இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இஸ்லாம் போற்றும் மனித உரிமைகள்

இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம் கோடான கோடி மக்கள் தொகையை எட்டியிருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் குடும்ப அமைப்பு, நட்பு வட்டாரம், வியாபாரத் தொடர்பு மற்றும் வேறு பலவிதமான தொடர்புகள் என ஏதேனும் ஒரு விதத்தில் இன்னொரு மனிதனைச் சார்ந்திருக்கிறான்.

சங்கிலித் தொடர்பு கொண்ட மனித சமுதாயத்தில் ஒவ்வொருவரும் மற்றவரிடம் தனி மனிதனுக்கு உரித்தான உரிமைகளையும் சுதந்திரங்களையும் மீறாமல் இருத்தல் வேண்டும். மனித உரிமைகளின் பட்டியல் நீண்டு காணப்பட்டாலும் அத்தனை விஷயங்களையும் மூன்று அடிப்படைகளின் கீழ் அடக்கிவிடலாம்.

உயிர், பொருள் மற்றும் மானம் ஆகிய மூன்றும் தான் அந்த அடிப்படையான உரிமைகள்.
எந்த ஒரு உரிமையாக இருந்தாலும் அவை இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் அமைந்துவிடும்.

எனவே, எந்த ஒரு மனிதனாயினும் இன்னொரு மனிதனின் உயிர், பொருள், மானம் ஆகிய விஷயங்களில் எல்லை தாண்டினால் அது மனித உரிமை மீறலே! இன்று உலகில் மனிதர்களுக்கு எதிராக நடக்கும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், பொருளாதார மோசடி, கந்துவட்டி என அனைத்து குற்றங்களும் இந்த மூன்று அடிப்படையை மீறுவதில் ஒன்றாகத்தான் இருக்கும்.

வலுவான இரும்புக் கரம் கொண்ட சட்டங்களால் மட்டுமே இந்த உரிமை மீறல் குற்றங்களுக்குத் தீர்வு காண முடியும். அதைவிட முக்கியமாக, அடுத்தவர் உரிமையில் தலையிடுவதற்கு எந்த ஒருவருக்கும் அதிகாரம் இல்லை என்று ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் பதியவேண்டும். இஸ்லாம் அதை அழகாகவும் மிக ஆழமாகவும் மக்களின் உள்ளத்தில் பதிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது (ஆற்றிய உரையில்), “மிகவும் புனிதம் வாய்ந்த மாதம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ்) மாதம்தான்” என்று பதிலளித்தார்கள்.

(தொடர்ந்து) நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நகரம் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த ஊர் (மக்கா) தான்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “மிகவும் புனிதம் வாய்ந்த நாள் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். மக்கள், “இதோ இந்த (துல்ஹஜ் பத்தாம்) நாள்தான்” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “உங்களுடைய இந்த நகரத்தில், உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வளவு புனிதமானதோ அதைப் போன்றே அல்லாஹ் உங்கள் உயிர், உடைமை, மானம் ஆகியவற்றைப் புனிதமாக்கியுள்ளான்” என்று கூறிவிட்டு, “நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்துவிட்டேனா?” என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறையும் மக்கள், ஆம் என்று நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தனர்.

(புகாரி: 6785)

நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி உரையில், தனது 23 ஆண்டு காலப் பிரச்சாரத்தின் சாராம்சத்தை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். அதில், மிக முக்கியமான அறிவிப்பாக மக்களுக்கு அறிவித்த விஷயம், பிற மனிதரின் உரிமை தொடர்பான விஷயம்.

இஸ்லாமியர்களுக்கு மக்கா மாநகரமும் துல்ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் எவ்வளவு புனிதமிக்கது என்று அனைத்து மக்களுக்கும் தெரியும். அதைப் போலத்தான் பிற மனிதர்களின் உயிர், உடைமை, மானம் ஆகியவையும் அவர்களுக்குப் புனிதமாக இருக்கிறது. அந்தப் புனிதத்தைப் பாழ்படுத்துவது ஹராம் எனும் தடைசெய்யப்பட்ட விஷயமாகும்.

