ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா
ஒரு பள்ளியில் இரண்டு ஜும்மா கூடுமா
நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ?
அஸ்வார் முஹம்மத்
பதில் :
ஜும்ஆ பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகை சட்டங்களை அறிந்து கொள்வது தெளிவுபெற உதவியாக இருக்கும்.
ஒரு பள்ளியில் இரண்டு ஜமாஅத் நடத்துவது பற்றி விரிவாக நாம் அறிந்து கொள்வது அவசியம். ஒரு பள்ளியில் ஒரு ஜமாஅத்தைத் தவிர அடுத்த ஒரு ஜமாஅத் நடத்துவது எந்தச் சூழ்நிலையிலும் கூடாது என்று பொதுவாக பலர் மறுத்து வருகின்றனர்.
ஆனால் இதுபற்றி நாம் ஆய்வு செய்யும் போது இரண்டாவது ஜமாஅத்தை முறையாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் அனுமதிப்பதையும் இதை முறைகேடாகப் பயன்படுத்தினால் அதை மார்க்கம் தடை செய்வதையும் அறிய முடிகின்றது.
சரியான அடிப்படையில் ஒரு நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது அதைச் சீர்குலைப்பதற்காகவும் போட்டிக்காகவும் ஜமாஅத் நடத்துபவர்களும் இருக்கின்றார்கள். இது போன்ற தவறான நோக்கமின்றி இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அதை மார்க்கம் அனுமதிக்கவே செய்கின்றது.
அனுமதிக்கப்பட்ட இரண்டாவது ஜமாஅத்
முதலாவது ஜமாஅத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்தடுத்து கூட்டாகத் தொழுவதை மார்க்கம் அனுமதிக்கின்றது. இதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
10596 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ عَنْ سَعِيدٍ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ النَّاجِيُّ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ ثُمَّ جَاءَ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَتَّجِرُ عَلَى هَذَا أَوْ يَتَصَدَّقُ عَلَى هَذَا فَيُصَلِّيَ مَعَهُ قَالَ فَصَلَّى مَعَهُ رَجُلٌ رواه أحمد
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு தர்மம் செய்பவர் யார்?” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
நூல்கள் : திர்மிதி 204,(அஹ்மத்: 10596)
ஜமாஅத் முடிந்த பின்னர் வந்த மனிதரைத் தனியாகத் தொழ விடாமல், ஏற்கனவே தொழுத ஒருவருடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள். அவ்வாறு தொழுவது தனியாகத் தொழுவதை விட நன்மையானது எனவும் குறிப்பிடுகின்றார்கள். “இவருக்கு தர்மம் செய்பவர் யார்?” என்ற வாசகத்திலிருந்து இதை அறியலாம்.
அதாவது ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் நன்மையை தர்மம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஏற்கனவே தொழுத நபித்தோழர் தனியாகத் தொழுத மனிதருடன் சேர்ந்து கொள்வதால் அந்த மனிதர் ஜமாஅத்துடைய நன்மையைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கின்றார். எனவே இவரை தர்மம் செய்யக் கூடியவர் என்றும் அந்த மனிதரை தர்மத்தைப் பெறக் கூடியவர் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மொத்தத்தில் கூட்டுத் தொழுகையால் இருவருக்கும் நன்மைகள் கிடைத்து விடுகின்றன.
எனவே முதல் ஜமாஅத் முடிந்த பின்னர் தாமதமாக வருபவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் ஜமாஅத்தாகத் தொழுவதே சிறந்தது.
646 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا اللَّيْثُ حَدَّثَنِي ابْنُ الْهَادِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ خَبَّابٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ صَلَاةُ الْجَمَاعَةِ تَفْضُلُ صَلَاةَ الْفَذِّ بِخَمْسٍ وَعِشْرِينَ دَرَجَةً رواه البخاري
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
தனியாகத் தொழுவதை விட கூட்டாக (ஜமாஅ)த்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து தொழுவது அவர் தனியே தொழுவதை விடச் சிறந்ததாகும். ஒருவர் இரு மனிதர்களுடன் சேர்ந்து தொழுவது அவர் ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விடச் சிறந்ததாகும். (ஜமாஅத்தில் கலந்து கொள்ளும்) நபர்கள் அதிகமானால் அது அல்லாஹ்விற்கு விருப்பமானதாகும்.
அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி) அவர்கள்
முதலாவது ஜமாஅத் தவறிப் போனால் அடுத்தடுத்து வருபவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் கூட்டாகத் தொழுது கொள்ளலாம் என்றும், அவ்வாறு தொழவதே சிறந்தது என்றும் இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன.
