உழைப்பு

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் - 1

முன்னுரை

ஒருவர் தான் உழைத்து உண்பதை விட சிறந்த உணவாக ஏதும் இருக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை பின் வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு நபிமார்களும் தான் வாழ்வில் கடுமையாக உழைத்து தான் வாழ்திருக்கிறார்கள். அவ்வாறு சம்பாதித்ததில் நல் வழியில் செலவிடல் வேண்டும் .

சிறந்த உணவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தமது கையால் உழைத்து உண்பதைவிடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தமது கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தார்கள்.
அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி),(புகாரி: 2072)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு (போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1470)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதைவிடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1471)

நபிமார்கள் அனைவரும் ஆடு மேய்த்தவர்களே!

‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்தததில்லை!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், ”நீங்களுமா?” என்று கேட்டார்கள். ”ஆம். மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2262)

‘நபி (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி கட்டளையிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச்சென்று, சுமைதூக்கி ஒரு ‘முத்து கூலியைப் பெற்று அதை தர்மம் செய்வார்! ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு ஓர் இலட்சம் தங்கக் காசுகள் உள்ளன!
”அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் தம்மையே இவ்வாறு (‘அவர்களில் சிலருக்கு’ என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்!” என்று அறிவிப்பாளர் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் அல் அன்ஸாரீ (ரலி),(புகாரி: 2273)

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னையும் சஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். சஅத் (ரலி), ”நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என் இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!” எனக் கூறினார். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),(புகாரி: 2048)

அப்போது நான், ”இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?” எனக் கேட்டேன். அவர், ”கைனுகா எனும் கடைவீதி இருக்கிறது!” என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும், நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி (ஸல்) அவர்கள், ”நீ மண முடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்!” என்றேன். ”யாரை?” என்றார்கள். ” ஓர் அன்ஸாரிப் பெண்ணை!” என்றேன். ”எவ்வளவு மஹர் (மணக்கொடை) கொடுத்தாய்?” என்று கேட்டார்கள். ” ஒரு பேரீச்சங்கொட்டை எடைக்குத் தங்கம்!” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”ஓர் ஆட்டையேனும் (அறுத்து வரிமாலி) மணவிருந்தாக அளிப்பாயாக!” என்றார்கள்.

நபித் தோழர்களில் சிலர் ஒரு பயணத்தில் சென்றிருந்தபோது, ஓர் அரபிக் குலத்தாரிடம் தங்கினார்கள். அவர்களிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ”இதோ! இங்கே வந்திருக்கக் கூடிய கூட்டத்தினரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் மருத்துவம் இருக்கலாம்!” என்று கூறினர்.

அவ்வாறே! அவர்களும் நபித் தோழர்களிடம் வந்து, ”கூட்டத்தினரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது ஏதேனும் (மருந்து) இருக்கிறதா?” என்று கேட்டனர். அப்போது, நபித் தோழர்களில் ஒருவர், ”ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப் பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப் பார்க்க முடியாது!” என்றார்.

அவர்கள் சில ஆடுகள் தருவதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர் மீது (இலேசாகத் துப்பி) ஊதி, ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஓதலானார். உடனே பாதிக்கப்பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்துவிடப்பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை! பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ”இதைப்பங்கு வையுங்கள்!” என்று ஒருவர் கேட்டபோது, ”நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது!” என்று ஓதிப் பார்த்தவர் கூறினார்.

