ஒரினச் சேர்க்கையும் ஒரிறைவனின் தண்டனையும்!

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

உலகில் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களின் தலையாய பணி, மக்களிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அந்தக் கொள்கையை நிலைநாட்டுவது தான். அதே சமயம் ஒரு சில இறைத்தூதர்கள், ஒரு சில குறிப்பிட்ட தீமைகளை வேரறுப்பதையும் வீழ்த்துவதையும் குறிக்கோளாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளனர்.ஒரு சமுதாயத்தினர் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்து, மக்களை ஏமாற்றி அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருந்தனர். இந்தத் தீமைக்கு எதிராக அனுப்பப்பட்டவர் தான் நபி ஷுஐப் (அலை) ஆவார். அவர்களது பிரச்சாரத்தின் மையக்கருத்தை கீழ்க்காணும் வசனத்தில் காணலாம்.

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ‌ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا‌ ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌

மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை (அனுப்பினோம்.) “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனைத் தவிர எந்தக் கடவுளும் இல்லை. உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்று உங்களிடம் வந்துவிட்டது.அளவையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள்! மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் சீர்திருத்தம் ஏற்பட்ட பிறகு அதில் குழப்பம் செய்யாதீர்கள்! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்தது” என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 7:85)➚

ஏகத்துவக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதுடன் இந்தத் தீமைக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்துள்ளனர் என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. இன்னொரு சமுதாயம் ஓரினச் சேர்க்கையில் முழுவதுமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்த ஆபாசமான, அருவருக்கத்தக்க தீமையை எதிர்ப்பதை முதன்மையாகவும், மையமாகவும் கொண்டு அனுப்பப்பட்டவர் தான் நபி லூத் (அலை) அவர்கள்.லூத் நபியவர்கள், இப்ராஹீம் நபியின் சம காலத்து நபியாவார்.

தன்னந்தனியாக நின்று கொண்டு அம்மக்களிடமிருந்து இந்த மிருகச் செயலை எதிர்த்துப் போர் முழக்கமிட்டார்கள்.இந்த ஈனச் செயலை, இழிவான காரியத்தைச் செய்யாதீர்கள் என்று திரும்பத் திரும்ப அந்த மக்களிடம் அறிவுரை வழங்கினார்கள். இந்தக் காரியத்தைச் செய்தால் இறைவனிடமிருந்து இழிவு தரும் வேதனை வரும் என்று எச்சரித்தார்கள். ஆனால் அதை அம்மக்கள் அறவே கண்டுகொள்ளவில்லை. அத்துடன் லூத் நபியைக் கேலியும் கிண்டலும் செய்தனர்.

وَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُـوْۤا اَخْرِجُوْهُمْ مِّنْ قَرْيَتِكُمْ‌ ۚ اِنَّهُمْ اُنَاسٌ يَّتَطَهَّرُوْنَ

இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள்! இவர்களோ பரிசுத்தமான மனிதர்கள்” என்று கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.(அல்குர்ஆன்: 7:82)➚

உம்மை ஊரை விட்டு விரட்டுவோம் என்று அவரை மிரட்டினார்கள். உமது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் வேதனையைக் கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதருக்கு எதிராகச் சவாலும் விட்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَـتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَـقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِيْنَ اَٮِٕنَّكُمْ لَـتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِيْلَ ۙ وَتَاْ تُوْنَ فِىْ نَادِيْكُمُ الْمُنْكَرَ ‌ؕ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏

லூத்தையும் (தூதராக அனுப்பினோம்.) அவர் தமது சமுதாயத்தை நோக்கி, “அகிலத்தாரில் உங்களுக்கு முன் யாரும் செய்யாத மானக்கேடான காரியத்தைச் செய்கிறீர்கள்” என்று கூறியதை நினைவூட்டுவீராக!“நீங்கள் (இச்சைக்காக) ஆண்களிடம் செல்கிறீர்களா? மேலும் நீங்கள் (இதற்காக) வழியை மறிக்கிறீர்கள். உங்கள் அவையிலும் வெறுக்கத்தக்க அக்காரியத்தைச் செய்கிறீர்கள்” (என்றும் கூறினார்.) அதற்கு, “நீர் உண்மையாளராக இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறியதே அவரது சமுதாயத்தினரின் பதிலாக இருந்தது.(அல்குர்ஆன்: 29:28-29)➚

