிவிட்டது.

தொன்று தொட்டு ஒரு நடைமுறை முஸ்லிம்களிடம் இருந்துவிட்டால் அது மார்க்கம்என்றாகிவிடுமா?இறை அனுமதியின்றி இறைத்தூதரே தன்னிச்சையாகஒரு சட்டத்தை கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் படைத்தவர்கள் இல்லை என்கிறது இஸ்லாம்.(பார்க்க(அல்குர்ஆன்: 44:47)அப்பேர்ப்பட்டஇறைத்தூதருக்கே இல்லாத அதிகாரத்தை இவர்களின் முன்னோர்களுக்கு கொடுத்தது யார்?

முன்னோர்களை பின்பற்றுவது குறித்த இஸ்லாத்தின் கண்டனத்தை பாருங்கள்!

“நீங்கள் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும்போது, “அவ்வாறல்ல! எதன் மீது எங்கள் முன்னோரைக் கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகின்றனர். அவர்களுடைய முன்னோர் எதையும் சிந்திக்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா?

(அல்குர்ஆன் – 2 : 170)

உங்கள் இறைவனிடமிருந்து எது உங்களுக்கு அருளப்பட்டதோ அதையே பின்பற்றுங்கள்! அவனையன்றி பொறுப்பாளர்களைப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.

(அல்குர்ஆன் – 7:3)

ஆக, இவர்கள் மொழித்து வரும் மந்திரத்திற்கும் மாண்பு மிகு இஸ்லாத்திற்கும் எள்முனையளவும் சம்பந்தமில்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.

இந்த மந்திரத்தால் என்னை தழுவியுள்ள பீடைகள் நழுவிச் செல்லும் என்றால் சம்பந்தமில்லாத வாசகச் சொற்கள் ஏன்?நபி நூஹின் மீது சலாம்! இப்ராஹீமின் மீது சலாம்! மூசா ஹாரூன் மீது சலாம்! இல்யாஸ் மீது சலாம்! போன்ற வாசகங்கள் இச்செய்யுளில் இடம்பெறுகிறது. ஸஃபர் மாதத்தின் பீடையை ஓடவிடுவதற்கும், இறந்துப் போன நபிமார்கள் மீது சலாமுரைப்பதற்கும் என்ன சம்பந்தம்?

என்றைக்கு ஒருவனது வழிபாடு மார்க்க மதிலைத் தாண்டி விடுகிறதோ அப்போதே அது வாய்மைத் தன்மையை இழந்து விடும்.

மந்திரத்தை கரைத்துக் குடித்தப் பின் நக்ஷபந்தியா ஷெய்க்குகள் பேரில் ஃபாத்திஹா ஓதி அன்பளிப்பு வழங்குவது அடுத்த கட்ட அனுஷ்டானம்.

நக்ஷபந்தியா என்பது ஸூஃபி மதத்தின்உறைவிடமாகும்.அங்கு சில மனிதர்கள் மகான்கள் என்று மதிக்கப்படுகின்றனர்.யூசுப்ஹம்தானி, அப்துல்காலிக்கஜத்வானி, இமாம்ரப்பானி, சம்சுதீன்மதார், மவ்லானா காலித் அல்பக்தாதி, சுல்தானுல் அவ்லியா ஷெய்க், நாஸிம் அல்ஹக்கானி, ஷெய்கு அத்நான் முஹம்மத் கப்பானி, ஷெய்கு இஷாம் முஹம்மது கப்பானி, ஷெய்கு முஹம்மத் ஆதில் ரப்பானி, முபஷ்சிர் நக்ஷிபந்தி போன்றோகளே அந்த சான்றோர்கள்(?). நபியவர்களிடமிருந்து சங்கிலித் தொடராக சில ஞான உதயங்கள் தங்களுக்கு வந்துள்ளதென மக்களிடம் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள்.

