இஸ்லாத்தின் பார்வையில் என்கவுண்டர்

பயான் குறிப்புகள்: சந்தர்ப்ப உரைகள்
அன்பிற்குரிய சகோதரர்களே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும், அன்பும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக என்று பிரார்த்தனை செய்தவனாக இந்த உரையை ஆரம்பிக்கிறேன்.
முன்னுரை

மக்களை நெறிப்படுத்துவதற்கும், குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும் உலக நாடுகளில் பல வகையான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பல நூற்றாண்டுகளாக, பல லட்சம் குற்றவாளிகளைத் தண்டித்த இந்தச் சட்டங்கள், அவ்வப்போது காலாவதி ஆவதும், திருத்தப்படுவதும் தொடர் கதையாய் நீண்டு கொண்டே போகிறது.

பெரும்பாலான தண்டனைகள் மக்களின் கூட்டு மனசாட்சியை மையப்படுத்தியே நிறைவேற்றப்படுவது கடந்த காலங்களில் உருவாக்கிய ஒரு தவறான முன் உதாரணத்தின் மோசமான வெளிப்பாடே!

ஆம்! கடந்த காங்கிரஸ் ஆட்சி, “மக்களின் கூட்டு மனசாட்சியை” மையமாக வைத்தே அப்சல் குருவுடன் இந்த நாட்டின் சட்டத்தையும், நீதியையும் தூக்கில் போட்டது. ஆட்சியாளர்கள் நேர்மையான ஆட்சியை வழங்கினால் மக்களின் பேராதரவைப் பெற முடியும். இதைச் செய்வதற்குப் பதிலாக மக்களின் உணர்ச்சிகளை ஒரு குறுகிய காலம் குளிர வைப்பதன் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்று விட முடியும் என்கிற தவறான சிந்தனையே இதற்குக் காரணம்.

இந்த நிலைக்கு மக்களும் ஒரு காரணமாக அமைந்துவிடக் கூடாது.

மக்களின் ஆதரவைப் பெற அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் பல குறுக்கு வழியை தேர்வு செய்கிறார்கள். அனால் இத்தகைய சூழ்ச்சிக்கு மக்கள் இரையாகி விடக்கூடாது

தெலங்கானா என்கவுன்டர்

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு என்கவுன்டரை நாடே கொண்டாடியது. காரணம், இந்தக் குற்றப்பின்னணியின் கொடூரமும் அதை மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு சேர்த்த விதமும் தான்.

கால்நடை மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி என்பவர் கடந்த நவம்பர் 27ம் தேதி இரவு நால்வரால் கற்பழிக்கப்பட்டு, கொடூரமான முறையில் எரிக்கப்பட்டு, கொல்லப்படுகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் சில மணித் துளிகளுக்கு முன் அந்தப் பெண் தனது சகோதரியுடன் பேசும் உரையாடல் கேட்கும் அனைவரின் உள்ளங்களையும் கரைக்கக்கூடிய விதத்தில் இருந்தது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இந்த விஷயத்தில் களத்தில் இறங்கி, பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி, வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்து கொண்டனர். மேலும் இதுநாள் வரை தூக்குத் தண்டனையைத் தடை செய்யவேண்டும் என்று சொல்லி வந்தவர்கள் கூட இந்தக் குற்றத்தின் கொடூரத்தைப் பார்த்த பின்பு உடனடியாக இந்தக் காம மிருகங்களைப் பொது வெளியில் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினார்கள்.

மக்கள் ஏன் என்கவுன்டரால் ஈர்க்கப்படுகிறார்கள்?

நாட்டில் நடக்கும் கற்பழிப்பு – கொலைகளுக்கு என்கவுன்டர்களை மக்கள் ஆதரிக்கும் காரணங்கள் இரண்டு:

தாமதிக்கப்படும் நீதி – அநீதி
பொதுவாக எல்லாக் கோணத்திலும் வேகத்தை விரும்பும் மனித சிந்தனை, நீதி செலுத்தலிலும் தண்டனைகளை நிறைவேற்றுவதிலும் வேகத்தையே விரும்புகிறது. தாமதிக்கப்படும் நீதி, அநீதி என்பது சரியான நிலைப்பாடு தான். இதை நாம் உன்னாவ் சம்பவத்திலிருந்து விளங்கிக் கொள்கிறோம்.

உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கடந்த 04.06.2017 அன்று 17 வயதுடைய ஒரு பெண், பாஜாகவைச் சேர்ந்த குலதீப் சிங் செங்கார் என்ற சட்டமன்ற உறுப்பினரால் கற்பழிக்கப்பட்டார். ஆனால் அரசியல் பின்புலத்தை வைத்து, சட்டத்தின் ஓட்டைகளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, குல்தீப் சிங் தப்பித்து வந்தார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு, லாக்கப்பில் வைத்தே கொல்லப்பட்டார்.

