இஸ்லாத்தின் எதிரிகள்
(நபியே!) நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது “நீர் அல்லாஹ்வின் தூதரே என்று உறுதி கூறுகிறோம்’’ என்று கூறுகின்றனர். நீர் அவனுடைய தூதர் என்பதை அல்லாஹ் அறிவான். ‘நயவஞ்சகர்கள் பொய்யர்களே’ என்று அல்லாஹ் உறுதி கூறுகிறான்.
அவர்கள் தமது சத்தியங்களைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அவர்கள் செய்து கொண்டிருப்பது கெட்டது. அவர்கள் நம்பிக்கை கொண்டு பின்னர் (ஏக இறைவனை) மறுத்ததே இதற்குக் காரணம். எனவே அவர்களது உள்ளங்களுக்கு முத்திரையிடப்பட்டு விட்டது. அதனால் அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
நீர் அவர்களைக் காணும்போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?
“வாருங்கள்! உங்களுக்காக அல்லாஹ்வின் தூதர் பாவமன்னிப்புத் தேடுவார்’’ என்று அவர்களிடம் கூறப்பட்டால் தமது தலைகளைத் திருப்பிக் கொள்கின்றனர். மேலும் அகந்தை கொண்டு தடுப்போராக அவர்களைக் காண்பீர்.
(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடுவதும், அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புத் தேடாமல் இருப்பதும் அவர்களைப் பொறுத்த வரை சமமாகும். அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். குற்றம் புரியும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். “அல்லாஹ்வின் தூதருடன் இருப்போர் (அவரை விட்டும்) விலகாத வரை அவர்களுக்குச் செலவிடாதீர்கள்!’’ என்று கூறுவோர் அவர்களே. வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனினும் நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
“மதீனாவுக்கு நாம் திரும்பினால் அங்குள்ள உயர்ந்தோர் இழிந்தோரை வெளியேற்றுவார்கள்’’ என்று கூறுகின்றனர். கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கை கொண்டோருக்கும் உரியது. எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்.
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பான், ‘அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள்.
அவர்கள் (அவரைவிட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள்’ என்று சொல்வதையும், மேலும், ‘நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்’ என்று கூறுவதையும் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள்.
எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, ‘நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை’ என்று சத்தியம் செய்தனர். எனவே, அவர்களை நம்பிவிட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள்.
இதுபோன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும்போது’ என்று தொடங்கி ‘எனினும் நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்’ என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான்.
உடனே, எனக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ‘ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான்’ என்று கூறினார்கள்.
அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
அவர்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் உம்மைக் கவர வேண்டாம். அதன் மூலம் இவ்வுலகில் அவர்களைத் தண்டிப்பதையும், (ஏகஇறைவனை) மறுத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகிறான்.
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை சலூல் இறந்துவிட்டபோது அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (அதற்காக) எழுந்தபோது அவர்களிடம் நான் குதித்தோடிச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே!
இப்னு உபைக்கு நீங்கள் முன்னின்று தொழுகை நடத்துகிறீர்களா? அவரோ இன்னின்ன காலகட்டத்தில் இப்படி இப்படியெல்லாம் சொன்னாரே!’ என்று அவர் சொன்னவற்றை (எல்லாம்) நபியவர்களுக்கு எண்ணிக் காட்டிக் கூறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகை புரிந்துவிட்டு, ‘ஒதுங்கிக் கொள்ளுங்கள், உமரே!’ என்று கூறினார்கள்.
நான் அவர்களை இன்னும் அதிகமாகத் தடுக்கவே, அவர்கள், ‘இவருக்காகப் பாவமன்னின்புக் கோரவும் கோராமல் இருக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோரினால் இவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கப்படும் என்று எனக்குத் தெரியவருமாயின் எழுபது முறையை விட அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருவேன்’ என்று கூறினார்கள்.
பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்திவிட்டுத் திரும்பினார்கள். சற்று நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் ‘பராஅத்’ (9வது) அத்தியாயத்திலிருந்து ‘அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீங்கள் (ஜனாஸா) தொழுகை நடத்த வேண்டாம்; அவரின் மண்ணறை அருகேயும் நீங்கள் நிற்க வேண்டாம்.
ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுத்தனர். மேலும், பாவிகளாகவே அவர்கள் இறந்தார்கள்’ எனும் (9:84,85) இரண்டு வசனங்கள் அருளப்பெற்றன. இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன் பேசிய என் துணிச்சலைக் கண்டு பின்னர் நான் வியந்தேன். (எனினும்) அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே மிகவும் அறிந்தவர்கள்.
நம்பிக்கை கொண்டோம் என்று தம் வாய்களால் கூறி, உள்ளங்களால் நம்பிக்கை கொள்ளாமல் (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்தும், யூதர்களைக் குறித்தும் தூதரே கவலைப்படாதீர்! அவர்கள் பொய்களையே அதிகம் செவியுறுகின்றனர். உம்மிடம் வராத மற்றொரு சமுதாயத்திற்காக (உமது பேச்சை) செவியுறுகின்றனர்.
வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களை விட்டும் மாற்றிக் கூறுகின்றனர். “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக் கொள்ளுங்கள்! அது கொடுக்கப்படாவிட்டால் அதைத் தவிர்த்து விடுங்கள்!’’ என்று கூறுகின்றனர்.
அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(விபச்சாரக் குற்றத்திற்காக யூதர்களால்) முகத்தில் கரி பூசப்பட்டு, சாட்டையடி தண்டனை நிறைவேற்றப்பட்ட யூதனொருவன் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் கொண்டு செல்லப்பட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் யூதர்களை அழைத்து, “விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர்கள் “ஆம்’’ என்று (பொய்) சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் யூத அறிஞர்களில் ஒருவரை அழைத்து, “மூஸா (அலை) அவர்களுக்குத் தவ்ராத்தை அருளிய அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்கிறேன். விபச்சாரக் குற்றம் புரிந்தவனுக்கு உங்களது வேதத்தில் இதுதான் தண்டனை என்று காண்கிறீர்களா?” என்று கேட்டார்கள்.
அதற்கு அவர், “இல்லை; நீங்கள் இவ்வாறு (அல்லாஹ்வை முன்வைத்துக்) கேட்டிராவிட்டால், நான் உங்களிடம் (உண்மையைச்) சொல்லமாட்டேன். அவனுக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்படும் என்றே நாங்கள் அதில் காண்கிறோம். எனினும், எங்கள் மேன்மக்களிடையே விபச்சாரம் அதிகமாகிவிட்டது. (விபச்சாரம் செய்துவிட்ட மேன்மக்களில் ஒருவரை) நாங்கள் பிடித்துவிட்டால், அந்தத் தண்டனையை விட்டுவிடுவோம்.
(அதே குற்றத்திற்காக) சாமானிய மக்களைப் பிடித்தால், அவர்கள்மீது தண்டனையை நாங்கள் நிலைநாட்டுவோம். ஆகவே, நாங்கள் (கலந்து பேசி) உயர்ந்தவர், தாழ்ந்தவர் அனைவருக்கும் பொதுவான ஒரு தண்டனையை நிறைவேற்றுவோம் என முடிவு செய்தோம். அதனடிப்படையில் கல்லெறி தண்டனைக்குப் பகரமாக முகத்தில் கரி பூசி, கசையடி வழங்கும் தண்டனையை நிறைவேற்றலானோம்’’ என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்கள் உனது சட்டம் ஒன்றைச் சாகடித்து விட்டிருந்த நிலையில் அதை (மீண்டும் நடைமுறைப்படுத்தி) உயிர்ப்பித்த முதல் ஆள் நானாவேன்” என்று கூறிவிட்டு, சாகும்வரை கல்லால் அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அவ்வாறே அந்த யூதர் சாகும்வரை கல்லால் அடிக்கப்பட்டார்.
அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “தூதரே! (இறை)மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர்…” என்று தொடங்கும் வசனத்தை “அது (சாதகமானது) உங்களுக்கு வழங்கப் பெற்றால் அதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர்” (5:41) என்பதுவரை அருளினான்.
‘அதாவது முஹம்மதிடம் செல்லுங்கள். (விபச்சாரம் புரிந்தவனுக்கு) முகத்தில் கரி பூசி,கசையடி தண்டனை நிறைவேற்றுமாறு அவர் உத்தரவிட்டால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சாகும்வரை கல்லால் அடிக்கும்படி அவர் உத்தரவிட்டால் அதைத் தவிர்த்துவிடுங்கள்’ என்று யூதர்கள் கூறினர்.
மேலும் பின்வரும் மூன்று வசனங்களையும் அல்லாஹ் அருளினான்:
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் ஆவர். (5:44)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் அநீதியாளர்கள் ஆவர். (5:45)
அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தாம் பாவிகள் ஆவர். (5:47)
இந்த (5:47) வசனம் (ஏக இறைவனை) மறுப்பவர்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். (முந்தைய இரு வசனங்களும் யூதர்கள் தொடர்பாக அருளப்பெற்றவை ஆகும்.)
இரகசியம் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? பின்னர் எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதை மீண்டும் செய்கின்றனர். பாவம், வரம்பு மீறுதல், தூதருக்கு மாறுசெய்தல் ஆகியவற்றை இரகசியமாகப் பேசுகின்றனர்.
(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு வாழ்த்தாக ஆக்கவில்லையோ அதை உமக்கு வாழ்த்தாகக் கூறுகின்றனர். நாம் கூறுவதற்காக அல்லாஹ் நம்மைத் தண்டிக்காமல் இருக்க வேண்டுமே என்று தமக்குள் கூறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு நரகமே போதுமானது. அதில் அவர்கள் கருகுவார்கள். அது கெட்ட தங்குமிடம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க” (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் “வ அலைக்கும்’’ (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று சொன்னார்கள். நான் “அலைக்குமுஸ் ஸாமு வத்தாமு” (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் கூறினேன்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக இராதே” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான்தான் அவர்கள் சொன்னதற்கு “வ அலைக்கும்’’ (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று பதில் சொல்லி விட்டேனே?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில், “ஆயிஷா (ரலி) அவர்கள், யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) அவர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் இயற்கையாகவோ செயற்கையாகவோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்” (58:8) எனும் வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.
