இஸ்லாம் சமூக நலன் காக்கும் சுமூக மார்க்கம்
கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமானதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
இஸ்லாம் என்றாலே அது ஒரு பயங்கரவாத மார்க்கம்; அது ஒரு தீவிர மார்க்கம் என்பது போன்ற ஒரு தோற்றத்தைத் தான் ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆனால் இஸ்லாம், மனித சமூகத்தின் நலன் காக்கும் ஒரு சுமூக மார்க்கமாகும்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி! நீர் வாழ் பிராணி நீரின்றி வாழ முடியாதது போல் சமூகம், சமுதாயமின்றி மனிதனால் வாழ முடியாது. அப்படி இன்றியமையாத சமூகத்தில் அவன் வாழும் போது தன் சக மனிதனிடம் அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன்னை அண்டி நிற்கின்ற பிராணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? தன் சுற்றுப்புறச் சூழலை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தெளிவான வழிகாட்டலை இஸ்லாம் வழங்குகின்றது. இப்போது அந்த வழிகாட்டலைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு மற்றும் கையி(ன் தொல்லை களி)லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக் கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
தனக்குள்ளதைப் பிறருக்கு விரும்புபவரே முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கின்ற எந்த ஒரு செலவானாலும் சரி, அதற்காக உமக்கு நற்பலன் வழங்கப்படும். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)(புகாரி: 56)
எச்சில் இலையில் மிச்சத்தைச் சாப்பிடுபவள் தான் மனைவி என்ற அடிமைத்தனத்தை மனித நேய மார்க்கமான இஸ்லாம் உடைத்தெறிகின்றது.
பிள்ளைகள் நலம் பேணுதல்
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்கடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
பிள்ளைகளைக் கொஞ்சி முத்த மழை பொழியாதவர்களுக்கு இறைவனின் அருள் மழை பொழியாது என்று கூறுகின்றது இஸ்லாம்!
ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்கல் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)” என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நமது பெற்றோரை பிறர் திட்டுவதற்கு நாம் காரணமாவதே பெரும் பாவம் என்றால், பெற்றோரை நாமே நேரடியாகத் திட்டும் பாவத்தின் பரிமாணத்தை அளவிடவே முடியாது.
அண்டை வீட்டாரின் நலம் பேணல்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அண்டை வீட்டுக்காரரிடம் தடையின்மைச் சான்றிதழ் பெறாதவர் சுவனம் செல்ல முடியாது.
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கிவிடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகிவிடும்.
அறிவிப்பவர்: நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி)(முஸ்லிம்: 5056)
வதை செய்பவன் வதைக்கப்படுவான்
ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டில் மக்களில் சிலரைக் கடந்து சென்றார்கள். அம்மக்களின் தலையில் ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டு வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஹிஷாம் (ரலி) அவர்கள், என்ன இது?” என்று கேட்டார்கள். கராஜ் (வரி செலுத்தாதது) தொடர்பாகத் தண்டிக்கப்படுகின்றனர்” என்று சொல்லப்பட்டது.
அப்போது ஹிஷாம் (ரலி) அவர்கள், அறிக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வுலகில் மக்களை (நியாயமின்றி) வேதனை செய்பவர்களை அல்லாஹ் வேதனை செய்வான்’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார். அப்போது அவர்கள், ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டுவிட்டு, மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நீங்கள் உங்கள் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்யவேண்டாம். ஏனெனில், உங்களுக்குத் தெரியாமலேயே ஷைத்தான் உங்கள் கையிலிருந்து அதைப் பிடுங்கி (சகோதரர் மீது தாக்குதல் நடத்தி) விடக்கூடும். அதனால் நீங்கள் நரகத்தில் வீழ்ந்துவிடக் கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
கத்தியைக் காட்டுவதே பாவம் எனும் போது வெட்டி வீழ்த்துவது பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான’ அல்லது அறுபதுக்கும் அதிகமான’ கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளை தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
பாதத்தில் தைக்கும் சிறிய முள்ளை அப்புறப்படுத்தச் சொல்லும் இஸ்லாமிய மார்க்கம், வெடிகுண்டு வைத்து அடுத்த ஆளைக் கொல்லச் சொல்லுமா?
பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்குப் பயப்படு!
அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும்! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை.