மேலும் இஸ்லாம், மறுமை வாழ்வு எனும் உலக அழிவிற்கு பின்னுள்ள வாழ்வை முஸ்லிம்களுக்கு நம்பிக்கையாக ஊட்டுகிறது. எந்த ஒரு மனிதராயினும் அந்த நம்பிக்கை ஆழப்பதியும் போதுதான் அவர் உண்மை இறை விசுவாசம் கொண்டவராகக் கருதப்படுவார். அதுவே நிலையான வாழ்வாகும். அங்கு சுவனம், நரகம் எனும் இருவித வாழ்வுள்ளது.

இவ்வுலகில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நன்மை புரிவோர் சுவனத்திலும், இறைவனுக்கு மாறு செய்வோர் நரகத்திலும் கொண்டு சேர்க்கப்படுவர். அத்தகைய மறுவுலக வாழ்வான சுவன, நரகத்தின் பாதையைத் தீர்மானிக்கும் நாள்தான் விசாரணை நாள்.அந்த விசாரனை நாளில் சிலருக்கு இவ்வுலகில் செய்த பாவத்திற்காக மன்னிப்பு வழங்கப்படாது. அவர்கள் பாவச்சுமையைச் சுமந்து நரகில் புகுவார்கள்.

அத்தகைய மன்னிப்பு வழங்கப்படாதவர்களில் ஒரு சாரார் யாரெனில், அடுத்தவர் உரிமையில் தலையிட்டு, எல்லை தாண்டி அவரை பாதிப்பிற்கு உள்ளாக்கியர்கள் ஆவர்.
எந்த மனிதன் இவ்வுலகில் பாதிக்கப் படுகிறானோ அவன், தனக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களை மனதார மன்னிக்கின்ற வரை இறைவன் அவர்களை மன்னிக்க மாட்டான்.

அந்தக் குற்றம் அவர்களது கணக்கில் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக விசாரணை நாளில் பாதிப்பை ஏற்படுத்தியவர் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார் என்று இஸ்லாம் சொல்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.

ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (பாதிக்கப்பட்டவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (பாதிக்கப்பட்டவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்.

(புகாரி: 2449)

இந்த உலக வாழ்க்கை என்பதே, மனிதர்கள் இங்கு நற்செயல்கள் புரிந்து மறுவுலகில் சுவனத்தை இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளத்தான். அத்தகைய நற்செயல்களை ஒருவன் எவ்வளவு செய்து சேமித்து வைத்திருந்தாலும் அவன் பிறர் உரிமையில் எல்லை தாண்டியிருந்தால் அது பாதிக்கப்பட்டவனின் கணக்கில் கொண்டு போய் சேர்க்கப்படும் என்றும், நன்மைகள் ஏதும் இல்லையென்றால் அல்லது அவன் ஏற்படுத்திய பாதிப்பு நன்மையை விட அதிகமாக இருந்தால் அதற்குப் பகரமாக, பாதிக்கப்பட்டவனின் பாவங்களை எடுத்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டவனின் கணக்கில் சேர்க்கப்படும் என்றால் அது எவ்வளவு பெரிய கைசேதம்.

சேர்த்து வைத்த நன்மைகள் பயன் தராதது ஒருபுறம் வேதனையென்றால், செய்யாத குற்றத்திற்குத் தண்டனையை அனுபவிப்பது அதைவிட வேதனை. இவ்வளவு கைசேதத்தை ஏற்படுத்தும் பாவமாக மனித உரிமை மீறலை இஸ்லாம் அறிமுகப்படுத்துகிறது.
இதை இன்னும் தெளிவாகப் பின்வரும் செய்தி எடுத்துரைக்கிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திவாலாகிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், “யாரிடம் வெள்ளிக் காசோ (திர்ஹம்) பொருட்களோ இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்’’ என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் உண்டு. அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்திருப்பார்.

ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும்; இன்னும் சில இவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக்கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்படும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப்போனவர்)’’ என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 5037)

தொழுகை, நோன்பு, ஜகாத் என்று இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளைச் செய்து நன்மைகளைச் சேமித்து வைத்திருந்தாலும் பிறரின் உரிமையில் எல்லை கடக்கும் விதமாக நடந்து கொண்டால் அத்தனையும் அவரிடமிருந்து பறிக்கப்படும்.

எந்த அளவிற்கு மனித உரிமைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட செய்தியில், “மறுமையில் திவாலாகிப் போனவர் ஒருவரைத் திட்டியிருப்பார்” என்ற வார்த்தை உணர்த்துகிறது.