இறந்துப் போன இவர்களின் பேரில் ஃபாத்திஹா ஓதினால் பீடைகள் ஓடோடிவிடுமாம். இதை எந்த ஹதீசிலிருந்து கண்டுபிடித்தீர்கள்? எந்த குர்ஆன் வசனம் இவர்களுக்கு ஃபாத்திஹா ஓதுமாறு கட்டளையிட்டது? நபியவர்கள் காலத்தில் எத்தனையோ பேர் இறந்துப்போனார்கள். அவர்களில் யாருக்கேனும் நபியவர்கள் ஃபாத்திஹா ஓதினார்களா? ஆகச்சிறந்த ஆன்மாக்களான நபித்தோழர்களின் பெயரிலே ஃபாத்திஹாக்கள் ஓதப்படவில்லையானால் இந்த ஷெய்க்குகளெல்லாம்(?)எம்மாத்திரம்!

ஆக, மந்திரம் பாடுவது, மாந்திரீகன் என நம்பி ஃபாத்திஹா ஒதுவதெல்லாம் இஸ்லாத்திற்கு எதிரான சமாச்சாரங்களாகும்.

கெட்ட நாள் என்று குர்ஆன் குறிப்பிடுகிறதா?

நீடித்ததுயரம்மிகுந்தநாளில்அவர்களுக்குஎதிராகக்கடும்சூறாவளியைஅனுப்பினோம்.

(அல்குர்ஆன் – 54 : 19)

அவர்களைஇவ்வுலகவாழ்வில்இழிவானவேதனையைச்சுவைக்கச்செய்வதற்காகத்துயரமானநாட்களில்கடும்புயல்காற்றைஅவர்கள்மீதுஅனுப்பினோம். மறுமைவேதனையோமிகஇழிவானது. அவர்கள்உதவிசெய்யப்படவும்மாட்டார்கள்.

(அல்குர்ஆன் – 41 : 16)

ஆது சமுதாயம் அழிக்கப்பட்ட சரித்திரத்தை வல்லோன் குர்ஆனில் குறிப்பிடும் பொழுது “யவ்மு நஹ்ஸ் – துக்கநாளில்” அழிக்கப்பட்டார்கள் என்று குறிப்பிடுகின்றான். எனவே நற்சகுனம், துற்சகுனம் என்பது மார்க்கத்தில் உள்ளதுதான் என்று கூறுகின்றனர்.

ஆது சமுதாயத்தின் இறைமறுப்பாளர்கள் அழிக்கப்பட்டது கெட்ட நாளில் என்றால் அதே நாளில் உயிர்த்தப்பிய ஹூத்(அலை) மற்றும் அவர்களை நம்பிக்கை கொண்ட இறைவிசுவாசிகளுக்கு அது நல்ல நாளாக இருக்கிறதே! ஒரே நாள் எப்படி நல்ல நாளாகவும், கெட்ட நாளாகவும் இருக்க முடியும்? எனவே நல்லதையும் தீயதையும் நாட்கள் தீர்மானிக்காது என்பதை நாம் புரியவேண்டும்.

இன்னும் இந்த வசனத்தில் குறிப்பிட்ட கிழமையை கெட்ட நாள் என்று சொல்லப்படவில்லை. அந்த அழிவு ஏழு நாட்கள் நீடித்ததாக மற்ற வசனங்கள் கூறுகின்றது.

அதனைத் தொடர்ச்சியாக ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள் மீது வீசச்செய்தான். அக்கூட்டத்தினர் அடியோடு பிடுங்கப்பட்ட பேரீச்சை மரங்களைப் போல் அங்கு வீழ்ந்து கிடப்பதை நீர் காண்பீர்.

(அல்குர்ஆன் – 69 : 7)

ஏழு நாட்களுள் வாரத்தின்எல்லா கிழமைகளும் அடங்கும். இவர்களின் வாதப்படி வாரத்தின் ஏழு கிழமைகளும் கெட்ட நாளாகும். அப்படி பார்த்தால் வருடத்தில் நல்ல நாளே பிறக்காது.

எனவே இவ்வசனத்தை அவ்வாறு புரிந்துக்கொள்ளக் கூடாது. ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கோ அல்லது சமூகத்திற்கோ கேடு ஏற்பட்டால் அது அவர்களுக்கு மட்டும் சோதனைக்குறிய நாளாக இருக்குமே தவிர மற்றவர்களுக்கு அல்ல. ஏழு நாட்கள் கடும் காற்றினால் அவர்கள் சோதிக்கப்பட்டதால்அது அவர்களுக்கு துயரம் மிகுந்த நாள்என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

இன்னும்,ஆது சமுதாயம் அழிக்கப்பட்டது ஸஃபர் மாதம் என்றோ, புதன் கிழமை என்றோ எங்கும் குறிப்பிடப்படவில்லை.ஸஃபர் மாதத்தை பீடை என்பவர்கள் நேரடியான ஆதாரத்தை குறிப்பிட வேண்டும்.அப்படி எந்த ஆதாரங்களும் குர்ஆன் ஹதீஸில் இல்லை.

