இஸ்லாமியப் போர்கள்
நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களின் மூலம் நான் உங்களுக்கு உதவுபவன்’’ என்று உங்களுக்குப் பதிலளித்தான்.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்ருப் போர் நாளில் (எதிரிகளான) இணை வைப்பாளர்கள் (எண்ணிக்கை) ஆயிரம் பேராக இருப்பதையும், (முஸ்லிம்களான) தம் தோழர்கள் முன்னூற்றுப் பத்தொன்பது பேராக இருப்பதையும் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையின் திசையான) கிப்லாவை முன்னோக்கித் தம் கரங்களை நீட்டி, தம் இறைவனை உரத்த குரலில் (அழைத்துப்) பிராத்தித்தார்கள்.
“இறைவா! எனக்கு நீ அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாயாக. இறைவா! எனக்கு அளித்த வாக்குறுதியை வழங்குவாயாக. இறைவா! முஸ்லிம்களில் இக்குழுவினரை நீ அழித்துவிட்டால், இந்தப் பூமியில் உன்னை வழிபட யாரும் இருக்க மாட்டார்கள்” என்று தம் கரங்களை நீட்டி, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தார்கள். எந்த அளவுக்கென்றால், (கைகளை உயர்த்தியதால்) அவர்களுடைய தோள்களிலிருந்து அவர்களின் மேல்துண்டு நழுவிக் கீழே விழுந்துவிட்டது.
அப்போது அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து, அத்துண்டை எடுத்து அவர்களின் தோள்கள் மீது போட்டுவிட்டு, பின்னாலிருந்து அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் இறைவனிடம் வேண்டியது போதும். அவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவான்” என்று கூறினார்கள்.
அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவி தேடியபோது “உங்களுக்குப் பின்னால் அணிவகுக்கும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்” (8:9) எனும் வசனத்தை அருளினான்.
பூமியில் எதிரிகளை வேரறுக்கும் வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது. நீங்கள் இவ்வுலகின் பொருட்களை நாடுகின்றீர்கள்! அல்லாஹ்வோ மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
முன்னரே அல்லாஹ்வின் விதி இல்லாதிருந்தால் நீங்கள் (கைதிகளை விடுவிப்பதற்குப் பிணைத் தொகை) பெற்றுக் கொண்டதற்காகக் கடும் வேதனை உங்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மை யானதை உண்ணுங்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
முஸ்லிம்கள் எதிரிகளைச் சிறைப்பிடித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடமும் உமர் (ரலி) அவர்களிடமும் “இந்தக் கைதிகள் விஷயத்தில் நீங்கள் என்ன கருதுகிறீர்கள் (இவர்களை என்ன செய்யலாம்)?’’ என்று (ஆலோசனை) கேட்டார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (எதிரிகளாயினும்) அவர்கள் (நம்) தந்தையின் சகோதரர் புதல்வர்களே; நம் குலத்தாரே. அவர்களிடமிருந்து ஏதேனும் பிணைத் தொகையைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அது இறை மறுப்பாளர்களுக்கெதிரான பலமாக நமக்கு அமையும். அவர்களுக்கு அல்லாஹ் இஸ்லாத்திற்கு வழிகாட்டக்கூடும். இவ்வாறே நான் கருதுகிறேன்’’ என்றார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் என்ன கருதுகிறீர்கள், கத்தாபின் புதல்வரே?’’ என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் மீதாணையாக! (இவ்வாறு செய்யாதீர்கள்), அல்லாஹ்வின் தூதரே! எனது கருத்து அபூபக்ர் அவர்களின் கருத்தைப் போன்றதன்று. மாறாக, அவர்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
அவர்களின் கழுத்துகளை நாங்கள் துண்டித்து விடுகிறோம். அக்கீலை அலீ அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்; அவரது கழுத்தை அலீ துண்டிக்கட்டும்! (உமர் (ரலி) அவர்கள் தம் குலத்தாரில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு) இன்ன மனிதரை என்னிடம் ஒப்படையுங்கள். நான் அவரது கழுத்தைத் துண்டித்துவிடுகிறேன். ஏனெனில், இவர்கள் இறைமறுப்பின் தலைவர்கள்; அதன் முன்னோடிகள்’’ என்று கூறினார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்களின் கருத்தையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனது கருத்தை அவர்கள் ஆதரிக்கவில்லை. மறுநாள் சென்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர்.
நான் “அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் உங்கள் நண்பரும் ஏன் அழுகிறீர்கள்? உங்கள் அழுகைக்கான காரணத்தை அறிந்தால் நானும் அழுவேன். அழுகை வராவிட்டாலும் உங்கள் இருவரது அழுகையைக் கண்டு அழுவது போன்றாவது இருப்பேனே!’’ என்று கூறினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைதிகளிடமிருந்து பிணைத் தொகையைப் பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்துவிடலாம் என உங்களுடைய நண்பர்கள் எனக்குக் கூறிய ஆலோசனைக்காகவே நான் அழுகிறேன். ஆனால், இந்த மரத்திற்கு அருகில் அந்த எதிரிகள் வேதனை செய்யப்படுவது எனக்கு எடுத்துக் காட்டப்பட்டது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “பூமியில் எதிரிகளை வேரறுக்கும்வரை சிறைப்பிடித்தல் எந்த நபிக்கும் தகாது’’ என்று தொடங்கி, “போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்பட்ட, அனுமதிக்கப்பட்ட, தூய்மையானதை உண்ணுங்கள்!’’ (8:67-69) என்பது வரை (மூன்று வசனங்களை) அருளினான். அப்போதுதான் போர்ச் செல்வங்களை அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்தான்.
