இஸ்லாமிய தீவிரவாதம் (?)
இஸ்லாமிய தீவிரவாதம் (?)
உலகில் எங்கு குண்டு வெடித்தாலும் அனைத்து செய்திச் சேனல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் காட்டுத்தீ போல் பரவும் முக்கியச் செய்தியின் முதன்மைத் தலைப்பு தான் இஸ்லாமிய தீவிரவாதம் (?) என்பதாகும்.
இஸ்லாமியர்களைக் குறி வைத்துப் பரப்பப்படும் இப்படி ஒரு சொல்லாடல் எதற்கு? எப்போது? யாரால் உருவாக்கப்படுகிறது என்பதையும் இஸ்லாத்திற்கும் தீவிரவாதத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்பதனையும் இக்கட்டுரையில் அலசுவோம்.
கட்டுரைக்குள் நுழையும் முன் ஒரு குட்டிக் கதை. கத்தைக் கத்தையாக எழுதுவதன் சாராம்சத்தை ஒரு குட்டிக் கதையில் சொல்லி விடலாமே என்பதற்காக…
“அது ஒரு முற்பகல் நேரம் அமெரிக்காவின் நெடுஞ்சாலையில் பாலத்தின் மேல் ஒரு பெண் நடந்து செல்கிறாள். ஒரு நாய் வெறி பிடித்த நிலையில் அந்தப் பெண்ணை கடித்துக் குதறப் பாய்கிறது. அலறி ஓடிய பெண்ணை ஒரு இளைஞன் காப்பாற்றி, கடிக்க வந்த நாயை விரட்டி அடிக்கிறான். மிரண்டு விரண்டோடிய நாய் பாலத்திலிருந்து தவறி விழுந்து இறந்து விடுகிறது” இச்செய்தி அடுத்த சில நிமிடங்களில் பரவத் தொடங்குகிறது.
“அபலைப் பெண்ணை வெறி நாயிடமிருந்து மீட்ட அமெரிக்க இளைஞர்” என்று செய்தி வாசிக்கப்படுகிறது. அப்பெண்ணைக் காப்பாற்றியது அமெரிக்கர் அல்ல, வெளிநாட்டவர் என்று செய்தியாளர்களுக்குச் சொல்லப்படுகிறது. உடனே செய்தி சிறிய மாற்றங்களுடன் “ரோட்டில் சுற்றித் திரிந்த வெறிநாயை அங்கு சென்ற இளைஞர் விரட்டி அடித்தார்” என்று செய்தி வாசிக்கப்படுகிறது.
அந்த இளைஞர் ஒரு இஸ்லாமியர் என்று சிறிது நேரம் கழித்து செய்தியாளர்களுக்குச் சொல்லப்படுகிறது. உடனே பல மாறுதல்களுடன் “பாலத்தின் மேல் நடந்து சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் தகராறு செய்த முஸ்லிம் வாலிபர். ஆத்திரத்தால் குறுக்கே வந்த நாயை பாலத்திலிருந்து தூக்கி எறிந்தார். வீசி எறியப்பட்ட நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
அந்த முஸ்லிம் வாலிபரை அல்கய்தா என்ற தீவிரவாத இயக்கம் அனுப்பி வைத்ததாகப் பேசப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது” என்று செய்தி சித்தரிக்கப்படுகிறது.
இது கதையல்ல! ஒவ்வோரு நாட்டிலும் முஸ்லிம்களுக்கு எதிராகப் பின்னப்படும் சூழ்ச்சி. ஆம்! இது முஸ்லிம்களை மட்டுமே மையப்படுத்தி செய்யப்படும் சூழ்ச்சி.
