இஸ்லாம் கூறும் ஜீவகாருண்யம்

பயான் குறிப்புகள்: 10 நிமிட உரைகள்

இஸ்லாம் கூறும் ஜீவகாருண்யம்

இஸ்லாம் அனைத்து உயிர்களுக்கும் அன்பு காட்டும் மார்க்கமாகும். இன்றைக்கு உலகெங்கிலும் இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்றும், தீவிரவாதத்தைத் தூண்டக்கூடிய மார்க்கம் என்றும் பொய்ப்பிரச்சாரம் வீரியமாக செய்யப் பட்டாலும், உண்மை இஸ்லாத்தைப் படிப்பவர்களை அது தன் பக்கம் ஈர்த்து வருகின்றது.

ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்து உணவாக உட்கொள்வதற்கு இஸ்லாம் அனுமதி கொடுத்துள்ள காரணத்தினால் அது “ஜீவ காருண்யத்திற்கு” எதிரான மார்க்கம் என்றும், இதுவே இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என்பதற்கு ஒரு சான்றாகவும் இஸ்லாத்திற்கு எதிரானவர்களால் முன்வைக்கப்படுகிறது.

இஸ்லாம் உயிரினங்கள் மீது அன்பு காட்டச் சொல்கின்றது. அதே சமயம், மனித இனத்தின் தேவை கருதி, மனித குல நன்மைக்காக இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட உயிரினங்களை அறுத்து உண்பதற்கு அனுமதி கொடுத்துள்ளது. இது பற்றி இந்த ஆக்கத்தின் பிற்பகுதியில் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.

இஸ்லாம் இறைவனை அளவிலா அருளாளனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் அறிமுகப்படுத்துகிறது. இஸ்லாம் அன்பையும் கருணையையும் மிக மிக வலியுறுத்துகிறது.

“கருணையாளர்களுக்கெல்லாம் கருணை யாளனான அல்லாஹ், கருணையாளர்களுக்கே கருணை காட்டுகிறான். பூமியில் உள்ளவர்களுக்குக் கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்களுக்குக் கருணை காட்டுவான்” என்று இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: திர்மிதி-1847

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் (இயல்பாகவே) இரக்க உணர்வை வைத்துள்ளான்; அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்களுக்கே இரக்கம் காட்டுவான்.

அறிவிப்பவர்: உஸாமா (ரலி)

(புகாரி: 7377)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 5997)

இஸ்லாம் அன்பைப் பொதுவுடைமையாக்கிய மார்க்கமாகும். மனிதர்கள், பறவைகள், நீரில் வாழும் உயிர்கள், தரையில் வாழும் உயிர்கள் என்று அனைத்தின் மீதும் அல்லாஹ் கருணை காட்டுகிறான்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்த போது அதனை நூறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான்.

ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவ நம்பிக்கை கொள்ள மாட்டான். (இதைப் போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 6469)

வாயில்லா ஜீவன்களுக்கு அன்பு காட்டுவதை இஸ்லாம் அதிகம் வலியுறுத்துகிறது. வாயில்லா ஜீவன்களை கொடுமைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறது. மனித உயிர்களை மட்டுமல்ல! வாயில்லா ஜீவன்களை வதைத்தாலும் மறுமையில் நரகமே பரிசு என இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது.

ஜீவ காருண்யத்திற்கு சொர்க்கமே பரிசு

மனித குலத்திற்குக் கேடு விளைவிக்காத அனைத்துப் பிராணிகளுக்கும் கருணை காட்டினால் அதற்கு இறைவன் சுவர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான் என்று கூறி இஸ்லாம் ஜீவ காருண்யத்தை வளர்க்கிறது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அவர் ‘எனக்கு ஏற்பட்டதைப் போன்ற (அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்.

நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதும், இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்!) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

(புகாரி: 2363)

பெரும்பாவம் செய்யும் மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்குப் பிராயசித்தம் தேடி தங்களுடைய செல்வங்களைத் தவறான வழிகளில் செலவு செய்கின்றனர். போலி ஆன்மீகவாதிகளிடம் வழங்கி பொருளாதாரத்தை இழக்கின்றனர். ஆனால் இஸ்லாம் பாவத்திற்குப் பரிகாரமாக ஜீவ காருண்யத்தைப் போதித்து உயிரினங்களுக்கு நன்மை செய்கிறது.

பெரும்பாவம் செய்யும் மனிதர்களும் உயிர்ப் பிராணிகளுக்கு உதவி செய்தால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் ஜீவ காருண்யத்தை வளர்க்கிறது.

இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 3467)

உயிரினங்களை கொடுமைப்படுத்தக் கூடாது

இஸ்லாம் உயிரினங்களை வதைப்பதை கடுமையாகக் கண்டிக்கிறது. எந்த ஒரு ஜீவராசியையும் தேவையின்றி வதைப்பதை இஸ்லாம் தடுக்கிறது. உயிரினங்களுக்குக் கேடு விளைவித்தால் மறுமையில் நரகமே கூலி என்று எச்சரிக்கை செய்கிறது.

இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்த போது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்குத் தண்ணீரும் கொடுக்கவில்லை; பூமியின் புழு பூச்சிகளைத் தின்பதற்காக அவள் அதை (அவிழ்த்து) விடவுமில்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(புகாரி: 3482)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு ஒட்டகத்தைக் கடந்து சென்றார்கள். (அதற்கு உணவளிக்கப்படாமல்) அதன் வயிறு முதுகுடன் ஒட்டிப் போயிருந்தது. அப்போது “இந்த வாயில்லா ஜீவன்களாகிய கால்நடைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அது நல்ல நிலையில் இருக்கும் போது அதில் பயணம் செய்யுங்கள். அது நல்ல (கொழுத்த) நிலையில் இருக்கும் போதே (அறுத்து) உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி)

(அபூதாவூத்: 2548)

நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் அன்சாரிகளுடைய தோட்டங்களில் ஒரு தோட்டத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு ஒட்டகம் சப்தமிட்டவாறு அவர்களிடம் வந்தது. அதனுடைய இரு கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது. நபி (ஸல்) அதைக் கண்டதும் பரிதாபப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது. அதன் முன்பகுதியிலும், இரு திமிழ்களிலும் தடவிக் கொடுத்தார்கள். எனவே அது அமைதியடைந்தது. “இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார்?” என்று கேட்டார்கள்.

ஒரு அன்சாரி இளைஞர் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! இது என்னுடையதுதான்” என்று கூறினார். “அல்லாஹ் உங்களுக்குச் உடைமையாக்கித் தந்துள்ள இந்தக் கால்நடைகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளமாட்டீர்களா? நீ அதற்கு (உணவளிக்காமல்) பசிக்கொடுமைக்கு உள்ளாக்குவதாகவும் (ஓய்வின்றி) தொடர்ச்சியாக வேலை வாங்குவதாகவும் அது என்னிடம் முறையிட்டது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுஜஃபர்(ரலி)

(அஹ்மத்: 1654)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஓரிடத்தில் தங்கினார்கள். அப்போது ஒரு மனிதர் ஒரு சிறிய பறவையின் (கூட்டிலிருந்து) முட்டைகளை எடுத்தார். இதனால் அது (திடுக்கிட்டு) தனது இரண்டு சிறகுகளையும் விரித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் தலையைச் சுற்றி வந்தது. “அதனுடைய முட்டைகளின் மூலம் அதை திடுக்கிடச் செய்தவர் யார்?” என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அந்த மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! நான்தான் அதன் முட்டைகளை எடுத்தேன்.” என்று கூறினார். “அதைத் திருப்பி வைப்பாயாக! அதற்குக் கருணை காட்டுவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)

நூல்: அல் அதபுல் முஃப்ரத்-382

முட்டையை உண்பதற்கு இஸ்லாம் அனுமதித்திருந்தாலும், அந்தப் பறவை திடுக்கிடும் வகையில் முட்டைகளை எடுத்ததை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கிறார்கள். இதன்மூலம் அந்தப் பறவையின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தருகின்றார்கள்.

இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால், (பசுமையான) பூமியில் ஒட்டகங்களுக்குரிய பங்கை (மேய்ச்சலை)க் கொடுத்துவிடுங்கள். வறட்சியான காலத்தில் பயணம் மேற்கொண்டால், ஒட்டகங்களின் உடலில் எலும்பு மஜ்ஜை (பலம்) இருக்கவே விரைவாகச் சென்றுவிடுங்கள். (பயணத்தில்) நீங்கள் இரவில் இறங்கி ஓய்வெடுத்தால், போக்குவரத்துச் சாலைகளைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில், அவை கால்நடைகளின் பாதைகளும் இரவில் விஷஜந்துகள் உலவும் இடமும் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (3891)

ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் என் பாட்டனார் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுடன் (பஸ்ராவின் துணை ஆளுநரான) ஹகம் பின் அய்யூபின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு சிலர், கோழியொன்றைக் கட்டி வைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்தனர். இதைக் கண்ட அனஸ் (ரலி) அவர்கள், “விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்’’ என்று கூறினார்கள்

(முஸ்லிம்: 3956)

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்காதீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

(முஸ்லிம்: 3956)

மேற்கண்ட நபிமொழிகள் அனைத்தும் இஸ்லாத்திற்கு நிகராக ஜீவ காருண்யத்தைப் போதிக்கும் மார்க்கம் உலகில் இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

புலால் உண்ணாமை ஜீவ காருண்யமா?

