உரிமைகளை மீட்டெடுப்போம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இஸ்லாமிய மார்க்கம், ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசும் மதம் அல்ல! இது சத்திய மார்க்கம். மனிதனுக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் போதிக்கிற முழுமையான வாழ்க்கை நெறி. இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் மட்டுமின்றி, ஒவ்வொரு மனிதனும் சக மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை, அதாவது அடுத்தவருக்குத் தர வேண்டிய உரிமைகளைப் பற்றியும் இஸ்லாம் எடுத்துரைக்கிறது.

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)

(புகாரி: 2448)

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும். ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

இவ்வாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

(புகாரி: 2449)

ஈருலகிலும் பரிபூரணமான வெற்றி பெற வேண்டுமெனில், எங்கும் யாருக்கும் அநீதி இழைக்கக் கூடாது; பிறருடைய உரிமையை மறுக்கக் கூடாது; பறிக்கக் கூடாதென இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது. இப்படி சமூக நலன் காக்கும் இஸ்லாமிய மார்க்கம், ஒவ்வொரு மனிதனும் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தி இருக்கிறது.

ஒருவர் விரும்பினால், சுற்றியுள்ள மக்களிடம் தமக்குக் கிடைக்க வேண்டிய உரிமையை தாமாகவோ, அல்லது அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலோ விட்டுக் கொடுக்கலாம். அதே சமயம் அவர் தமக்குரிய உரிமையைப் பெற்றுக் கொள்ள விரும்பினால், அதன் அவசியத்தையும் தேவையையும் கவனத்தில் கொண்டு அதற்காக முயற்சித்தால் அவரை இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக, அவரின் உரிமைக் குரலை மனதார ஆதரிக்கிறது; ஊக்கப்படுத்துகிறது.

“தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடும் போது கொல்லப்பட்டவர் இறை வழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)

(புகாரி: 2480)

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் எனது செல்வத்தைப் பறிக்கும் நோக்கத்தில் வந்தால் (நான் என்ன செய்ய வேண்டும்) கூறுங்கள்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவனுக்கு உமது செல்வத்தை (விட்டு)க் கொடுக்க வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அவன் என்னுடன் சண்டையிட்டால்…?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீரும் அவனுடன் சண்டையிட வேண்டியது தான்!” என்று கூறினார்கள். “(அந்தச் சண்டையில்) அவன் என்னைக் கொன்றுவிட்டால்…?” என்று அந்த மனிதர் கேட்டார். அவர்கள், “அப்போது நீர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவீர்” என்றார்கள். “நான் அவனைக் கொன்றுவிட்டால்…?” என்று அவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் நரகத்திற்குச் செல்வான்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்லிம்: 225)

ஒருவர் தமக்கு உரிமையானதைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடும் போது ஒருவேளை அந்தப் போராட்டத்தில் இறந்து விட்டால் அவரை உயிர்த் தியாகி என்று இஸ்லாம் நற்செய்தி கூறுகிறது.

செல்வமோ, பொருளோ எதுவாக இருக்கட்டும்! ஒருவர் தம்முடைய உடமைக்காக, உரிமைக்காகக் களமிறங்கிப் போராடும் பண்பை இஸ்லாம் எந்தளவுக்குப் பாராட்டுகிறது என்பதற்கு இந்தச் செய்தி முக்கியச் சான்று.

இன்னும் சொல்வதாக இருந்தால், இஸ்லாம் வருவதற்கு முன்பு ஆண்களுக்குத் தரப்படும் அடிப்படையான பல உரிமைகள் பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்பட்டு வந்தன. அவர்கள் வெறும் போகப்பொருளாகப் பார்க்கப்பட்டனர். இந்த நிலையை இஸ்லாம் மாற்றிக் காட்டியது. அவர்களுக்கு இஸ்லாம் தகுந்த உரிமைகளை வழங்கியது. இதோ சில செய்திகளைப் பாருங்கள்.

“பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

(புகாரி: 757)

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்துச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் (ரலி)

(புகாரி: 6945)

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) அவர், தம் தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அப்பாஸே! முஃகீஸ், பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா, முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி(ஸல்) அவர்கள் “முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக்கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா “இறைத்தூதர் அவர்களே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகிறீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “இல்லை! நான் பரிந்துரைக்கவே செய்கிறேன்” என்றார்கள்.