நாட்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள பலவீனமான செய்திகள்

கிழமைகள் தொடர்பாகவந்திருக்கும் படு பலவீனமான செய்திகளை அந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்திகளின் நிலைகளை பாப்போம்.

المجروحين (2/ 190)

وروى عن حماد بن سلمة عن أبى الزبير عن جابر قال: قال رسول الله صلى الله عليه وسلم ” من غرس غرسا يوم الاربعاء وقال: سبحان الباعث الوارث آنته بأكلها ” أخبرناه محمد ابن المسيب قال: حدثنا إسحق بن وهب العلاف عنه

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள்: யார் புதன்கிழமையன்று மரங்களை நட்டி “சுப்ஹானல் பாஇஸில் வாரிஸ்” என்று கூறுகிறாரோ அவருக்கு அம்மரங்கள் காய்கனிகளை கொடுக்கும்.

(நூல்: அல் மஜ்ரூஹீன் 828)

இந்த செய்தியை இப்னு ஹிப்பான் “அல் மஜ்ரூஹீன்”எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். குறைப்படுத்தப்பட்டவர்களின் செய்திகளை பதிவதுதான் இந்நூலின் முக்கிய நோக்கம். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். ஃபிர்தவ்ஸ் எனும் நூலில் தைலமி அவர்கள் அறிவிப்பாளர் தொடரின்றி இச்செய்தியை கொண்டுவந்துள்ளார். இதுவும் ஏற்க தகுந்ததல்ல.

அடுத்தது,

مسند أبي يعلى ـ محقق (4/ 479)

2612 – حدثنا عمرو بن حصين حدثنا يحيى بن العلاء حدثنا عبد الله بن عبد الرحمن عن أبي صالح : عن ابن عباس قال يوم الأحد يوم غرس وبناء ويوم الاثنين يوم السفر ويوم الثلاثاء يوم الدم ويوم الأربعاء يوم أخذ ولاعطاء فيه ويوم الخميس يوم دخول على السلطان ويوم الجمعة يوم تزويج وباءة

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஞாயிற்றுக் கிழமை மரம் நடுதல் மற்றும் கட்டிடம் கட்டுவதற்குரிய நாளாகும். திங்கட்கிழமை பயணத்திற்குரிய நாளாகும். செவ்வாய் கிழமை போர் தொடுக்கும் நாளாகும். புதன் கிழமை கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளும் நாளாகும். வியாழக்கிழமை அதிகாரிகளிடம் செல்வதற்குரிய நாளாகும். வெள்ளிக்கிழமை திருமணப்பேச்சுக்கும், திருமணம்செய்வதற்கும் பொருத்தமான நாளாகும்.

(நூல்: முஸ்னத் அபி யஃளா2612)

فيض القدير (1/ 46)

وأخرج أبو يعلى عن ابن عباس رضي الله عنهما وابن عدي وتمام في فوائده عن أبي سعيد رضي الله تعالى عنه مرفوعا: ” يوم السبت يوم مكر وخديعة ويوم الأحد يوم غرس وبناء ويوم الاثنين يوم سفر وطلب رزق ويوم الثلاثاء يوم حديد وبأس ويوم الأربعاء لا أخذ ولا عطاء ويوم الخميس يوم طلب الحوائج والدخول على السلاطين ويوم الجمعة يوم خطبة ونكاح “. قال السخاوي: وسنده ضعيف

அபூ யஃளா பதிவு செய்த இந்த ஹதீஸை இமாம் சகாவி அவர்கள் பலவீனம் என்று விமர்சித்துள்ளார்கள். ஆக, இதுவும் பலவீனமான செய்தியாகும்.

(நூல் : ஃபைலுல் கதீர்)

இன்னும் நபி(ஸல்) அவர்கள் வியாழன் அன்று போர் தொடுப்பதையே விரும்பி வந்தார்கள் என்பதை ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கின்றது.