மாமிச உணவை உண்ணாமல் இருப்பதை ஜீவ காருண்யம் என்று சிலர் நம்புகின்றனர். இது முற்றிலும் தவறான சிந்தனையாகும்.

மாமிச உணவு, மனித குலத்தின் நல்வாழ்விற்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். எண்ணற்ற நோய்களுக்கு மருந்துகளும், மனித குலத்திற்கு அன்றாடம் தேவையான எண்ணற்ற பொருட்களும் கால்நடைகளின் உடற்பாகங்களிலிருந்து தான் மனிதர்களுக்குக் கிடைக்கின்றன. மனித உடலுக்கு அவசியம் தேவையான பல ஊட்டச் சத்துக்கள் அசைவ உணவில்தான் உள்ளடங்கியுள்ளன.

உலகில் கணிசமான அளவில் மாமிசம் சாப்பிடக் கூடிய மக்கள் இருக்கின்ற காரணத்தினால் தான் சைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்குக் குறைந்த விலையில் காய்கறிகளும் தானியங்களும் கிடைக்கிறது. அனைவரும் சைவ உணவுகளைத்தான் சாப்பிட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கினால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் கூட அவற்றை விலை கொடுத்து வாங்க இயலாத நிலைமை ஏற்பட்டுவிடும்.

இன்றைய உலகின் இயல்பு வாழ்க்கையில் கூட ஏழைக் குடும்பங்கள் அதிக விலை கொடுத்து காய்கறி, தானியங்களை வாங்க இயலவில்லை. அத்தகைய ஏழைக் குடும்பங்களுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை குறைந்த விலையில் கிடைக்கும் மீன், மாட்டிறைச்சி போன்ற மாமிச உணவுகளிலிருந்து தான் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர்.

மற்றொரு கோணத்தில் சிந்தித்துப் பார்த்தால் புலால் உண்ணாமை, உயிரினங்களைக் கொல்லாமை என்ற சிந்தாந்தம் வறட்டுச் சிந்தாந்தம் என்பதையும், நடைமுறை சாத்தியமற்றது என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆடு, மாடு, ஒட்டகம், கோழி இன்னும் இதுபோன்ற பல பிராணிகளை மனிதர்கள் உண்பதால் தான் அவற்றின் மூலம் சம்பாதிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் அவற்றைப் பெருக்கம் செய்கின்றனர். கோடிக்கணக்கான மக்களின் வருவாய் இதன் மூலம் ஈட்டப்படுகிறது. இவற்றை உண்பது கூடாது என வாதிட்டால் இவற்றைப் பெருக்கமடையச் செய்வது அறவே தடைப்பட்டுவிடும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வு கேள்விக் குறியாகி விடும்.

ஒரு பசுமாடு பால் தருகின்ற காலம் வரை அதன் மூலம் மனிதர்களுக்குக் குடிபானமும், வருவாயும் கிடைக்கும். அது போன்று ஒரு காளை மாடு சுமை சுமக்கின்ற வரை அதன் மூலம் பல பலன்கள் மனிதர்களுக்குக் கிடைக்கும்.

பால் தருகின்ற பருவத்தை பசு தாண்டி விட்டால், காளைமாடு உழைக்க முடியாத பருவத்தை அடைந்து விட்டால் அவற்றின் மூலம் எந்த விதமான வருவாயும் மனிதர்களுக்குக் கிடைக்காது. அவை மரணிக்கின்ற வரை அவற்றைக் கட்டி வைத்து தீனி போடுதல் என்பது நடைமுறைச் சாத்தியமற்ற காரியமாகும்.

இந்துத்துவவாதிகள் மாடுகளைப் பாதுகாக்க கோசாலைகளை அமைத்து அதைப் பாதுகாப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் எண்ணற்ற கோசாலைகளில் மாடுகள் உண்ண உணவின்றி வயிறுகள் ஒட்டி பசிக் கொடுமையினால் பலநாட்கள் சீரழிந்து இறுதியில் துடிதுடித்து சாகின்றன. செத்த பிராணிகள் ஒட்டுமொத்தமாக பூமியில் புதைக்கப்படுகின்ற செய்திகளை அன்றாடம் தொலைக்காட்சி செய்திகள் மூலமும் சமூக வலைத்தளங்கள் மூலமும் நாம் அறிந்து வருகிறோம்.

ஜீவ காருண்யம் என்ற பெயரில் வாயில்லா ஜீவன்களை வதைத்து, வதைத்துக் கொல்கின்ற காரியத்தைத் தான் இவர்கள் செய்கின்றனர்.

