ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
إِنَّ الأَشْعَرِيِّينَ إِذَا أَرْمَلُوا فِي الْغَزْوِ ، أَوْ قَلَّ طَعَامُ عِيَالِهِمْ بِالْمَدِينَةِ جَمَعُوا مَا كَانَ عِنْدَهُمْ فِي ثَوْبٍ وَاحِدٍ ثُمَّ اقْتَسَمُوهُ بَيْنَهُمْ فِي إِنَاءٍ وَاحِدٍ بِالسَّوِيَّةِ فَهُمْ مِنِّي وَأَنَا مِنْهُمْ.

அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி),
நூல்: (புகாரி: 2486) 

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم

إِنِّي لأَعْرِفُ أَصْوَاتَ رُفْقَةِ الأَشْعَرِيِّينَ بِالْقُرْآنِ حِينَ يَدْخُلُونَ بِاللَّيْلِ وَأَعْرِفُ مَنَازِلَهُمْ مِنْ أَصْوَاتِهِمْ بِالْقُرْآنِ بِاللَّيْلِ وَإِنْ كُنْتُ لَمْ أَرَ مَنَازِلَهُمْ حِينَ نَزَلُوا بِالنَّهَارِ وَمِنْهُمْ حَكِيمٌ إِذَا لَقِيَ الْخَيْلَ ، أَوْ قَالَ الْعَدُوَّ- قَالَ لَهُمْ إِنَّ أَصْحَابِي يَأْمُرُونَكُمْ أَنْ تَنْظُرُوهُم.

”என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்கா விட்டால் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன்.

மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து, ‘என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தவிடுகின்றனர்’ என்று (துணிவோடு) கூறுவார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி),
நூல்: (புகாரி: 4232) 

திருக்குர்ஆனை அழகாக ஓதுவதில் அஷ்அரீன் குலத்தில் முதலிடம் பெற்றவர்களாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களே இவர்களின் ஓதுதலைப் பார்த்து வியந்துள்ளார்கள்.

قَالَ لَهُ يَا أَبَا مُوسَى لَقَدْ أُوتِيتَ مِزْمَارًا مِنْ مَزَامِيرِ آلِ دَاوُدَ.

நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ”அபூமூஸாவே! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி),
நூல்: (புகாரி: 5048) 

அவர்களிடம் உணவு தட்டுப்பாடு வரும் போது வசதி படைத்தவர்கள் சும்மா இருப்பதில்லை. அனைவரும் ஒன்று கூடி தங்களிடம் இருந்த உணவுகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி அவர்கள் சமூகத்தினர் அனைவர்களும் வந்து ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி சம அளவில் உணவுகளைப் பங்கிட்டு எடுத்துச் செல்வார்கள்.

இந்த நல்ல பண்பைக் கண்டு தான் நபி (ஸல்) அவர்கள், ‘அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்; நான் அவர்களைச் சார்ந்தவன்’ என்று புகழந்துரைத்தார்கள்.

لَا يَشْبَعُ الرَّجُلُ دُونَ جَارِهِ

”தன் அண்டை வீட்டாரை விட்டு விட்டு, தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: உமர் (ரலி),
நூல்: (அஹ்மத்: 390) (367)

முஃமினுக்கு உதாரணம்

تَرَى الْمُؤْمِنِينَ فِي تَرَاحُمِهِمْ وَتَوَادِّهِمْ وَتَعَاطُفِهِمْ كَمَثَلِ الْجَسَدِ إِذَا اشْتَكَى عُضْوًا تَدَاعَى لَهُ سَائِرُ جَسَدِهِ بِالسَّهَرِ وَالْحُمَّى.

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடைய அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டு இருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டு விடுகின்றது.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி),
நூல்: (புகாரி: 6011) 

முஸ்லிமின் செயல்பாடு

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ لاَ يَظْلِمُهُ ، وَلاَ يُسْلِمُهُ ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ الْقِيَامَةِ ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ.

”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான்.

எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: (புகாரி: 244) 

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்

« إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ يَا ابْنَ آدَمَ مَرِضْتُ فَلَمْ تَعُدْنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَعُودُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِى فُلاَنًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِى عِنْدَهُ يَا ابْنَ آدَمَ اسْتَطْعَمْتُكَ فَلَمْ تُطْعِمْنِى. قَالَ يَا رَبِّ وَكَيْفَ أُطْعِمُكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ. قَالَ أَمَا عَلِمْتَ أَنَّهُ اسْتَطْعَمَكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تُطْعِمْهُ أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ أَطْعَمْتَهُ لَوَجَدْتَ ذَلِكَ عِنْدِى يَا ابْنَ آدَمَ اسْتَسْقَيْتُكَ فَلَمْ تَسْقِنِى. قَالَ يَا رَبِّ كَيْفَ أَسْقِيكَ وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ قَالَ اسْتَسْقَاكَ عَبْدِى فُلاَنٌ فَلَمْ تَسْقِهِ أَمَا إِنَّكَ لَوْ سَقَيْتَهُ وَجَدْتَ ذَلِكَ عِنْدِى ».

உன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை” என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், ”என் இறைவனே! உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!” என்பான். அதற்கு அல்லாஹ், ”இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்” என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), ”ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை” என்பான். அதற்கு அம்மனிதன்,

”என் இறைவா! எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!” என்பான். இதற்கு அல்லாஹ், ”இந்த என்னுடைய அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிய மாட்டாயா? நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்” என்று பதிலளிப்பான்.

மேலும், ”ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை” என்பான். அதற்கு அவன், ”என் இறைவா! நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!” என்பான். அதற்கு அல்லாஹ், ”இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்” என்பான். ‘

அறி : அபூஹுரைரா (ரலி),
நூல்: (முஸ்லிம்: 5021) (4661)

உதவும் போது இறைவன் உதவி நமக்கு உண்டு

قَالَ اللَّهُ أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْك.

”ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: (புகாரி: 5352)