ஒரு சிறிய நினைவூட்டலுக்காக ஒரு சில கடந்த கால நிகழ்வுகளை உங்கள் கண் முன் கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு இடத்திலும் ஒரு அசம்பாவிதம் நடந்தாலும் அதை யாரேனும் ஒருவர் செய்திருப்பார். அதைச் செய்தவன் இந்து, கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாம், சீக்கியம், நாத்திகம், கம்யூனிஸம் என ஏதோ ஒரு கொள்கையைச் சேர்ந்தவனாகத் தான் இருப்பான்.
இதில் யார் எந்தத் தவறு செய்தாலும் அவனது பெயர் மட்டுமே அடிபடுகிறது. ஆனால் ஒரு முஸ்லிம் அதைச் செய்திருந்தால் அவன் ஏற்றுக் கொண்ட மார்க்கமான இஸ்லாமும், வழிகாட்டியான திருக்குர்ஆனும் விமர்சிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.
- 6 கோடி யூதர்களைக் கொன்ற ஹிட்லரை யாரும் கிறித்துவத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
- இலங்கை அரசுக்கு எதிராகப் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகளை யாரும் தமிழ் தீவிரவாதிள் என்றும் இந்துத் தீவிரவாதிகள் என்றும் சொல்வதில்லை.
- ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா என்ற சீக்கியர் பஞ்சாபைத் தனி நாடாக அறிவிக்கக் கோரி இந்திய அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி, அதனால் பல உயிர்கள் பலி ஆயின. இவரை யாரும் சீக்கியத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
- இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த சத்வந்த் சிங் மற்றும் பீம் சிங்கை யாரும் சீக்கியத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
- திரிபுராவில் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி 44 பேரைக் கொலை செய்த கிஜிஜிதி தீவிரவாதிகளை யாரும் கிறித்துவத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
- இந்திய அரசுக்கு எதிராக அஸ்ஸாமில் போராடி சுமார் 750க்கும் மேற்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களை நடத்திய உல்ஃபா (ஹிலிதிகி) தீவிரவாதிகளை யாரும் இந்துத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
- இந்திய அரசை எதிர்த்து நாடெங்கிலும் 150 மாவட்டங்களுக்கு மேல் தீவிரவாதச் செயல்களைச் செய்துவரும் நக்ஸலைட், மாவோயிஸ்ட்களை யாரும் இந்துத் தீவிரவாதி என்று சொல்வதில்லை.
இவர்களின் தவறுக்காக இவர்கள் சார்ந்திருக்கும் மதத்தை யாரும் குறை சொல்வது இல்லை. அவ்வாறு சொல்வது நியாயமும் இல்லை. ஆனால் அதே பார்வை, முஸ்லிம்கள் விஷயத்தில் வர வேண்டுமல்லவா? அதுதானே நியாயம்? அதில் ஏன் பாரபட்சம்?
ஒரு பக்கம் முஸ்லிம்களில் யாரேனும் ஒருவர் ஒரு தாக்குதலில் ஈடுபட்டால் அவர் இஸ்லாமியத் தீவிரவாதி என முத்திரை குத்துவதையும், மறுபக்கம் ஒரு முஸ்லிம் மதங்களைக் கடந்து மனிதநேயப் பணியில் ஈடுபட்டால் அவரின் சேவைகள் மூடி மறைக்கப்படு வதையும் பார்க்கலாம்.
டாக்டர் கஃபீல் கான் என்னும் மனிதநேயப் புயல்!
கடந்த 2017ஆம் ஆண்டு, பாஜக ஆளும் உபி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தன. அதுமட்டுமின்றி, கவனிப்பாரின்றி விடப்பட்ட அந்த அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
இவ்வேளையில் தான் களத்தில் குதித்தார் கஃபீல் கான். தனியார் மருத்துவமனையிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்து கொடுத்து துரிதகதியில் இவர் செய்த மனிதநேய செயல்பாட்டால் நூற்றுக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டன.
இவரது அர்ப்பணிப்பை எந்த ஊடகத்திலாவது முக்கியத்துவப் படுத்தப்பட்டதா? இல்லையே! ஏன்? கபீல் ஒரு முஸ்லிம் என்பதால் தானே!
