ஏகத்துவவாதிகளே! சிந்தியுங்கள்!

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

இறைவன் மனிதனைப் படைத்து அவன் நிம்மதி பெற வேண்டும் என்பதற்காக அவனிலிருந்தே அவனது ஜோடியைப் படைத்தான்.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்.

(அல்குர்ஆன்: 7:189)

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குத் துணை அவசியம் என்பதால் தான் மனிதனைப் படைத்ததோடு மட்டும் நின்று விடாமல் அந்த மனிதரிலிருந்தே அவனது ஜோடியையும் படைத்து, அவர்களில் இருந்து ஆண், பெண் என அதிகமானவர்களை இப்பூவுலகில் பரவச் செய்தான்.

இப்படிப் பல்கிப் பெருகியிருக்கும் மனிதர்களுக்குப் பல தேவைகளைக் கொடுத்துள்ளான். அந்தத் தேவைகளில் ஒன்று தான் திருமணம். எந்த ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் வழி தவறாமல் இருக்க, திருமணம் அவசியமாகும்.

திருமணம் செய்யாமல் எந்த மனிதராலும் வாழ முடியாது. இன்று நடைமுறையில், நாங்கள் திருமணம் செய்ய மாட்டோம்; திருமணம் செய்யாமலேயே எங்களால் மன இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு வாழ முடியும் என்று சொன்ன எத்தனையோ பேர்கள் தங்களுடைய மன இச்சையைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறான வழிக்குச் சென்று, இந்தச் சமுதாயத்தின் முன் தலை குனிந்து நிற்பதைப் பார்க்கிறோம். எனவே ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அவர்கள் வழி தவறாமல் இருக்க திருமணம் மட்டுமே வடிகாலாகும்.

இஸ்லாம் இலகுவான மார்க்கம். அது இடக்கூடிய கட்டளைகளும் இலகுவானது தான். அது போல் திருமணத்தையும் இலகுவான ஒன்றாகத் தான் கூறுகின்றது. ஆனால் இஸ்லாமியர்களோ இந்தத் திருமணத்தை கடினமானதாக ஆக்கி விட்டார்கள். வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணத்தைப் பண்ணிப் பார் என்று பழமொழி கூறுவார்கள். அது சரியாகத் தான் உள்ளது.

ஒருவன் ஐந்து அல்லது ஆறு லட்ச ரூபாய்க்குள் வீட்டைக் கட்டி முடித்து விட வேண்டும் என்று நினைப்பான். ஆனால் அதையும் தாண்டி சென்று கொண்டே இருக்கும். அது போலத் தான் பெண்ணைப் பெற்றவர்கள், நமது பெண்ணுக்கு இவ்வளவு செலவழித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட ஒரு தொகையை சேமித்து வைத்திருப்பார்கள். ஆனால் திருமணம் வந்தவுடன் அவர்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை விட பன்மடங்கு செலவாகும். இதனால் தான் பெண்ணைப் பெற்றவர்கள் ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஏனெனில் இன்று வரதட்சணை அந்த அளவுக்குப் பெருகியுள்ளது. டாக்டர் மாப்பிள்ளை என்றால் அதற்கு ஒரு விலை; எஞ்சினியர் என்றால் அதற்கு ஒரு விலை; சாதாரண மீன் கடையில் மீன் வெட்டுபவனுக்கு இன்றைய விலை ஒன்றரை லட்சம்.

அது மட்டுமா? நகை போட வேண்டும். சீர் வரிசை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு பெண் கர்ப்பமாகி விட்டால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை மருத்துவச் செலவும் செய்து, அந்தக் குழந்தைக்கும் தேவையான அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும்.

இப்படி வரதட்சணை என்ற பெயரில் பிச்சை எடுக்கும் ஒரு கூட்டம் இருக்க, வரதட்சணை வாங்க மாட்டோம்; நாங்கள் மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்வோம் என்று சபதம் ஏற்ற ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் தான் தவ்ஹீதுவாதிகள்.

ஏகத்துவம் சுடர் விட ஆரம்பித்த ஆரம்ப கால கட்டங்களில் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளைகளுக்குப் பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.

ஏனெனில் ஏகத்துவ மாப்பிள்ளைகள் தங்களுக்கு வரதட்சணை தர வேண்டாம்; நகை போட வேண்டாம்; பைக் தர வேண்டாம்; சீர் வரிசைகள் தர வேண்டாம்; ஆயிரக்கணக்கான பேருக்கு விருந்து வைக்க வேண்டாம்; நாங்களே மஹர் கொடுத்து, திருமணச் செலவு எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்; நீங்கள் பெண் மட்டும் தந்தால் போதும் என்று கூறும் போது, பெண் வீட்டார் சந்தேகக் கண் கொண்டு பார்க்க ஆரம்பித்தார்கள்.

