எதிர்விளைவைக் கவனிக்கும் இஸ்லாமிய மார்க்கம்

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.

இறைவன் ஒரே ஒருவன் தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; வேறு எந்தச் சக்தியுமில்லை என்ற ஏகத்துவ, ஓரிறைக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்ட மார்க்கம் இஸ்லாமிய மார்க்கமாகும்.

ஒரு முஸ்லிம் இந்த ஏகத்துவக் கொள்கையை நம்பிக்கை கொள்வதுடன், மற்றவர்களையும் இந்தக் கொள்கையின்பால் கனிவோடும், கண்ணியத்தோடும் அழைக்க வேண்டும் என மார்க்கம் கூறுகின்றது. அவ்வாறு அழைக்கும் போது உண்மையான கடவுளான அல்லாஹ்வுக்கு மட்டும் தான் அனைத்து ஆற்றலும் உள்ளன; மற்ற தெய்வங்களுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்பதை, குர்ஆன் கூறக்கூடிய அழகிய, அறிவார்ந்த வாதங்களுடன் எடுத்து வைக்கச் சொல்கின்றது.

அப்படி உண்மையான கடவுள் கொள்கையை எடுத்து வைக்கும் போதும், இன்னபிற சமயங்களிலும் பிற மதத்தின் கடவுள்களைத் திட்டக் கூடாது என்று தெளிவான கட்டளையைப் பிறப்பித்துள்ளது.

وَلَا تَسُبُّوا الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَيَسُبُّوا اللّٰهَ عَدْوًاۢ بِغَيْرِ عِلْمٍ ‌ؕ كَذٰلِكَ زَيَّنَّا لِكُلِّ اُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ اِلٰى رَبِّهِمْ مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம்.

பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

(அல்குர்ஆன்: 6:108)

இவ்வாறு கட்டளையிடுவதன் மூலம் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்துப் பேச வேண்டும் என்று மார்க்கம் வழிகாட்டுகின்றது.

ஒவ்வொரு சாமானியனும் உலக விவகாரங்களில் எதிர்விளைவைத் தெரிந்தே வைத்திருக்கின்றான். ஒரு வியாபாரி, ஒரு பொருளுக்கு 100 ரூபாய் என்று விலை சொல்லும் போது, வாங்குபவர் அதை 50 ரூபாய்க்குத் தருவீர்களா? என்று கேட்கின்றார். அப்போது தான் அங்குமில்லாமல் இங்குமில்லாமல் 70 ரூபாய்க்கு வியாபாரி வருவார் என்று வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றார்.

இப்படி, என்ன செய்தால் என்ன வரும் என்ற எதிர் விளைவை ஒவ்வொரு சாதாரண மனிதனும் விளங்கி வைத்திருக்கின்றான். இந்த விவரமும் விளக்கமும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கண்டிப்பாக இருந்தாக வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

அந்த அடிப்படையில் தான் பிற மதக் கடவுள்களைத் திட்டக்கூடாது என்று கூறுகின்றது. ஒரு முஸ்லிமின் பார்வையில் பிற மதக் கடவுள்கள் போலியானவை, அவற்றுக்கு எந்தச் சக்தியும் இல்லை தான். அதனால் அவன் அந்தக் கடவுள்களைத் திட்டும் போது அந்த தெய்வங்களால் அவனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.

ஆனால் இவர் திட்டுவதால் பிற மதத்தவர் பாதிப்புக்குள்ளாகி, அவர் பதிலுக்கு இவர் வணங்குகின்ற உண்மையான கடவுளைத் திட்ட ஆரம்பித்துவிடுவார். அது இவரை உண்மையான கடவுளைத் திட்டிய பாவத்திற்கு ஆளாக்கிவிடுகின்றது.

முஸ்லிமல்லாத அந்த நபர் உண்மையான கடவுளாகிய அல்லாஹ்வைத் திட்டுவதற்கு இந்த முஸ்லிம் காரணமாகின்றார். அதனால் அந்த முஸ்லிமுக்கு இது பாவமாகவும் பாதகமாகவும் ஆகிவிடும். ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனிக்க வேண்டும் என்று இறைவனின் வேதம் கூறுகின்றது.

பிள்ளையின் திட்டு தான்; பிறர் திட்டல்ல!

கடவுள் விஷயத்தில் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்ற மார்க்கம், பெற்றோர்கள் விஷயத்திலும் பிள்ளைகள் எதிர்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

عَنْ بْنِ عَمْرٍو ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا

،قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِنَّ مِنْ أَكْبَرِ الْكَبَائِرِ أَنْ يَلْعَنَ الرَّجُلُ وَالِدَيْهِ قِيلَ يَا رَسُولَ اللهِ وَكَيْفَ يَلْعَنُ الرَّجُلُ وَالِدَيْهِ قَالَ يَسُبُّ الرَّجُلُ أَبَا الرَّجُلِ فَيَسُبُّ أَبَاهُ وَيَسُبُّ أَمَّهُ

 

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது.