இருவர் இருந்தாலும் அது ஜமாஅத் ஆகிவிடும். தனியாகத் தொழுவதை விட இருவராகத் தொழுவது சிறந்தது. ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இதன் சிறப்பும் அதிகமாகும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
எனவே முதல் ஜமாஅத்தைத் தவற விட்டவர்கள் தனியாகத் தொழ வேண்டும் என்று யாரேனும் கூறினால் அவர்கள் மேற்கண்ட இரு நபிமொழிகளுக்கும் எதிராக செயல்படுகிறார்கள் என்பதே உண்மை.
ஒரு ஜும்ஆ முடிந்து ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு ஜும்ஆ நடத்துவது கூடுமா என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள். முதலாவது ஜும்ஆவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தவர்கள் தாங்களாகக் கூடி இரண்டாவதாக ஜும்ஆ நடத்தினால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில் அது அனுமதிக்கப்பட்டதுமன்றி வரவேற்கத்தக்கதுமாகும்.
ஒரு மணி நேரம் கழித்துத் தான் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதல்ல. முதலாவது ஜும்ஆத் தொழுகை முடிந்து விட்டால் இதன் பிறகு வருபவர்கள் உடனே ஜமாஅத் நடத்த விரும்பினால் அவ்வாறு செய்வது தவறல்ல.
தனியாகத் தொழுவதை விட கூட்டாகத் தொழுவது சிறந்தது என்ற அடிப்படையில் தான் இரண்டாவது ஜமாஅத் நடத்துவதை மார்க்கம் அனுமதிக்கின்றது.
முதலாவது நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா? அடுத்து நடத்தப்பட்ட ஜமாஅத் சிறந்ததா? என்று நாம் யோசித்தால் முதலாவது ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.
முதல் ஜமாஅத்தே சிறந்தது
பொதுவாக ஜமாஅத் தொழுகையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் அனைத்திலும் பள்ளியில் பாங்கு சொல்லி, நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிப்பதாக அமைந்துள்ளன. ஹதீஸ்களில் முதல் ஜமாஅத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் இருப்பதைக் காண முடிகின்றது.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, சுள்ளிகளாக உடைக்கும்படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ, அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பள்ளியில் பாங்கு சொல்லி நடத்தப்படும் முதல் ஜமாஅத்திற்கு வராதவர்களைத் தான் கண்டிக்கின்றார்கள். பள்ளியில் இஷாத் தொழுகையின் ஜமாஅத் எட்டு மணிக்கு என்றால் பத்து மணிக்குக் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தித் தொழ முடியும். ஆனால் இது முதல் ஜமாஅத்தில் தொழுததைப் போன்று நன்மையைப் பெற்றுத் தராது என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
பொதுவாகவே முதல் ஜமாஅத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாவது ஜமாஅத்திற்குக் கொடுக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,
நூற்கள் : நஸயீ 848,(அஹ்மத்: 15799)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குத் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் பள்ளிக்கு வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இவருக்கு தர்மம் செய்யக் கூடியவர் யார்? அவர் இவரோடு சேர்ந்து தொழட்டும்” என்று கூறினார்கள். அந்த சபையிலிருந்த ஒருவர் எழுந்து அம்மனிதருடன் தொழுதார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி),
பாங்கு சொல்லப்பட்டு முதல் ஜமாஅத் நடைபெறும் போது, தொழாமல் இருந்த நபித்தோழரைப் பார்த்து, நீ முஸ்லிம் தானா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுதாக வேண்டும் என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் அதே சமயம் இரண்டாவது ஜமாஅத் நடைபெறும் போது எல்லோரும் அதில் சேர்ந்து தொழ வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்து முதல் ஜமாஅத்திற்கு இருக்கும் முக்கியத்துவம் இரண்டாவது ஜமாஅத்திற்கு இல்லை என்பதை அறியலாம்.
ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதற்கு அதிக நன்மை என்று பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. முதல் ஜமாஅத்தில் தொழுவதற்குத் தனிச் சிறப்பு இல்லையென்றால் முதல் ஜமாஅத்தில் இரண்டாவது வரிசையில் தொழுபவரை விட, இரண்டாவது ஜமாஅத்தில் முதல் வரிசையில் தொழுபவருக்கு அதிக நன்மை என்றாகி விடும். இதிலிருந்து ஹதீஸ்களில் கூறப்படும் ஜமாஅத் தொழுகை என்பது பள்ளியில் நடத்தப்படும் முதல் ஜமாஅத்தையே குறிக்கும் என்பதை அறிய முடியும். எனவே இரண்டாவது ஜமாஅத்தை விட முதல் ஜமாஅத்தில் தொழுவது தான் சிறந்ததாகும்.