ஒருவரைத் திட்டுதல் என்பது இன்றைக்கு சாதாரணமாகக் கருதப்படுகிற, கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத விஷயமாகத்தான் அனைத்து மக்களாலும் பார்க்கப்படுகிறது.
திட்டுதல் என்ற காரியத்தில் பிறரின் மானம் சம்பந்தப்படுகிறது. அதில் அவருக்கு ஒரு இழுக்கு ஏற்படுத்தப்படுகிறது. அதனால் அதுவும் குற்றம் என்றே இஸ்லாம் சொல்கிறது.

சிறியதோ பெரியதோ, அடுத்தவர் உரிமை என்று வந்துவிட்டால் அதில் அளவுகளுக்கு வேலையில்லை. உரிமை மீறப்பட்டதா என்பதே கவனிக்கப்படும்.
மேற்படி தகவல்களிலிருந்து இஸ்லாம் மனித உரிமைகளை எவ்வளவு போற்றுகின்றது என்று தெரியும்.

இத்தகைய மனித உரிமைகளில் எல்லை மீறுகின்ற விஷயங்களில் இன்று மக்களிடம் தலை விரித்தாடும் சில விஷயங்களைப் பார்ப்போம். அவற்றில் முதலாவதாக, ஒருவரின் நம்பிக்கைக்கும் பொருளாதாரத்திற்கும் மோசடி செய்யும் விஷயமான, கடன் வாங்கி நிறைவேற்றாமல் ஏமாற்றுவதைப் பற்றி பார்ப்போம்.

கடன் மோசடி

இவ்வுலகில் மனிதர்கள் அனைவரும் ஒரே சீரான நிலையில் வாழ வைக்கப்படவில்லை. ஏனெனில் மனிதர்கள் ஒரே சீரான நிலையில் இருந்தால் உலகம் சீராக இராது.
அனைவரும் பணம் படைத்த செல்வ மாந்தர்களாக இருந்தால் அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் போன்ற அத்தியாவசியங்கள் முதல் ஆடம்பரங்கள் வரை தயார் செய்யும் தொழிலாளிகளாக இருப்பதற்கு எவரும் இருக்க மாட்டார்.

அதனால்தான் இப்படியான ஏற்றத்தாழ்வு முறையை இறைவன் வைத்துள்ளான்.
அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்படும் போது, நண்பர்கள் உறவினர்கள் எனப் பிறரிடத்தில் குறிப்பிட்ட நாட்களில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையில் பெறப்படும் தொகையே கடனாகும்.

இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் யாசிப்பதையும் பிறரிடம் கையேந்துவதையும் சுயமரியாதைக்கு இழுக்கு தரும் விஷயமாக அறிமுகப்படுத்துகிறது. ஆனால் அதே சமயம், அவசியத் தேவைக்கு, திருப்பிச் செலுத்தும் நோக்கில் வாங்கப்படும் கடனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமயிருக்கிறது.

அந்த நிபந்தனைகளில் ஒன்றுதான், கடனை எழுதிக் கொள்ள வேண்டும் என்பதும் அதற்கு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஆகும். இந்த நிபந்தனைகளில் இன்றைக்குக் கவனம் செலுத்துபவர்கள் மிக குறைவானவர்களே! லட்சக்கணக்கான மதிப்புள்ள கொடுக்கல் வாங்கல் தங்களுக்கு மத்தியில் இருந்தாலும் அதை இன்றைக்கு எழுதிக்கொள்வதும் கிடையாது, சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்வதும் கிடையாது.

இவ்வாறு இந்த நிபந்தனைகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தான் இன்றைக்குக் கடனால் பல ஏமாற்று, மோசடி போன்ற விஷயங்கள் ஏற்பட்டு, அது கொலை செய்யும் வரை அல்லது ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளும் வரை மனிதர்களைத் தள்ளிவிடுகிறது.

இந்த நிபந்தனைகள் யாவும் கடன் கொடுக்கும் மனிதனின் பொருளாதாரம் அவனிடம் சரியாக ஏமாற்றாமல் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். கஷ்டத்திற்கு நம்பி உதவும் கடனில் மனித உரிமை மீறப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நிபந்தனைகளை இஸ்லாம் விதிக்கிறது.