நபி (ஸல்) அவர்கள், “ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.

(புகாரி: 5973)

இன்றைக்கு நமது நாட்டில் ஒருவர் மற்றொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது, தன்னுடன் சண்டை போடுபவரைத் திட்டுவதுடன் மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. அவருடைய ஏச்சு பேச்சுக்கள் அத்துடன் நிற்பதில்லை. அவருடைய பெற்றோரையும் சேர்த்தே திட்டுகின்றார். இவரும் பதிலுக்கு அவருடைய பெற்றோரைத் திட்டுகின்றார்.

இப்படி எதிர்விளைவை ஏற்படுத்தி, தன்னுடைய பெற்றோரை எதிரி திட்டினால் அது இவரே நேரடியாகத் தனது பெற்றோரைத் திட்டியதற்குச் சமம் என்று மார்க்கம் கூறுகின்றது. இது பெரும் பாவமாகும் என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்படிப் பிறர் மூலம் தன்னுடைய பெற்றோரைத் திட்டுகின்ற எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடியவராக ஒரு முஸ்லிம் இருக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

பிறர் நம்முடைய பெற்றோரைத் திட்டுவதற்குத் தூண்டுவதும் பெரும் பாவம் தான் என்று இஸ்லாம் சொல்கின்றது. அப்படியானால் பெற்றோரை நேரடியாகத் திட்டுவது மிகப் பெரும் பாவம் என்பதையும் பெற்றோரை அடிப்பது கொடிய பாவம் என்பதையும், அவர்களைக் கொலை செய்வது மிகக் கொடூரமான பாவம் என்பதையும் இந்தச் செய்தி உள்ளடக்கி அமைந்துள்ளது.

விளையாட்டு வினையாகும்

ஒருவர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு, உன்னைக் குத்தி விடுவேன் என்று தனது நண்பரை நோக்கி கத்தியைக் காட்டிக் கேலி செய்வார். இஸ்லாம் இங்கும் பின்விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

عَنْ هَمَّامٍ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ،
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاََ يُشِيرُ أَحَدُكُمْ عَلَى أَخِيهِ بِالسِّلاَحِ ، فَإِنَّهُ لاَ يَدْرِي لَعَلَّ الشَّيْطَانَ يَنْزِعُ فِي يَدِهِ فَيَقَعُ فِي حُفْرَةٍ مِنَ النَّارِ

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி),
(புகாரி: 7072)

இந்தக் கேலிப்பேச்சு துப்பாக்கி வைத்திருப்பவர்களுக்கும் இன்று மிகவும் பொருந்திப் போகின்றது. கத்தியாவது அதை வீசுவதற்குக் கொஞ்சம் முயற்சியைப் பிரயோகிக்க வேண்டும். துப்பாக்கிக்கு அதுகூடத் தேவையில்லை. ஆட்காட்டி விரலை அசைத்தால் போதும். அநாயசமாக எதிரில் நிற்கும் ஆள் காலியாகிப் போய்விடுவார்.

எனவே தான் ஒரு முஸ்லிம் விளைவைக் கவனித்து வினையாற்ற வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது. ஒரு விளையாட்டு வினையாகிப் போய்விடக்கூடாது என்ற விளைவைப் பார்க்கச் சொல்கின்றது.

எலி ஏற்படுத்தும் எதிர்விளைவு
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا  قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم خَمِّرُوا الآنِيَةَ وَأَجِيفُوا الأَبْوَابَ وَأَطْفِئُوا الْمَصَابِيحَ فَإِنَّ الْفُوَيْسِقَةَ رُبَّمَا جَرَّتِ الْفَتِيلَةَ فَأَحْرَقَتْ أَهْلَ الْبَيْتِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இரவில் உறங்கச் செல்லும்போது) பாத்திரங்களை மூடிவையுங்கள். கதவுகளைத் தாழிட்டுக்கொள்ளுங்கள். விளக்குகளை அணைத்துவிடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால்) கவ்வி இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடக்கூடும்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(புகாரி: 6295)

இரவில் தூங்கும் போது எலி ஏற்படுத்தும் எதிர்விளைவைக் கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் போடுகின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு, கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும் என்ற சட்டத்தையும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கேஸ் சிலிண்டர் வெடித்து எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. ஒருவர் இரவில் தூங்கச் செல்லும் போது கேஸ் சிலிண்டரை மூடி வைக்க வேண்டும். இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் பின்விளைவைக் கவனிக்க வேண்டும்.