கஅப்இப்னுமாலிக்(ரலி) கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தபூக் போருக்கு வியாழக்கிழமையன்று தான் புறப்பட்டார்கள். வியாழக்கிழமையன்று (பயணம்) புறப்படுவதை அவர்கள் விரும்பிவந்தார்கள்.

(புகாரி: 2950).

அடுத்தது,

سنن ابن ماجة ـ محقق ومشكول (4/ 530)

3488- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عِصْمَةَ ، عَنْ سَعِيدِ بْنِ مَيْمُونٍ ، عَنْ نَافِعٍ ، قَالَ : قَالَ ابْنُ عُمَرَ : يَا نَافِعُ ، تَبَيَّغَ بِيَ الدَّمُ ، فَأْتِنِي بِحَجَّامٍ ، وَاجْعَلْهُ شَابًّا ، وَلاَ تَجْعَلْهُ شَيْخًا ، وَلاَ صَبِيًّا ، قَالَ : وَقَالَ ابْنُ عُمَرَ ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ يَقُولُ وَمَا يَبْدُو جُذَامٌ ، وَلاَ بَرَصٌ ، إِلاَّ فِي يَوْمِ الأَرْبِعَاءِ ، أَوْ لَيْلَةِ الأَرْبِعَاءِ.

நபி)ஸல்) அவர்கள் கூறினார்கள் : வெண்குஷ்டம், கருங்குஷ்டம் இரண்டும் புதன்கிழமையில் தான் வெளியாகும்.

(இப்னு மாஜா: 3488),(ஹாகிம்: 7481)

இந்த ஹதீஸின் விமர்சனத்தை பார்ப்போம்.

تهذيب الكمال 742 (19/ 434)

لم ينسبه بأكثر من هذا فإن لم يكن الطرائفي فلا أدري من هو روى له ابن ماجة حديث الحجامة

இமாம் மிஸ்ஸி அவர்கள் கூறுகிறார்கள் : இமாம் இப்னு மாஜா(ரஹ்) அவர்களின் அறிவிப்பாளரான உஸ்மான் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் தராஇஃப் என்ற பரம்பரையை சாராதவராக இருந்தால் அவரை நான் யாரென்று அறியமாட்டேன்.

(நூல்: தஹ்தீபுல் கமால்3841)

இந்த அறிவிப்பாளர் எந்த பரம்பரையோடும் இணைக்கப்படாததால் இவர் யாரென்று அறிப்படதாவர் ஆவார். ஆக, இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.

இதே செய்தி இப்னு மாஜாவில் 3487 எண்ணிலும் இடம்பெற்றிருக்கின்றது. அந்த செய்தியில் உஸ்மான் பின் மதர் ஷைபானி எனும் அறிவிப்பாளர் இடம்பெருகிறார். அவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்படவேண்டியவர் ஆவார்.

التاريخ الكبير (6/ 253)

عثمان بن مطر الشيباني، سمع ثابتا ومعمرا، سمع منه على بن ابى هاشم وسعيد بن سليمان منكر الحديث

உஸ்மான் பின் மதர் ஷைபானி ஹதீஸ் துறையில் மறுக்கப்படவேண்டியவர் ஆவார்.

(நூல் : அதாரீகுல் கபீர்)

ஹாகிமில் இடம்பெற்றிருக்கும் செய்தியில் அத்தாஃப் பின் காலித் எனும் அறிவிப்பாளரை ‘இவர் பலமானவர் அல்ல’ என்று இமாம் நஸாயி அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: தஹ்தீபுல் கமால்)

الضعفاء للعقيلي (3/ 425)

1466- عطاف بن خالد المخزومي أبو صفوان المديني

“லுஅஃபா” எனும் நூலில் பலவீனமான அறிவிப்பாளர்களின் பட்டியலில் அத்தாஃப் பின் காலிதைஇமாம் ஜஃபர் அல்உகைலி அவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.

(நூல்: லுஅஃபாஉல்கபீர்)

الضعفاء والمتروكون للدارقطني (ص: 31)

424 – عطاف بن خالد المخزومي مدني، ضعيف

இமாம் தாரகுத்னி அவர்கள் அத்தாஃப் பின் காலிதை “படு பலவீனமானவர்” என விமர்சித்துள்ளார்கள்.