அப்போது பரீரா, “(அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(புகாரி: 5283)

அல்லாஹ்வின் ஆலயம் சென்று வழிபடும் உரிமை ஆண்களுக்கு இருப்பது போன்று பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியது. இந்த அடிப்படையில் ஒரு பெண் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவதற்கு அனுமதி கேட்டால் அடக்கி ஒடுக்காமல் அவளுக்குரிய உரிமையைத் தந்து விடுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.

இது போலவே, வாழ்க்கை துணையைத் தேர்வு செய்யும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற உரிமைகளையும் வழங்கினார்கள். மேலிருக்கும் செய்திகளைக் கொஞ்சம் கவனியுங்கள். தங்களுக்குரிய உரிமைகளை அன்று பெண்கள் பெற்றுக் கொள்ள விரும்பிய போது அவர்களை நபியவர்கள் திட்டவில்லை; அவமதிக்கவில்லை. இப்படி எந்த விஷயத்திலும் ஒருவர் தமக்குரிய உரிமையைக் கேட்கும் போது அவரை நபியவர்கள் வரவேற்ற நிகழ்வைத் தான் வரலாற்றில் காண முடிகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டு வரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும் அமர்ந்திருந்தனர். (வலது புறத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நபியவர்களின் வழிமுறை!) எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை எவருக்காகவும் நான் விட்டுத் தர மாட்டேன்’ என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில் வைத்துவிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி)

(புகாரி: 5620)

ஏதேனும் சபையில் பொருளை விநியோகம் செய்யும் போது, பரிமாறும் போது வலது பக்கத்தில் இருந்தே துவங்க வேண்டும்; இடது பக்கத்தில் இருப்பவரைக் காட்டிலும் அதைப் பெறுவதற்கு முதல் உரிமை படைத்தவர் வலது பக்கத்தில் இருப்பவர் தான். இதுவே நபிகளார் கற்றுத் தந்த வழிமுறை.

அந்த அடிப்படையில், அல்லாஹ்வின் தூதரிடம் இருந்து பானம் பெற்றுப் பருகும் உரிமையைப் பெறுவதில் இளைஞர் ஒருவர் உறுதியாக இருக்கிறார்; விட்டுக் கொடுக்க மறுக்கிறார். அப்போது அவரை நபியவர்கள் கண்டிக்கவில்லை; அவருக்குரிய உரிமையைக் கொடுத்தார்கள்.

இன்றைக்குச் சிலர் தமக்குரிய முக்கிய உரிமைகளைக் கேட்பதற்கும் கூட தயங்குவதைப் பார்க்கிறோம். அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ! என்ன சொல்வார்களோ என்று எண்ணிக் கொண்டு உரிமையிழந்து தவிக்கவும் தயாராகி விடுகிறார்கள். இப்படி, அழிவு ஏற்பட்டாலும் சரி! உரிமையைக் கேட்காமல் முடங்கிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாம் கற்றுத் தரவில்லை. இதற்கு இங்குள்ள சம்பவம் முக்கிய சான்று.

ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;)விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்’ என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 2390)

நபியவர்கள் ஒருபோதும் நீதி தவற மாட்டார்கள்; அடுத்தவர் பொருளை அபகரித்துக் கொள்ள மாட்டார்கள். இதை அறிந்திருந்தும், கடன் கொடுத்த உரிமையில் ஒருவர் நபிகளாரிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். நபி மீது பேரன்பு கொண்ட நபித்தோழர்கள் ஆவேசம் அடைகிறார்கள்.

அப்போது நடந்தது என்ன? “ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதன் மூலம் ஒருவர் தமக்குரிய உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முனைவதை நபியவர்கள் எந்தளவுக்கு ஆதரித்து இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதோ இன்னொரு செய்தியைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்களும் (மக்காவைவிட்டுப்) புறப்பட்டார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள், ‘என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே!’ என்று (கூறிக் கொண்டே) அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள்.

அலீ(ரலி) அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளுடைய கையைப் பிடித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், ‘இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளை (இடுப்பில்) சுமந்து கொள்’ என்று கூறினார்கள்.

அச்சிறுமியின் விஷயத்தில் அலீ(ரலி) அவர்களும், ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொரு வரும், ‘அவளை நானே வளர்ப்பேன்’ என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்டனர்.