தமிழகத்திலும் ஒரு கஃபீல் கான்!
டாக்டர் அமானுல்லாஹ்….கிருஷ்ணகிரியின் அதிமுகம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வருகின்றார் டாக்டர் அமானுல்லாஹ். சிகிச்சைக்கு வரக்கூடிய மக்களுக்கு மருந்துகளும் இலவசம்.
இவரது சேவையை அறிந்து அருகிலுள்ள உத்தனப்பள்ளி கிராம மக்கள் தங்களது பகுதியிலும் இலவச மருத்துவமனை அமைக்க கோரிக்கை விடுத்தனர். அந்தக் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, அங்கேயும் ஒரு இலவச மருத்துவமனையைக் கடந்த 2016ஆம் ஆண்டு நிறுவியுள்ளார்.
இதுவரை 15,000 இலவச அறுவை சிகிச்சைகளை தனது சொந்தச் செலவில் ஏழை மக்களுக்குச் செய்து கொடுத்துள்ளார். 2,400 கண் அறுவை சிகிச்சைகளை இலவசமாகச் செய்து கொடுத்துள்ளார். தற்போது மருத்துவத்தை வியாபாரமாக ஆக்கி காசு பார்க்கும் நிலையில், மனிதநேயத்தோடு நடக்கும் டாக்டர் அமானுல்லாஹ் அவர்களின் மனிதநேயப் பணி சிறப்புக்குரியது!
முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள், மனிதநேய மருத்துவர் அமானுல்லாஹ் அவர்களின் மனிதநேயச் சேவைகளை வெளிஉலகுக்குக் கொண்டு வந்து மனித நேயம் தழைத்தோங்க வழி வகுக்க வேண்டும்.
இவர் முஸ்லிமாக இருப்பதால் தான் ஊடகங்களாலும், அரசாங்கத்தினாலும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றாரோ என்ற சந்தேகம் நம் அனைவருக்கும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
- 8 குண்டுகளைத் தனது உடலில் வாங்கிய முஸ்லிம் சி.ஆர்.பி.எஃப். வீரர் குர்ஷித் அஹ்மது
முஸ்லிம் சமுதாயம் தங்களது சதவீதத்திற்கும் அதிகமாக இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டது.
கார்கில் போரிலும் கூட அதிகமான அளவு தியாகங்களைப் புரிந்து உயிர் விட்டது முஸ்லிம் இராணுவ வீரர்கள் என்பதுதான் வரலாறு. அந்த வரிசையில் சிஸிறிதி வீரர் அஹ்மத் அவர்களின் தியாகம் பாராட்டத்தக்கது.
சிஆர்பிஎஃப் வீரரான அஹமத்
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் சிஆர்பிஎஃப் வீரரான அஹமத் உள்ளிட்ட பல வீரர்கள் துப்பாக்கிப் பயிற்சி முடித்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 தீவிரவாதிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். பல வீரர்கள் படுகாயமடைந்தனர்.
சிஆர்பிஎஃப் வீரரான அஹமத் தனது உடலில் 8 துப்பாக்கிக் குண்டுகளை உள்வாங்கிக் கொண்டு உயிருக்காகப் போராடினார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இரண்டு மாதங்கள் கோமா நிலையிலேயே இருந்தார்.
பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மெல்ல மெல்ல மீண்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு இறையருளால் மீண்ட அஹமத், தற்போது எழுந்து நடக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.
தற்போது அவர் மீண்டும் நாட்டுக்காகப் பணியாற்ற முன்வந்துள்ளது தான் இங்கு மிகவும் நெகிழ்ச்சியான விஷயம்.
காணாமல் போன மலேசிய விமானம் பற்றி அன்றாடம் படம் பிடித்துக் காட்டிய மீடியாக்கள், தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்திய குர்ஷித் அஹ்மதைச் சொல்ல மறந்தது ஏன்?