(நூல்: லுஅஃபாஉ வல் மத்ரூகீன் லித் தாரகுத்னி)

புதன் கிழமை முஸீபத்துகள் இறங்கும் மடிமை நாள் என்று கூறியவர்கள், அது தொடர்பான ஹதீஸை மட்டும் குறிப்பிடாமல் புதன் கிழமை நல்ல நாள் என்பது தொடர்பாக வரும் ஹதீஸ்களையும் குறிப்பிடுகின்றனர். ஆக்கத்தின் ஆரம்பத்தில் பீடை புதன் என்றவர்கள், கட்டுரையின் இறுதியில் புதன் கிழமை நல்ல நாள் என்று ஹதீஸ்களில் வந்துள்ளது என முன்னுக்குப் பின் முரணாக பேசுகின்றனர். எனினும் அந்த அனைத்து செய்திகளும் ஆக மோசமானதாகும்.

இது போன்ற பலவீனமான செய்திகளை பதிவு செய்து, அது பலவீனம் என்பதையும் ஒப்புக்கொண்டு, இந்த செய்திகள் பலவீனமானதாக இருந்தாலும் இதை நடைமுறைப்படுத்துவது குற்றமாகாது என்றுஅந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.இது, இவர்கள் முன்னோர்களின் சம்பிரதாயங்களை நியாயப் படுத்திட எந்த எல்லையையும் எட்டிவிடுவார்கள் என்பதை தெரியப்படுத்துகிறது.

பலவீனமான செய்திகளை பதிவதுகுறித்துஇமாம் முஸ்லிம் அவர்கள் கூறியதாவது,

பலவீனமான ஹதீஸ்களையும் மறுக்கப்பட்ட அறிவிப்புகளையும் கைவிட்டு, உண்மை, நாணயம் ஆகியவற்றில் பெயர்பெற்ற நம்பத்தகுந்தோர் அறிவித்துள்ள பிரபலமான சரியான தகவல்களை மட்டுமே அறிவிப்பது தொகுப்பாளர்களின் கடமையாயிருக்க, அதில் முறைதவறி நடந்துகொள்கிறார்கள்.

இந்நிலையை நாம் கண்டதால் தான் நீங்கள் கோரியபடி ஹதீஸ்களைத் தரம் பிரித்துக் காட்டிச் சரியானவற்றைச் சேகரிக்கும் பணியில் ஈடுபடவேண்டியதாயிற்று. பலவீனமானதும் அறியப்படாததுமான அறிவிப்பாளர் தொடர்களில் வரும் மறுக்கப்பட்ட செய்திகளை, அவற்றின் குறைகளைக் கண்டறியமுடியா மக்களிடம் அவர்கள் பரப்பி வருவதால் தான் உங்கள் கோரிக்கையை ஏற்பது நமக்கு எளிதாயிற்று.

(நூல்: ஸஹீஹ்முஸ்லிம், முன்னுரை)

குர்ஆனும் நம்பகமற்றவர் அறிவிப்பதைக் கொண்டு தீர்ப்பு வழங்கக் கூடாது என்று குறிப்பிடுகின்றது.

இறைநம்பிக்கை கொண்டோரே! பாவம் செய்பவன் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அறியாமையால் ஒரு கூட்டத்தாருக்கு நீங்கள் தீங்கிழைக்காதிருக்க (அதன் உண்மைத்தன்மையை)த் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள். (இல்லையெனில்) நீங்கள் செய்ததற்காக வருந்துவோராக ஆகிவிடுவீர்கள்.

(அல்குர்ஆன் – 49 : 6)

ஒரு பாவி நம்மிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அந்த செய்து உண்மை தானா எனத் தெளிவுப்பத்தச் சொல்குறது குர்ஆன். யாரெவரென்று ஆராயாமல் சகட்டுமேனிக்கு தீர்ப்பு வழங்கக் கூடாது என்கிறது. எனவே நம்பகமானவர்கள் வழியாக வரும் ஹதீஸ்களை மட்டுமே நம்பி நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆக,ஸஃபர் மாதம் பீடையென்றோ, ஒடுக்கத்து புதனில் முஸீபத்துகளை ஓடவிட வேண்டும் என்றோ மார்க்க ரீதியிலான எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஆணித்தனமாக பதியவைத்துக்கொள்கிறோம்.