அலீ(ரலி), ‘நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள்’ என்று கூறினார்கள். ஜஅஃபர்(ரலி), ‘இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை என் (மண பந்தத்தின்) கீழ் இருக்கிறாள்’ என்று கூறினார்கள். ஸைத்(ரலி), ‘(இவள்) என் சகோதரரின் மகள்’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அச்சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபரே அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், ‘சிற்றன்னை என்பவள் தாயின் அந்தஸ்தில் இருக்கிறாள்’ என்று கூறினார்கள்.

அலீ (ரலி) அவர்களை நோக்கி, ‘நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன்’ என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கிறீர்கள்’ என்றார்கள். மேலும், ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, ‘நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எம்முடைய பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்)’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப்(ரலி)

(புகாரி: 2699)

நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். அவரது மகள் பாசத்திற்கு ஏங்கியவளாக ஆதரவற்றுத் தவித்து நிற்கும் போது அவளை அரவணைப்போடு வளர்க்க மூன்று பேர் போட்டி போடுகிறார்கள். அவர்களில் அந்தப் பெண் விஷயத்தில் அதிக உரிமை கொண்டவருக்குச் சாதகமாக நபியவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

பொதுவாக, ஏதேனும் விஷயத்தில் தமக்குரிய உரிமையைப் பெறுவதில் ஒருவர் உறுதியாக இருக்கும் போது அதை நபியவர்கள் கண்டித்தது இல்லை. எந்தளவுக்குத் தெரியுமா? எதிரியாகவோ, நெருக்கம் அற்றவராகவோ இருந்தாலும் கூட அவருக்குரிய உரிமையை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தந்திருக்கிறார்கள்.

என் தந்தையார் உஹுதுப் போரின் போது, அவரின் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.)

நபி(ஸல்) அவர்கள், கடன் கொடுத்தவர்களிடம், என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி(ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்’ என்று கூறினார்கள்.

பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகிவிட்டன.

அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)

(புகாரி: 2395)

இஸ்லாமிய மார்க்கத்தின் ஆன்மீகத் தலைவர்! இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் மாபெரும் தலைவர்! இத்தகைய உயரிய அந்தஸ்தில் இருக்கும் நபியவர்கள், தமது தோழர் தரவேண்டிய கடனைத் தள்ளுபடி செய்யுமாறு யூதரிடம் பரிந்து பேசுகிறார்கள்.

முஸ்லிம்கள் நிறைந்த நாட்டில் சிறுபான்மையாக வாழும் யூத இனத்தைச் சார்ந்த அவர் அதற்கு மறுத்து விடுகிறார். அப்போது தமக்குரிய அதிகாரத்தை வைத்து அவரை அல்லாஹ்வின் தூதர் மிரட்டினார்களா? தண்டித்தார்களா? இல்லவே இல்லை.

காரணம், கடன் கொடுத்தவருக்குக் கடனை திரும்பப் பெறும் உரிமை இருக்கிறது. அவர் கடனாளிக்கு அவகாசம் அளிக்கவும் உரிமை இருக்கிறது. கடனைத் தள்ளுபடி செய்யவும் உரிமை இருக்கிறது. அதன்படி கடனைத் திருப்பிக் கேட்கும் போது அவர் தமது உரிமையைப் பெற்றுக் கொள்வதை நபியவர்கள் தடுக்கவில்லை; தடை விதிக்கவில்லை.

முஹம்மது நபியின் ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் எவராக இருந்தாலும் தங்களது உரிமையை தைரியமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் அவமதிக்க மாட்டார்கள் என்பதைப் பின்வரும் செய்தி மூலமும் அறியலாம்.

யூதர் ஒருவர் (சந்தையில்) தம் சரக்கை எடுத்துக் காட்டியபோது மிகக் குறைந்த விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதை அவர் விரும்பவில்லை. உடனே அவர், ‘(நான் இந்த விலையை வாங்கிக் கொள்ள) மாட்டேன்; மனிதர்கள் அனைவரையும் விட (சிறந்தவராக) மூஸாவைக் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார். இதை அன்சாரிகளில் ஒருவர் கேட்டுவிட்டார்.