மேலும் அதிகமான நபர்கள் கூடி நடத்தப்படும் ஜமாஅத் அதிகச் சிறப்பு வாய்ந்தது என்று ஹதீஸ் கூறுகின்றது. குறித்த நேரத்தில் முடிவு செய்யப்பட்ட முதல் ஜமாஅத்திற்கே அதிகமான நபர்கள் வருகை தருவார்கள். எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் முதல் ஜமாஅத்தே சிறந்தது என்பதை அறியலாம்.
அதே சமயத்தில் இணைவைக்கும் இமாம், சுன்னத்துக்களைப் புறக்கணிக்கும் இமாம் போன்றவர்கள் தொழுகை நடத்தும் பள்ளிகளிலும், நபிவழியைப் பேணி தொழுபவர்களை ஜமாஅத்தில் சேர்ந்து தொழவிடாமல் தடுக்கும் பள்ளிகளிலும் முதல் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதற்கு குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்களுக்கு வாய்ப்பில்லை. இது போன்ற மார்க்கக் காரணங்களுக்காக இரண்டாவது ஜமாஅத்தில் தொழும் போது, அது முதல் ஜமாஅத்தை விட சிறப்பு குறைந்ததாக ஆகாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வேண்டுமென்றே புறக்கணிக்கலாகாது?
மார்க்க அடிப்படையில் நியாயமான காரணங்கள் இல்லாமல் முதலாவது ஜமாஅத்தை வேண்டுமென்றே புறக்கணிப்பதும் போட்டிக்காக இன்னொரு ஜமாஅத் உருவாக்குவதும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்கள் நடத்திய ஜமாஅத் தொழுகையை எவரும் புறக்கணிக்கவில்லை. ஆனால் ஒருவர் புறக்கணிப்பதை நாடாவிட்டாலும் புறக்கணிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் காரியத்தைச் செய்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
848أَخْبَرَنَا قُتَيْبَةُ عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ بُسْرُ بْنُ مِحْجَنٍ عَنْ مِحْجَنٍ أَنَّهُ كَانَ فِي مَجْلِسٍ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذَّنَ بِالصَّلَاةِ فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ رَجَعَ وَمِحْجَنٌ فِي مَجْلِسِهِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ أَلَسْتَ بِرَجُلٍ مُسْلِمٍ قَالَ بَلَى وَلَكِنِّي كُنْتُ قَدْ صَلَّيْتُ فِي أَهْلِي فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ رواه النسائي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் மிஹ்ஜன் (ரலி) இருந்தார். அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று (தொழுது விட்டு) திரும்பி வந்தார்கள். மிஹ்ஜன் (ரலி) அதே சபையில் இருந்தார். “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மிஹ்ஜன் (ரலி), “அப்படியில்லை! நான் வீட்டிலேயே தொழுது விட்டேன்” என்று கூறினார். நீ வீட்டில் தொழுதிருந்தாலும் (பள்ளிக்கு) வந்தால் மக்களோடு சேர்ந்து தொழு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புஸ்ர் பின் மிஹ்ஜன்,
நூற்கள் :(நஸாயீ: 848), அஹ்மத்
ஜமாஅத் நடைபெறும் போது தொழாமல் இருப்பது ஒரு முஸ்லிமுக்கு உகந்ததல்ல. “நீ தொழாமல் இருந்தது ஏன்? நீ முஸ்லிம் இல்லையா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து இதை அறியலாம். எனவே ஜமாஅத்தை நியாயமின்றி புறக்கணிப்பது வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது.
203حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا هُشَيْمٌ أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ يَزِيدَ بْنِ الْأَسْوَدِ الْعَامِرِيُّ عَنْ أَبِيهِ قَالَ شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَّتَهُ فَصَلَّيْتُ مَعَهُ صَلَاةَ الصُّبْحِ فِي مَسْجِدِ الْخَيْفِ قَالَ فَلَمَّا قَضَى صَلَاتَهُ وَانْحَرَفَ إِذَا هُوَ بِرَجُلَيْنِ فِي أُخْرَى الْقَوْمِ لَمْ يُصَلِّيَا مَعَهُ فَقَالَ عَلَيَّ بِهِمَا فَجِيءَ بِهِمَا تُرْعَدُ فَرَائِصُهُمَا فَقَالَ مَا مَنَعَكُمَا أَنْ تُصَلِّيَا مَعَنَا فَقَالَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا قَدْ صَلَّيْنَا فِي رِحَالِنَا قَالَ فَلَا تَفْعَلَا إِذَا صَلَّيْتُمَا فِي رِحَالِكُمَا ثُمَّ أَتَيْتُمَا مَسْجِدَ جَمَاعَةٍ فَصَلِّيَا مَعَهُمْ فَإِنَّهَا لَكُمَا نَافِلَةٌ رواه الترمذي
யஸீத் பின் அஸ்வத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்த போது அவர்களுடன் நானும் இருந்தேன். நான் கைஃப் பள்ளியில் அவர்களுடன் ஃபஜர் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிய போது தன்னுடன் தொழுகையில் கலந்து கொள்ளாத இருவரை கூட்டத்தின் இறுதியில் (அமர்ந்து) இருப்பதைக் கண்டார்கள். அவ்விருவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கூறினார்கள். அவ்விருவரின் தோல் புஜங்களும் (அச்சத்தால்) நடுங்கிய நிலையில் அவ்விருவரும் அழைத்து வரப்பட்டனர். நீங்கள் ஏன் நம்முடன் சேர்ந்து தொழவில்லை? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்களுடைய வீடுகளிலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டோம் என்று கூறினர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் உங்களுடைய வீடுகளில் தொழுதுவிட்டு ஜமாஅத் நடக்கும் பள்ளிக்கு வந்தால் மக்களுடன் சேர்ந்து தொழ வேண்டும். இத்தொழுகை உங்களுக்கு உபரியானதாகி விடும் என்றார்கள்.
பள்ளியில் ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது தொழாமல் இருந்தால் அந்த ஜமாஅத்தைப் புறக்கணிக்கும் தோற்றம் ஏற்படும் என்பதற்காக ஏற்கனவே தொழுதிருந்தாலும் ஜமாஅத்துடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்கள்.
214حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ عَنْ عَمْرِو بْنِ رَاشِدٍ عَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ قَالَ أَبُو عِيسَى و سَمِعْت الْجَارُودَ يَقُولُ سَمِعْتُ وَكِيعًا يَقُولُ إِذَا صَلَّى الرَّجُلُ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَإِنَّهُ يُعِيدُ رواه الترمذي
வாபிஸா பின் மஅபத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு மனிதர் ஸஃப்புக்குப் பின்னால் (மக்களுடன் சேர்ந்து நிற்காமல்) தனியாகத் தொழுதார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை மீண்டும் நிறைவேற்றுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள்.
இந்தச் செய்தியில் அந்த மனிதர் ஜமாஅத்துடன் தொழுவதையே நாடியுள்ளார். ஆனால் மக்களுடன் சேர்ந்து நிற்கவில்லை. இது ஜமாஅத்தைப் பிளவுபடுத்தும் செயல் என்பதால் அவருடைய தொழுகை கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
எனவே முதல் ஜமாஅத்தைத் திட்டுமிட்டு அநியாயமாக புறக்கணிப்பது தவறு என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
நியாயமான காரணங்களுக்காகப் புறக்கணிக்கலாம்
முதலாவது ஜமாஅத்தைப் புறக்கணிப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் இரண்டாவது ஜமாஅத் நடத்தினால் அது தவறல்ல. இதைப் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகின்றது.
6106حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ أَخْبَرَنَا يَزِيدُ أَخْبَرَنَا سَلِيمٌ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمْ الصَّلَاةَ فَقَرَأَ بِهِمْ الْبَقَرَةَ قَالَ فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلَاةً خَفِيفَةً فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا فَقَالَ إِنَّهُ مُنَافِقٌ فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا وَنَسْقِي بِنَوَاضِحِنَا وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا الْبَارِحَةَ فَقَرَأَ الْبَقَرَةَ فَتَجَوَّزْتُ فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مُعَاذُ أَفَتَّانٌ أَنْتَ ثَلَاثًا اقْرَأْ وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحْ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَنَحْوَهَا رواه البخاري
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் (பனூ சலமா) கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். (ஒரு முறை அவர் இஷாத் தொழுகை நடத்தும் போது) அவர்களுக்கு “அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் விரைவாகத் தொழுது விட்டுச் சென்று விட்டார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், “அவர் ஒரு நயவஞ்சகர்” என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது “அல்பகரா’வை ஓதினார்கள். ஆகவே, நான் (விலகித் தனியாகச் சென்று) விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம்” என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், “முஆதே! (நீரென்ன) குழப்பவாதியா?” என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், “(நீர் இமாமாக நிற்கும் போது) ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற (சிறிய) அத்தியாயங்களை ஓதுவீராக!” என்றும் சொன்னார்கள்.