நிபந்தனையுடன் கடனுக்கு இஸ்லாம் அனுமதியளித்தாலும் கடனைப் பற்றி அதிகம் எச்சரிக்கையும் செய்கிறது. எச்சரிக்கைக்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது,

‘அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்ரி, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜா-, வஅஊது பி(க்)க மின் ஃபித்னத்தில் மஹ்யா, வஃபித்னத்தில் மமாத்தி. அல்லாஹும்ம! இன்னீ அஊது பி(க்)க மினல் மஃஸமி வல்மஃக்ரம்’

(இறைவா! கப்ரின் வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் பாதுகப்புத் தேடுகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள்.

(இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், “தாங்கள் கடன்படுவதிலிருந்து அதிகமாகப் பாதுகாப்புத் தேட என்ன காரணம்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மனிதன் கடன் படும் போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.

(புகாரி: 832)

கடன் வாங்குபவன் பொய் பேசுபவனாகவும் வாக்குறுதி மோசடி செய்பவனாகவும் மாறி விடுகிற காரணத்தினால் தான் கடனிலிருந்து அதிகமாக நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

சிலர், நம்பிக் கடன் கொடுத்தவனுக்கு மோசடி செய்து அவனது பொருளாதாரத்தை ஏமாற்றியும் விடுகின்றனர். இது கடன் கொடுத்தவனுக்கு, நம்பிக் கொடுத்தோம்; ஏமாற்றிவிட்டான் என்ற மன உளைச்சலையும் அவனது பொருளாதாரம் என்ற உரிமையை மோசடி செய்து பறிப்பதாகவும் ஆகிவிடுகிறது.

அதனால்தான் இத்தகைய மனிதனின் உரிமையில் விளையாடும் இந்த ஏமாற்றுக் காரியத்தை இஸ்லாம் மன்னிக்கப்படாத குற்றமாக அறிவிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன; கடனைத் தவிர.

(முஸ்லிம்: 3832)

போரில் உயிர்த்தியாகம் செய்வது என்பது இஸ்லாத்தில் ஆகச்சிறந்த காரியமாக இருக்கிறது. அல்லாஹ்விடத்தில் அவருக்கு மிகப்பெரும் அந்தஸ்த்தைப் பெற்றுத் தரும் செயல். அவரது அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடும்.

அத்தகையை உயிர்த்தியாகி, கடனைப் பெற்று அதைத் திருப்பிக் கொடுக்காத நிலையில் மரணித்துவிட்டால் அவருக்கு அதன் பாவங்கள் மன்னிக்கப்படாது என்றால் இதை இஸ்லாம் எந்த அளவுக்குப் பார்க்கிறது? மனித உரிமைக்கு எத்தகையை அந்தஸ்தைத் தருகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இன்றைக்கு அவசியத்திற்கும் அத்தியாவசியத்திற்கும் கடன் வாங்கும் நிலை மாறி, ஆடம்பரத்திற்கும், அடுத்தவர் போல் வாழ வேண்டும் என்பதற்கும், திருப்பி செலுத்தும் எண்ணிமில்லாமலும் கடன் வாங்கப்படுகிறது.

கடன் பெற நான் அலைகிறேன், அதைத் திருப்பி என்னிடமிருந்து அவன் எப்படி வாங்குகிறான் என்று பார்த்து விடுவோம் என்ற ஏமாற்றும் மனக் கண்ணோட்டத்துடனே இன்று பலர் கடன் வாங்குகின்றனர்.

இதனால் கடன் கொடுத்தவன் மன உளைச்சலுக்கு உள்ளாவதுடன் தற்கொலையும் செய்து கொள்கிறான். இத்தகைய கடன் உயிரையும், உடைமையும் ஏமாற்றிப் பறிக்கும் மனித உரிமை மீறலாகவே இருக்கிறது. அதனால்தான் இஸ்லாம் அதை மன்னிக்கப்படாத குற்றமாக அறிவிக்கிறது.

வட்டி எனும் வன்கொடுமை

கடனை வாங்கி விட்டுத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது கடன் வாங்கியவன் செய்யும் உரிமை மீறல் என்றால், வட்டி என்பது கடன் கொடுத்தவன் செய்யும் உரிமை மீறலாக அமைந்துள்ளது. இது, மனித உரிமை மீறலின் உச்சாணிக் கொம்பிலிருக்கும் முதன்மை விஷயங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.

ஒருவன் தேவைக்குக் கடன் வாங்கும்போது கொடுப்பவன் ஒரு நிபந்தனையுடன் வழங்குவான். இந்தக் கடன் தொகையை வாங்கப் பட்டதிலிருந்து மாதத்திற்கு இவ்வளவு என கால இடைவெளிக்கு ஏற்ப மேலதிக தொகையுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பான்.