- இந்து யாத்ரீகர்களைக் காத்த இஸ்லாமியர் சலீம்
- காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து 50 யாத்ரீகர்களைக் காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் சலீம் ஷேக்.
- ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தவர்களின் பேருந்தைக் குறிவைத்து, தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டின் நடுவே, உயிரைப் பணயம் வைத்து பேருந்தில் இருந்த மற்றவர்களின் உயிரை அதன் ஓட்டுநர் சலீம் காப்பாற்றியுள்ளார்.
- தெற்கு குஜராத்தை சேர்ந்த சலீம் ஷேக் கபூர் என்பவர் அங்குள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அமர்நாத் யாத்ரீகர்களை சலீம் பேருந்தில் அழைத்துச் சென்றுள்ளார். துப்பாக்கிச் சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தியிருந்தால் உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும். ஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்று, இருட்டான பகுதியில் நிறுத்தி, பலரது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
ஓட்டுநர் சலீமின் செயலைப் பாராட்டி 3 லட்சம் ரூபாய் வெகுமதி தருவதாக காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இச்செய்தியை இக்கட்டுரையில் நீங்கள் படிப்பதற்கு முன் எந்த ஊடகத்திலாவது சிறப்புச் செய்தியாகப் பார்த்த ஞாபகம் இருக்கிறதா? என யோசித்துப் பாருங்கள். இதுமட்டுமல்ல….
- நீரில் மூழ்கிய இந்துக்கள் ஐந்து பேரை காப்பாற்றித் தன் உயிரை விட்ட முஸ்லிம் ரஊஃப் அஹ்மத் அவர்களின் தியாகம்.
- நோன்பு நோற்ற நிலையில் இந்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரத்த தானம் செய்த முஸ்லிம்கள்.
- துபையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய இந்தியரைக் காப்பாற்றிய முஸ்லிம் பெண்.
என அடுக்கிக்கொண்டே போகலாம். இதுபோல முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் மறைக்கப்படுவதும் முஸ்லிம் பெயர்தாங்கி ஒருவன் தவறு செய்தால் இஸ்லாமியத் தீவிரவாதம் என முத்திரை குத்தப்படுவதும் ஏன்?
‘ஒரு மனிதனை அநியாயமாகக் கொலை செய்தவர் ஒட்டுமொத்த மனிதகுலத்தையே கொன்றவன் ஆவான்’ என்ற திருக்குர்ஆன் வசனமும் தீவிரவாதத்தின் வாசலை இழுத்து அடைக்கிறது எனும் போது இஸ்லாமியத் தீவிரவாதம் என்று அவப்பழி சுமத்துவது ஏன்? ஒரு கணம் யோசித்தால் உண்மை விளங்கும்.
இந்திய நாட்டின் ஆட்சியாளர்களாக என்றென்றும் தாமே இருக்க வேண்டும் என்ற நீண்டகால செயல்திட்டத்துடன் இயங்கி வரும் சங்கப் பரிவாரங்களுக்கு பரம எதிரிகளே சிறுபான்மை மக்கள்தான். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் தான்.
முஸ்லிம்களின் வாக்குகள் தமக்கு ஒருபோதும் கிடைக்காது என்பதால் தனக்குக் கிடைக்காத முஸ்லிம்களின் ஓட்டுக்கள் வீணடிக்கப்பட வேண்டும் என்பதால் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து, பாகிஸ்தானின் வந்தேறிகளாக வதந்திகளைப் பரப்பி, முஸ்லிம்களுக்கு எதிரான பிம்பத்தை உருவாக்கி, இந்துக்களின் ஓட்டுக்களை அள்ளுவதற்கு ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவார்கள் இட்ட பெயரே இஸ்லாமியத் தீவிரவாதம் என்கிற அவதூறாகும்.
இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. நாட்டில் நடைபெற்றப் பல குண்டுவெடிப்புகளில் சமீப காலமாகப் பிடிபட்டு வரும் ஆர்எஸ்எஸ் காரர்களின் ஒப்புதல் வாக்குமூலமே அன்றி வேறில்லை.
- மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினர் இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம். இதற்காக 2006-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரக்யா சிங், சுனில் ஜோஷி, பாரத் ரித்தேஷ்வர் ஆகியோருடன் சேர்ந்து திட்டமிட்டோம்.
- அஜ்மீர் தர்காவுக்கு இந்துக்களும் அதிக அளவில் வழிபாட்டுக்கு வருவதால், அதனைத் தடுக்கவும் அந்த இந்துக்களை அச்சுறுத்தவும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
- சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டுவெடிப்பை சுனில்ஜோஷி பொறுப்பேற்று நடத்தினான் என்று இதில் கைது செய்யப்பட்ட சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
- 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ஆம் நாள் மகாராஷ்டிரா மாநிலம் மலேகான் நகரின் முஸ்லிம்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தன.
- 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தின் நான்டெட் நகரில் வெடிகுண்டுகள் தயாரித்தபோது விபத்து நடந்து ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் இருவர் மாண்டனர். ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
- அதைத் தொடர்ந்து பார்ப்பன பயங்கரவாதிகள் 21 பேரை மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு அதிரடி போலீஸ் அடுத்தடுத்து கைது செய்தது.
- 2007 நவம்பர் 11-ஆம் தேதியன்று ராஜஸ்தானின் அஜ்மீர் தர்காவில் ரம்ஜான் நோன்பு காலத்தில் குண்டுகள் வெடித்தன.
- 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் டெல்லிக்கும் பாகிஸ்தானின் லாகூருக்குமிடையே ஓடும் சம்ஜவ்தா விரைவு வண்டியில், அரியானா மாநிலத்தின் பானிபட் அருகே குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்து மே மாதத்தில் ஆந்திராவின் தலைநகர் ஐதராபாத்தின் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது.
- மாலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியன்று மீண்டும் குண்டுகள் வெடித்தன. இக்குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். பலர் படுகாயமடைந்தார்கள்.
இப்படி ஒவ்வொரு முறையும் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம், ஊடகங்கள் இதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்று எவ்வித விசாரணையுமின்றி குற்றம் சாட்டின.
சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்த வெடிபொருளை முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித் கள்ளத்தனமாக ஜம்முவிலிருந்து வாங்கிக் கொடுத்ததற்கான அறிகுறிகள் கிடைத்தன. மலேகான் குண்டு வெடிப்பிலும் ஆர்.டி.எக்ஸ். ரக வெடிபொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இக்குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் சேசிஸ் எண்ணைக் கொண்டு, அது அகில பாரத வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து, பின்னர் அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பெண் சாமியாரான சாத்வி பிரக்யா சிங்கினுடையது என்பதை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு சிறப்புக் காவல்படைத் தலைவரான ஹேமந்த் கார்கரே கண்டறிந்தார். கடந்த 2008-ஆம் ஆண்டில் பிரக்யா சிங் கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் இராணுவ அதிகாரியான சிறீகாந்த் புரோகித், ஜம்முவில் சாரதா பீடம் என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த தயானந்த் பாண்டே மற்றும் மலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட 11 பேரை ஹேமந்த் கார்கரே கைது செய்தார்.
பிரக்யா சிங்கை விசாரணை செய்த போது, ம.பி.யைச் சேர்ந்த சுனில்ஜோஷி, ராமச்சந்திர கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அசீமானந்தா, பாரத் ரித்தேஷ்வர் முதலானோர் முக்கிய சதிகாரர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே 2008, நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின்போது கார்கரே மர்மமான முறையில் பலியானார்.
மலேகான் மற்றும் சம்ஜவ்தா எக்ஸ்பிரசில் வெடித்த குண்டுகள் ஆர்.டி.எக்ஸ். ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்ததால், இக்குண்டு வெடிப்புகளில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரணையை மேற்கொண்டது.