மாடுகள் உழைக்க முடியாத பருவத்தை அடைந்துவிட்டால் அவற்றை உணவிற்காக விற்பதன் மூலம் அந்த மாடுகளை வளர்த்தவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. மக்களுக்கு உணவாகவும் அவை பயன்தருகிறது. கோசாலைகளில் அடைத்து வைத்து உணவளிக்காமல் கொடுமைப்படுத்தப் படுவதிலிருந்தும் தப்பித்துவிடுகின்றன.

இஸ்லாம் மனிதகுல நன்மைக்காக உயிரினங்களை அறுத்துச் சாப்பிடுவதை அனுமதிக்கும் அதே நேரத்தில் அதில் கூட உயிரினங்களுக்குச் சிரமம் இல்லாத வகையில் அறுத்துச் சாப்பிட வேண்டும் என்றே வழிகாட்டுகிறது. அறுத்து உண்ணும் போது கூட ஜீவ காருண்யத்தை இஸ்லாம் கடைப்பிடிக்கச் சொல்கிறது.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே, கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)

(முஸ்லிம்: 3955)

இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவர் தனது காலை ஒரு ஆட்டின் கழுத்தில் வைத்து அழுத்திக் கொண்டே (அதை அறுப்பதற்காக) கத்தியை தீட்டி கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தார். அது தனது பார்வையால் அவரை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. “இதை (கிடத்துவற்கு) முன்பாகவே செய்திருக்கக் கூடாதா? அதை இரண்டு தடவை கொல்வதற்கு நீ விரும்புகிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள், அந்த மனிதரைக் கண்டித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அல்முஃஜமுல் அவ்ஸத்-3590

இன்றைக்கு உலகில் பல்வேறு மதங்களில் உயிரினங்களை வதைத்தும், கொடுமைப்படுத்தியும், யாகம் என்ற பெயரில் தீயில் எரித்தும் கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் அறுக்கும் போது கூட அப்பிராணிகள் வலியை உணராத வண்ணம் நடந்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறது.

வாயில்லா ஜீவன்களுக்குக் கூட அன்பு காட்டும் இஸ்லாம் எப்படி தீவிரவாதத்தைப் போதிக்கும்? இஸ்லாத்தை ஆழ்ந்து சிந்திப்பவர்கள் இஸ்லாம் அன்பு மார்க்கம் என்பதைத் தெளிவாய் அறிந்து கொள்வார்கள்.

தீங்கு தருபவற்றைக் கொல்லுதல்

சிலர் ஜீவ காருண்யம் என்ற பெயரில் மனித குலத்திற்குத் தீங்கு தரும் ஜீவராசிகளையும் கொல்வது கூடாது என வாதிக்கின்றனர். இது அடி முட்டாள்தனமான வாதமாகும்.
மனித குலத்திற்குத் தீங்கு தரும் ஜீவராசிகளைக் கொல்லாமல் விட்டால் ஜீவகாருண்யம் பேசுவதற்கு மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.

தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் மனிதனுக்குத் தீங்கு தரும் கோடிக்கணக்கான பாக்டீரியாக்களும் வைரஸ்களும் செத்துவிடுகின்றன. இதனால் மனிதன் பல்வேறு நோய்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. உணவுகளை சமைத்தும் வேக வைத்தும் சாப்பிடுவதால் தான் பல்வேறு கேடு விளைவிக்கும் உயிரிகள் செத்து மனித உடலுக்குப் பாதிப்பு ஏற்படாமல் உள்ளது.

எனவே மனித குலத்திற்குத் தீங்கு ஏற்படுத்தும் உயிர்களைக் கொல்லுதல் ஜீவ காருண்யத்திற்கு எதிரானதல்ல. இதனால்தான் இஸ்லாம் மனிதனுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் சில ஜீவராசிகளைக் கொல்லுமாறு உத்தரவிடுகிறது.

“ஐந்து உயிரினங்கள் தீங்கு இழைக்கக் கூடியவையாகும். அவற்றை இஹ்ராம் கட்டியவர் கொன்றால் அவர் மீது குற்றமில்லை. அவை, காகம், பருந்து, தேள், எலி, வெறிநாய் ஆகியனவாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு உமர் (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல்: புகாரி (1826, 1827, 1828, 1829)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, வயிற்றுப் பகுதியிலும் மேற்பகுதியிலும் வெண்மை நிறம் கொண்ட காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(முஸ்லிம்: 2254)

நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

(முஸ்லிம்: 4507)

எனவே ஜீவ காருண்யம் என்பதன் பொருளை சரியாக விளங்கிப் பின்பற்றினால் அது மனித குலத்திற்கு நன்மையாக அமையும்.