ஒருவன் 10,000 ரூபாய் கடன் பெறுகிறான் எனில் குறிப்பிட்ட மாதம் கழித்து அதைத் திருப்பிச் செலுத்தும் போது 15,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் என்று காலத்திற்கு ஏற்ப வாங்கப்பட்ட தொகையை விட வட்டித் தொகையை அதிகமாகச் செலுத்துவான். இது ஒருவனது பொருளாதாரத்தையும் அதற்காக இரத்தம் சிந்தி, வியர்வை சிந்திப் பாடுபட்ட அவனது உழைப்பையும் அநியாயமாகப் பறிப்பதாகும்.

ஏமாற்றும் நோக்கில் கடன் வாங்கியவன், கொடுத்தவனின் உரிமையில் தலையிடுவதை இஸ்லாம் எந்த அளவிற்குக் கண்டிக்கிறதோ அதைவிட அதிகமாக, ஒருவன் திருப்பி செலுத்தும் நோக்கில் கடன் பெற்று, உண்மையில் அதைத் திருப்பி செலுத்த முடியாத கஷ்டத்தில் இருக்கிறான் எனில் அவனுக்குக் கடனில் சலுகை காட்டுவதற்கும் அவகாசம் அளிப்பதற்கும் மிகப் பெரும் கூலிகளையும் அந்தஸ்துகளையும் சொல்லி வரவேற்கிறது.

ஆனால், அவ்வாறின்றி கடன் பெற்று கஷ்டத்தில் இருப்பவனின் பொருளாதாரத்தை வட்டி என்ற பெயரில் அநியாயமாக ஒருவன் பறித்து அவனது உரிமையையும் உழைப்பையும் உரிஞ்சுகின்ற அட்டைப் பூச்சியாக இருக்கிறான் எனில் அவன் மிகப் பெரும் பாவி என்று இஸ்லாம் சொல்கிறது.

“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறைநம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று (பதில்) கூறினார்கள்.

(புகாரி: 2766)

இஸ்லாத்தில் ஏழு மிகப் பெரும் பாவங்களின் பட்டியலை நபி (ஸல்) அவர்கள் மேற்படி செய்தியில் நமக்குத் தந்துள்ளார்கள்.

அதில் கொலை, அனாதைகளின் சொத்தை உண்பது, அவதூறு என்று அதிகமானவை மனித உரிமை மீறும் குற்றங்களாகவே இருக்கின்றன. அதில் ஒன்றாக வட்டியையும் பெரும்பாவம் என்று இஸ்லாம் அறிவிக்கிறது. மேலும், வட்டி கொடுத்தல், வாங்குதல், பதிவு செய்தல், அதற்கு சாட்சியாக இருத்தல் என வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் இஸ்லாம் சபிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், “இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்’’ என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 3258)

மறுவுலக வாழ்வை நம்பியிருக்கும் முஸ்லிம்கள் அங்கே சுவனத்தைப் பெற வேண்டும் என்றால் அதற்கு இறையருள் அவசியம். அத்தகைய இறையின் அருளை இழக்கச் செய்து சாபத்தைப் பெற்றுத் தருகிற பெருங்குற்றமாக இந்த வட்டி திகழ்கிறது.

மேலும் வட்டியை நிரந்தர நரகத்தில் தள்ளும் குற்றமாகவும் அல்லாஹ்விடத்தில் போர் செய்வதற்குச் சமமான கண்டனத்திற்குரிய குற்றமாகவும் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் இறைவன் சொல்கிறான்.

வட்டியை உண்பவர்கள், ஷைத்தானால் தீண்டப்பட்டவன் பைத்தியமாக எழுவது போன்றே (மறுமையில்) எழுவார்கள். “வியாபாரம், வட்டியைப் போன்றது தான்” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்துள்ளான். தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தபின் (வட்டியிலிருந்து) விலகிக் கொண்டவருக்கு முன்னர் வாங்கியது உரியது. அவருடைய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டியின் பக்கம்) திரும்புவோரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன்: 2:275)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக இருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டுவிடுங்கள்.
நீங்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் போர்ப் பிரகடனம் செய்து விடுங்கள். நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்குரியது. நீங்கள் அநீதி இழைக்கக்கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது.