இந்தக் கட்டத்தில்தான் லூத் நபியவர்களின் வீட்டிற்கு விருந்தாளிகள் வருகின்றனர். வந்த விருந்தாளிகள் பிரமிக்க வைக்கும் அழகு பிம்பங்களாக இருந்தனர். கட்டழகு கொண்ட காளையராக இருந்தனர். வசீகரமும் வனப்பும் மிக்க வாலிப வட்டங்களான இந்த விருந்தாளிகளை அனுபவிப்பதற்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திரண்டு அவர்களை நோக்கி ஓடி வருகின்றனர். மட்டற்ற மகிழ்ச்சி அலைகள் கரை புரள, கட்டிளங் காளையரைக் கொள்ளை கொள்ள, கூட்டமாய் வந்து குழுமுகின்றனர்.கண்ணியப்படுத்த வேண்டிய தனது விருந்தாளிகள் களங்கப்படுத்தப்படப் போகின்றனரே என்று கலங்கிய லூத் நபி கையறு நிலையில் நிற்கின்றார்கள். வந்தவர்கள் லூத் நபியின் கண்களுக்கு வெறும் வெளியூர் விருந்தாளிகளாகவே தெரிகின்றனர். காமுகக் காட்டுமிராண்டிகளுக்கு கவர்ச்சியூட்டும் வேட்டைப் பிராணிகளாகத் தெரிகின்றனர். இந்தக் காட்சியை திருக்குர்ஆன் நம் கண்களுக்குப் படமாக்குகின்றது.

وَجَاءَ أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ قَالَ إِنَّ هَؤُلَاءِ ضَيْفِي فَلَا تَفْضَحُونِ وَاتَّقُوا اللَّهَ وَلَا تُخْزُونِ قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ قَالَ هَؤُلَاءِ بَنَاتِي إِنْ كُنْتُمْ فَاعِلِينَ لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ

அந்த ஊரார் மகிழ்ச்சியடைந்தவர்களாக வந்தனர். “இவர்கள் என் விருந்தாளிகள். எனவே என்னைக் கேவலப்படுத்தி விடாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்” என்று (லூத்) கூறினார். “உலகத்தார் விஷயத்தில் (தலையிட வேண்டாமென) உம்மை நாங்கள் தடுக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்டனர். “நீங்கள் (திருமணம்) செய்வோராக இருந்தால் இதோ எனது புதல்வியர் உள்ளனர்” என்று (லூத்) கூறினார். (நபியே!) உமது ஆயுளின்மீது சத்தியமாக! அவர்கள் தமது மதிமயக்கத்தில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.(அல்குர்ஆன்: 15:67-72)➚

இதே சம்பவம் திருக்குர்ஆனில் மற்றோரிடத்திலும் இடம்பெற்றுள்ளது.

وَلَمَّا جَآءَتْ رُسُلُـنَا لُوْطًا سِىْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ‏ وَجَآءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ‌ؕ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْ هُنَّ اَطْهَرُ لَـكُمْ‌ ۚ فَاتَّقُوْا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِىْ ضَيْفِىْ ؕ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ‏ قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَـنَا فِىْ بَنٰتِكَ مِنْ حَقٍّ‌ ۚ وَاِنَّكَ لَـتَعْلَمُ مَا نُرِيْدُ

லூத்திடம் நமது தூதர்கள் வந்தபோது, அவர்களைப் பற்றி அவர் கவலைக்குள்ளானார். அவர்களுக்காக மன வேதனையடைந்து, “இது மிகவும் கடுமையான நாள்” என்று கூறினார். அவரது சமுதாயத்தினர் விரைந்து அவரிடம் வந்தனர். இதற்கு முன்பும் அவர்கள் கெட்ட செயல்களைச் செய்வோராக இருந்தனர். “என் சமுதாயத்தினரே! இவர்கள் எனது புதல்வியர். இவர்கள் உங்களுக்கு (மணமுடிக்கத்) தூய்மையானவர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனது விருந்தினர்கள் விஷயத்தில் என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள். உங்களில் ஒரு நல்ல மனிதர் கூட இல்லையா?” என்று கேட்டார். “எங்களுக்கு உம்முடைய புதல்வியரிடம் எந்தத் தேவையும் இல்லை என்பதை நீர் நன்கறிவீர். நாங்கள் எதை விரும்புகிறோம் என்பதையும் நீர் அறிந்தே இருக்கிறீர்!” என அவர்கள் கூறினர்.(அல்குர்ஆன்: 11:77-79)➚

