உயிர் பிரியும் தருணம் மூன்று இல்லாதிருந்தால்…

பயான் குறிப்புகள்: பொதுவான தலைப்புகள் – 4

ஒவ்வொரு மனிதனும் தனது மரணத்திற்கு முன்பாக பல்வேறு இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என ஆசை கொள்கிறான்.
தனக்கென்று வீடு, கார், சொகுசு பங்களா, அதிக சொத்து இதுவே சராசரி மனிதனின் கனவு, இலட்சியம் எல்லாமே! அதுவும், தான் மரணிப்பதற்குள் இவற்றை அடைந்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் பலர் இவ்வுலக வாழ்க்கையில் பயணிக்கின்றனர்.
மார்க்கம் அனுமதித்த வழிமுறையில் இவற்றைச் சம்பாதித்தால் அதில் எந்தப் பிரச்சனையுமில்லை தான்.
ஆனால் மரணிக்கும் முன் இவையெல்லாம் தனக்குக் கிடைத்திட வேண்டும் என்றெண்ணி அதை நோக்கிச் செயல்படுவதை விட, மரணிக்கும் தருவாயில் மார்க்கம் எச்சரித்த செயல்கள், பண்புகள் தன்னிடத்தில் இருக்கக் கூடாது என்பதில் ஒவ்வொரு முஸ்லிமும் கவனமாக இருக்க வேண்டும் என மார்க்கம் போதிக்கின்றது.
உயிர் பிரியும் தருணம் குறிப்பிட்ட மூன்று பண்புகள் – செயல்கள் இல்லாத நிலையில் ஒருவர் மரணத்தைத் தழுவினால் அவர் சொர்க்கம் செல்வார் என்று நபிகளார் கூறுகிறார்கள்.
சொர்க்கம் செல்ல விரும்புகிற அனைவரும் எப்போதும் தம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய நபிமொழியையும் அது குறித்த சிறியதொரு விளக்கத்தையும் இக்கட்டுரையில் காண்போம்.
‘‘ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கத்தில் இருப்பார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: அஹ்மத் (21356), திர்மிதீ (1497)

பெருமை

ஒருவர் சொர்க்கம் செல்ல விரும்பினால் முக்கியமான மூன்று பண்புகளுக்குத் தமது வாழ்க்கையில் இடமளித்து விடக்கூடாது என்ற அறிவுரையை வழங்கி அதில் முதலாவதாக ‘பெருமை கூடாது’ என்ற செய்தியை மேற்படி நபிமொழி எடுத்துரைக்கின்றது.
பெருமை என்பது மனிதனுக்குத் தகுதியானதல்ல. அது முழுக்க முழுக்க இறைவனுக்கு உரிய பண்பாகும். எச்சமயத்திலும் மனிதன் பெருமை கொள்ளலாகாது.
வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்: 45:37)
பெருமை கொள்ளும் எந்தத் தகுதியும் மனிதனுக்கு இல்லை.
வானம் பூமியை, அதில் உள்ளவற்றை படைத்தவன் இறைவன் ஒருவனே! இவற்றைப் படைத்ததில் மனிதனுக்கு எள்முனையளவும் பங்கில்லை என்ற போது பெருமை கொள்வது மனிதனுக்கு எப்படித் தகும்?
மலஜலத்தைச் சுமந்து கொண்டு பசி, மறதி உள்ளிட்ட பல்வேறு பலவீனங்களைக் கொண்ட மனிதன் எந்த முறையில் பெருமை கொள்ள முடியும்?
ஆச்சரியத்தக்க கண்டுபிடிப்புகள் பலவற்றை மனிதன் நிகழ்த்தினாலும் மனிதனுக்கு இறைவன் வழங்கிய அறிவே அக்கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படை ஆதாரமாக இருக்கிறது எனும் போது அதன் பெருமை எப்படி மனிதனுக்குரியதாகும்?
இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் மனிதன் பெருமை கொள்ளத் தகுதியற்றவன் என்பதை அறியலாம்.
ஆகவே தான் பெருமை கொள்வோருக்கு மறுமை வாழ்வு சிறப்பானதாக இருக்காது என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
பூமியில் ஆணவத்தையும் குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு இறையச்சமுடையவர்களுக்கே!
(அல்குர்ஆன்: 28:83)
இத்தகைய இழிகுணமான பெருமையடிப்பதை விட்டும் மனிதன் தவிர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக மரண நெருக்கத்தில் பெருமை என்ற குணம், அதன் வாடை மனிதனுக்குத் துளியும் இருந்திடக் கூடாது.
பெருமை என்ற குணத்திலிருந்து விலகாத நிலையில் மரணத்தைத் தழுவினால் அத்தகையோர்க்கு நரகமே பரிசு என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
‘‘தமது உள்ளத்தில் கடுகளவு இறை நம்பிக்கையுள்ள எவரும் நரத்தில் நுழையமாட்டார். தமது உள்ளத்தில் கடுகளவு ஆணவம் உள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத் (ரலி)
நூல்: முஸ்லிம் (148)
‘‘எவனது உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒரு மனிதர், ‘‘ஒருவரின் ஆடையும் காலணியும் அழகானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (இது பெருமையாகுமா?)’’ என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மக்களை இழிவாகக் கருதுவதும் தான்
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் (147)
மனிதன் பெருமை கொள்வதற்குக் கல்வி, பொருளாதாரம், அழகு, அந்தஸ்து போன்றவை காரணங்களாக ஆகிவிடுகிறது.
இவையனைத்தையும் அல்லாஹ்வே நமக்கு வழங்கினான் என்ற உணர்வு மேலிட்டால் பிற மனிதர்களை அற்பமாகக் கருதும் மனப்பாங்கிலிருந்து விடுபட்டு, பெருமையை நமது வாழ்விலிருந்து இல்லாமல் ஆக்கலாம்.