வரதட்சணை கொடுத்து, சீர் வரிசைகள் கொடுத்து பெண்ணைக் கொடுத்தாலே சரியான முறையில் கவனிக்காமல் கொடுமைப்படுத்தும் இந்தக் காலத்தில் எதுவுமே வேண்டாம் என்று சொல்லக் கூடிய இவருக்குப் பெண்ணைக் கொடுத்தால் இவர் நமது பெண்ணை நல்ல முறையில் கவனித்துக் கொள்வாரா? அல்லது இவருக்கு ஏதேனும் குறைகள் இருக்குமோ? என்றெல்லாம் யோசித்து ஏகத்துவ மாப்பிள்ளைகளுக்குப் பெண் தர மறுத்து வந்தார்கள்.

வல்ல நாயனின் மாபெரும் கிருபையால் ஏகத்துவக் கொள்கை வளர்ந்து விட்ட இந்தக் காலகட்டத்தில், ஏகத்துவ மாப்பிள்ளைக்கு நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு பெண் கொடுக்க முன் வருவதை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல காலத்தில் ஏகத்துவ மாப்பிள்ளைகள், தங்களது மாமன் மகள், மாமி மகள், சித்தப்பா மகள், பெரியப்பா மகள் என்று இணை வைக்கும் குடும்பத்தில் சென்று இணை வைக்கும் பெண்களைத் திருமணம் முடிக்கின்றார்கள். பெண்ணின் குடும்பத்தினர் தர்ஹாவாதியாகவும், தரீக்காவாதியாகவும் ஒட்டுமொத்த குடும்பமும் பக்கா ஷிர்க்கில் மூழ்கியுள்ள குடும்பத்தில் போய் இன்று சம்பந்தம் வைக்கிறார்கள்.

இவ்வாறு இணை வைக்கும் பெண்ணைத் திருமணம் செய்யும் ஏகத்துவவாதிகளிடம், “மார்க்கம் தெரிந்த பெண்களை விட்டு விட்டு, இணை வைக்கும் பெண்களை ஏன் திருமணம் செய்கிறீர்கள்?” என்று கேட்டால், “அந்தப் பெண் திருமணத்திற்குப் பிறகு திருந்தி விடுவாள்; அவளிடம் மார்க்கத்தைச் சொல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்; இதன் மூலம் அவளது குடும்பத்தாரும் திருந்தி விடலாம்” என்று தாங்கள் செய்யும் காரியத்தை நியாயப் படுத்துகின்றார்கள்.

எதற்கெடுத்தாலும் குர்ஆன், ஹதீஸ் என்றும், அல்லாஹ்வும் அவன் தூதரும் கட்டளையிட்டபடி தான் செய்வோம் என்றும் கூறக் கூடிய இந்த ஏகத்துவவாதிகள், தான் மணம் முடிக்கப் போகும் மணப் பெண் எப்படியிருக்க வேண்டும் என்று இறைவன் திருமறையில் கூறுவதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள்.

வட்டிப் பொருட்களைச் சாப்பிடுவது, அல்லாஹ் அல்லாத வர்களுக்காக அறுக்கப்பட்டதைச் சாப்பிடுவது, பன்றி இறைச்சியைச் சாப்பிடுவது ஆகியவற்றை எப்படி ஹராம் என்று அல்லாஹ் கூறுகின்றானோ அது போன்று இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்வதும் ஹராம் என்று கூறுகின்றான்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான்.

(அல்குர்ஆன்: 2:221)

இணை வைக்கும் அழகான பெண்ணை விட, அழகு குறைந்த அடிமைப் பெண்ணே சிறந்தவள், அவளையே நீ திருமணம் செய்து கொள் என்று இறைவன் இந்த வசனத்தில் கூறுகின்றான்.

இந்த வசனத்தின் அடிப்படையில், இணை வைக்கும் பெண்கள் எவ்வளவு தான் அழகானவர்களாக இருந்தாலும் அவர்களைத் திருமணம் செய்வதே கூடாது என்றாகி விடும் போது, இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் திருந்தி விடுவார்கள் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

ஏகத்துவவாதிகளே! உங்களின் இந்த வாதத்தின் அடிப்படையில் நீங்கள் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லவா? அவ்வாறு மாற்ற மதத்தைச் சார்ந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவளும் இஸ்லாத்திற்கு வரலாம். அவளது குடும்பத்தாரிடம் மார்க்கத்தைச் சொல்வதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும் அல்லவா? ஆனால் இதை நீங்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். அவர்கள் நிராகரிப்பாளர்கள், அவர்களை ஒரு இறை நம்பிக்கையாளன் திருமணம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கின்றீர்கள்.

