ஏகத்துவாதிகளே உங்களைத்தான்!
வஹியை மட்டும் பின்பற்றும் ஏகத்துவாதிகளே! இதோ உங்களுக்கு வஹியின் மூலம் கிடைப்பெற்ற அழகிய உபதேசத்தை பாரீர்!குழப்பங்கள் தோன்றும் முன்!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான்.மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,(முஸ்லிம்: 186) ➚
காலத்தின்மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்திலேயே இருக்கிறான்.(அல்குர்ஆன்: 103:1-2)➚
இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, உண்மையைக் கடைப்பிடிக்குமாறு ஒருவருக்கொருவர் அறிவுறுத்தி, பொறுமையை மேற்கொள்ளுமாறும் அறுவுறுத்திக் கொள்வோரைத் தவிர.(அல்குர்ஆன்: 103:3)➚
அல்லாஹ்வும் அவனது தூதரும் நல்லறங்கள் விஷயத்தில் இந்த அளவிற்கு வலியுறுத்தி இருக்கும் பொழுது இன்றைய ஏகத்துவாதிகளே! தாங்களின் நல்லறங்கள் விஷயத்தில் சுயபரிசோதனை செய்து பாருங்கள்?
”நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக ஷைத்தான் உங்களுடைய இப்பூமியில் அவன் வணங்கப்படுவதில் நிராசையடைந்துவிட்டான். ஆனால் நீங்கள் அற்பமாகக் கருதுபவற்றில் உங்களை (வழிகெடுப்பதில்) திருப்தியாக உள்ளான்.(அஹ்மத்: 8810) ➚
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்து விட்டான். எனினும் அவர்களிடையே பிளவை உருவாக்குவான்.அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ்(ரலி) , (முஸ்லிம்: 5417, 5418) ➚
எனவே ஷைத்தான் ஏகத்துவாதிகளை ஷிர்க்கான காரியங்களில் வழிகெடுக்க முற்பட மாட்டான், ஆனால் ஏகத்துவாதிகளின் நல்லறங்களையும், நன்மைகளையும் அற்பமானவைகளை கொண்டே முடக்குவான்; மேலும் அவன் மகிழ்ச்சியுறும் விதமாய் நாம் அற்பமாக கருதும் சில விஷயங்களில் அவனுக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்கள். ஆகவே, தத்தமது நல்லறங்களிலும், மார்க்க விசயங்களையும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
அந்நாளில் (நன்மை, தீமைகளை) எடை போடுதல் உண்மையாகும். யாருக்கு அவரது (நன்மையின்) எடைகள் கனத்து விட்டதோ அவர்களே வெற்றியாளர்கள்.(அல்குர்ஆன்: 7:8)➚
ஏகத்துவாதிகளே! எங்கே சென்றது அந்த தெளிந்த சிந்தனையும், தெளிந்த பார்வை உடனான சுய சிந்தனையுடன் கொண்டு நன்மையை ஏவி, தீமையை தடுத்து தத்தமது நல்லமல்களிலும் போட்டியிட்ட தருணங்கள்.இன்று எதை நோக்கி நாம் பயணிக்கின்றோம்? இதற்கு காரணம் நாம் இல்லையா? அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று நமது சுய சிந்தனையை குறைத்ததின் விளைவு என்று இன்னுமா நாம் விளங்க வில்லை? ஆம்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.
அவர்கள் புறக்கணித்தால், குழப்பவாதிகளை அல்லாஹ் நன்கறிந்தவன்.(அல்குர்ஆன்: 3:63)➚
எனவே கொள்கையை வளர்க்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது. தேவைகளற்ற ஷைத்தானிய சூழ்ச்சிகளுக்கும், பித்னாக்களுக்கும் களம் அமைத்து கொடுத்து எந்தவொரு ஏகத்துவவாதியும் தங்களை பழிகேடாக ஆக்கி கொள்ளாமல், நாம் இதற்கு முன் என்பதுகளில் இருந்து எந்த மறுமை வெற்றிக்கு பாடுபட்டோமோ, அதற்கான களமான, தாவா களத்திலும், நல்லறங்களிலும் நமது சிந்தனைகளை மடை மாற்றுவோமாக, இன்ஷா அல்லாஹ்!
இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்வோரை அவர்களின் இறைவன் தனது அருளில் நுழையச் செய்வான். அதுவே தெளிவான வெற்றியாகும்.(அல்குர்ஆன்: 45:30)➚