உங்களுக்குப் பின்னால் இத்தூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்கும்போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உஹுதுப் போரின்போது அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்களைக் காலாட்படையினருக்கு (தளபதியாக) நியமித்தார்கள். அப்படையினர் தோற்று ஓடினர்.
(அப்போது நடந்த) அந்தச் சம்பவத்தைத்தான் ‘இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காமல் வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்)’ எனும் இந்த (3:153) இறைவசனம் குறிப்பிடுகிறது. அப்போது நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு பேரைத் தவிர வேறெவரும் எஞ்சியிருக்கவில்லை.
அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு யாருடைய பெயர் சூட்டப்பெற்றுள்ளதோ அந்த என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் அந்நள்ர் -ரலி) அவர்கள் பத்ருப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளவில்லை. அது அவர்களுக்கு மனவேதனையை அளித்தது.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட முதல் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்றுவிட்டேனே! இனிவரும் காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் களம் காணும் ஒரு வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தால் நான் செய்யப்போவதை (என் வீரத்தையும் தியாகத்தையும்) அல்லாஹ் பார்த்துக்கொள்வான்” என்று கூறினார். (இதைத் தவிர விளக்கமாக வேறெதையும் அவர் கூறவில்லை.) இதைத் தவிர வேறெதையும் சொல்ல அவர் அஞ்சினார்.
பின்னர் அவர் உஹுதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்டார். (போர்க்களத்தை நோக்கி அவர் சென்றபோது) எதிரில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் வர, “அபூஅம்ரே! எங்கே (செல்கிறீர்)?” என்று கேட்டுவிட்டு, “இதோ! சொர்க்கத்தின் நறுமணத்தை உஹுத் மலையிலிருந்து நான் பெறுகிறேன்” என்று கூறினார்.
பிறகு எதிரிகளுடன் போரிட்டு அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். அவரது உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப் பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டன. அவர்களுடைய சகோதரியும் என்னுடைய அத்தையுமான ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சகோதரரை, நான் அவருடைய விரல் (நுனி)களை வைத்தே என்னால் அடையாளம் காண முடிந்தது. (அந்த அளவுக்கு அவரது உடல் எதிரிகளால் சிதைக்கப்பட்டிருந்தது.)
“அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை” (33:23) எனும் இந்த வசனம் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள் விஷயத்திலும் அவர்களுடைய தோழர்களின் விஷயத்திலுமே அருளப்பெற்றது என்றே மக்கள் கருதிவந்தனர்.
(போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் திரும்பும்போது அவர்கள் உங்களிடம் சமாளிக்கின்றனர். “சமாளிக்காதீர்கள்! நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. உங்களைப் பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்’’ என்று (முஹம்மதே!) கூறுவீராக! உங்கள் நடவடிக்கையை அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவார்கள். பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் இப்னு மாலிக்(ரலி) கூறினார். அல்உஸ்ரா’ (எனும் தபூக்) போர், பத்ருப்போர் ஆகிய இரண்டு போர்களைத் தவிர, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த எந்த அறப்போரிலும் ஒருபோதும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை.
மேலும் (தபூக் போரில் கலந்து கொள்ளாதது பற்றிய) உண்மையை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் முற்பகலில் நான் சொல்லிவிட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்திலிருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில் தான் பெரும்பாலும் நபி(ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம்.
(வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக்போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி(ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள். (அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.
எனவே, மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரமும் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்துவந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தாமல் இருந்துவிடுவார்களோ! அல்லது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்தால்) எனக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான்.
அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (ஐம்பது நாள்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முஸலமா (ரலி) என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக்கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உம்முஸலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டது’ என்று கூறினார்கள். உம்மு ஸலமா(ரலி), ‘கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்துவிடுவார்கள்’ என்றார்கள்.
ஆக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.
(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப் போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாமலிருந்தவர்களில் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் (அவர்களைப் பற்றி) இவ்வாறு கூறினான் என்று கூறி 9:94 வசனத்தை ஓதினார்கள்.
இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன்.
தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் மீதாணையாக! உண்மை பேசுவதில் என்னைச் சோதித்ததை விடச் சிறப்பாக வேறவரையும் அல்லாஹ் சோதித்ததாக நான் அறியவில்லை. அல்லாஹ்வின் தூதரிடம் நான் உண்மை பேசியதிலிருந்து இறுதி நாள் வரை நான் வேண்டுமென்றே பொய் சொல்ல முனைந்ததில்லை. அந்தச் சமயத்தில் (என் உண்மைக்குப் பரிசாக) அல்லாஹ் இந்த (9:117-119) வசனங்களை அருளினான்.