பெயரளவில் முஸ்லிம் என்று இருந்து கொண்டு, செயலளவில் வரிக்கு வரி, முழத்துக்கு முழம், ஜானுக்கு ஜான் மாற்று மதத்தவர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடிய இந்தப் பெண்களுக்கும் இதே அளவுகோலைப் பொருத்திப் பார்க்க மறுக்கின்றார்கள்.

நாம் ஏன் இவர்களை விட்டுப் பிரிந்தோம்? இவர்கள், முஹய்யித்தீனே என்றும், நாகூர் ஆண்டவரே என்றும் பிரார்த்திக்கின்றார்கள். முருகா என்றழைப்பதும், முஹய்யித்தீனே என்று அழைப்பதும் அல்லாஹ்வின் பார்வையில் ஒன்று தான்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்கு வார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன்: 39:3)

மக்கத்துக் காபிர்களிடம், “அல்லாஹ்வுக்கு ஏன் இணை கற்பிக்கின்றீர்கள்? அல்லாஹ் அல்லாதவர்களை ஏன் வணங்குகின்றீர்கள்?” என்று கேட்டால் அந்த மக்கத்து காபிர்கள், “அவர்கள் எங்களுக்குப் பரிந்துரை செய்வார்கள், எங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்பதற்காகத் தான் நாங்கள் அவர்களை வணங்குகிறோம்” என்று பதில் கூறுவார்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இப்படிக் கூறிய அந்த மக்கத்துக் காபிர்களிடம், வானத்தைப் படைத்தவன் யார்? பூமியைப் படைத்தவன் யார்? உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று கேட்டால் அல்லாஹ் என்று தான் பதில் கூறினார்கள்.

“வானங்களையும் பூமியையும் படைத்தவனும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள்.  அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப் படுகின்றார்கள்?

(அல்குர்ஆன்: 29:61)

“வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பின் அத்தண்ணீரின் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?” என்று அவர்களிடம் நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே கூறுவார்கள்.  “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” என்று கூறுவீராக!  எனினும் அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(அல்குர்ஆன்: 29:63)

“பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)” என்று (முஹம்மதே!) கேட்பீராக! “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள். “சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! “ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?” எனக் கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “அஞ்ச மாட்டீர்களா?” என்று கேட்பீராக! “பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)” என்று கேட்பீராக! “அல்லாஹ்வே” என்று கூறுவார்கள். “எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?” என்று கேட்பீராக!

(அல்குர்ஆன்: 23:84-89)

இந்த வசனங்களைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கின்றான், அவன் தான் படைக்கக் கூடியவன், அழிக்கக் கூடியவன், உணவளிக்கக் கூடியவன் என்று மக்கத்துக் காபிர்கள் நம்பியிருந்தார்கள் என்பது விளங்கும்.

அப்படியிருந்தும் அவர்களை இணை வைப்பாளர்கள் என்று இறைவன் கூறுகின்றான் என்றால் அவர்கள் தாங்கள் வணங்கக் கூடிய தெய்வங்கள், தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் என்று சொன்னதால் தான்.

இன்று முஸ்லிம் என்று பெயர் வைத்துக் கொண்டு, தங்களைப் போன்ற மனிதர்களையும் மரங்களையும் வணங்கக்கூடியவர்களிடம், “நீங்கள் ஏன் தர்ஹாவுக்குச் செல்கின்றீர்கள்? நம்மைப் போன்ற மனிதர்களை ஏன் அல்லாஹ்வுக்கு இணையாக்கி அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறீர்கள்?” என்று கேட்டால், அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள்?

“நாங்கள் என்ன அந்த அவ்லியாக்களிடம் போய் எங்களுக்குப் பிள்ளைப் பாக்கியத்தைத் தாருங்கள் என்றும், எங்கள் கஷ்டத்தைத் தீர்த்து வையுங்கள் என்றுமா கேட்கிறோம்? இல்லையே! அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள், அதனால் அல்லாஹ்விடம் அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்று தானே சொல்கிறோம்” என்று பதில் கூறுகின்றார்கள்.

இப்படிச் சொல்லக் கூடிய இவர்களுக்கும் மக்கத்து முஷ்ரிக்கு களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகின்றது?