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ”அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப் பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டு விட்டு ”நீங்கள் சரியானதையே செய்திருக்கிறீர்கள்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கு வைத்துக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்!” என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),(புகாரி: 2276)

”எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்” என்று அவர் கூறினார்.
”இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்” என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன்: 28:27-28)➚

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன்: 62:10)➚

வணிகமோ, வர்த்தகமோ அவர்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை நிலை நாட்டுவதை விட்டும், ஸகாத் கொடுப்பதை விட்டும் திசை திருப்பாது. பார்வைகளும், உள்ளங்களும் தடுமாறும் நாளைஅவர்கள் அஞ்சுவார்கள். (அல்குர்ஆன்: 24:37)➚

நல் வழியில் செலவிடுதல்

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன்: 2:267)➚

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ.. அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை – அதை நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வலது கரத்தால் ஏற்று, பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1410)

‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், ‘நீங்களுமா?’ என்று கேட்டார்கள். ‘ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2262)

யாசகம் கேட்பதை விட சிறந்த செயல்

‘பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தம் முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து (விறகச்) செல்வது சிறந்ததாகும். அவர் யாசிக்கும்போது யாரும் கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.’
இதை அபூ ஹுரைரா(ரலி) ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) இருவரும் அறிவித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 2075)

உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது

நான் நபி(ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன்; வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ‘ஹகீமே! நிச்சயமாக இச்செல்வம் பசுமையானதும், இனிமையானதுமாகும். இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக் கொள்கிறவருக்கு இதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படும்; இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் அபிவிருத்தி ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது’ எனக் கூறினார்கள்.
நான், இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீது ஆணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும் வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

அபூபக்கர் (ரலி) (ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார். அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) (தம் ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி), ‘முஸ்லிம் சமுதாயமே! தம் உரிமையைப் பெறுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற மறுக்கிறார். இதற்கு நீங்கள் சாட்சி!’ எனக் கூறினார். ஹகீம், நபி(ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும் வரை எதையும் கேட்கவேயில்லை என ஸயீத் இப்னு அல் முஸய்யப் கூறுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(புகாரி: 1472)

‘ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.’
என மிக்தாம்(ரலி) அறிவித்தார். அறிவிப்பவர்: மிக்தாம் (ரலி),(புகாரி: 2072)

மனிதன் செய்ய வேண்டிய கடமை

அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் மனைவிக்குச் செய் வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்!

ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!’ என்று கூறினார்கள். நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என்மீது சிரமம் சுமத்தப்பட்டுவிட்டது! ‘இறைத்தூதர் அவர்களே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்!’ என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘தாவூத் நபி(அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!’ என்றார்கள். தாவூத் நபி(அலை)யின் நோன்பு எது? என்று கேட்டேன். ‘வருடத்தில் பாதி நாள்கள்!’ என்றார்கள்.

‘அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) வயோதிகம் அடைந்த பின் ‘நபி(ஸல்) அவர்களின் சலுகைகளை நான் ஏற்காமல் போய் விட்டேனே’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்!’ என அபூ ஸலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ் (ரலி),(புகாரி: 1975)

கணவனின் கடமைகள்

ஒரு மனிதர் நபியவர்களிடம் ”மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி),(அபூதாவூத்: 1830) ,(அஹ்மத்: 19162)

”தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி),(அபூதாவூத்: 1442)

அல்லாஹ்வின் நல்லுபதேசங்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் நபிமார்களுக்கு எதை ஏவினானோ அதையே முஃமின்களுக்கும் ஏவுகின்றான் என்று கூறி விட்டு, தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள். (ஸாலிஹான) நல்லமல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன். (அல்குர்ஆன்: 23:51)➚

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ள வற்றிலிருந்து தூய்மையானவற்றையே உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன்: 2:172)➚

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள். பின்பு ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள். ”அவனோ நீண்ட தூரம் பயணத்தில் இருக்கின்றான். அவனுடைய தலை புழுதி படிந்து பரட்டையாக இருக்கின்றது. அவன் வானத்தின் பால் கைகளை உயர்த்தி, எனது இறைவனே! எனது இறைவனே! என்று அழைக்கின்றான். அவனது ஆடை, அவனது உணவு, அவனது குடிப்பு ஆகிய அனைத்தும் ஹராமாக இருக்கின்றது. அவனே ஹராமில் மூழ்கி விட்டான். இந்த நிலையில் அவனது துஆ எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),(முஸ்லிம்: 1844)