லக்னோ நீதிமன்றத்தில் பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் காரில் சென்றபோது லாரியால் மோதப்பட்டு, அவரது உறவுக்கார பெண் மற்றும் வழக்கறிஞர் கொல்லப்பட்டனர். இளம்பெண்ணும் அவரது தாயாரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறினர். இந்த ‘விபத்து’ பாதிக்கப்பட்ட இளம்பெண்ணைக் கொல்வதற்கு நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, குல்தீப் சிங் செங்கார், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது தனியாக கொலை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

2017ஆம் ஆண்டு நடந்த இந்தக் கற்பழிப்பு சம்பவத்திற்கு, கடந்த டிசம்பர் 16, 2019 அன்று தான் முக்கியக் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர் செய்த இந்தக் கொடூரச் செயலுக்கு வழக்குப் பதிய முடியாத நிலை இருக்கும் சட்டத்தில், சாமானியர்களுக்கு நீதி கிடைக்கும் என்பது யதார்த்தத்தில் சாத்தியமற்றது.

இதே உன்னாவில் கற்பழிக்கப்பட்ட 23 வயதுடைய மற்றொரு பெண், பல போராட்டங்கள் நடத்தியும் வழக்குப் பதிவதையே ஒத்திவைத்தது காவல் துறை. அதன்பிறகு அந்தப் பெண்ணைக் கற்பழித்தவர்கள் கைதாகி பெயிலில் வெளியே வந்ததும் அந்தப் பெண் மீது பெட்ரோலை ஊற்றி உயிருடன் எரித்துள்ளார்கள். வேதனையுடன் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. உயிரைக் காப்பாற்ற காவல் நிலையம் நோக்கி விரைந்தோடிய அந்தப் பெண் அநியாயமாக உயிரிழந்தார்.

இங்கும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்குத் தாமதமானதால் அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையே கொலை செய்துவிட்டார்கள்.

சட்டத்தின் மீதிருக்கும் அவ நம்பிக்கை
இந்தக் கொடூரத்தை நேரில் பார்த்த, சமூக ஊடகங்கள் மூலம் அறிந்த நாட்டு மக்கள் இந்தக் குற்றத்திற்கு தெலுங்கானா பாணியில் என்கவுன்டர் தான் தீர்வு என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர்

நமது நாட்டில் இருக்கும் சட்டம் குற்றங்களைத் தடுக்கும் விதத்தில் இல்லை. இதில் இருக்கும் ஓட்டைகளை வைத்துக் குற்றவாளிகள் வயதை, முதுமையை, நோயைக் காரணம் காட்டி தப்பிக்கப் பார்க்கிறார்கள். கடந்த காலங்களில் இது போன்ற ஏராளமான சம்பவங்களைப் பார்த்த மக்களுக்கு, சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைத்து கொண்டே போகிறது.

நீதித்துறையின் மெத்தனம், சட்டத்தில் உள்ள ஓட்டைகள், ஆதிக்க வர்க்கத்தின் பிடியில் அரசாங்கம் போன்ற காரணங்களால் மக்கள் வெறுத்துப் போயுள்ளார்கள். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது நாடு தழுவிய கொந்தளிப்பைப் பார்க்கும் மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். துரித நீதி என்பது என்கவுன்டரின் மூலம் தான் கிடைக்கும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். காவல்துறை நடத்தும் என்கவுன்டர் கொலைகளைக் கொண்டாடுகின்றனர். இது நாட்டு மக்களுக்கு ஆரோக்கியம் இல்லை.

கடந்த காலங்களில் பல்வேறு தருணங்களில் இதுபோன்ற என்கவுன்டர் கொலைகள் அநியாயமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சொராபுதீன் போலி என்கவுன்டர் ஒரு மிகப் பெரிய சான்று. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே இதுபோன்ற என்கவுன்டர்களை நாட்டு மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் காவல்துறை தங்களுக்குப் பிடிக்காத மக்களைக் கொலை செய்ய இதை ஓர் அங்கீகாரமாக எடுத்துக் கொள்வார்கள்.

இஸ்லாமிய சட்டமே தீர்வு

எந்த இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை காட்டுமிராண்டிச் சட்டமாக மக்களிடம் கொண்டு செல்ல முயற்சித்தார்களோ, அந்த இஸ்லாமிய சட்டங்களை மக்கள் விரும்புவதைத் தான் இந்த என்கவுன்டர் ஆதரவு நிலைப்பாடுகள் காட்டுகின்றன. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று எல்லோருடைய மனதிலும் ஒரு சிந்தனை உருவாக்கம் தோன்றியுள்ளது.

எனவே, இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதே குற்றங்கள் குறைய சரியான தீர்வாக அமையும்.

இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தினால் குற்றம் செய்த எந்த வலியவரும் தப்பிக்கமாட்டார், அப்பாவியாக இருக்கும் எந்த எளியவரும் பாதிக்கப்படமாட்டார்.

மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். ‘அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?’ என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்களில் சிலர், ‘அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?’ என்று கூறினர்.

அவ்வாறே உஸாமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒரு தண்டனையின் விஷயத்திலா நீ பரிந்துரை செய்கிறாய்” என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள்.