இன்னும் சொல்லப் போனால் இன்றைய தர்காவாதிகள் அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகளை விட மிகவும் மோசமான கொள்கை கொண்டவர்கள்.

எப்படி?

இன்றைய தர்காவாதிகள் அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகளை விடவும் மோசமான கொள்கையுடையவர்கள். எப்படி?

மக்கத்துக் காஃபிர்கள் இருளில் கடலில் செல்லும் போது கடல் அலைகள் கப்பலைக் கவிழ்த்து விடுமோ என்ற சோதனையான நேரங்களில் உறுதியுடன், தூய்மையான எண்ணத்துடன் அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள்.

கடலிலும், தரையிலும் அவனே உங்களைப் பயணம் செய்ய வைக்கிறான். நீங்கள் கப்பலில் இருக்கின்றீர்கள். நல்ல காற்று அவர்களை வழி நடத்துகிறது. அவர்கள் மகிழ்ச்சியடையும் போது புயல் காற்று அவர்களிடம் வருகிறது. ஒவ்வொரு இடத்திலிருந்தும் அவர்களிடம் அலையும் வருகிறது. தாம் சுற்றி வளைக்கப்பட்டு விட்டதாக அவர்கள் முடிவு செய்கின்றனர். வழிபாட்டை உளத்தூய்மையுடன் அவனுக்கே உரித்தாக்கி “இதிலிருந்து எங்களை நீ காப்பாற்றினால் நன்றியுள்ளோராக ஆவோம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

(அல்குர்ஆன்: 10:22)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

(அல்குர்ஆன்: 29:65)

மக்கத்து முஷ்ரிக்குகளின் கடவுள் கொள்கை எப்படியிருந்தது என்பதை இந்த வசனங்கள் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆபத்தான கட்டத்தில் அல்லாஹ்வை மட்டுமே அழைப்பார்கள் என்று இந்த வசனங்கள் கூறுகின்றன.

ஆனால் இன்றுள்ள இணை வைப்பாளர்களோ மரண நேரத்தில் கூட அல்லாஹ்வை அழைக்க மாட்டார்கள். முஹ்யித்தீனையும், நாகூர் ஆண்டவரையும் தான் அழைப்பார்கள். ஆம்! பிரசவ நேரத்தில் ஒரு பெண் மரணத்தின் வாசலைத் தொட்டு விட்டு வருகிறாள் என்று கூறுவார்கள். அந்த அளவுக்குப் பிரசவ வேதனை என்பது மிகவும் கடினமானது. அப்படிப்பட்ட பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் அவளைச் சுற்றியுள்ளவர்கள், “நீ முஹ்யித்தீனைக் கூப்பிடு! நாகூர் ஆண்டவரை அழைத்துப் பிரார்த்தனை செய்! வெத்தலையை மந்திரித்துச் சாப்பிடு! ஆத்தங்கரை அம்மாவை மனதில் நினைத்துக் கொள்!” என்று சொல்லிக் கொடுக்கின்றார்கள். அந்தப் பெண்ணும், “யா முஹ்யித்தீனே! என் வேதனையை இலேசாக்குங்கள்” என்று கேட்கின்றாள் என்றால் இவர்கள் மக்கத்துக் காஃபிர்களை விட மோசமானவர்கள் என்பதை அறிய முடியும்.

மக்கா காஃபிர்களை விட மோசமான கொள்கையில் உள்ள இணை வைப்பாளர்களான மாமன் மகளையும், மாமி மகளையும் ஏகத்துவவாதிகள் தேடிப் போவதற்குக் காரணம் என்ன? ”இவர்கள் நம்முடைய உறவுகள்! நம்முடைய இரத்த பந்தங்கள்!” என்று உறவுக்கு மதிப்பளிப்பதால் தான்.

ஆனால் அந்த ஏகனாகிய அல்லாஹ்விடத்தில் இரத்த பந்தத்துக்கும் உறவுக்கும் எந்த மதிப்பும் இல்லை.

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.

(அல்குர்ஆன்: 9:113)

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் (அல்லாஹ்) கூறினான்.

(அல்குர்ஆன்: 11:26)

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன்: 66:10)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள் (தமது தந்தை) ஆஸரை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், “நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், “இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், “இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவு படுத்த மாட்டாய் என்று நீ எனக்கு வாக்களித்திருந்தாய். வெகு தொலைவி-ருக்கும் என் தந்தையை விட வேறெது அதிகம் இழிவு தரக்கூடியது?” என்று கேட்பார்கள். அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், “நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்” என்று பதிலளிப்பான். பிறகு, “இப்ராஹீமே! உமது கால்களுக்குக் கீழே என்ன இருக்கின்றது என்று பார்ப்பீராக!” என்று கூறப்படும். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப் பு- ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(புகாரி: 3350)

மேற்கண்ட வசனங்களும் ஹதீசும் நமக்கு எதைக் காட்டுகின்றன? இறைவன் இரத்த பந்தத்தையும், உறவையும் பார்க்கவில்லை. செயலைத் தான் பார்க்கிறான்.