உடனே எழுந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து, ‘நபி (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்றா நீ கூறுகிறாய்?’ என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, ‘அபுல் காசிம் அவர்களே! (என் உயிர்) உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள். என் முகத்தில் அறைந்தவரின் நிலை என்ன?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை நோக்கி, ‘நீ ஏன் இவரின் முகத்தில் அறைந்தாய்?’ என்று கேட்டார்கள். அவர் விஷயத்தை நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக்குறி தென்படுகிற அளவிற்கு அவர்கள் கோபமடைந்தார்கள்.

பிறகு, ‘அல்லாஹ்வின் நேசர்களுக்கிடையே (‘ஒருவர் மற்றவரை விடச் சிறப்பானவர்’ என்று) ஏற்றத் தாழ்வு பாராட்டதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில்) எக்காளம் ஊதப்படும். உடனே, வானங்களில் இருப்பவர்களும் பூமியில் இருப்பவர்களும் மூர்ச்சையடைந்து விழுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பிறகு, அது இன்னொரு முறை ஊதப்படும். அப்போது (உயிராக்கி) எழுப்பப்படுபவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அந்த வேளையில் மூஸா(அலை) அவர்கள் இறை சிம்மாசனத்தைப் பிடித்துக் கெண்டிருப்பார்கள். ‘அவர்கள் ‘தூர் சினாய்’ (மலையில் இறைவனைச் சந்தித்த) நிகழ்ச்சியின்போது மூர்ச்சையாகி விழுந்தது கணக்கிலெடுக்கப்(பட்டு இங்கு அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்)பட்டதா? அல்லது எனக்கு முன்பே அவர் (மயக்கம் தெளிவிக்கப்பட்டு) எழுப்பப்பட்டு விட்டாரா?’ என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 3414)

பொரும்பான்மை பலத்தோடு வாழ்கிற சமூகத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் எவ்விதப் பாதிப்பும் வந்துவிடக் கூடாது. அவர்களுக்குத் தக்க பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை. இந்தக் கடமை பல நாடுகளில் அலட்சியமாகக் கருதப்படுவதைப் பார்க்கிறோம்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்குத் தர வேண்டிய உரிமைகளை நிறைவாகக் கொடுத்தார்கள்.

இஸ்லாமிய நாட்டில் யாராக இருந்தாலும் தமக்குரிய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை அன்று நிலவியது. காரணம், ஒருவர் தமது உரிமையைக் கேட்பதையும், அதைப் பெற்றுக் கொள்ள முனைவதையும் இஸ்லாம் வரவேற்கிறது.

இதை நாம் மனதில் ஆழமாகப் பதிந்து கொள்ள வேண்டும். இப்படியான மார்க்கத்தில் இருக்கிற நாம் நம்முடைய அத்தியாவசியமான அடிப்படையான உரிமைகளுக்காவது குரலெழுப்பும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதை உணர்ந்து செயல்பட வேண்டிய இக்கட்டான தருணத்தில் இந்திய முஸ்லிம்களாகிய நாம் இப்போது இருந்து கொண்டிருக்கிறோம்.

இந்திய தேசத்தைக் கட்டமைக்கவும் அந்நிய சக்திகளிடமிருந்து காக்கவும் பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக அகதிகளாக மாற்றிட இன்று பாசிச சக்திகள் முயற்சிக்கிறார்கள். அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, அநீதி இழைக்கிறார்கள். இதற்கு எதிராக நாம் வெகுண்டெழ வேண்டும்.

இதோ நபியவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

“ஜிஹாதில் (எனும் அறப்போரில்) சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி),

(அபூதாவூத்: 3781)

“உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் (எனும் அறப்போர்) செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

(நஸயீ: 3141)

அராஜகம் செய்யும் ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு எதிராக அவர்களுக்கு முன்னால் நெஞ்சை நிமிர்த்தி நின்று கொண்டு, உண்மையை எடுத்துச் சொல்லி, உரிமைக்காகக் குரல் எழுப்புவதன் சிறப்பை இந்தச் செய்திகளிலிருந்து நாம் அறிய முடிகின்றது.

இதை நினைவில் கொண்டு, இந்திய மண்ணின் மைந்தர்கள் என்ற நமது குடியுரிமையை நிலைநாட்டிட வீறுகொண்டு எழுவோம்! நமது உரிமைகளை மீட்டெடுப்போம்!