இதை முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் அநீதி இழைக்கப்பட்டு, கதற ஆரம்பித்தால், அநீதி இழைத்தவனுக்கு இறைவன் கண்டிப்பாகத் தண்டனை வழங்கியே தீருவான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு, மக்களின் நடை பாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பது தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
இன்று இந்தியாவின் சுகாதாரக் கேட்டிற்கு அடிப்படைக் காரணமே, மக்கள் நடமாடும் பாதைகளில், அவர்கள் ஒதுங்குகின்ற நிழல் பகுதிகளில் மலஜலம் கழிப்பது தான் என்று இஸ்லாம் கூறி, எந்த அளவுக்குச் சூழல் காக்கச் சொல்கின்றது; சுகம் காணச் செய்கின்றது என்று பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
(முஸ்லிம்: 3159)
மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம் என்று இன்றைய அறிவியல் உலகம், மரம் நடச் சொல்கின்றது. இஸ்லாமிய மார்க்கம், மரம் வளர்ப்பதை ஒரு தர்மம் என்று அன்றே மனித குலத்திற்குப் போதிக்கின்றது.
நான் இப்னு உமர் (ரலி) அவர்கடம் இருந்தேன். அப்போது நாங்கள் இளைஞர்கள் சிலரை’ அல்லது மக்கள் சிலரைக்’ கடந்து சென்றோம். அவர்கள் கோழியொன்றைக் கட்டிவைத்து அதன் மீது அம்பெய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு கலைந்து சென்று விட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், இதைச் செய்தது யார்? இவ்வாறு செய்பவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சயீத் பின் ஜுபைர் (ரஹ்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது – அல்லாஹ்வே மிக அறிந்தவன் – நீ அதைக் கட்டி வைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை” என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
மிருகத்தையே வதை செய்யக் கூடாது என்று சொல்கின்ற இந்த மார்க்கம் மனித வதையை எப்படி அனுமதிக்கும்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாயாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)(புகாரி: 2554)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று இருக்கும். அது அவனது மோசடியின் அளவுக்கு (உயரமாக) ஏற்றப்படும். அறிந்துகொள்ளுங்கள்: பொதுமக்களுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று, மோசடி செய்தவனை விட மாபெரும் மோசடிக்காரன் வேறெவருமில்லை.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)
இன்று தலைவர்கள் தைரியமாக ஊழல் செய்வதற்கும், ஊதாரித்தனம் செய்வதற்கும் அராஜகம் புரிவதற்கும், அநீதியிழைப்பதற்கும் அடிப்படைக் காரணமே, தங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது; தண்டிக்க முடியாது என்ற எண்ணம் தான்.
ஆனால் இஸ்லாம் இத்தகைய தலைவர்களை மறுமையில் இறைவன் பிடித்து விடுவான் என்று எச்சரிக்கை செய்கின்றது. இந்த மறுமை பயம் மட்டுமே தலைவர்களை தவறு செய்வதிலிருந்து காக்கும் அரண் என்று தெளிவுபடுத்துகின்றது.
ஒரு மனிதர் தம் சகோதரரை அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அடுத்தவனுக்கு அநீதி இழைப்பதை எந்த அளவுக்கு நுணுக்கமாகக் கவனித்து இஸ்லாம் தடை செய்கின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
ஏழைகளை விட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் மண விருந்து உணவே உணவுகளில் மிகத் தீயதாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஏழைகளைப் புறக்கணித்து விட்டுப் பணக்காரனை மட்டும் விருந்து அழைப்பதை இன்றைய சமூகம் மரியாதையாகக் கருதுகின்றது. ஆனால் இஸ்லாமிய மார்க்கமோ அதைப் பாவமாக்கி இந்த அநாகரிகச் செயலைக் கண்டித்து சமூக நலன் காக்கின்றது.
மனித குலத்தின் எந்த ஒரு உறுப்பினரின் சமூக நலனும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது இஸ்லாம் தான் என்பதற்கு இவை ஒரு சில எடுத்துக்காட்டுக்கள்.
இப்படிப்பட்ட சமூக நலன் எல்லோராலும் பின்பற்றப்பட்டால், வாழ்க்கை நெறியாகக் கொள்ளப்பட்டால் தெலுங்கானா, காவிரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனைகள் எழாமல் மனித குலம் அமைதியில் வாழும். அந்த அமைதிக்கும் சமூக நலனுக்கும் மறு பெயர் தான் இஸ்லாம்!
இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளின் அடிப்படையில் வாழ்ந்து மரணிப்போமாக! மறுமையில் வெற்றி பெறுவோமாக!