இரத்த பந்த அடிப்படையிலோ அல்லது இல்லற ஒப்பந்தம் என்ற அடிப்படையிலோ ஏகத்துவ வாதிகளுக்கும், இணை கற்பிப்பவர்களுக்கும் இடையில் எந்தவித ஒட்டும் உறவும் இல்லை என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.

ஏகத்துவவாதிகளாகிய நம்மிடத்தில் தான் கொள்கையின் விவேகமும், வீரியமும் குறைந்து இருக்கின்றது. ஆனால் இணை வைப்பாளர்களான அவர்களிடம் வேகமும், வீரியமும் சற்றும் குறையவில்லை. அதனால் தான் இன்றளவும் பள்ளிவாசல்களில், “நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், விரல் அசைப்பவர்கள், நெஞ்சில் கை கட்டுபவர்கள் இந்தப் பள்ளியில் தொழ அனுமதியில்லை” என்று போர்டு வைத்துள்ளார்கள். ஊரில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால், “இதோ! இந்த வீட்டில் நஜாத்காரன் இருக்கிறான்; அவன் தான் இதைச் செய்திருப்பான்” என்று பொய்ப் புகார் அளிப்பதும், ஏகத்துவப் பிரச்சாரக் கூட்டங்களைத் தடை செய்வதும், ஏகத்துவவாதிகளை ஊர் நீக்கம் செய்வதும் இந்த வீரியத்தின் வெளிப்பாடு தான்.

இந்த இணை வைப்பவர்கள் இப்படிச் செய்வதற்குக் காரணம் என்ன?

நாம் என்ன அவர்களுடைய பொருட்களை அபகரித்தோமா? அல்லது அவர்களை ஏமாற்றினோமா? அப்படிச் செய்தவர்களைக் கூட இவர்கள் மன்னித்து விடுவார்கள். “ஏகனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக ஆக்கக் கூடாது; நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும்” என்று நாம் சொன்னதால் தானே நம்மை எதிர்க்கின்றார்கள். இதைச் சொன்னதால் தான் அன்று அந்த மக்கா காஃபிர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். ஏகத்துவவாதிகளே! இப்படிப்பட்ட இணை வைப்பவர் களிடத்தில் தான் நீங்கள் உறவை வலுப்படுத்திக் கொள்கிறீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன்பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்: 9:23)

“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!

(அல்குர்ஆன்: 9:24)

சத்தியத்தை விட்டு விட்டு, அசத்தியத்தில் இருப்பவர்களைப் பொறுப்பாளிகளாக ஆக்காதீர்கள் என்று இறைவன் இந்த வசனங்களில் எச்சரிக்கிறான். அவ்வாறு செய்வோரை அநியாயக்காரர்கள் என்றும் கூறுகின்றான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போரை தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

(அல்குர்ஆன்: 58:22)

அல்லாஹ்வையும் அவன் தூதரையும் மறுக்கக் கூடியவர்கள் பெற்ற தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், எந்த உறவாக இருந்தாலும் அவர்களை ஓர் இறை நம்பிக்கையாளன் நேசிக்க மாட்டான் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகின்றான். ஏகத்துவவாதிகளே! இந்த நிலை இன்று உங்களிடம் இருக்கின்றதா? சிந்தியுங்கள்.

நம்முடைய நெருங்கிய உறவினர்கள் தங்கள் வீடுகளில் ஏதேனும் விஷேசம் வைத்து அழைத்தால், “அங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும்; அதனால் நான் வர மாட்டேன்” என்று மறுக்கின்றோம். அவர்கள் ஏதேனும் உணவு கொடுத்தாலும், “இது அல்லாஹ் அல்லாதவருக்காகத் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்குமோ!” என்று கருதி சாப்பிட மறுக்கிறோம். இதுவெல்லாம் எதற்காக? இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்யக் கூடாது என்பதற்காகத் தான்.