மோசடி

ஒரு மனிதன் தனது மரணத்திற்கு முன்பாக தவிர்ந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் குறிப்பிடும் மூன்று பண்புகளில் இரண்டாவது பண்பு மோசடியாகும்.
இன்றைய உலகமே மோசடிகளால் நிரம்பி வழிகின்றது.
எதில் தான் மோசடி செய்ய வேண்டும் என்ற வரையறையே இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் மோசடி வியாபித்திருக்கின்றது. ஆலமரம் போல ஆங்காங்கே தனது கிளைகளை அது பரப்பி விட்டிருக்கின்றது.
மனிதன் உண்ணும் உணவுகளான அரிசி, காய்கறி, பழங்கள் துவங்கி குழந்தைகளின் பசி போக்கும் பால், நோயாளிகள் உட்கொள்ளும் மருந்துகள் என எல்லாவற்றிலும் மோசடி நிரம்பியுள்ளது.
கடல் உணவான மீன்களைத் தான் ஓரளவு நம்பத் தகுந்ததாக மக்கள் கருதினர். இப்போது கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அந்தக் கடல் உணவுகளிலும் ரசாயன மருந்துகளை ஏற்றி விற்கின்றனர் என்ற செய்தி மோசடியின் நவீன வடிவத்தைப் படம் பிடித்துப் காட்டுகின்றது.
இது தவிர, ஆன்லைனில் ஆப்பிள் போன் ஆர்டர் செய்தால் ஆப்பிள் பழத்தை வைத்து அனுப்புவது ‘பவர் பேங்க்’ எனப்படும் மின் சாதனத்தை வாங்கினால் உள்ளே கடற்கரை மணலை வைத்து அனுப்புவது இதெல்லாம் மோசடியின் இன்னொரு ரகம்.
இப்படிப் பல வகைகளில் மோசடி செய்யும் மக்கள் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என நபிகளார் முன்னரே கூறியுள்ளார்கள்.
‘‘உங்களுக்குப் பிறகு ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன்வருவார்கள். ஆனால் சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள். ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்: புகாரி (2651)
இத்தகைய மோசடிக் குணம் ஒரு முஸ்லிமின் குணமல்ல! மாறாக, நயவஞ்சகனின் குணம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள்.
‘‘பேசினால் பொய் பேசுவான், வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் ஆகிய மூன்றும் நயவஞ்கனின் அடையாளமாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (33), முஸ்லிம் (107)
மோசடிக் குணம் கொண்ட ஒருவன் தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் அது நயவஞ்சகனின் குணமே என்று நபிமொழி எச்சரிக்கின்றது.
‘‘நயவஞ்கனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் நோன்பு நோற்றாலும் தொழுதாலும் தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக் கொண்டாலும் சரியே!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (109)
பிற மக்களை ஏமாற்றுவது அவனை முஸ்லிம் சமுதாயத்திலிருந்தே வெளியேற்றிவிடும் மகா மோசமான, நாச காரியமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதில் தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. ‘‘உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?’’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்துவிட்டது’’ என்று கூறினார். அதற்கு அவர்கள், ‘‘மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!’’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (164)
அதுமட்டுமல்ல! ஈமானைப் பறிக்கும் மாபாதகக் காரியம் இந்த மோசடிக் குணம். இவ்வாறு தான் நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.
‘‘மோசடி செய்பவன் மோசடி செய்யும் போது அவன் இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மோசடி செய்வதில்லை. உங்களை நான் எச்சரிக்கிறேன்; உங்களை நான் எச்சரிக்கிறேன்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி­)
நூல்: முஸ்லி­ம்(103)
ஈமானைப் பறிக்கின்ற, முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் வெளியேற்றுகின்ற, சுவனம் செல்வதைத் தடுக்கின்ற, நயவஞ்சகனின் பண்பான மோசடிக்குணத்தை அது எந்த வடிவில் இருந்தாலும் நமது வாழ்விலிருந்து அகற்றி, விட்டொழிக்க வேண்டும். அதுவே நரகிலிருந்து மீட்சி பெற உரிய வழி என்பதை இனியும் தாமதியாமல் உணர வேண்டும்.

