03) உண்டியல்
இஸ்லாமியப் பொருளாதாரத்தில் பொருட்களின் விலையை ஆட்சியாளர்கள் நிர்ணயிக்கவோ, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கவோ அனுமதி இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல்கள்:(திர்மிதீ: 1235),(அபூதாவூத்: 2994), இப்னுமாஜா 2191,(அஹ்மத்: 12131)
தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது வணிகர்களுக்குச் செய்யப்படும் அநீதி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த ஹதீஸிலிருந்து ஆட்சியாளர்களுக்குரிய அதிகாரம் உணரப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சியில் உண்டியல் வழியாக பணம் அனுப்பத் தடை விதிக்கக் கூடாது.
ஒருவர் அயல் நாட்டில் திரட்டிய செல்வத்தை தான் விரும்புகின்ற வழிகளில் தனது தாயகம் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இது தான் நியாயமானது. இஸ்லாமிய ஆட்சியில் இப்படித் தான் நடக்க வேண்டும். ஏனைய ஆட்சி முறைகளில் அதற்குத் தடை இருந்தால் அதை நீக்குவதற்காகப் போராடலாம்.