ஆனால் திருமணம் என்று வரும் போது மட்டும் இறைக் கட்டளையை மறுத்து, இணை வைக்கும் மாமன் மகளையும், மாமி மகளையும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இது தான் ஏகத்துவமா? இதைத் தான் நாம் இந்த ஏகத்துவக் கொள்கையில் கற்றுக் கொண்டோமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இன்று எத்தனையோ பெண்கள் இந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு, இதற்காகக் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பெண்களுக்குத் தவ்ஹீது மாப்பிள்ளை கிடைக்காமல் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் இருந்தால் கூட அவர்களுக்கு எப்போதோ திருமணம் ஆகியிருக்கும்.

ஆனால் இன்று அந்தப் பெண்கள் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள். ஏன்? தவ்ஹீது ஜமாஅத்தில் மாப்பிள்ளைகளுக்குப் பஞ்சமா? ஏராளமான இளைஞர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால் அவர்கள் தங்கள் மாமன் மகள், மச்சான் மகள் என்று இணை வைக்கும் பெண்களைத் தேடிச் சென்று திருமணம் முடித்துக் கொள்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?

நம்மிடம் கொள்கை உறவு உறுதியாகவில்லை; குருதி உறவுக்குத் தான் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம். மார்க்கச் சொற்பொழிவுகளில் நபிமார்களின் வரலாறுகளையும், சத்திய ஸஹாபாக்களின் வரலாறுகளையும் கேட்டிருக்கிறோம். அவர்களிடம் இருந்த கொள்கை உறுதி இன்று நம்மிடம் உள்ளதா?

ஏகத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் இப்ராஹீம் (அலை) அவர்களின் வரலாறுகளை எத்தனையோ சொற்பொழிவுகளில்  கேட்டிருப்போம். அந்த இப்ராஹீம் (அலை) அவர்களிடம் இருந்த கொள்கை உறுதி நம்மிடம் உள்ளதா?

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன்: 60:4)

இறைவன் இந்த வசனத்தில்  இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தவர்களிடமும் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்று கூறுகின்றான். அது எந்த விஷயத்தில் தெரியுமா? “பிரார்த்தனை செய்வதற்கும், நேர்ச்சை செய்வதற்கும், உதவி தேடுவதற்கும் இன்னும் அனைத்து வணக்கங்களுக்கும் தகுதியானவன் ஏக நாயனான அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்று நீங்கள் சொல்கின்ற வரை உங்களுக்கும் எங்களுக்கும் பகைமையும் விரோதமும் இருந்து கொண்டே இருக்கும்; அது வரை உங்களுக்கும் எங்களுக்கும் எந்த ஒட்டும் உறவும் கிடையாது; நீ வேறு; நான் வேறு” என்று கூறி, தங்களுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார்களே! அந்த விஷயத்தில் முன் மாதிரி  உள்ளது.

அன்று அவர்களிடம் இருந்த அந்தக் கொள்கை உறுதி இன்று நம்மிடம் உள்ளதா? இல்லை! அந்த உறுதி இருந்தால் அசத்தியக் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களிடம் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் உறவை வலுப்படுத்துவோமா? ஏகத்துவ வாதிகளே சிந்தியுங்கள்!

நீங்கள் ஒரு முஷ்ரிக்கான பெண்ணை திருமணம் செய்து கொள்கிறீர்கள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவள் அந்தக் குழந்தையை, ஏக இறைவனை மட்டும் வணங்கக்கூடிய பிள்ளையாக வளர்த்தெடுப்பாளா? அல்லது தன்னைப் போலவே முஹ்யித்தீனையும், நாகூர் ஆண்டவரையும் (?) வணங்கக்கூடிய பிள்ளையாக அந்தக் குழந்தையை வளர்ப்பாளா? ஏனெனில் தந்தையை விட தாயிடத்தில் தான் குழந்தை அதிக நேரம் உள்ளது. அவள் அக்குழந்தைக்கு எந்தக் கொள்கையை ஊட்டி வளர்க்கிறாளோ அந்தக் கொள்கையில் தான் அது வளரும்.

“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே! அவன் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே!” என்று கண்ணதாசன் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதைத் தான் அவர் கவிதையாக எழுதினார்.

“பிறக்கும் குழந்தைகள் யாவும் (இஸ்லாம் எனும்) இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அவர்கள் உணர்ந்து கொள்ளும் வரை அதிலேயே உள்ளனர்.  அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை மாற்றி விடுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அஹ்மத்: 15036, 15037)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளை இடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன்: 66:6)

இந்த வசனத்தில் இறைவன் “உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து காத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுகிறான். ஆனால் நாமோ தெரிந்து கொண்டே நம் சந்ததிகளை நரகத்தில் கொண்டு சேர்க்கிறோம்.