கடன்

ஒருவர் ஏகத்துவக் கொள்கையை ஏற்ற நிலையில் இறைவனை வணங்கி வழிபட்டு, பெருமை, மோசடி, கடன் ஆகிய மூன்று இழிகுணங்களை விட்டும் விலகிய நிலையில் மரணித்தால் அவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று மார்க்கம் கூறுகிறது அல்லவா? இந்தப் பட்டியலில் மூன்றாவது கடன்.
அதாவது கடன் இல்லாத நிலையில் மரணிப்பதை ஒவ்வொரு முஸ்லிமும் விரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் அனுதினமும் இந்தக் கடனிலிருந்து தான் பாதுகாப்புக் கோரினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், தொழுகையில் துஆ செய்யும் போது இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (2397)
அல்லாஹ்வின் பாதையில் உயிர்நீத்த உயிர் தியாகியாக இருந்தாலும் அவர் மரணிக்கும் போது கடனை விட்டுச் சென்றால் அல்லாஹ் அந்தப் பாவத்தை மன்னிக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்கள்.
“அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்த ஷஹீதுக்கு, கடனை தவிர எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3498)
உயிர் தியாகியின் எல்லாப் பாவங்களையும் மன்னிக்க முன்வரும் அளவற்ற அருளாளன் அல்லாஹ், கடனை மன்னிக்க மாட்டான் என்றால் இறைவனின் பார்வையில் கடன் எத்தகையது என்பதைப் புரியலாம்.
இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கு ஒரு உயிர் தியாகிக்கே கடன் தடையாக இருக்கும் என்றால் சாமானியர்கள் நமது நிலை என்ன? என்பதை சற்று ஆழமாகவே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆணவ குணத்தை அடியோடு அழிப்போம்!
மோசடிப் பண்பை முற்றாக மாய்ப்போம்!
பொருளாதாரக் கடனை பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுவோம்!
இறைவா! ஆணவம், மோசடி, கடன் ஆகிய இந்த மூன்று பண்புகளை விட்டும் நீங்கிய நிலையில் மரணித்து சொர்க்கம் செல்லும் வாய்ப்பைத் தந்தருள்வாயாக என இறைவனைத் தொடர்ந்து பிரார்த்திப்போம். அல்லாஹ் அருள்புரிவானாக!