பிறகு, “உங்களுக்கு முன்னிருந்தவர்களில் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்)விட்டு வந்தார்கள்; அவர்களில் பலவீனமானவன் திருடிவிட்டால் அவனுக்குத் தண்டனையளித்து வந்தார்கள் என்பதால் தான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரின் கையையும் நான் துண்டித்திருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

(முஸ்லிம்: 3485)

நம் நாட்டிலோ ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஆனால் இது உண்மையில் நிலைநாட்டப்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக இந்தச் சட்டம் குற்றம் செய்தவனை தப்பிக்க வைக்க ஒரு சாக்குப் போக்கை உருவாக்கியதே தவிர நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதை கவனிப்பதில்லை.

இதுபோன்ற காரணங்களால் மக்களுக்கு, சட்டத்தின் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. சட்டமும் நீதியும் பணபலம், அரசியல் பலம் படைத்த வலியவர்களுக்குத் தான் நன்மை பயக்கும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது எந்த நன்மையையும் செய்யாது என்ற முடிவிற்கு மக்கள் வந்து விடுகிறார்கள்.

சட்டத்தின் முன், நீதியின் முன் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் விதத்தில் சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்து, அதைச் சரிவர நிறைவேற்றினால் தான் மக்கள் நீதித்துறையை நம்புவார்கள்.

பாதிக்கப்பட்டவனே நீதிபதி

அரசியல் அழுத்தங்கள், மக்களின் கூட்டு மனசாட்சி ஆகியவற்றைத் தாண்டி இதுபோன்ற குற்றங்களுக்கு, சரிவர தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்படாததற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு.

மனிதர்கள் இயற்றும் சட்டங்களில் நீதி, சட்டப் புத்தகத்தின் அடிப்படையிலும், வக்கீல்களின் வாதத் திறமையின் அடிப்படையிலும் தான் அமைந்திருக்கிறது. பல நேரங்களில் அரசியல் அழுத்தம், மக்களின் கூட்டு மனசாட்சி, லஞ்சம், அச்சுறுத்தல் போன்ற காரணங்களால் நியாயமான தீர்ப்பை வழங்காதது போல், நீதிபதிகளின் பாதிப்பை உணராத தன்மையும் நியாயமான தீர்ப்பு வழங்குவதைப் பாதிக்கிறது. இஸ்லாமிய மார்க்கமோ இதனைப் பாதிக்கப்பட்டவனின் பொறுப்பில் ஒப்படைக்கிறது.

அல்லாஹ் தனது வேதத்தில் குற்றங்களுக்கான தண்டனைகளைப் பட்டியலிடும் போது, பாதிக்கப்பட்டவர் யாராவது மன்னித்தால் தண்டனையை ரத்துச் செய்யலாம் என்ற அழகிய முன்மாதிரியை எடுத்துரைக்கின்றது.

“உயிருக்கு உயிர், கண்ணுக்குக் கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், காயங்களுக்கு அதே அளவு (காயப்படுத்தி) பழிவாங்குதல்’’ என அதில் அவர்களுக்கு விதியாக்கியிருந்தோம். யாரேனும் பழிவாங்காமல் மன்னித்து விட்டால் அது அவருக்குப் பாவப் பரிகாரமாக அமையும். அல்லாஹ் அருளியதைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்.

(அல்குர்ஆன்: 5:45)

தீர்வை நோக்கிப் பயணிப்போம்

குற்றவாளிகள் ஒருபோதும் தப்பித்து விடக் கூடாது என்ற இவர்களது எண்ணம் சரியானது தான். அதே நேரத்தில் குற்றங்கள் முதலில் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். அது விரைவாக விசாரித்து, விரைவான தீர்ப்பாக அமைய வேண்டும். அவ்வாறு நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக இருக்கவேண்டும். இது போன்ற குற்றத்தை ஒருவன் செய்ய – ஏன் நினைக்கக் கூடத் தயங்கும் விதத்தில் கடுமையாக இருக்க வேண்டும்.

தண்டனையை நிறைவேற்றுவதா அல்லது மன்னிப்பதா என்பதைப் பாதிக்கப்பட்டவர் தான் முடிவு செய்ய வேண்டும். முழுமையான விசாரணை இல்லாமல் தண்டனையை அவசர கதியில் யாரும் (காவல் துறை உட்பட) நிறைவேற்றாமல் அரசாங்கம் தான் நிறைவேற்ற வேண்டும்.

மேலும் இதைப் பொதுவெளியில் மக்களை ஒன்று கூட்டி நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றினால் தான் குற்றங்கள் குறையும். மக்களுக்கு நீதித்துறையின் மீது, சட்டத்தின் மீது நம்பிக்கை வரும். பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தைக் கையில் எடுக்க மாட்டார்கள். உயிர்கள் பாதுகாக்கப்படும்.

அறிவுடையோரே! பழிவாங்கும் சட்டத்தில் உங்களுக்கு வாழ்க்கை உள்ளது. நீங்கள் (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்ளலாம்.

(அல்குர்ஆன்: 2:178),179)

சுருக்கமாகச் சொல்வதென்றால் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் தான் இதற்குத் தீர்வு!