வணங்கப்படுவதற்கும், பிரார்த்திக்கப்படுவதற்கும் தகுதியானவன் ஏகனாகிய அந்த அல்லாஹ் தான். இதற்கு மாற்றமாக நாம் நடந்தால் மறுமையில் நாம் நரகத்தில் தள்ளப்படுவோம் என்று நம்புகின்ற ஒருவன் அதற்கு நேர் மாறாக நடக்கக் கூடிய ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக இருக்குமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

இன்று எத்தனையோ பெண்கள் ஏகத்துவத்திற்காக தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரையும் பகைத்துக் கொண்டு இருக்கிறார்களே! இவர்களின் நிலை என்ன?

எங்கள் கல்லூரியில் படித்த ஒரு பெண், “வரதட்சணை வாங்கக் கூடிய இணை வைக்கும் ஒருவனை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்; இணை வைக்காத ஏகத்துவ மாப்பிள்ளையைத் தான் மணமுடிப்பேன்’ என்று இது நாள் வரை காத்திருந்தாள். அவளுடைய குடும்பத்தாரும் தங்கள் பிள்ளைக்கு தவ்ஹீது மாப்பிள்ளை வரும் என்று காத்திருந்தார்கள். தங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்திருந்தார்கள். ஆனால் தவ்ஹீது மாப்பிள்ளை வரவில்லை.

எனவே அவளுடைய பெற்றோர், இனியும் எத்தனை நாட்களுக்குத் தான் குமரை வைத்துக் கொண்டு இருப்பது? என்று எண்ணி வரதட்சணை கொடுத்து, இணை வைக்கும் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். அவளோ, “எனக்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளையின் குடும்பத்தார் இணை வைப்பவர்கள்; நான் என்ன செய்யப் போகின்றேன்?’ என்று பதறுகின்றாள்.

எனக்குத் தெரிந்த இன்னொரு பெண் சில நாட்களுக்கு முன்னால் என்னிடம் வந்தாள். “என் கணவனின் குடும்பத்தார் அனைவருமே இணை வைக்கக்கூடியவர்கள். ஏதேனும் கந்தூரி வந்தால் அங்கு செய்யக்கூடிய சாப்பாட்டைக் கொண்டு வந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று என்னை வற்புறுத்துகிறார்கள். நான் நோன்பு வைத்துள்ளேன் என்று சொன்னால் கூட அவர்கள் என்னைக் கட்டாயப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்வது?” என்று கேட்கிறாள்.

சமீபத்தில் சேரன்மகாதேவி என்ற ஊருக்கு, மார்க்கச் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்த போது அங்கு ஒருவர், “இந்த ஊரில் தர்கா வழிபாடு அதிகமாக உள்ளது. எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை’ என்று சொல்லி விட்டு, “என் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது; அவர்களும் தர்ஹாவாதிகள் தான்’ என்று கூறினார்.

“இணை கற்பிப்பவர்களை இறை நம்பிக்கையாளர்கள் திருமணம் செய்வதை விட்டும் இறைவன் தடுத்துள்ளான்; எனவே இணை வைப்பவர்களுக்குத் திருமணம் செய்து வைக்காதீர்கள்’ என்று அவர்களிடம் கூறி விட்டு அந்தப் பெண்ணிடம், “நீங்கள் மார்க்கத்தைப் பற்றி அறிந்தவர் தானே! உங்கள் தாயாரிடம் இது பற்றி எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்று கேட்டேன்.

அதற்கு அந்தப் பெண், “நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லி விட்டேன். ஆனால் என் தாய் கேட்பதில்லை. “இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லி விட்டால் பிறகு வேறு யார் உன்னைத் திருமணம் செய்வார்கள்?’ என்று கேட்கிறார். நான் இறைவனிடம் துஆச் செய்து கொண்டு இருக்கிறேன். நீங்களும் எனக்காக துஆச் செய்யுங்கள்’ என்று கூறினாள்.

நமக்குத் தெரிந்தது சில பெண்கள் தான். நமக்குத் தெரியாமல் எத்தனை பெண்கள் ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, ஏகத்துவவாதியைத் தான் திருமணம் முடிப்பேன் என்று      ஏங்கி, கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஏகத்துவம் சுடர் விட்ட ஆரம்பத்தில் விரல் விட்டு எண்ணும் அளவில் தான் தவ்ஹீதுவாதிகள் இருந்தார்கள். ஆனால் இன்று இந்த தவ்ஹீது ஜமாஅத் மிகப் பெரும் சமுதாயமாக இருக்கிறது. ஆனால் தவ்ஹீதுவாதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர், தவ்ஹீதை ஏற்றுக் கொண்ட பெண்களைக் கண்டு கொள்ளாமல் இணை வைக்கும் பெண்களைத் தேடிச் சென்று திருமணம் செய்கிறார்கள்.

