இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல1

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்

இஸ்லாம் போதிப்பது தீவிரவாதமல்ல!

சமத்துவ வாதம் சகோதரத்துவ வாதம்

இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு தீவிரவாத மார்க்கம், இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மை இல்லாத மார்க்கம், இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம்.
இப்படி வகை வகையான பழிச் சொற்களால் இஸ்லாம் வறுத்தெடுக்கப்படுகின்றது.
இஸ்லாத்தைத் தவிர உலகத்தில் எந்த ஒரு மதமும் தனக்கு முன் இப்படிப்பட்ட அடைமொழிகளையும் அவப்பெயர்களையும் சுமந்திருக்காது. அந்த அளவுக்கு இஸ்லாத்தின் மீது களங்கம் சுமத்தப்படுகின்றது.

எங்காவது வெடிகுண்டு வெடித்து விட்டால் போதும்! உடனே ஊடகங்கள் கொஞ்சமும் நியாய உணர்வின்றி, நீதமான பார்வையின்றி, குண்டுவெடிப்புப் பின்னணியில் இஸ்லாமிய பயங்காரவாதம்? என்ற ஒரு தலைப்பிட்டு, புலனாய்வுத் துறை புலனாய்வு செய்வதற்கு முன்னரே இவர்கள் ஊடகப் புலனாய்வை, இல்லை! ஊகப் புலனாய்வைத் தொடங்கி விடுகின்றனர்.

இஸ்லாமிய சமுதாயத்தின் மீது இவர்கள் குற்றப்பின்னணி முத்திரையைக் குத்தி அவர்களைக் குண்டு வைக்கின்ற குற்றப்பரம்பரை போல் ஆக்கி விடுகின்றனர். சம்பவம் நடந்த இடம் ஊடகங்களின் ‘லைவ்’ வளையத்திற்குள் வந்து விடுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் குருதி வெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்து கதறுகின்ற காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சங்களை கதிகலங்கச் செய்து விடுகின்றது; கண்களில் கண்ணீரை வரவழைத்து விடுகின்றது.

அதிலும் குறிப்பாக, கபடமறியாத கைக்குழந்தைகள், கைத்தடி ஊன்றி நடந்து சென்ற முதியவர்கள், மூதாட்டிகள் என்று வேறுபாடு பார்க்காமல் பதம் பார்த்த பயங்கரவாதத்தின் கோர முகத்தையும் கொடூர ஆட்டத்தையும் பார்க்கும் மக்கள் பதைபதைக்கின்றனர். இஸ்லாம் இவ்வளவு பயங்கரமான மார்க்கமா? என்று எண்ணத் தலைப்படுகின்றனர்.

பயங்கரவாதத்திற்கு மதமில்லை என்று தெரிந்த மக்கள் கூட இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாகப் பார்க்கின்றனர். பாவம் ஓரிடம், பழி ஓரிடம் என்பது போல் பயங்கரவாதிகள் செய்த பாவத்திற்கும் வெறியாட்டத்திற்கும் இஸ்லாம் பலிகடாவாக ஆக்கப்படுகின்றது. இதன் எதிர்விளைவு? ஒட்டுமொத்த சமுதாயமும் குற்றவாளிகளாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனால் உண்மை நிலை என்ன?

முஸ்லிம்களோ, அவர்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமோ, அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் வேதமான திருக்குர்ஆனோ, அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களோ ஒருபோதும் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் போதிக்கவில்லை.

முஸ்லிம்கள் தீவிரவாதத்திலும் பயங்கர வாதத்திலும் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதைத் தமிழகத்தில் வாழ்கின்ற தமிழ் சமுதாய மக்களுக்கும் உலகத்திற்கும் எடுத்துச் சொல்வதற்காக இவ்வாண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்கள், தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்துகின்றது.

தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் வன்முறை கலாச்சாரங்களில் ஈடுபடுகின்றவர்களை தயவு செய்து இஸ்லாத்துடன் இணைத்துக் கூறாதீர்கள்! அவர்கள் பிறமதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அவர்களை அந்த மதத்துடன் சம்பந்தப்படுத்திப் பேசாதீர்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இந்தத் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றது.