(அல்குர்ஆன்: 2:278), 279)

இத்தகைய பெரும் குற்றம் கொண்ட பாவமாக இஸ்லாம் இந்த வட்டியை அறிவித்துத் தடை செய்வதற்குக் காரணம் இது ஒரு மனித உரிமை மீறல் என்பது தான். இந்த மனித உரிமை மீறல் தற்போது நாம் வாழும் தமிழகத்தில் நெல்லை, மதுரை போன்ற மாவட்டங்களில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை உலுக்கிய ஒரு துயரமான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்றது. கந்துவட்டிக் கொடுமையினால் ஒரு தம்பதியினர் தங்களது சிறு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்கள். ஒட்டுமொத்த நாடும் அதிர்ந்தது.

மக்களின் மனமெல்லாம் வாடியது. செய்தி ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் நிரப்பிய தலைப்புச் செய்தியாக மாறியது. ஒரு வாரத்திற்குப் பிறகு அப்படியொரு நிகழ்வு நடந்ததையே மறந்துவிட்டோம். மனித உரிமை ஆணையம் எல்லாம் என்ன செய்தது என்று தெரியவில்லை.

‘உயிரைக் குடிக்கும் இத்தகைய வட்டி அழித்தொழிக்கப்படும்’ என்று மக்கள் நம்பும் வகையில் அரசின் செயல்பாடுகள் அமைந்ததா என்றால் நிச்சயமாக இல்லை.
அரசாங்கமே வங்கியின் வட்டியையும் மதுவின் வருவாயையும் நம்பியிருக்கும் போது எப்படி நம்பிக்கை வரும்?

இப்படி மனிதர்களின் பொருளாதாரம், உழைப்பு, மானம் மற்றும் உயிர் என்று அனைத்து உரிமைகளையும் மீறும் ஒரு வன்கொடுமையாக உள்ளதால்தான் இஸ்லாம் வட்டியை வேறருக்கிறது.

மோசடி

அடுத்து, மனித உரிமை மீறும் வரம்பற்ற செயல்களில் ஒன்றாக இருப்பது “மோசடி”
இன்று மோசடி இல்லாத இடங்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஏமாற்றுப் பேர்வழிகள் நிரம்பிய நாட்டில் வாழ்ந்து வருகிறோம். நாட்டின் தலைவன் முதல் தொண்டன் வரை அதிகமானோர் மோசடிக்காரர்களாகவே உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அரசியல் கட்சிகள் என்றாலே நினைவுக்கு வருவது மோசடிக் குற்றங்கள்தான்.

புதிதாக ஒரு கட்சி வந்தால்கூட, இவர்கள் எவ்வளவு சுருட்டப் போகிறார்கள் என்று தெரியவில்லை என்றுதான் ஒவ்வொரு குடிமகனின் எண்ணமாக மாறிவிட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடங்கி ரஃபேல் ஊழல் வரை மக்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் பிரம்மாண்ட ஊழல்கள் ஒரு புறமும், நாள்தோறும் செய்தித்தாள்களில் படித்து சலித்துப் போகும் சிறு ஊழல்கள் மறுபுறமும் இருக்கின்றன.

இவையெல்லாம் யாருடைய பணம். ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து வரி கட்டும் மக்களின் பணமல்லவா? நாட்டின் வரிக்கொள்கையே மக்களின் உழைப்பை எல்லாம் உறிஞ்சும் வகையில் இருக்கிறது. அப்படிச் செலுத்தும் வரிப்பணமும் ஊழலால் சுரண்டப்பட்டு, மக்களுக்குச் சரியான முறையில் பயன்படவில்லையென்றால் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு ஏமாற்றப்பட்டு, மோசடி செய்யப்படுகிறான்?

இன்றைய ஆட்சியாளர்களே இத்தகைய மக்களின் பொருளாதார உரிமையில் வரம்பு மீறுவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வெறும் பத்து ஆண்டு காலம் ஆட்சி செய்து, மதீனாவை மிகப் பெரும் வல்லரசாக, ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்கள் என்றால் அதன் காரணங்களில் அவர்களின் நீதியும் நேர்மையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதன் எடுத்துக்காட்டுகளில் ஒன்று இதோ உங்கள் பார்வைக்கு!

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் நான் தொழுது கொண்டிருக்கும் போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன் என விளக்கினார்கள்.