உறுதியாக நின்ற உமர் (ரலி)

நபித்தோழர்களிடம் இருந்த கொள்கை உறுதியும், பிடிப்பும் இன்று நம்மிடத்தில் இல்லை. கொள்கையா? உறவா? என்று வரும் போது நபித்தோழர்கள் உறவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு, கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

“(பத்ருப் போரில் பிடிபட்ட) இந்தக் கைதிகள் விஷயமாக நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என பத்ருடைய தினத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது, அபூபக்ர் (ர-), “அல்லாஹ்வின் நபியே! அவர்கள் நம்முடைய சித்தப்பா, பெரியப்பா குடும்பத்தைச் சார்ந்த மக்களாவர். எனவே அவர்களிடத்தி-ருந்து நஷ்ட ஈட்டை வாங்கி விட்டு, அவர்களை விடுதலை செய்வதை நான் விரும்புகின்றேன்.  அந்த நஷ்ட ஈடு காஃபிர்களுக்கு எதிராக நமக்கு ஒரு பலமாகவும், இதன் மூலம் அல்லாஹ் அவர்களுக்கு இஸ்லாத்தின் பால் வழிகாட்டவும் கூடும்” என்று கூறினார்கள்.

“கத்தாபின் மகனே! நீ என்ன கருதுகின்றாய்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், “இல்லை! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் கொண்ட கருத்தை நான் கொண்டிருக்க வில்லை. மாறாக, அவர்களை எங்கள் பொறுப்பில் விட்டு விடுங்கள். அவர்களது கழுத்துக்களை நாங்கள் வெட்டுகின்றோம். அலீயிடம் அகீலை விடுங்கள். அவர் அவரது கழுத்தை வெட்டுவார். (தன் குடும்பத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்னாருக்குரிய வாய்ப்பை உமரிடத்தில் விடுங்கள். நான் அவருடைய கழுத்தை வெட்டுகின்றேன். நிச்சயமாக இவர்களெல்லாம் இறை நிராகரிப்பின் தலைவர்களும் அதன் பெரும் புள்ளிகளும் ஆவார்கள்” என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சொன்ன கருத்தின் பால் சாயாமல் அபூபக்ர் கூறிய கருத்தின் பாலே சாய்ந்தார்கள்.  மறு நாள் நான் வந்த போது, அல்லாஹ்வின் தூதரும், அபூபக்ரும் அழுது கொண்டிருந்தனர். “நீங்களும் உங்களுடைய தோழரும் எதனால் அழுகின்றீர்கள்? என்று எனக்கு அறிவியுங்கள். அழ முடிந்தால் நானும் அழுகின்றேன். நான் அழ முடியவில்லையெனில் நீங்கள் அழுவதற்காக நானும் அழுவது போல் பாவனை செய்கின்றேன்” என்று கூறினேன்.  அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தோழர்கள் அந்தக் கைதிகளிடமிருந்து நஷ்ட ஈட்டை வாங்கியதற்காக எனக்கு நேர்ந்ததை எண்ணி அழுகின்றேன். அவர்களுக்குரிய வேதனை இந்த மரத்திற்கு அருகில் என்னிடம் காட்டப்பட்டது” என்று கூறினார்கள். அல்லாஹ் 8:68, 69 வசனங்களை இறக்கினான்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

(முஸ்லிம்: 3621)

மாமன், மச்சான் யாராக இருந்தாலும் அவர்களை எங்கள் கைகளாலேயே சிரச் சேதம் செய்கிறோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்களே! இந்த அணுகுமுறை நம்மிடம் வர வேண்டும். அதைத் தான் அல்லாஹ்வும் அங்கீகரித்தான்.

(முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாம் வெட்டிக் கொல்லச் சொல்கிறது என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. முஸ்லிம்களை வேரோடு அழித்தொழிப்பதற்காக படை திரட்டி யுத்தக் களம் வந்தவர்களைப் பற்றிய நிகழ்ச்சி என்பதைக் கவனத்தில் கொள்க!)

நாங்கள் ஏகத்துவவாதிகள்; ஏகத்துவத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வோம்; நாங்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் கட்டளையை அப்படியே எடுத்து நடப்பவர்கள் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே! திருமண விஷயத்தில் நீங்கள் அப்படித் தான் நடக்கிறீர்களா? சிந்தித்துப் பாருங்கள்.