தயானந்த் பாண்டேயின் கணினியிலிருந்து கிடைத்த 37 உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டன. இவையனைத்தும் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இவர்கள் திட்டமிட்டதை நிரூபித்துக் காட்டின.
இதனடிப்படையில், கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் முழுநேர ஊழியரான சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டான். ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18-ஆம் தேதியன்று டெல்லி வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட அசீமானந்தா,
இக்குண்டுவைப்புகளில் ஈடுபட்டது நாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். போலீசாரின் முன்னிலையில் பெறப்படும் வாக்குமூலங்களை விட, நீதிபதி முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் சட்டப்படி உறுதியான ஆதாரங்களாகியுள்ளதால், குண்டு வைப்பு பயங்கரவாதச் செயல்களில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டிருப்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளது.
அசீமானந்தாவை சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், இந்துத்துவப் பயங்கரவாதம் என்ற அவதூறு கிளப்பப்படுவதாகவும் வழக்கம் போலவே பா.ஜ.க.வும், ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும் கூச்சலிடுகின்றன. ஆனால் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமின்றி, வலுவான தடயவியல் ஆதாரங்களும் சி.பி.ஐ. விசாரணையில் கிடைத்துள்ளன.
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட நோக்கியா செல்போனும் அதிலுள்ள வோடபோன் சிம் கார்டும் குண்டு வைக்கப்பட்ட இடத்தில் கிடைத்துள்ளன. இது, குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் அடிக்குமாறு செய்து அதன் மூலம் மின் இணைப்பு பெற்று குண்டுகளை வெடிக்கச் செய்யும் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும்.
இதேபோன்ற செல்போன் மூலமாகக் குண்டுகளை வெடிக்கச் செய்யும் முறையில்தான் சம்ஜவ்தா விரைவு வண்டியிலும் குண்டு வெடித்துள்ளது. மெக்கா மசூதியில் 6.53 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டது. அதே வகையான பேட்டரிகள் தான் சம்ஜவ்தா விரைவு வண்டி குண்டு வெடிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குண்டுக்கான வார்ப்பு இரும்பு உலோகமும் ஒரே மாதிரியாக இருந்துள்ளன. இத்தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில்தான் இக்குண்டு வெடிப்புகள் அனைத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரே பயங்கரவாதக் கும்பல் ஈடுபட்டுள்ளதென புலனாய்வுத் துறையினர் உறுதிப்படுத்தினர்.
2007-ஆம் ஆண்டு தென்காசியில் நடந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் இந்து முன்னணி கும்பலைச் சேர்ந்தவர்கள் தான் என்பதும் நிரூபணமாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.-ன் பயங்கரவாதம் அடுத்தடுத்து வெளியான போதிலும், ஒருசில ஆங்கில ஊடகங்கள் மட்டுமே இவற்றை வெளியிட்டுள்ளன. தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் அவை திட்டமிட்டே மறைக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயம், தீவிரவாதிகள் என்றாலே முஸ்லிம்கள் தான் என்ற கருத்து ஊடகங்களால் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த அடிப்படையிலேயே இதைக் காவல்துறையும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக அணுகுகின்றன.
நாட்டைத் துண்டாடி தொப்புள் கொடி உறவுகளாக வாழ்ந்து வரும் இந்து, இஸ்லாமிய மக்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தி, வன்முறைகளைத் தூண்டிவிட்டு, அதில் சிந்தப்படும் இரத்தங்களால் தமது ஆட்சியைத் தக்க வைக்க நினைக்கும் தீயசக்திகளை அறிந்து கொள்வோம்.3
மத நம்பிக்கையில் நாம் வேறுபட்டாலும் மனிதன் என்ற பார்வையில் நேசம் வளர்ப்போம்! தேசம் காப்போம்!!