(புகாரி: 1221)

மக்களுக்குச் சேர வேண்டிய பொருளாதாரமான தங்கக்கட்டியொன்று நபி(ஸல்) அவர்களிடம் இருக்கிறது. அது தன்னிடம் ஓர் இரவுப் பொழுது கூட இருந்துவிடக்கூடாது என்று பயந்து அதை உடனடியாக மக்களுக்கு விநியோகித்துவிடுகிறார்கள்.

இப்படி சிறுபொழுது கூடத் தன்னிடம் மக்களுக்குச் சேர வேண்டிய பொருளாதாரம் இருக்க கூடாது என்றெண்ணி, அதை உடனடியாக விநியோகிக்க வேண்டும் என்று விரும்பும் நபிகளார் எங்கே! இன்றைய ஆட்சியாளர்கள் எங்கே! மோசடி, ஊழல், ஏமாற்றுதுல் என்பது மனிதனின் பொருளாதாரம் எனும் உரிமையை அவனை ஏமாற்றிப் பறித்துக் கொள்வதாகும்.

இன்றைக்கு உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது தொடங்கி, இல்லாத வசதிகளைக் கூறி மக்களை ஏமாற்றி இடங்களை விற்கும் ரியல் எஸ்டேட் வரை அனைத்தும் மோசடிதான். மற்ற மனித உரிமை மீறல்களைத் தடுத்து, பெருங்குற்றமாக அறிவிப்பதைப் போல இக்குற்றத்தையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்துசென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் “உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?’’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர், “இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!’’ என்றார். அப்போது அவர்கள், “ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?’’ என்று கேட்டுவிட்டு, “மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’’ என்று கூறினார்கள்.

(முஸ்லிம்: 164)

ஒரு தானிய வியாபாரி மழைநீர் தானியத்தில் பட்டுவிட்டதால் அதைக் கீழே வைத்து, காய்ந்ததை மேலே வைத்து மறைத்து வியாபாரம் செய்கிறார். மக்களுக்குத் தெரியாமல் மறைத்து இப்படி வியாபாரம் செய்வதென்பது மோசடி என்றும், மோசடி செய்பவர் தன்னைச் சார்ந்தவர் அல்ல அதாவது, இஸ்லாத்திற்கு மாறு செய்தவர் என்றும் கூறுகிறார்கள்.

இஸ்லாத்திற்கு மாறு செய்தவர் என்று மோசடியாளரைக் கண்டிக்கிறது எனில் மோசடியை இஸ்லாம் எந்தளவு வெறுக்கிறது என்று கவனிக்க வேண்டும். ஏனெனில் ஒரு மனிதன் நல்ல பொருளுக்கு நமது பொருளாதாரத்தைப் பகரமாக்கியிருக்கிறோம் என்று நம்பி அதை வாங்குகிறான். அல்லது நல்லவர்களிடம் நமது பொருளாதாரத்தை ஒப்படைக்கிறோம் அது சரியாகப் பயன்படுத்தப்படும் என்று நம்பி ஒப்படைக்கிறான்.

ஆனால் அதை மோசடி செய்து, ஏமாற்றி அவனது பொருளாதாரத்தைப் பாழ்படுத்துவது என்பது அவனது உரிமையில் தலையிடும் விஷயமாக இருக்கிறது. அதனால்தான் இஸ்லாம் இந்தக் குற்றத்தையும் கண்டிக்கிறது.

நாம் மேலே பார்த்த இந்தக் குற்றங்கள் மட்டுமல்ல! அவதூறு, புறம், வழிப்பறி, திருட்டு என்று மனித உரிமைகளில் தலையிடும் எந்தக் குற்றமாயினும் அங்கு இஸ்லாம் தனது கண்டனத்தைப் பதிவு செய்து அவர்களின் மறுவுலக வாழ்வின் முடிவை கேள்விக்குறியாக்குகிறது.

இதிலிருந்தே இஸ்லாம் மனித உரிமைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம். மொத்தத்தில் இஸ்லாம் என்றாலே மனிதர்களுக்கு நலம் நாடும், அவர்களின் உரிமைகள் போற்றும் மார்க்கமாகும். இவ்வாறு மனிதர்களின் சிறு சிறு உரிமைகளில் தலையிடுவதைக் கூடத் தடை செய்யும் இம்மார்க்கம் உயிரைப் பறிக்கும் மிகப் பெரிய மனித உரிமை மீறலை ஆதரிக்குமா? சிந்திக்கவும்!