ஆலய உடைப்பு அறவே கூடாது

ஒரு முஸ்லிம் எக்காரணத்தைக் கொண்டு பிற மத வழிபாட்டுத் தலங்களை உடைத்துவிடக் கூடாது. ஒரு முஸ்லிம் இந்தப் பாவத்தைச் செய்தான் என்றால் அதன் எதிர்விளைவு, பள்ளிவாசல் தகர்ப்புக்கு அது வழிவகுத்து விடும். இதன் மூலம் பள்ளிவாசலை இடித்ததற்கு அந்த முஸ்லிமே காரணமாகி விடுகின்றார். இதைத் திருக்குர்ஆனின் கீழ்க்கண்ட வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌ ؕ وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ ؕ اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ‏

மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

(அல்குர்ஆன்: 22:40)

ஒரு மதத்தவர், அடுத்த மதத்தவரின் வழிபாட்டுத் தலத்தைத் தாக்காமல் காப்பது தான் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய பாதுகாப்பு வளையமாகும். அந்தப் பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட்டுவிட்டால் எந்த வழிபாட்டுத் தலத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் ஆகிவிடும். இதிலும் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

பிற மதத்தவரைக் கொலை செய்தல்

பல்வேறு மதத்தினர் சேர்ந்து வாழ்கின்ற நாடு இந்தியா! இதுபோன்ற நாடுகளில் பிற மதத்தவரை ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் அல்லது அவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதன் விளைவு விபரீதமாக அமைந்துவிடும்.

பிற மதத்தினரில் யாரையேனும் ஒரு முஸ்லிம் கொலை செய்து விட்டால் பதிலுக்கு அவர்கள் முஸ்லிம்களைக் கொலை செய்வார்கள். இதைக் கவனித்தே ஒரு முஸ்லிம் செயல்பட வேண்டும்.

அப்படியானால் பிற மதத்தினர் எதிர்த்துத் தாக்க மாட்டார்கள் என்றால் அப்போது அவர்களைக் கொலை செய்யலாம் என்று இதை விளங்கிக் கொள்ளக்கூடாது. பொதுவாகக் கொலை செய்வது கொடிய பாவம் என்பதை இதே இதழில், “கொலை கொடியது’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், இதுபோன்ற விவகாரங்களில் ஒரு முஸ்லிம் எதிர்விளைவைக் கவனித்து செயல்படவேண்டும். அப்படிக் கவனிக்கத் தவறினால் அவர்கள் முஸ்லிம்கள் இல்லை என்பதை மேற்கண்ட சான்றுகள் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

هُمُ الَّذِيْنَ كَفَرُوْا وَصَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَـرَامِ وَالْهَدْىَ مَعْكُوْفًا اَنْ يَّبْلُغَ مَحِلَّهٗ‌ ؕ وَلَوْلَا رِجَالٌ مُّؤْمِنُوْنَ وَنِسَآءٌ مُّؤْمِنٰتٌ لَّمْ تَعْلَمُوْهُمْ اَنْ تَطَئُوْ هُمْ فَتُصِيْبَكُمْ مِّنْهُمْ مَّعَرَّةٌ ۢ بِغَيْرِ عِلْمٍ ۚ ‌لِيُدْخِلَ اللّٰهُ فِىْ رَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ‌ ۚ لَوْ تَزَيَّلُوْا لَعَذَّبْنَا الَّذِيْنَ كَفَرُوْا مِنْهُمْ عَذَابًا اَ لِيْمًا‏

அவர்கள் தாம் (ஏக இறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்).

தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.

(அல்குர்ஆன்: 48:25)

மக்காவில் தங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தாமல் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலையைக் கவனித்துச் செயல்படுமாறு வல்ல இறைவன் தனது தூதருக்குக் கட்டளையிடுகின்றான்.

முஸ்லிம்களே முஸ்லிம்களை நேரடியாகத் தாக்கிவிடும் அபாயத்தை இங்கு அல்லாஹ் குறிப்பிட்டாலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கும் பகுதிகளில் பிற மதத்தவர்களால் அழிவுக்குள்ளாகி விடுகின்ற எதிர்விளைவையும் சேர்த்துத் தான் இந்த வசனம் குறிக்கின்றது.

இன்று இந்த எதிர்விளைவுகளை, இந்தியாவுக்கு எதிராக அறிக்கை விடுகின்ற அய்மான் ஜவாஹிரிகள் பார்ப்பதில்லை. இதனால் எத்தனை முஸ்லிம்கள் அழிந்தாலும் அதைப் பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. இப்படி எதிர்விளைவைப் பார்க்காதவர் முஸ்லிம்கள் இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

மொத்தத்தில் ஒரு முஸ்லிம் இந்த உலகம், மறுமை ஆகிய அனைத்து விஷயங்களிலும் எதிர்விளைவுகளைக் கவனித்தே செயல்பட வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இதைப் புரிந்து செயல்பட்டால் தான் இம்மை, மறுமையில் வெற்றி பெற முடியும்.

இறைவனிடத்தில் நன் மக்களாய் நம் அனைவரும் இருப்போமாக.! அதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.!