“உங்களில் ஒருவர் கூட..” என்று லூத் நபி கேட்பது, அந்த ஊர் எப்படிக் கெட்டுப் போயிருந்தது என்பதை மிகத் தெளிவாகவே விவரிக்கின்றது. இந்தக் கட்டத்தில் லூத் நபியின் மனிதப் பலவீனமும் இயலாமையும் அவர்களை அறியாமல் வெளிப்படுகின்றது. அதன் உச்சக்கட்டத்தில் தான் லூத் நபியின் வாயிலிருந்து இந்த வார்த்தைப் பிரயோகம் வருகின்றது.

قَالَ لَوْ اَنَّ لِىْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِىْۤ اِلٰى رُكْنٍ شَدِيْدٍ

“உங்கள் விஷயத்தில் எனக்கு வலிமை இருந்திருக்க வேண்டுமே! அல்லது வலிமையான ஆதரவை நான் பெற்றிருக்க வேண்டுமே!” என்று அவர் கூறினார்.(அல்குர்ஆன்: 11:80)➚

ஆம்! அவர்களுக்கு ஆதரவாக, இந்தக் காட்டுமிராண்டிகளுக்கு எதிராகத் தோள் கொடுத்து, துணை நிற்க எவருமில்லை. சொந்த பந்தமும் எதுவுமில்லை. பாதிப்புக்குள்ளான பாதக வேளையில் இந்த உணர்வு அலைகளைப் பதிகின்றார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இந்த சமயத்தில் அடைக்கலத்திற்கும் ஆதரவிற்கும் அல்லாஹ்வை அழைத்திருக்க வேண்டும். இதைத் தான் நபி (ஸல்) அவர்கள் மென்மையாக உணர்த்துகின்றார்கள்.

يَغْفِرُ اللَّهُ لِلُوطٍ، إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: லூத் (அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர்களாயிருந்தார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 3375)

இறைத்தூதர்களும் அவர்களது சமுதாயத்தினரும் நம்பிக்கை இழப்பின் விளிம்பிற்கு வருகின்ற போது இறை உதவி அரும்பி வரும்.

حَتّٰۤى اِذَا اسْتَيْــَٔسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ‌ؕ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ

(மக்கள் இனி நம்பமாட்டார்கள் என) இறைத் தூதர்கள் நம்பிக்கை இழந்து, தாம் மறுக்கப்பட்டு விட்டோம் என எண்ணியபோது நம் உதவி அவர்களிடம் வந்தது. நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். குற்றம் புரியும் கூட்டத்தாரை விட்டும் நமது தண்டனை திருப்பப்படாது.(அல்குர்ஆன்: 12:110)➚

வந்தவர்கள் வெறும் விருந்தாளிகள் அல்லர்; தூதரைக் காக்கவும் அவரது எதிரிகளைத் தாக்கவும் வந்த வான தூதர்கள் என்ற உண்மை இப்போது தான் வெளிச்சத்திற்கு வருகின்றது.

قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْۤا اِلَيْكَ‌ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ‌ؕ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْ‌ؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ‌ؕ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ‏

“லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள்! அவர்கள் உம்மை நோக்கி வந்துசேர முடியாது. இரவின் ஒரு பகுதியில் உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தினருடன் புறப்படுவீராக! உங்களில் யாரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களுக்கு ஏற்படப் போகும் துன்பம் (உமது மனைவியாகிய) அவளுக்கும் ஏற்படும். அவர்களுக்கென வாக்களிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை நேரம் அருகில் இல்லையா?(அல்குர்ஆன்: 11:81)➚

இறைத்தூதருக்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு மலக்குகள் தங்கள் விளையாட்டை ஆரம்பிக்கின்றனர். வந்த வானவர்களிடமும் தங்கள் காம வேட்டைகளையும் சேட்டைகளையும் காட்ட ஆரம்பித்தவர்களின் கண்களை அல்லாஹ் குருடாக்கினான்.

وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ

(தமது தீய செயலுக்காக) அவரது விருந்தினரை அவரிடம் வேண்டினார்கள். எனவே அவர்களின் பார்வைகளைப் பறித்தோம். “எனது தண்டனையையும், எச்சரிக்கைகளையும் அனுபவியுங்கள்!” (என்று கூறினோம்.)(அல்குர்ஆன்: 54:37)➚

இது முதல் தண்டனை. இரண்டாவதாக பெரும் சப்தம், பேரிறைச்சல் அவர்களைப் பிடிக்கின்றது.

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُصْبِحِيْنَۙ‏

அவர்கள் காலைப் பொழுதை அடைந்தபோது அவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது.(அல்குர்ஆன்: 15:83)➚மூன்றாவதாக, சூடாக்கப்பட்ட கல்மழை அவர்கள் மீது பொழிகின்றது.நான்காவது, இயற்கைக்கு எதிராகக் கிளம்பி தலைகீழாகப் புரண்ட அந்தச் சமுதாயம் வாழ்ந்த ஊரை அல்லாஹ் தலைகீழாகப் புரட்டி விடுகின்றான்.

فَجَعَلْنَا عَالِيـَهَا سَافِلَهَا وَ اَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ سِجِّيْلٍؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـلْمُتَوَسِّمِيْنَ‏ وَاِنَّهَا لَبِسَبِيْلٍ مُّقِيْمٍ

அவ்வூரின் மேற்புறத்தைக் கீழ்ப்புறமாக ஆக்கினோம். சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது பொழிந்தோம்.ஆய்வு செய்வோருக்கு இதில் சான்றுகள் உள்ளன.அவ்வூர் (நீங்கள் செல்லும்) முக்கிய சாலையில் தான் இருக்கிறது.(அல்குர்ஆன்: 15:74-76)➚

فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍۙ مَّنْضُوْدٍۙ مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ‌ؕ وَ مَا هِىَ مِنَ الظّٰلِمِيْنَ بِبَعِيْدٍ

நமது கட்டளை வந்தபோது, அவ்வூரின் மேற்புறத்தைக் கீழ்ப்புறமாக ஆக்கினோம். உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்ட, அடுக்கடுக்கான, சுடப்பட்ட கற்களை அவர்கள்மீது பொழிந்தோம். அது இந்த அநியாயக்காரர்களுக்குத் தூரத்தில் இல்லை.(அல்குர்ஆன்: 11:82-83)➚

இறுதியில் லூத் (அலை) அவர்களின் வீட்டைத் தவிர வேறெதையும் விட்டு வைக்காத அளவிற்கு மலக்குகள் தங்கள் ஆட்டத்தை ஆடித் தீர்த்தனர்.இதுதான் ஓரினச் சேர்க்கைக்கு, ஓரிறைவன் கொடுத்த தண்டனையும் நிந்தனையும் ஆகும். மிஞ்சியது இறைத்தூதரின் வீடு மட்டும் தான். மற்ற அனைத்தும் அழித்து, சின்னாபின்னமாக்கப்பட்டது. இந்தச் சமூகத்திற்கு அல்லாஹ் வழங்கிய தண்டனையிலிருந்து ஓரினச் சேர்க்கை எனும் பாவத்தின் கோரத்தையும் கொடூரத்தையும் புரிந்து கொள்ளலாம்.

இந்தச் சாபக்கேட்டையும் சமூகக் கேட்டையும் தான் இன்றைய சமுதாயம் சட்டமாக்கத் துடிக்கின்றது. இந்த மானக்கேட்டிற்குத் தனிமனித சுதந்திரம் என்ற முத்திரையும் பொறித்துள்ளனர். இந்த அசிங்கத்தைச் செய்தவனை மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ளவர்களையும், சமூகத்தையும் பாதிக்கும் எய்ட்ஸ் நோயைப் பரப்புவதை தனிமனித சுதந்திரம் என்று எப்படி எடுத்துக் கொள்ள முடியும்?எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய் பரிசாகக் கிடைத்தது இந்தப் பாவத்தின் காரணமாகத் தான்.

இதற்குப் பின்னராவது இந்தச் சமுதாயம் திருந்துமா?