ஜமாஅத்தைப் புறக்கணிப்பது நயவஞ்சகனின் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர்கள் தவறிழைத்து அதனால் ஒருவர் அந்த ஜமாஅத்தைப் புறக்கணித்தால் இப்போது புறக்கணித்தவர் மீது குற்றமில்லை. இவர் ஜமாஅத்தைப் புறக்கணித்தவராக ஆகமாட்டார்.
மாறாக அவரை இந்த நிலைக்குத் தள்ளிய ஜமாஅத்தின் பொறுப்பாளர்களே கண்டனத்திற்குரியவர்கள். இதை மேற்கண்ட சம்பவம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
எனவே நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு ஜமாஅத்தைப் புறக்கணிப்பது தவறல்ல. உதாரணமாக இணைவைக்கும் இமாமைப் பின்பற்றி தொழக் கூடாது என்று மார்க்கம் கூறுகின்றது. முதலாவது ஜமாஅத்தை நடத்தக் கூடியவர் இணைவைப்பவராக இருந்தால் இப்போது இந்த ஜமாஅத்தை நாம் புறக்கணித்தாக வேண்டும்.
அதே போன்று நபிவழியில் தொழுபவர்கள் முதலாவது ஜமாஅத்தில் கலந்து கொண்டால் துன்புறுத்தப்படுவார்கள் என்றால் அதை விட்டுவிட்டு தனியே அவர்கள் ஜமாஅத் நடத்த அனுமதியுள்ளது.
தங்களுடைய தவறான நோக்கத்தை அடைவதற்காக ஜமாஅத் தொழுகையை ஒருவர் ஆயுதமாக ஆக்கினால் இப்போது இவர்களைப் புறக்கணிக்கலாம். இதனால் ஜமாஅத்தைப் புறக்கணித்த குற்றம் ஏற்படாது. பின்வரும் வசனம் இதைத் தெளிவுபடுத்துகின்றது.
وَالَّذِينَ اتَّخَذُوا مَسْجِدًا ضِرَارًا وَكُفْرًا وَتَفْرِيقًا بَيْنَ الْمُؤْمِنِينَ وَإِرْصَادًا لِمَنْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ مِنْ قَبْلُ وَلَيَحْلِفُنَّ إِنْ أَرَدْنَا إِلَّا الْحُسْنَى وَاللَّهُ يَشْهَدُ إِنَّهُمْ لَكَاذِبُونَ(107)لَا تَقُمْ فِيهِ أَبَدًا لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ(108)9
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் “நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை” என்று சத்தியம் செய்கின்றனர். “அவர்கள் பொய்யர்களே” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
நன்மையான காரியத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டு குழப்பம் விளைவிப்பவர்களை நாம் புறக்கணிக்கலாம். இதனால் அந்த நன்மையான காரியத்தை நாம் புறக்கணித்தவர்களாக மாட்டோம் என்பதை இவ்வசனம் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
இப்போது உங்கள் பிரச்சனைக்கு வருவோம். ஒரு பள்ளியில் இரண்டு ஜும்ஆக்கள் நடப்பதாக நீங்கள் கூறினீர்கள். இந்த ஜும்ஆக்கள் ஒன்றையொன்று புறக்கணிக்கும் வகையில் நடத்தப்படுமேயானால் இவையிரண்டில் எவை மார்க்க அடிப்படையில் நடைபெறுகின்றது. எந்த சாராரின் பக்கம் நியாயங்கள் இருக்கின்றது என்பதை நீங்கள் உணர்ந்து சரியாகச் செயல்படுபவர்கள் நடத்தும் ஜும்ஆவை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அநியாயம் புரிபவர் நடத்தும் ஜும்ஆவை புறக்கணிக்க வேண்டும்.
புறக்கணிக்கும் எண்ணம் இன்றி ஒரு சாராருக்கு ஜும்மாவுக்காக கிடைக்கும் இடைவேளையும் மற்றொரு சாராருக்கு கிடைக்கும் இடைவேளையும் வேறு வேறாக இருந்தால் அவரவருக்கு வசதியான நேரத்தில் இப்படி இரண்டு ஜும்மா நடத்தப்பட்டால் அவ்விரண்டுமே சமமானது தான். அதில் குற்றம் இல்லை
மேலும் விபரம் அறிய பார்க்க