‘‘இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!’’ என (நபியே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்:
ஒருநாள் நான் நபி (ஸல்) அவர்களுடன் சென்றேன். நாங்கள் இருவரும் யூதர்களுக்குரிய திருவிழா நாளில் மதீனாவில் உள்ள அவர்களின் மடாலயத்திற்குள் நுழைந்தோம். நாங்கள் அவர்களிடம் நுழைந்ததை அவர்கள் வெறுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவர்களிடம் “யூத சமூகமே! (உங்களில்) “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை. முஹம்மத் அல்லாஹ்வின் தூதர்” என்று சாட்சி கூறும் பன்னிரண்டு நபர்களை எனக்குக் கூறுங்கள்.
(அப்படி நீங்கள் தெரிவித்தால்) வானம் எனும் முகட்டின் கீழுள்ள ஒவ்வொரு யூதரின் மீதும், அவர் மீது தான் கொண்ட கோபத்தை அல்லாஹ் அழித்து விடுவான்” என்று கூறினார்கள். அவர்கள் வாய்பொத்தி மவுனிகளாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
பிறகு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவர்களில் ஒருவரும் நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை. பிறகு மூன்றாம் முறையும் கேட்டார்கள். அவர்களில் யாரும் நபியவர்களுக்குப் பதிலளிக்கவில்லை.
அப்போது நபியவர்கள் “நீங்கள் (பதிலளிக்க) மறுத்துவிட்டீர்கள். நீங்கள் நம்பினாலும் மறுத்தாலும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நானே ஹாஷிர் (ஒன்று திரட்டுபவர் ஆவேன்), நான்தான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர் ஆவேன்), நான்தான் (முந்தைய வேதங்களில் கூறப்பட்ட) தேர்ந்தெடுக்கப்பட்ட நபியாவேன்” என்று கூறிவிட்டுப் பிறகு திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன்.
நாங்கள் (அங்கிருந்து) வெளியேறுவதற்கு எத்தனித்த போது எங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு மனிதர் “முஹம்மதே அப்படியே நில்லுங்கள்” என்று அழைத்தார். பிறகு அந்த மனிதர் முன்னோக்கி வந்து “யூதர்களே! உங்களில் மிகவும் கற்றறிந்த மனிதர் யார்?” எனக் கேட்டார்.
அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்களில் உம்மை விட அல்லாஹ்வின் வேதத்தை மிகவும் கற்றிந்தவரும், ஞானமிக்கவரும் வேறு யாருமில்லை. உமக்கு முன்னால் உம்முடைய தந்தைக்கு மேல் வேறுயாருமில்லை. உமது தந்தைக்கு முன்னால் உமது பாட்டானாருக்கு மேல் வேறு யாருமில்லை” என்று கூறினார்கள்.
(யூதர்கள் இவ்வாறு கூறியதும் அந்த மனிதர்) “நான் இவருக்காக அல்லாஹ்வை சாட்சியாக்கி கூறுகிறேன். தவ்ராத்தில் கூறப்பட்டதாக நீங்கள் காண்கிறீர்களே அந்த அல்லாஹ்வின் நபி இவர் தான்” என்று கூறினார். உடனே யூதர்கள் ”நீர் பொய்யுரைத்துவிட்டீர்” என்று கூறி அவருடைய பேச்சிற்கு அவரிடம் மறுப்பு தெரிவித்தனர்.
அவரைப் பற்றி மிகக் கெட்டதைக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (யூதர்களை நோக்கி) “நீங்கள்தான் பொய்யுரைத்தீர்கள். உங்களின் பேச்சு ஏற்கப்படாது. சற்று முன்புதான் அவர் மீது நல்லவற்றைக் கூறி போற்றிப் புகழ்ந்தீர்கள். அவர் நம்பிக்கை கொண்டதும் அவரை பொய்யுரைத்துவிட்டார் என்கிறீர்கள்.
அவர்மீது (பொய்யாக) கூறவேண்டியவற்றை எல்லாம் கூறிவிட்டீர்கள். எனவே உங்களின் பேச்சு ஏற்க்கப்படாது” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர், நான், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் ஆகிய நாங்கள் மூவரும் வெளியேறினோம்.
அப்போதுதான் அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) தொடர்பாக “இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து, இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு சாட்சி கூறி நம்பிக்கையும் கொண்ட நிலையில் நீங்கள் (இதை) மறுத்து அகந்தை கொண்டால் (என்னவாகும் என்பதற்குப்) பதில் சொல்லுங்கள்!’’ என (நபியே!) கேட்பீராக! அநீதி இழைக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்” (49:10) என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான்.
எனவே இஸ்லாம் மார்க்கம் காட்டி தந்த வழிமுறைகளை நடைமுறைப் படுத்துவோமாக! அல்லாஹ் அப்படிப்பட்ட நன்மக்களாய் நம்மை ஆக்கி அருள் புரிவனாக..!