இந்தப் பிரச்சாரத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தனது மாவட்ட மற்றும் ஆயிரக்கணக்கான கிளைகள் மூலம் இரத்த தான முகாம்களை நடத்திக் கொண்டிருக்கின்றது.மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கின்றது. மழை நீர் சேமிப்புத் திட்டத்தை மக்களிடம் எடுத்துரைக்கின்றது. அதன் ஒரு செயல் திட்டமாகத் தான் ஏகத்துவத்தின் இந்த மாத இதழை தீவிரவாத எதிர்ப்பு சிறப்பிதழாக வெளியிட்டு அதை உங்கள் கைகளில் தவழ விடுகின்றது.

இஸ்லாத்தின் மீது எந்த அளவுக்குப் பழி சுமத்தப்படுகின்றது என்ற உண்மையை இந்த இதழ் உங்களுக்குப் படம் பிடித்துக் காட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அதிலும் குறிப்பாக, இந்தியாவில் இஸ்லாத்தை எதிர்ப்பது ஆதிக்க சாதியினர் தான்.

பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கற்பித்து, அதன் மூலம் ஒரு பிரிவினரை அடக்கியாள நினைக்கும் இந்த வர்க்கத்தினர் தான் இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க முயல்கின்றனர். அவர்களால் தான் இஸ்லாத்தின் மீது பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற முத்திரை குத்தப்படுகின்றது. இஸ்லாத்தில் தீவிரவாதமும் இல்லை. பயங்கரவாதமும் இல்லை. இங்கே இருப்பது சமத்துவ வாதமும் சகோதரத்துவ வாதமும் தான்.

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை, எதுவுமில்லை என்ற கொள்கையை ஒருவர் ஏற்றுக் கொண்ட மாத்திரத்தில் அவருக்கு சக மனிதர்கள் சகோதரர்களாகி விடுகின்றார்கள். அவர்களிடம் மேல் சாதி, கீழ் சாதி என்ற பாகுபாடு ஒழிந்து விடுகின்றது.

மேல் சாதியினரைக் கீழ் சாதியினர் புனிதமாகக் கருத வேண்டும்; அவர்களை வணங்க வேண்டும்; காலா காலம் கீழ் சாதியினர் அடிமைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்; மேல் சாதியினர் ஆதிக்கம் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற சாதியக் கட்டமைப்பை இஸ்லாம் தகர்த்தெறிகின்றது.

மேல்சாதியினராக இருந்தாலும் சரி! கீழ்சாதியினராக இருந்தாலும் சரி! வெள்ளையனாக இருந்தாலும் சரி! கருப்பனாக இருந்தாலும் சரி! அத்தனை பேரும் கடவுளுக்கு முன்னால் ஒரே வரிசையில் நின்று தொழவேண்டும்; எல்லோரும் கடவுளின் அடிமைகள் தானே தவிர, ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு அடிமையல்ல என்பதை இஸ்லாம் 1400 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

ஒரே கடவுள்! ஒன்றே குலம்!! என்ற கொள்கையின் அடிப்படையில் மனிதகுலம் அனைத்தையும் ஒரே குலமாக ஆக்கி விடுகின்றது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன்: 49:13)

இஸ்லாத்தின் இந்தக் கொள்கை, இங்குள்ள ஆதிக்க சாதியினரின் வர்ணாஸ்ரம தர்மத்தை, சாதி அடுக்குகளை, சாதிப்பிரிவுகளை, தீண்டாமையை, வேண்டாமையை அடித்துத் தகர்த்து, இவர்களது சாதியத்தை ஒழித்துக் கட்டி விடுகின்றது.

இஸ்லாத்தின் இந்த சமத்துவ வாதம், சகோதரத்துவ வாதம் தங்கள் சாதிய சாம்ராஜ்யத்திற்கு சம்மட்டி அடியாகி விடும் என்பதால் தான் இந்த வர்க்கத்தினர் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடனும் தீவிரவாதத்துடனும் தொடர்புபடுத்துகின்றனர் என்பதே உண்மை!